ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் பலருக்கு, உலகம் உருண்டை என்பது தெரியாது. ஆனால், உருண்டோடும் கால்பந்து பற்றி தெரியும். கால்பந்தாட்ட கடவுளாக புகழப்படும், டீகோ அர்மேண்டோ மரடோனாவையும் உலகம் அறியும்.
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா தலைநகர் பவுனோஸ் ஏரிசில், குடிசைப்பகுதியை வில்லா பியோரிடா என்பர். இங்கு, அக்டோபர் 19, 1960ல், வசதி வாய்ப்பற்ற குடும்பத்தில் பிறந்தார் மரடோனா.
பத்து வயதிலேயே கால்பந்தாட்டத்துக்கு தேர்வு பெற்றார். ஆனால், களத்தில் இறங்கி ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சோர்ந்து போகாமல், பந்து பொறுக்கி போடுவதில் ஆர்வம் காட்டினார். ஆட்ட இடைவேளைகளில், பந்தால் வித்தைகள் காட்டி ரசிகர்களை மகிழ்வித்தார்.
அவரது உயரம், 5.5 அடி தான். குள்ளம் என்றாலும், ஆடுகளத்தில் பந்தை பின் தொடரும் வேகம் பிரமிப்பை ஏற்படுத்தும். எதிர் அணியை சமாளித்து, பந்தை கடத்தும் உத்தி சாகசமாக காட்சிப்படும். அர்ஜென்டினாவின் தலைசிறந்த வீரராக மிளிர்ந்தார் மரடோனா.
உலகக் கோப்பை கால்பந்து போட்டி, 1986ல், வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் நடந்தது. அர்ஜென்டினா அணி கேப்டனாக களமிறங்கினார் மரடோனா. கால் இறுதி ஆட்டத்தில், ஐரோப்பிய நாடான இங்கிலாந்து அணியை எதிர்கொண்டார். அந்த ஆட்டத்தில் காட்டிய செயல்திறன், ரசிகர்களால் இன்றும் வியந்து போற்றப்படுகிறது.
எதிரணியின் கோல் வலைக்கு, 60 மீட்டர் தொலைவில் இருந்த பந்தை, அடுத்தடுத்து, ஆறு வீரர்களை நிலை குலைய வைத்து, கடத்தி அற்புத கோலாக்கினார்.
அது, இந்த நுாற்றாண்டின் மிகச்சிறந்த கோலாக மதித்து கொண்டாடப்படுகிறது. இறுதி போட்டியில், ஐரோப்பிய நாடான மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி கோப்பையை வென்றது அர்ஜென்டினா.
பிற்காலத்தில் அந்த அரங்கம் முன், மரடோனாவுக்கு சிலை அமைக்கப்பட்டது.
கால்பந்தாட்டத்தால் புகழின் உச்சிக்குப் போன மரடோனாவுக்கு, விருதுகள் குவிந்தன. தங்கப் பந்து பரிசும் கிடைத்தது. புகழ்பெற்ற கால்பந்தாட்ட அணிகள் எல்லாம், அவரை சேர்த்துக் கொள்ள துடியாய் துடித்தன.
ஐரோப்பிய நாடான ஸ்பெயின், பார்சிலோனா அணியில் சேர்க்கப்பட்டார் மரடோனா. நடுகள வீரராக களமிறங்கிய போது, அரங்கமே அதிர்ந்தது. அந்த அணிக்கும் பல வெற்றிகளை குவித்தார்.
பின், ஐரோப்பிய நாடான இத்தாலி, 50 கோடி ரூபாய் கொடுத்து, நாபோலி அணியில் இணைத்தது. அந்த காலத்தில், இவ்வளவு பெரும் தொகை பெற்ற ஒரே விளையாட்டு வீரர் மரடோனாதான்.
தவறான பழக்க வழக்கங்களால் பெரும் சரிவையும் சந்தித்தார்.
கடந்த, 1994 உலகக் கோப்பை ஆட்டத்தில், முழுமையாக ஆட முடியவில்லை. போதைப் பொருள் பயன்படுத்தியதாக தண்டனை பெற்றார். பெருந்தொகை அபராதமாக விதிக்கப்பட்டது. விளையாட, 15 மாதம் தடைவிதிக்கப்பட்டது.
நிலைகுலைந்தார் மரடோனா. அவரது உடல்நலம் பாதிப்படைந்தது. வட அமெரிக்க நாடான கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ அழைப்பில் அங்கு சென்று மருத்துவ சிகிச்சை பெற்றார். தவறான பழக்கத்தை விட்டொழித்து புதிய மனிதரானார்.
மரடோனா கால்பந்தாட்ட வீரர் மட்டுமில்லை. ஏழைகளின் மீது மிகுந்த அன்பு கொண்டவர். குடிசைவாசியாக இருந்ததை எப்போதும் மறைத்ததே இல்லை. உலக அரசியல் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வந்தார். ஏழை எளிய வாய்ப்பற்ற மக்கள் நலனுக்காக குரல் கொடுத்தபடி இருந்தார்.
சுயசரிதையை, 'யோ சோய் எல் டீகோ' என்ற தலைப்பில் புத்தகமாக, 2000ல் வெளியிட்டார். அதிகமாக விற்பனையானது. அதில் கிடைத்த வருவாயை, சேவை அமைப்பிற்கு நன்கொடையாக வழங்கினார்.
பூமிப்பந்தில், கால்பந்தாட்டம் உள்ள வரை, மரடோனாவின் புகழ் நிலைத்திருக்கும்.
கணமும் மறக்காதே...
கால்பந்து விளையாட்டு பற்றி எழுத்தாளர் சுந்தர ராமசாமி, '-காலடியில் வந்து சேரும் பந்து என்னுடையதல்ல, அது என் குழுவினுடையது என்று எப்போதும் நினை. நீ தான் கோல் போட வேண்டுமென ஒரு போதும் நினைக்காதே. பெரும் தடைகள் சூழ்ந்து வரும்போது, பந்தை மேல் எடுத்துச் செல்ல, சக ஆட்டக்காரர்கள் காத்துக் கொண்டிருப்பதை ஒரு கணமும் மறக்காதே...' என, ஜே.ஜே.சில குறிப்புக்கள் என்ற நாவலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரிகளுக்கு இலக்கணமாக, உலகப் போட்டிகளில் மரடோனாவின் ஆட்டம் அமைந்திருந்தது. தனித்தன்மையுடன் கோல் போடுவதுடன், சார்ந்திருக்கும் அணியினர் கோல் அடிக்கவும் உதவுவார். குழு விளையாட்டின் மேன்மையை உணர்ந்து, உணர்த்தி சாதனை படைத்த மாவீரர் மரடோனா. -
நன்றி பெருக்கு!
வட அமெரிக்க நாடான கியூபா அதிபராக இருந்த பிடல் காஸ்ட்ரோ மீது, அளவற்ற அன்பு கொண்டவர் மரடோனா. அந்த நாட்டில் சிகிச்சை பெற்று, கொடிய போதைப் பழக்கத்தில் இருந்து மீண்டவர், அந்த நன்றிக் கடனாக, பிடல் காஸ்ட்ரோ உருவத்தை உடலில் பச்சைக் குத்திக் கொண்டார்.
கியூபா நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்த, புரட்சியாளர் சே குவேராவின் உருவத்தையும் உடலில் பதித்திருந்தார்.
பிடல் காஸ்ட்ரோ மறைந்த நவம்பர், 25ம் நாளில் தான் மரடோனாவும் மறைந்தார். இது கால்பந்தாட்ட ரசிகர்களை, வியப்படைய வைத்துள்ளது.
- மோகன ரூபன்