சிறப்புமிக்க நாய் இனம்!
உலகில் அதிகம் விரும்பப்படும் நாய் லாப்ரடர் இனம். கீழ்ப்படிதல், உத்தரவுக்கு கட்டுப்படுதல், அன்பு செலுத்துதல் என, மற்ற இனங்களை விட, ஒரு படி மேல் நிற்கும்.
போலீஸ் துறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மோப்பம் பிடிப்பதில் கெட்டிக்காரத்தனம் கொண்டது. வெடிகுண்டு, பூமியில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க இவற்றையே அதிகம் நம்புகின்றனர். குற்றவாளிகளையும் கவ்விப் பிடிக்கும் திறனும் கொண்டது.
வட அமெரிக்க நாடான கனடா தான், இதன் பிறப்பிடம். அலெக்சாண்டர் ஹோம் என்பவர், கனடாவில் நியூபோட் லாண்டில் இருந்து சில நாய்களை ஐரோப்பாவுக்கு, 1830ல் கொண்டு வந்தார். அவை தான், இன்று காணும் லாப்ரடர் நாய்களின் முன்னோடி.
துவக்கத்தில் துப்பாக்கி சூடு பட்டு விழும் பறவை மற்றும் விலங்குகளை எடுத்து வருவதற்காக வேட்டைக்காரர்கள் பயன்படுத்தினர்.
மீன் பிடிக்கும்போது, வலையை எடுத்து வரவும், வலையில் இருந்து தப்ப முயலும் மீன்களை கவ்விப்பிடிப்பதிலும் திறமையாக செயல்படும்.
அமைதியான பண்பு உடையது. குழந்தைகளுடன் நட்பாக பழகும். அதனால் வீடுகளில் குடும்ப நண்பனாக வளர்க்க ஏற்றது.
ஐரோப்பிய நாடான இங்கிலாந்து டெர்பிஷெயரில் வசித்தவர் டேவிட் ரிச்சர்ட்சன். இவர், மூன்று வயதுள்ள லாப்ரடர் இன நாயை, 1982ல் விலைக்கு வாங்கினார். அதற்கு, பெல்லா என பெயரிட்டார். தொடர்ந்து, 26 ஆண்டுகள் அவரது குடும்பத்தில் உறுப்பினராக இருந்தது அந்த நாய். அவரது மனைவி டெய்சிக்கு, சிறந்த துணையாக திகழ்ந்தது பெல்லா.
நாய்களின் அதிக பட்ச ஆயுள், 20 ஆண்டுகள். ஆனால், இது அதிக ஆண்டுகள் உயிருடன் வாழ்ந்ததாக கருதப்படுகிறது.
கேரளா மாநிலம், இடுக்கி, பெட்டிமுடியில் சமீபத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 60க்கும் மேற்பட்டோர் சிக்கினர். இதில் சிக்கியவர்களை கண்டு பிடிக்க, சோனா என்ற போலீஸ் நாய் உதவியது. இதன் பங்களிப்புடன் தான் விரைவாக மீட்பு பணியை நடத்த முடிந்ததாக கூறினர் போலீசார்.
திருச்சூர் போலீஸ் அகாடமியில் நடந்த விழாவில், சோனாவுக்கு தங்கப்பதக்கம் அளிக்கப்பட்டது. இதுவும், லாப்ரடர் ரெட்ரீவர் இனத்தைச் சேர்ந்த நாய் தான்.
புள்ளிக்குதிரை!
ஆப்ரிக்க நாடான கென்யா, ராப்டி பள்ளத்தாக்கில் உள்ளது, மஸாய் மாரா வன உயிரின பூங்கா. இங்கு, காண்டாமிருகத்தைப் படம் பிடிக்கப்போனார், புகைப்படக் கலைஞர் பிராங்க் லியூ. அங்கு வரிக்குதிரைகள் கூட்டம் ஒன்றைக் கண்டார். அந்த கூட்டத்தில் புள்ளிராஜாவாக திரிந்தது ஒன்று. வித்தியாசமாக திரிந்ததை உற்று நோக்கினார். ஒரு குதிரை உடலில், வரிகளுக்குப் பதில், புள்ளிகள் இருந்தன.
அதை துரத்தி வளைத்து, பல கோணங்களில் படம் பிடித்தார். பின், சமூக வலைதளமான, 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் பதிவேற்றினார். பலரும் வியப்புடன், அது பற்றி விசாரித்தனர். பிறந்து சில நாட்களே ஆகியிருந்த அந்த புள்ளிக்குதிரை நட்சத்திர அந்தஸ்தை பெற்றது.
உலக அளவில் பிரபலமான அதற்கு, 'டிரா' என பெயர் சூட்டியுள்ளனர். இந்த புள்ளிக் குதிரையை, முதல் முதலில் கண்டவர், அந்த வன உரியினப் பூங்காவில் வழிகாட்டியாக பணியாற்றிய ஆன்டணி டிரா. அவர் பெயரே புள்ளிக் குதிரைக்கு சூட்டப்பட்டுள்ளது.
உடலில் தோலுக்கு, 'மெலனின்' என்ற வேதி சுரப்புதான் நிறத்தை வழங்குகிறது. அது சுரப்பதில் குறைபாடு ஏற்பட்டால், தோற்றத்தில் மாறுபாடு ஏற்படும். இதனால் தான் வரிக்குதிரை, புள்ளிகளுடன் பிறந்துள்ளது என, விலங்கியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
- என்றென்றும் அன்புடன்,
அங்குராசு.