வண்டலுார் மிருகக்காட்சி சாலையை, இரண்டு மணி நேரம் சுற்றி வந்தார் ராமு தாத்தா. பின், பிஸ்கட், இளநீர் சாப்பிட்டபடி, பேரக்குழந்தைகளுடன் ஓய்வு எடுத்தார். பொழுதுபோக்க மட்டுமின்றி, பொது அறிவு தேடலாகவும் இந்த சுற்றுலாவை ஏற்பாடு செய்திருந்தார்.
உடல் சோர்வு மறைய, ''தாத்தா... எனக்கொரு சந்தேகம்...'' என, ஆரம்பித்தான் பேரன் மகேஷ்.
''என்ன... கேளுடா தங்கம்...''
''ரொம்ப உயரமான மிருகம் எது...''
''ஒட்டகச்சிவிங்கி அண்ணா...''
முந்தியபடி விடை சொன்ன மகிழ்ச்சியில் குதித்தாள் கீதா.
''வேகமா ஓடக்கூடியது...''
மீண்டும் கேட்டான் மகேஷ்.
''சிறுத்தை...''
சிரித்தாள் கீதா.
''காட்டுக்கு ராஜா எது...''
'சிங்கம்...'
குழந்தைகள் குதுாகலித்தனர்.
''என்னமோ சந்தேகம்ன்னு சொன்னயேப்பா... அதை கேளு...'' என்றார் தாத்தா.
''சிங்கம் எதிலயுமே முதலாவதா வரலயே, எல்லா இயல்புகளிலையும், பிற மிருகங்கள் அளவு கெட்டிக்காரத்தனமாக இல்லாத சிங்கத்துக்கு ஏன் காட்டுராஜான்னு கிரீடம்... முதலாவதாக இருக்கிற யானைக்கோ, சிறுத்தைக்கோ தரக்கூடாதா...''
மகேஷ் கேட்க, குதித்து கொண்டிருந்த பிற குழந்தைகள் ஆவலுடன் தாத்தாவை ஏறிட்டனர்.
'தாத்தா... அண்ணா கேட்டதுக்கு பதில் சொல்லுங்க...'
கோரசாக, குதுாகலத்துடன் கேட்டனர் குழந்தைகள்.
பிஸ்கட் உறையை குப்பை பையில் போட்டபடி, ''ரொம்ப நல்ல கேள்விப்பா... தலைமைங்கிறது, ஒரு திறமை. அதுக்கு, எல்லாத்துலயும், முதல்வனாகத்தான் இருக்கணும்ன்னு அவசியமில்லை...
''சிங்கம், பதுங்காது; பயப்படாது; தைரியமா எதிர்த்து நிற்கும். நடக்கும் போதே, அதோட கம்பீரம் தெரியும். வெற்றி மட்டும் தான் இலக்குன்னு காத்திருக்காம, சவால்களை தைரியமா எதிர்கொள்ளும்...
''நான்தான் ராஜா, எந்த மிருகத்தையும் என்னால வெல்ல முடியும்ன்னு, தன்னம்பிக்கையோடு வீரத்தை காட்டும். கிடைச்ச சந்தர்ப்பத்தை கோட்டை விடாது...
''இந்த இயல்புகளை எல்லாம் காட்டுல சிங்கத்தை பார்க்கும்போது தான், உங்களால புரிஞ்சுக்க முடியும். வெறும் உயரமோ, ஓட்டமோ, பெரிய அளவோ மட்டும் சிறப்பா இருக்கிற பிற மிருகங்களை விட, சிறப்பாக, தனி விலங்காக, தலைவனாக அது செயல்படும்... இதிலே, ஒரு பாடம் கூட இருக்கு...'' என்றார்.
'எங்களுக்கா...' என்றனர்.
''ஆமா... தலைவனா, நீங்க வளரணும்னா, பெரிய படிப்பாளியாகவோ, ரொம்ப உயரமாகவோ, செல்வந்தனாகவோ, தனிச்சிறப்போடு இருக்கணும்ன்னு அவசியம் இல்லை... முயற்சிகளில் சோர்வில்லாமல் இருக்கணும்; அனைவரையும், அரவணைக்க தெரியணும். அடுத்தவர் கஷ்டப்படும் போது உதவி செய்யணும்; இதை எல்லாம் செய்ய, அடிப்படையான நல்ல மனசு வேணும்... புரியுதா...''
புரிந்து சிரித்தனர் சிறுவர்கள்.
குழந்தைகளே... வெற்றி பெற்றவராக இருக்க, எல்லாரையும் அரவணைக்கும் நல்ல இயல்புகளே முக்கியம். அழகு, பணம் போன்றவை முக்கியமில்லை.