முன்கதை சுருக்கம்: அலுவலகத்தில் இருவர், 'ஐ லவ் யூ' சொன்னதாக தமிழ்ச்செல்வி கூறவும், சமாதானமானான், ரிஷி. இந்நிலையில், சினிமா இயக்குனர் கே.வி.ஏ., போனில் அழைத்து, 'லிவ்விங் டுகெதர் லவ்வர்ஸ்' யாராவது தெரிந்தால், கூர்ந்து பார்க்குமாறு ரிஷியிடம் சொல்ல, பரவசமானான்-
இயக்குனர் கே.வி.ஏ.,வுடன் பேசிய அந்த பரவசம் தாளாதவனாக, ''சார்... கட்டாயம் அப்படி ஒரு ஜோடியை கண்டுபிடிச்சு, நான் அவங்களை, 'வாட்ச்' பண்றேன்,'' என்றான்.
''ஒரு விஷயம் ரொம்ப முக்கியம்... நீங்க, சினிமாவுக்காக வேவு பார்க்கறது, அவங்களுக்கு தெரியக் கூடாது. அப்படி தெரிஞ்சா, அது அவங்கள இயல்பா நடக்க விடாம பண்ணிடும். எனக்கு ஒரு, 'ரியல் லைப்' தான் வேணும்.''
''புரியுது, நான் பார்த்துக்கறேன் சார்.''
''இது சம்பந்தமா நீங்க என்னை எப்ப வேணா சந்திக்கலாம்; பேசலாம். கே.பி., சார் இருந்தா, அவர் தொட விரும்பற, 'சப்ஜெக்ட்' இது. சரியா, 'ட்ரீட்' பண்ணினா, இது புதையல்; தப்பாயிட்டா, நாம புதைஞ்சு போயிடுவோம்.''
''பஞ்ச்சிங்கா சொல்லிட்டீங்க சார்... நான் பார்த்துக்கறேன். என்னை பார்க்காமலே, 'அசைன்மென்ட்'டை கொடுத்ததுக்கு, ரொம்ப நன்றி சார்.''
''சுஜித், உங்களை பற்றி ரொம்ப உறுதியா சொன்னார். அவர் சொல்றார்னா அர்த்தம் இருக்கும். மே பீ, அவரே, 'ஹீரோ'வா நடிக்கலாம். இது இப்படித்தான்னு சொல்ல முடியாத, 'க்ளவ்டி ஸ்பேஸ்' தான் சினிமாத் துறை.''
''அய்யோ, அவர், 'ஹீரோ...' அந்த படத்துல நான் வேலை பண்ண போறேனா... இன்னிக்கு என் வாழ்க்கையில ஒரு மறக்க முடியாத நாள் சார்.''
''வாழ்த்துக்கள். இதான் என், 'பர்சனல்' நம்பர், குறிச்சு வச்சுக்கோ... பை...''
மறுபக்கம் அவர் பேசி முடிக்க, வானில் பறப்பது போல் இருந்தது, ரிஷிக்கு. முகம் கொள்ளாத மகிழ்ச்சியுடன் வந்தவனை, சாரதா மாமியும், நீலகண்டனும், அதே மகிழ்வுடன் எதிர்கொண்டனர்.
''என்ன ரிஷி... மூஞ்சி மத்தாப்பா இருக்கு... யார் போன்ல?''
''சொன்னா, 'ஷாக்' ஆயிடுவீங்க மாமி.''
''இன்ப அதிர்ச்சின்னா, அதிர அதிரக் கொடு.''
''இன்ப அதிர்வே தான். இயக்குனர், கே.வி.ஏ., தான் பேசினார். நான், அவரோட உதவி இயக்குனரா சேரப் போறேன். இதுக்கு எனக்கு உதவி பண்ணினது யார் தெரியுமா மாமி?''
''யாருப்பா?''
டைனிங் நாற்காலியில் அமர்ந்தவன், மாமி, வாசம் கமக்க போட்ட இட்லி உப்புமாவை சுவைத்தபடியே, ''இதையும் சொன்னா நம்ப மாட்டீங்க,'' என்றான்.
''பரவால்ல சொல்லு.''
''நடிகர் சுஜித்குமார்.''
''சுஜித்தா... நெஜமாவா?''
''நம்ப முடியல தான?''
''கிரேட்... என் பிள்ள கூட சுஜித் ரசிகன் தான்.''
பரிமாறியபடியே, ''அவன் பிறந்தநாள்ல நீ நல்ல விஷயமா சொல்லிண்டு வரே. ரொம்ப சந்தோஷம். ஆனா, சேனல்ல பெரிய பதவிக்கு வர்றது, உன் ஆசை இல்லையா?'' என்றாள், மாமி.
''என் லட்சியமே, இயக்குனர் ஆகறது தான், மாமி,'' என்றான்.
''பாத்து... நிறைய சினிமாகாரா வீடு கேட்டு வந்து, நான் தரமாட்டேன்னு சொல்லியிருக்கேன்.''
''ஏன் மாமி... ஒழுங்கா வாடகை வராதுங்கிற பயமா?''
''வாடகையை விடு. குடி, புகைன்னு வீட்டையே ரணகளப்படுத்திடுவாளே.''
''எல்லாரும் அப்படி இல்லை மாமி.''
''நானும், உன்னைச் சொல்லலையே.''
''ஆனாலும், சினிமான்னா உங்களுக்கு ஒரு பயம் இருக்கற மாதிரி தெரியுதே?''
''நிறையவே... 100க்கு ஒருத்தர் தானே இதுல ஜெயிக்க முடியறது. 99 பேர் நாசமான்னா போறா.''
''ஆமாம் மாமி... நீங்க சொல்றதும் சரி தான். ஆனா, அந்த, 100ல ஒருத்தனா தான், என்னை நினைக்கிறேன்.''
''எல்லாரும் அப்படி நினைச்சுண்டு தானே கோடம்பாக்கத்தை சுத்தறா... அது ஒரு மாய மான் வேட்டை.''
''சூப்பர் மாமி... மாய மான் வேட்டைங்கற உங்க விளக்கம். இது, ஒரு நல்ல தலைப்புக்கான வார்த்தை. நான் படம் இயக்கும்போது, இதை பயன்படுத்திக்க முடியுமான்னு பார்க்கறேன்,'' சாப்பிட்டபடியே, ரசனையோடு சொன்னான், ரிஷி.
''நீ ஜெயிச்சுடுவே ரிஷி... உன்கிட்ட, 'ஷார்ப் வியூ பாயின்ட்ஸ்' இருக்கு. நாளைக்கு பெரிய இயக்குனரான பிறகு எங்களை எல்லாம் மறந்துடாதே,'' என்றார், நீலகண்டன்.
அதேநேரம், பாயசத்தை நீட்டினாள், மாமி.
''என்ன மாமி... காலையிலயே பாயசம்?''
''பிறந்தநாளை மறந்துட்டு கேட்டா எப்படிடா?''
''அட, ஆமால்ல... இன்னிக்கு நடக்கற ஒவ்வொண்ணுமே நல்லவிதமா இருக்கு. எல்லாமே என்னை தேடியும் வருது. இதே மாதிரி, 'லிவிங் டுகெதர் கப்புள்ஸ்'சும் கிடைச்சுட்டா, நான் இப்பவே ஜெயிச்சுட்டா மாதிரி தான்,'' என்ற ரிஷியை, சற்று அதிர்வோடு பார்த்தாள், மாமி.
''என்ன மாமி, பார்வை மாறிப்போச்சு?''
''இங்கிலீஷ்ல என்னவோ சொன்னியே, எங்க திரும்பிச் சொல்லு?''
''அதுவா, 'லிவ்விங் டுகெதர் கப்புள்ஸ்'னேன்.''
''அப்படின்னா, கல்யாணம் பண்ணிக்காமலே, பண்ணிண்ட மாதிரி வாழற வாழ்க்கை தானே?''
''ஆமாம் மாமி.''
''அந்த கண்றாவிக்காரா எதுக்கு உனக்கு கிடைக்கணும்?''
''சப்ஜெக்ட்டே அவங்க தான் மாமி. அப்ப, அவங்கள, 'ஸ்டடி' பண்ண வேண்டாமா?''
''கல்யாணம்கிறது ஆயிரம் காலத்து பயிர்... அதை ஒரு, 'டெஸ்ட் பீஸா' ஆக்கறதுங்கறது கொடுமைடா.''
''மாமி... கல்யாணமாகி அப்புறமா ஒத்துவராம பிரிஞ்சு, விவாகரத்து வாங்கறதுக்கு முன்னாலயே அது தெரிஞ்சுட்டா நல்லது தானே?''
''மவுத் கல்யர்னு ஒரு ரிஷி. உடம்பெல்லாம் அழுகி, புழு நெளியற உடம்பு, அவருக்கு. அப்படிப்பட்டவரையே நளாயினிங்கறவ வெறுக்கல, கூடையில வெச்சு சுமந்துண்டு போனா. புருஷ பந்தம்கிறது இறப்பால தவிர, வேற எதாலயும் பிரிக்க முடியாதுங்கிறது தான், நம் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கை.''
''மாமி... நீங்க எந்த காலத்துல இருக்கீங்க... நளாயினி கதையை எல்லாம், பேசினா, இப்ப இருக்கற, 'பெமினிஸ்டு'கள், உங்களை தான், தங்களோட முதல் எதிரின்னு சொல்வாங்க...
''இப்ப எல்லா விஷயத்துலயும், ஆணுக்கு பெண் சரிநிகர் சமானம்கிறது, இந்த காலம். 'டிவி' தொடரில் தான் பார்க்கறீங்களே... அதுல, ஆணை விட பெண்ணுக்கு தானே எல்லா, 'ஸ்கோப்'பும் கொடுக்கப் பட்டிருக்கு?'' என்றபடியே எழுந்து சென்று கை கழுவினான். அவன் ஈர கையை துடைத்துக் கொள்ள, டவலை எடுத்துக் கொடுத்தார், நீலகண்டன்.
''ரிஷி... அது நல்ல, 'டாப்பிக்'கா தான் தோன்றது... பாரேன், நீ அதை பத்தி சொன்னவுடனேயே, சாரதா கொட்ட ஆரம்பிச்சுட்டா.''
''ஆமாம் சார்... ஆனா, இப்ப மாமி கூட உட்கார்ந்து விவாதிக்க எனக்கு நேரம் இல்லை. வெரி சாரி, மாமி... அப்புறம், இட்லி உப்புமா, பாயசம் எல்லாமே சூப்பர். மோகனுக்கு தினமும் பிறந்தநாள் வரணும்ன்னு இப்ப என் மனம் நினைக்குது,'' என்றான்.
அதுவரை நிலவிய கலகலப்பை சட்டென்று இழந்த நிலையில், இருவரும் உற்றுப் பார்த்தனர்.
இல்லாமல் போய்விட்ட ஒருவனுக்கு தினமும் எப்படி பிறந்தநாள் வர முடியும்?
தான் பேச்சுப் போக்கில் அவர்கள் மனதை கீறி விட்டதை மெல்ல உணர்ந்தவனாக, ''சாரி சார்... சாரி மாமி... ஏதோ ஞாபகத்துல பேசிட்டேன்,'' என்றான், ரிஷி.
மிடறு விழுங்கியவளாய், ''ரிஷி... பிறந்தநாள்ன்னு ஒண்ணு வந்தா தான் நீ என் கையால சாப்பிடணும்ன்னு இல்லை. எப்ப வேணா நீ சாப்பிடலாம்,'' என்றாள், மாமி.
''தேங்க்ஸ் மாமி... நான் புறப்படறேன்.''
''ஆல் த பெஸ்ட்.''
அவனுக்காக காத்திருந்த, யமஹா மேல் ஏறி, இரும்பு தலையனாகி பறக்கத் துவங்கினான்.
சேனல் ஆபீஸ், மிரட்டலாய் இருந்தது. வெளியே செக்யூரிட்டி துவங்கி, 12ம் மாடி வரை நீண்டிருந்தது. ஒரு லட்சம் சதுர அடிகளால் ஆன அக்கட்டடம், அமெரிக்க வெள்ளை மாளிகையையும் சற்று ஞாபகப்படுத்திற்று. முகப்பில் அதன், 'லோகோ'வுடன் கூடிய தங்க வண்ண எழுத்துகளுடன், நீரூற்று பீறிட்டபடி இருந்தது.
அதனுள் நுழைந்த ரிஷியை, புன்னகையுடன் அனுமதித்தார், செக்யூரிட்டி. பைக்கை ஸ்டாண்ட் போட்டு, துள்ளியபடி நடந்தான், ரிஷி.
ரிஷி வரவும், 'ஆட்டோ ரொபாடிச' கதவுகளின், 'சென்சார்' திறந்து, அவனை உள்ளே அனுமதித்தது. உள் பாகத்தில் நிரப்பப்பட்டிருந்த, 'சென்ட்ரலைஸ்டு ஏசி' குளிர், அவனது வியர்த்த பிடரியில் அதிகபட்ச சிலு சிலுப்பை தந்து, 'ஊவ்' என, கூவ விட்டது.
ஆனாலும், இங்கே இன்னும் கொஞ்ச நாட்கள் தான். அதன்பின், தான் ஒரு உதவி இயக்குனர்; அதற்குப் பின் இயக்குனர். அப்போதே கனவுக்குள் மூழ்கத் துவங்கியது, அவன் மனது.
கிருஷ்ணா ஸ்வீட்சில் வாங்கிய, மைசூர்பாக் கையில் வைத்திருந்தான். அதை தமிழ்ச்செல்விக்கு தான் முதலில் தரவேண்டும். அவளிடம் மட்டுமே, இயக்குனர் கே.வி.ஏ., பேசிய விஷயத்தையும் சொல்ல வேண்டும்.
சொல்லப் போனால், இதன் பிள்ளையார் சுழி அவளே... அவளும் மிக சந்தோஷப்படுவாள். நடிகர் சுஜித், சொல்பவர் மட்டுமல்ல, செய்தும் காட்டுபவர்... காட்டி விட்டார்!
தமிழ்ச்செல்வி இருக்கும் கேபினுக்குள் உற்சாகமாக நுழைந்தபோது, அவளது இருக்கை காலியாக இருந்தது. அவன் வரவும், பக்கத்து கேபின், பத்மா எழுந்து, ''ஹாய்,'' என்றாள்.
''தமிழ் இன்னும் வரலியா?''
''இப்ப தான் போன் பண்ணினா... இன்னிலேர்ந்து ஒரு வாரத்துக்கு வரமாட்டான்னு நினைக்கிறேன். அவ வர, ஒரு மாசம் கூட ஆகலாம்.''
''என்னாச்சு... ஏன் வரமாட்டா?''
''அவங்க அம்மாவுக்கு, 'சிவியர் ஹார்ட் அட்டாக்'காம். மதுரை, மீனாட்சி மிஷன் ஆஸ்பிடல்ல, ஐ.சி.யூ.,வுல இருக்காங்க... போன் வரவும், உடனே கிளம்பிட்டா.''
அடுத்த நொடி, அவளை தொடர்பு கொண்டான், ரிஷி.
அவள் போனை எடுக்கவும், ''தமிழ்... நான் தான்... பத்மஜா விபரமா எல்லாம் சொன்னா... நீ ஏன் உடனே எனக்கு போன் பண்ணல?'' என்று, படபடத்தான்.
''ட்ரை பண்ணினேன்... சிக்னல் கிடைக்கல, ரிஷி. அதனால, பரவாயில்லை. நான் இப்ப, 'பிரைவேட் கேப்'ல போய்கிட்டு இருக்கேன். நீ என்னை பார்க்காதது ஒரு விதத்துல நல்லது தான். சுஜித் சார் மேட்டரை நீயே, 'டீல்' பண்ணு... உன், 'கான்சன்ட்ரேஷன்' அது மேல இருக்கட்டும்.''
''இப்ப அதுவா முக்கியம்?''
''எனக்கு, என் அம்மா உயிர் முக்கியம். இப்ப, உனக்கு அதுதான் முக்கியம். இன்னும், 10 நாள்ல தமிழ் வருஷப் பிறப்பு வருது. இது சரியான நேரம். தலைமை பொறுப்பாளரிடம் பேசி, நல்ல நிகழ்வை, 'டிசைன்' பண்ணு... விட்டுடாதே...
''சுஜித் சாரை யார் சம்மதிக்க வெச்சோம்கிறது முக்கியமே இல்லை. சார், நம்ப சேனலுக்கு வரப்போறதும், அந்த நிகழ்வும் தான் பெரிசு.''
தமிழ்ச்செல்வியால் எப்படி அப்படி பேச முடிந்ததோ?
ரிஷியின் கண்கள் கலங்க ஆரம்பித்தது.
— தொடரும்
இந்திரா சவுந்தர்ராஜன்