அன்புடன் அந்தரங்கம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 ஏப்
2021
00:00

அன்புள்ள அம்மா --
வயது, 32. திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. படிப்பின் மீது அதிகம் ஆர்வமில்லை. பெற்றோரின் வற்புறுத்தலுக்காக, சிரமப்பட்டு, ஐ.டி.ஐ., படித்து முடித்தேன்.
மத்திய அரசு பணியில் கடைநிலை ஊழியராக இருந்து, ஓய்வு பெற்றவர், அப்பா; பயங்கர செலவாளி. அக்காவுக்கு திருமணமாகி, கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வெளியூரில் வசித்து வருகிறார்.
நான், அம்மா பிள்ளை. கணவனால் சிரமப்பட்ட அம்மாவை, காலம் பூராவும் மகாராணி போல் பார்த்து கொள்ள ஆசைப்பட்டேன். ஐ.டி.ஐ., படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்காததால், பெட்டிக்கடை வைத்து நடத்துகிறேன்; வருமானம் சிறப்பாகவே இருக்கிறது. சம்பாத்தியம் முழுவதையும் அம்மாவிடம் கொடுத்து விடுவேன்.
பார்க்க, நடிகர் அரவிந்தசாமி போல இருந்ததால், எனக்கு பெண் கொடுக்க சொந்தத்திலும், அயலிலும் நிறைய பேர் போட்டியிட்டனர். அம்மா யாரை கை காட்டுகிறாரோ, அந்த பெண்ணை மணந்து கொள்ள தயாராய் இருந்தேன்.
அம்மாவிற்கு பணத்தாசை அதிகம். சிறப்பான, அழகான, பொருத்தமான பெண்களை நிராகரித்தார். என்னை விட ஐந்து வயது மூத்த, சராசரிக்கும் குறைவான அழகுள்ள தமிழ் ஆசிரியை ஒருவரை, எனக்கு மணமுடிக்க திட்டமிட்டார்.
'மாதம், 30 ஆயிரம் சம்பளம். ஆண்டுக்கு, 3.60 லட்சம் ரூபாய். இவளை திருமணம் செய்வது, 1.5 --- 2 கோடி ரூபாய் பரிசு விழும் நம்பர் தெரிந்த, லாட்டரி சீட்டு வாங்குவதற்கு சமம்...' என, ஒரு வருமான கணக்கு போட்டார், அம்மா.
அவள் சம்பளத்தை வைத்து மாதாந்திர சீட்டு; வட்டிக்கு விடலாம்; நிலம் வாங்கி போடலாம்; நகை வாங்கி குவிக்கலாம் என, கனவு கண்டார்.
எந்த காரணத்தை முன்னிட்டும் வேலையை விடக்கூடாது என்கிற நிபந்தனையுடன், அவளை எனக்கு திருமணம் செய்து வைத்தார்.
சமைக்க தெரிந்தாலும், தெரியாது என, பொய் கூறினாள், மனைவி. என் அம்மா, சமையல் செய்தார். தினமும், அவளை காலையில் பள்ளியில் விட்டும், மாலையில், அழைத்தும் வரவேண்டும்.
சில மாதங்கள் சம்பள பணத்தை என்னிடம் கொடுத்தவள், பின், வெறும், 5,000 ரூபாய் மட்டுமே கொடுத்து, மீதியை அவளது அப்பாவிடம் கொடுத்தாள். பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை, நானும், அம்மாவும் தான் பார்த்து கொள்ள வேண்டும்; அவள் தொட மாட்டாள்.
அடுத்து, ஆண் குழந்தை பிறந்த இரண்டாவது ஆண்டில், 'எனக்கு வேலைக்கு போக பிடிக்கவில்லை. வேலையை ராஜினாமா செய்யப் போகிறேன்...' என்றாள்.
வெட்கத்தை விட்டு, அவளின் கை கால்களை பிடித்து கெஞ்சினேன்.
நான் கதற கதற கேட்காமல், சென்ற ஆண்டு, வேலையை ராஜினாமா செய்து விட்டாள். காலை, 8:00 மணி வரை துங்குகிறாள். குழந்தைகளை படிக்கச் சொல்லாமல், மாலையிலிருந்து இரவு வரை, அவர்களுடன் அமர்ந்து, 'சீரியல்' பார்க்கிறாள்.
தினம் என் அம்மாவுடன் சண்டை போடுகிறாள். வாரம் ஒரு முறை தான் குளியல். சனி - ஞாயிறு, அப்பா வீட்டுக்கு போய் விடுகிறாள்.
'நம்பிக்கைத் துரோகம் செய்தவளை விவாகரத்து செய்து, வேறொருத்தியை திருமணம் செய்து கொள்...' என்கிறார், அம்மா.
என்ன செய்யலாம், தகுந்த யோசனை கூறுங்கள், அம்மா!
இப்படிக்கு,
அன்பு மகன்.


அன்பு மகனுக்கு —
வேலைக்கு செல்லும் பெண்களை திருமணம் செய்து கொள்ளும் பெரும்பாலான ஆண்கள், தத்தம் மனைவியரை கோடி
ரூபாய் லாட்டரி சீட்டுகளாக கருதுவதில்லை.
கணவன் - மனைவி இருவருமே வேலைக்கு போனால் பொருளாதார தன்னிறைவு பெறலாம் என, நினைக்கின்றனர்.
மேலும், வீட்டு வேலைகளை சரிபாதியாக பகிர்ந்து கொள்கின்றனர்.
உன் மனைவி வேலையை ராஜினாமா செய்ததை, இரு கோணங்களில் பார்க்கலாம்.
1. உண்மையிலேயே உன் மனைவி, ஒரு வாழைப்பழ சோம்பேறி. சொந்தக்காலில் நிற்க விரும்பாதவள். சுயசுத்தம் பேணாதவள். குழந்தைகளை சரியாக வளர்க்க தெரியாதவள். கணவனின் பெட்டிக்கடை வருமானம் போதும், அதற்குள் குடும்பம் நடத்தி கொள்ளலாம் என, நினைப்பவள்.
துாக்கம், சாப்பாடு, 'சீரியல்' மற்றும் தாம்பத்யம் இவை போதும் இவர்களுக்கு. எருமை மாடு போல் குடும்ப சேற்றிலேயே படுத்தே கிடப்பர். இவர்களை திருத்த, பிரம்ம பிரயத்தனம் தேவை.
2. உன் அம்மாவின் பேராசையால், மிகப்பெரிய அளவில் காயப்பட்டிருக்கிறாள், மனைவி. 'என்னை ஒரு பெண்ணாய் பார்க்காமல், ஏ.டி.எம்., கார்டாய் பார்க்கிறீர்களே...' என்ற ஆதங்கம் அவளுக்கு. உன்னையும், உன் அம்மாவையும் பழி வாங்குவதற்காக வேலையை ராஜினாமா செய்திருக்கிறாள். தொடர்ந்து குடும்பத்திற்குள் ஒத்துழையாமை இயக்கம் நடத்துகிறாள்.
'வேலையை ராஜினாமா செய்ததன் மூலம், நம்பிக்கை துரோகம் செய்து விட்டாள், மனைவி...' என, நீங்கள் கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு. இரண்டாவது திருமணம் செய்து கொள்வது, பிரச்னைக்கு தீர்வல்ல.
முதல் கோணம் உண்மை என்றால், நீ, தினமும் காலை, 6:00 மணிக்கு எழுந்து, மனைவி, குழந்தைகளை எழுப்பு. காலையில் குளிப்பதை கட்டாயப்படுத்து.
பெற்றோர் வீட்டுக்கு, மனைவி, வாரம் இரண்டு நாட்கள் போவதை, மாதம் ஒரு நாளாக மாற்று. மாலை, 6:00 மணியிலிருந்து, 8:00 மணி வரை, 'டிவி'யை, 'ஆப்' செய்து, 'சீரியல்' பார்ப்பதை நிறுத்து.
இரண்டாவது கோணம் உண்மை என்றால், மனைவியை கோடி ரூபாய் லாட்டரி சீட்டாய் கருதியதற்கு, மன்னிப்பு கேள். வேண்டு மென்றே வேலையை விட்டு விட்டாய் என, மனைவியை குற்றம் சாட்டாதே. அம்மாவின் பேராசை திட்டங்களுக்கு கூட்டாளி ஆகாதே.
அம்மாவுக்கும், மனைவிக்கும் இடையே ஆக்கப்பூர்வ மான தகவல் தொடர்பை ஏற்படுத்து. சமையல், ஒரு இல்லத்தரசியின் ஆயுதம் என, மனைவிக்கு சொல்லால், செயலால் உணர்த்து.
வாழ்க்கைக்கு பணம் முக்கியம். ஆனால், பணம் மட்டுமே முக்கியமல்ல என்பதை நீயும், உன் அம்மாவும் உணர வேண்டும். உங்களின் நேர்மறையான செயல்பாடு, மனைவியை நல்வழிப்படுத்தக் கூடும்.
கணவனையும், மாமியாரையும் பழி வாங்க, தமிழ் ஆசிரியை என்கிற சுய அடையாளத்தை தொலைத்தது மாபெரும் முட்டாள்தனம் என்று, மாற்றி யோசிப்பாள், உன் மனைவி. நீயும், அம்மாவும், உன் மனைவியும் தன்னிலை உணர்ந்து கொண்டால், குடும்பம் தப்பி பிழைக்கும்.
பெட்டி கடையை விரிவுப்படுத்து. மனகசப்பை விட்டொழித்து தாம்பத்யத்தை பூரணப்படுத்து. குழந்தைகளின் நலனை பெரிதாய் நினை. நல்லதொரு குடும்பத் தலைவனாக மாறு. வாழ்த்துக்கள் மகனே!
— -என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X