''உச்சியில தெரியுது பாரு, அதான் தலைவா, பேச்சியாத்தா கோவிலு... இன்னும் பாதி மலை ஏறணும். கொஞ்சம், 'தம்' கட்டு. மலை ஏறினதும், தொண்டன் ஒருத்தன் துாக்கினு வர்ற பால் குடத்தை வாங்கி, ஒரு, 'போஸ்' குடு.
''அப்பால, ஆத்தாளுக்கு, பாலாபிஷேகம் பண்ணுவாரு, பூசாரி. அப்போ, அந்தாளோட, 'செல்பி' எடுத்து, 'பேஸ்புக்'கிலே தட்டி விடு. 'லைக்'கா வந்து விழும் பாரு. அத்தினியும், ஆத்திகம் பேசுற ஆளுங்களோட ஓட்டா மாறிடும்.''
இன்னும் பாதி மலை ஏற வேண்டுமே என்ற பீதியில் நின்ற தலைவர், இருள் ஒளியை உற்சாகப்படுத்தினான், தொண்டன் காளிமுத்து.
இரட்டை நாடி உடம்பு, அத்தனை படிகள் ஏறியதில், உதறியது, இருள் ஒளிக்கு. வடிந்த வியர்வையை துடைத்தவருக்கு, காளிமுத்துவின் மேல் கடும் கோபம்.
''எவன்டா, ஆத்தா கோவில இம்மாம் உசரத்துல கட்டித் தொலைச்சவன்... கீழே அடிவாரத்துல கட்டுனா, ஆத்தா வரம் கொடுக்க மாட்டாளா?'' உறங்கிக் கொண்டிருந்த நாத்திகம் புரண்டு எழுந்து, நர்த்தனமாடியதை அடக்க முடியவில்லை, இருள் ஒளியால்.
''தலைவா, என்ன பேச்சு பேசற... நாமெல்லாம் நாத்திகம் பேசி, நாலு மாசமாச்சே... நீ, இப்படி எக்குத்தப்பா பேசறது, பின்னால வர்ற மீடியாகாரனுங்க காதுல விழுந்தா, பேஜாராயிடும். கொஞ்சம் அடக்கி வாசி,'' என்று எச்சரித்தான், காளிமுத்து.
தொப்பையிலிருந்து நழுவிய காவி வேட்டியை, கையால் கவ்வி, மிக சிரமப்பட்டு அடுத்த படியில் காலை வைத்தார், இருள் ஒளி.
அதே சிரமத்தோடு தான், இருள் ஒளியை அரசியலுக்கு அழைத்து வர, அவரது நலம் விரும்பிகள் பாடுபட்டனர். அரசியலில் குதிக்கலாமா, வேண்டாமா என்று, பாதி இருளிலும், பாதி ஒளியிலுமாக, பல ஆண்டுகளாக இழுபறி செய்தவரை, ஒரு கூட்டம், தொபுக்கடீர் என்று அரசியல் குளத்தில் தள்ளி விட்டிருந்தது.
பரம்பரை பரம்பரையாக, நாத்திகத்தில் நாட்டம் கொண்டு, நாடகம், திரைப்படம் என்று தலை காட்டி, ஆத்திகக்காரர்களை நையாண்டி செய்தே, ரசிகர்களாய் நான்கு பேரை சேர்த்திருந்தார். அந்த ரசிக பெருமக்களின் தொல்லையால் தான், அரசியல் தொண்டு செய்ய வந்திருந்தார்.
இவர் கட்சி ஆரம்பித்து, தன்னைப் போல் நாத்திகம் பேசும் பெரிய கட்சி ஒன்றில் கூட்டணி அமைத்து, ஒன்றிரண்டு, 'சீட்' வாங்க நினைத்தார். அந்த காலகட்டத்தில், பிரதான கட்சி தலைவரின் ஜாதக கட்டங்களில், ஓரிரு கிரகங்கள், இசகுபிசகாக இடம் மாறியதில், அவருடைய கொள்கையும் இடமிருந்து வலமாக பெயர்ந்தது.
கடவுளை நம்புபவர்களின் ஓட்டை நம்பி, தானும் கடவுளை நம்புகிறவன் தான் என்று, நம்ப வைக்க முயன்று கொண்டிருக்கிறார்.
நாத்திக நையாண்டியுடன், கூட்டணியாய் ஒட்டுவது முடியாதென்று தோன்றியது, இருள் ஒளிக்கு.
ஆஸ்தான ஆலோசகரான, காளிமுத்துவிடம், 'டேய், இப்படி மாறிட்டாரேடா... இப்ப நாம என்ன பண்றது?' என்று, கவலையுடன் கேட்டார், இருள் ஒளி.
'தலைவா, அரசியல்ன்னா இப்புடி உல்டாவா மாறுறது சகஜம். நீயும் அந்த வழியில போக வேண்டியது தான். மெய்யாலுமே, உன்னை யாராவது சாமி கும்புடுன்னா தான், யோசனை பண்ணணும். ஜனங்ககிட்ட சும்மா பாவ்லா பண்ணு... அவ்வளவுதான்...' என்று, அசால்டாக பேசியவன், இருள் ஒளியின் அடுத்த அறிக்கையையும், அவனே எழுதி தந்து விட்டான்.
'என்னை எல்லாரும் சாமி கும்பிடாதவன்னு சொல்லித் திரியறானுங்க... எங்க ஒண்ணுவிட்ட மாமா சின்னசாமி, அவரோட பெரியப்பா பெரியசாமி. இந்த ஊரு சன்னிதி தெருவிலே தான், ரெண்டு பேரு வீடும் இருந்துச்சு. ஸ்கூல் லீவில் அவங்க வீட்டுக்கு வருவேன்.
'கோவில் கேட்டை தாண்டி குதிச்சு, கோலியாட்டத்தில் ஜெயிக்கணும்ன்னு சாமி கும்புடுவேன். திருவிழாவின்போது, சாமி ஊர்வலம் எங்க தெரு வழியாதான் வரும். ஜன்னல் வழியா கை நீட்டி, திருநீறு கேட்பேன். கை நுழைய முடியாத சின்ன ஜன்னலா இருக்கும். அதனால, விபூதி வாங்க முடியாது.
'வீட்டுக் கதவை திறந்து, வெளியே வர்றதுக்குள்ள, சாமி, தெருவை தாண்டி போயிடும். அதனால, அன்னிலேர்ந்து, 'இனி, விபூதியை தொட மாட்டேன்'னு சபதம் எடுத்தேன்...' என்று, தன் வாழ்க்கையின் ஆன்மிக அனுபவங்களை அநியாயமாக அளந்துவிட்டு, ஆத்திக அனுதாபங்களை பெறும் முயற்சியில் இறங்கினார்.
இதை கேட்டுக் கொண்டிருந்த ஒரு கிழவி, கூட்டத்திலிருந்து எழுந்து வந்து, 'என் ராசா... நீ, சின்னசாமியோட மருமவனா... என்னை அடையாளம் தெரியுதா... சின்ன வயசுல, திருவிழாவுல, நீ, என் மேல கல்லை துாக்கிப் போட்டு, மண்டையில ரத்தம் வந்துச்சே...
'உன் மாமன்கிட்ட சொல்ல வந்ததுக்கு, 'மண்டையில என்ன தக்காளி ரசமா'ன்னு கேட்டானே... நியாபகமில்ல... அந்த திருவிழா, சாமி விபூதி, இன்னும் என் சுருக்கு பையில இருக்கு... நெத்தியை காட்டு, இட்டு விடறேன்...' என்று, விபூதியும் கையுமாக, இருள் ஒளியை நெருங்கினாள்.
சின்னசாமி, பெரியசாமி, திருவிழா என்றெல்லாம் பொய்யாக, காளிமுத்து எழுதி தந்தவைகளை படிக்கப் போய், எதிர்க்கட்சி ஆட்களின் சதியால், இப்படி ஒரு கிழவி இயக்கப்படுவதை புரிந்து கொண்டார், இருள் ஒளி.
அடுத்த நொடியில், அதையே தனக்கு சாதகமாக்கி, 'அந்த ஆத்தாளே உன் ரூபமா முன்ன வந்து, என் சாபத்தை முடிச்சுக்க சொல்றா மாதிரி தெரியுது. தாயே, உன் மகனா நினைச்சு, அந்த விபூதியை என் நெத்தியில பூசி விடு...' என்று, பாழும் நெற்றி மேல், விபூதி பட்டைகளை அரங்கேற்றி, எதிர்க்கட்சியின் சதியை முறியடித்து, பட்டையை கிளப்பினார். இருள் ஒளி.
'தலைவா, நீ எங்கேயோ போயிட்டே...' என்று உணர்ச்சிவசப்பட்டு, அவர் காலில் விழுந்தான், காளிமுத்து.
இப்படி ஆரம்பமான இருள் ஒளியின் ஆன்மிக அரசியல், நாளொரு கோவிலும், பொழுதொரு பொங்கலுமாக பொங்கத் துவங்கியது.
இருள் ஒளியின் அங்கம், அங்காளம்மன் கோவிலில் புரண்டது. பழநி மலையானுக்கு முடி துறந்தார். திருப்பதி உண்டியலில் காணிக்கை என்று, தினமும் ஒவ்வொன்றாக, இருள் ஒளியின் தேர்தல் பிரசார யுக்தி, ஆத்திகர்களுக்கு சப்ளை செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.
கடந்த மாதங்களில் அக்மார்க் ஆன்மிகவாதியும் கடந்தறியாத பல சடங்குகளையும், சம்பிரதாயங்களையும், காளிமுத்துவின் புண்ணியத்தால் அவஸ்தையுடன், அனுசரிக்க வேண்டியதாகியது. அதனால், அவருக்கு இன்னொரு பயமும் இருந்தது.
'டேய் காளி... 'ஸ்டார்ட் மியூசிக்'ன்னு சொல்லி, தீ மிதிக்க வெச்சுட போற...' என்று, தன் பீதியை வெளிப்படுத்தினார்.
'தலைவா, அதெல்லாம் ஆடி மாசம் தான். ஆனா, ஆடியிலே எலெக் ஷன் முடிஞ்சு நீ எம்.எல்.ஏ.,யாவோ, மந்திரியாவோ, 'ஆடி கார்'ல போவே. அப்போ, தீ மிதிக்கிறதெல்லாம் மூட பழக்க வழக்கம்ன்னு உனக்கு பகுத்தறிவு உதிச்சுடும் கவலைப்படாதே.
'ஆனா தலைவா, ஜனங்க முழுசா இன்னும் உன்னை நம்பல... சும்மா வேஷம் போடறதா பேசறாங்களாம். அதனால, பெரிய ஐடியா... ரொம்ப உசரத்துல, பேச்சியாத்தா கோவிலு ஒண்ணு கீதாம்... அத்தினி சுலுவா யாரும் ஏற முடியாதாம்... சாமியை நம்பறவனும், ஆத்தா கோவிலுக்கு போறது ரொம்ப கஷ்டமாம்...
'பால் கொடத்தோட, நம்ப ஆளுங்க அந்த மலையை ஏறினா, பெரிய விளம்பரம் ஆயிடும். இத்தினி கஷ்டப்பட்டு ஏறி, ஆத்தாளுக்கு பால் அபிஷேகம் செஞ்சு, அது எல்லாருக்கும் தெரிஞ்சா, அப்புறம் உங்க மேல ஆத்திக ஜனங்களுக்கு முழுசா நம்பிக்கை வரும். அப்புறம் நம்ம லெவலே வேற மாதிரி பூடும்...' என்று, காளிமுத்துவின் அறிவுரை, இருள் ஒளியை இந்த சடங்கில் இழுத்து விட்டிருந்தது.
''இன்னும் எத்தினி படிடா?'' கோபமும், எரிச்சலுமாக, காளிமுத்துவிடம் கேட்டார், இருள் ஒளி.
''தலைவா, முகத்தை கடுகடுன்னு காட்டாதீங்க... பேப்பர்காரனுங்க, மீடியாகாரனுங்க கூடவே வர்றானுங்க... சிரிச்சுக்கிட்டே ஏறுங்க,'' என்று வெறுப்பேற்றியவன், ''எத்தினி படின்னு தெரியலை, தலைவா... நாங்களும் முன்ன பின்ன வந்ததில்லையே,'' என்று அசால்டாக பதிலளித்தான்.
விதியே என்று, ரெடிமேட் சிரிப்பை முகத்தில் படரவிட்டபடி, படி ஏறினார், இருள் ஒளி.
ஒரு வழியாக உச்சியை எட்டியாயிற்று.
''சட்டுபுட்டுனு அபிஷேகத்துக்கு ஏற்பாடு பண்றா, காளி. பசி, வயித்தை கிள்ளுது,'' என்ற இருள் ஒளியின் கெஞ்சலால், மடமடவென செயல்பட்டான், காளிமுத்து.
இருள் ஒளியின் வியர்வையால் நனைந்த சட்டையை உருவி, துண்டால் மேனியை துடைத்து விட்டான். மார்பிலிருந்து தொந்தி வரை பரவலாக, 'சொத சொத'வென சந்தனத்தை மெழுகினான்.
நன்கு குழைத்த விபூதியை அரை வழுக்கையில் பட்டையாக தீட்டினான். கலர் கலராக, குங்குமம் மற்றும் மஞ்சளால் வட்ட பொட்டுகளை வைத்தான். கருத்த கன்னத்தில் கண் பட்டு விடாமல் இருக்க, மையால் பொட்டிட்டான்.
இருள் ஒளியின் முன் கண்ணாடியை நீட்டி, ''தலைவா, எப்பிடி, கெட் - அப்?'' என்று கேட்டான்.
தன் நேர்த்தியான, ஆத்திக, 'மேக் - அப்'பை தலைவர் புகழ்வாரென்று காத்திருக்க, அவன் காண்பித்த கண்ணாடி வழியே, பின்புறம் தெரிந்த அந்த கோவிலை பார்த்ததில் ஆடிப்போனார், இருள் ஒளி.
''டேய் காளி... இது, கோவிலாட்டம் தெரியலையேடா,'' என்று, திரும்பி அந்த கட்டடத்தை பார்த்தவருக்கு, பகீரென்றது. சிலுவை குறியுடன், தேவாலயம் என்ற, 'போர்டு' தொங்கியது.
''யார் சார் நீங்களெல்லாம்... இங்கே, சர்ச்சு தான். நீங்க சொல்ற பேச்சியாத்தா மலை, அதோ தெரியுது பாருங்க... தெரியாம வந்துட்டீங்க போலிருக்கு... இத்தனை பேர் கஷ்டப்பட்டு ஏறி வந்திருக்கீங்களே... விசாரிச்சுட்டு வந்திருக்கலாம்ல்ல,'' என்று, இவர்களுக்காக வருத்தப்பட்டார், ஒரு முதியவர்.
தலை சுற்றியது, இருள் ஒளிக்கு.
ஆனால், காளிமுத்து, வருத்தப்பட்டதாக தெரியவில்லை.
''தலைவா, இப்படி மலைச்சு நின்னா எப்புடி... இந்தாங்க, சட்டையை போட்டு, பட்டனை மாட்டி, சந்தனத்தை மறைங்க... நான் உங்க நெத்தியை கவனிச்சுக்கறேன்,'' என்று, ஈர துண்டால், நெற்றியில் அலங்கரித்த அடையாளங்களை அகற்றினான்.
மாற்றும் அரசியல் யுக்தி, அவனது கை வந்த கலையாயிற்றே.
அடுத்த நாள் செய்தித்தாளில், 'மலை ஏறி, தேவாலயம் தொழுதார், இருள் ஒளி!' என்று வந்திருந்தது.
திருவாழத்தான்