இனியொரு விதி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஏப்
2021
00:00

கணவன் கிரிதரனின் பழைய அலைபேசியுடன் இணைக்கப்பட்டிருந்த மடிக்கணினியில், விரிந்த காட்சியை கண்டு, சத்யாவின் கண்கள் நிலைகுத்தி நின்றன. காலடியிலிருந்து பூமி நழுவி, தட்டாமாலை சுற்றுவது போல் நிலை தடுமாறினாள்.
ஒரு பெண்ணுடன் மிக நெருக்கமாய் கிரிதரன் படுத்திருக்க, அப்பெண் கண்ணில் காமம் வழிய எடுத்திருந்த, 'செல்பி' புகைப்படம், திரை முழுவதும் விரிந்தது.
கை கால் உதற, தடால் என, நாற்காலியிலிருந்து சரிந்தாள்.
''அங்கே என்ன சத்தம்?'' என்று கேட்டபடி வந்தாள், அவள் மாமியார்.
மடிக்கணினி திரையில் தெரிந்த புகைப்படத்தை கண்டதும், ஸ்தம்பித்து நின்றவள், சுதாரித்து, வேகமாய் தன் அறைக்கு சென்று கதவை மூடிக்கொண்டாள்.
தட்டுத் தடுமாறி எழுந்தமர்ந்த சத்யா, ஒரே நொடியில், தன் வாழ்க்கை தலைகீழாய் மாறியதை உணர்ந்தாள்.
பிரசவம் முடிந்து, ஐந்து மாதங்கள் கழித்து, அம்மா வீட்டிலிருந்து வந்த பின், கணவனிடம் சிற்சில மாற்றங்களையும், அவன் முன்பு போல் இல்லை என்பதையும் உணர்ந்தாள்; மனம் நெருடிக்கொண்டே இருந்தது.
ஏதோ ஒரு உள்ளுணர்வில் கணவனின் பழைய மொபைல் போனை ஆராய, தன் வாழ்வின் விதி மாறியதை உணர்ந்தாள். மனதின் வலி, பிரசவ வேதனையை விட, கடுமையாய் அவளை துடி துடிக்கச் செய்தது.
இரவு, 11:00 மணியளவில் வந்தான், கிரிதரன்.
சிலையென அமர்ந்திருக்கும் சத்யாவையோ, தொட்டிலில் உறங்கும் குழந்தையையோ கவனியாது, இரு கை நீட்டி, சோம்பல் முறித்து, கொட்டாவி விட்டபடியே, அறைக்குள் செல்ல முயன்றான்.
''உங்களிடம் கொஞ்சம் பேசணும்,'' என்றாள், சத்யா.
''எதுவாக இருந்தாலும், காலையில் பேசிக்கலாம். எனக்கு, 'டயர்டா' இருக்கு.''
''நீ, எங்கே போயிட்டு வர்றேன்னு எனக்கு தெரிய வேண்டும்,'' என்றாள்.
''இதென்ன கேள்வி... ஆபீஸ் தான் போயிட்டு வரேன்,'' என்று, அலட்சியமாய் கூறினாலும், அவன் கண்களில் எச்சரிக்கை தெரிவதை கவனித்தாள்.
''நீ எனக்கு, இப்போதும் துரோகம் செய்கிறாயா?''
''என்ன, பைத்தியம் போல் உளறுகிறாய்?'' என, மீண்டும் செல்ல முற்பட்டான்.
''நானா பைத்தியம்?'' என்று பெருங்குரலெடுத்தாள்.
அவள் மாமியாரும் - மாமனாரும் அறையிலிருந்து வெளியே வந்தனர்.
வேகமாய் சென்று, மடிக்கணினியை திறந்து, புகைப்படத்தை காட்டிய சத்யா, ''இப்போது, உண்மையை சொல்கிறாயா?'' என்று, கண்ணில் நீர் வழிய உறுமினாள்.
''அவளுக்கும், எனக்கும் தொடர்பு இருக்கிறது உண்மை தான். அதற்கென்ன இப்போது... உன்னால் என்னை என்ன செய்ய முடியும்?'' என்றான்.
''ஏண்டா இப்படி செய்தே... உனக்கு எப்படிடா மனம் வந்தது?'' என்று கண்ணீர் மல்கினாள்.
''ஏய், சத்யா... எதுக்கு இப்ப அழறே... நீ அழுவதற்கோ, பயப்படுவதற்கோ ஒன்றுமில்லை. கடைசி வரை, நான் உன்னுடன் இருப்பேன்,'' என்றான், கிரிதரன்.
''அப்படி என்றால், அந்த பெண்ணிடம் இனி போக மாட்டாய்தானே?'' என்றாள்.
''அது மட்டும் முடியாது, சத்யா. என்னை நம்பி, தன் கணவனை விவாகரத்து செய்யப் போகிறாள். அதன்பின் அவளுக்கும், அவள் பிள்ளைக்கும் நான் தான் துணை... அதுக்காக, உன்னை நான் கை விடமாட்டேன்,'' என்றான்.
''அந்த பிள்ளை, உன் பிள்ளையா?'' என்று கேட்டாள், சத்யா.
''சேச்சே... அவள் கணவனுக்கு பிறந்தது,'' என்று, அவசர அவசரமாய் மறுத்தான்.
''உன் குழந்தையை வயித்துல சுமந்து, நல்லபடியா பெத்தெடுக்கதானேடா அம்மா வீட்டுக்கு போனேன்... நம் குழந்தையின் எதிர்காலம் குறித்த பொறுப்பு உனக்கில்லையா...
''அதற்குள், அடுத்தவன் பெண்டாட்டியோடு குடும்பம் நடத்துகிறாய். நீயெல்லாம் மனுஷனா... மிருகம். மிருகத்து கூடவெல்லாம் என்னால வாழ முடியாது,'' என்றாள்.
''நீ மட்டும் என்ன... ராட்சசி போல கத்துகிறாய். இப்படிப்பட்ட ராட்சசி கூடவெல்லாம் என்னாலும் வாழ முடியாது. உன்னை விவாகரத்து செய்து, மூலையில் உட்கார வைத்தால் தான், உன் திமிர் அடங்கும்,'' என்றான்.
அப்போது, தொட்டிலிலிருந்த குழந்தை வீறிட்டு அழ, அவனை துாக்கி சமாதானப்படுத்த துவங்கினாள், சத்யா.
கிரிதரனின் பெற்றோர் அகல, கிரிதரனும், தன் அறைக்கு செல்ல திரும்பினான்.
''கிரிதரன்... இங்கே பார்... உனக்கும், எனக்கும் ஒத்து வரவில்லை என்று, நீ விவாகரத்து கேட்டிருந்தால், நம் இருபக்க தவறுகளையும் அலசி ஆராய்ந்து, திருந்தி வாழ ஒப்புக்கொண்டிருப்பேன்.
''ஆனால், நீயோ வேறொரு பெண்ணை தேர்வு செய்து, அவளுடன் குடும்பம் நடத்தி, என்னிடம் விவாகரத்து கேட்கிறாய். எனக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடு,'' என்றாள்.
''தெரியுமே... உன் தங்கை கல்யாணம் முடியும் வரை, நீ என்னுடன் தான் இருப்பாய். இல்லையென்றால், இந்த சமூகத்தில் உனக்கு மதிப்பும் இருக்காது; தங்கையின் கல்யாணமும் நடக்காது.''
''தப்பா புரிஞ்சிருக்கே... அக்காவின் வாழ்க்கை தோல்விக்காக, தங்கையை மணம் புரிய மாட்டேன் என்று சொல்லும் ஒரு பத்தாம் பசலித்தனமான கோழை, என் தங்கைக்கு கணவராக வரவேண்டாம்,'' என்றாள்.
''இந்த திமிர் பேச்செல்லாம் உன் கழுத்தில் தாலி இருக்கும் வரை தான் என்பதை மறக்காதே,'' என்றவன், அறைக்குள் சென்று பட்டென்று கதவை மூடினான்.
வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாய் அவள் மனதை குடைந்தது. யாரிடமாவது இவ்விஷயம் பகிர்ந்து, ஆலோசனையும், ஆதரவையும் பெறத் துடித்தது. அம்மாவையும், தங்கையையும் உடனே பார்க்க ஆர்ப்பரித்தது மனம்.
மறுநாள் -
கணவனுடன் காரில் வராமல், குழந்தையுடன் ஆட்டோவில் வந்திறங்கிய சத்யாவை பார்த்து, யோசனையுடன் அம்மா புன்னகைக்க, ஓடி வந்து, அவள் கையிலிருந்த குழந்தையை வாங்கிக் கொண்டாள், தங்கை பூஜா.
சில மணி நேர சிரிப்பு, பேச்சுக்கு பின், முந்தைய நாள் இரவு சம்பவங்களை சொன்னாள், சத்யா; கல்லாய் சமைந்தாள், அம்மா.
''என்னக்கா அநியாயம் இது... மாமாவை அப்படியே விட்டுட கூடாது; நடுக்கூடத்தில் நிற்க வைத்து நாக்கை பிடுங்கிறார் போல் கேள்வி கேட்கணும்,'' என்றாள், பூஜா.
''கேட்டாயிற்று...'' என கூறி, முற்றுப்புள்ளி வைத்தாள், சத்யா.
''ஆம்பிளைங்களுக்கே ஸ்திர புத்தி கிடையாது. கொஞ்சம் அப்படி இப்படி தான் இருப்பர். அதையெல்லாம் நாம் பொருட்படுத்தக் கூடாது,'' என்று பெருமூச்சு விட்டாள், அம்மா.
''ஏன் மா?'' என்று கேட்டாள், சத்யா.
''ஏன்னா, வீட்டு பெண்கள் கையில் தான் குடும்பத்தின் மரியாதையும், கவுரவத்தையும் காக்கும் பொறுப்பு இருக்கிறது,'' என்றாள், அம்மா.
''பெண், ஆண் என்று எந்த வித்தியாசமும் இப்போது இல்லை, அம்மா. தாயாகிய ஒரு பெண், கணவன் இருக்கும்போதே வேறொரு ஆடவனுடன் உறவு வைப்பது, எந்த வகையில் நியாயம்... அந்த ஒழுக்கமற்றவளும் ஒரு பெண்தானே... எங்கே போயிற்று அவள் பொறுப்பு?'' என்று கேட்டாள், சத்யா.
''அக்கா, நாம் வாதம் செய்து கொண்டிருப்பதால், எந்த பயனும் இல்லை. நடைமுறை வாழ்க்கையில், இந்த துன்பத்தை எப்படி கையாளப் போகிறோம் என்று தான் யோசிக்க வேண்டும். இதற்கு ஒரே முடிவு, அந்த கயவனை நீ, விவாகரத்து செய்து விடு,'' என்றாள், பூஜா.
''செய்துட்டு?''
''நம் வீட்டில் வந்து இரு, அக்கா,'' என்று, அவளை அணைத்துக் கொண்டாள்.
சொல்வதறியாது, கையை பிசைந்து நின்ற, அம்மாவின் கரம் பற்றினாள், சத்யா.
''பயப்படாதேம்மா... அப்படியெல்லாம் இங்கேயே வந்து, 'டேரா' போட்டு, தங்கையின் கல்யாணத்தை கெடுக்க மாட்டேன்,'' என்றாள்.
கண்ணீருடன் மூத்த மகளை அணைத்துக் கொண்டாள், அம்மா.
''அக்கா... எனக்காக, நீ அந்த கயவனை சகித்திருக்க அவசியமில்லை. உன் நிலைக்காக என்னை மறுக்கும் ஒரு கோழை கணவனும் எனக்கு தேவையில்லை,'' என்றாள், பூஜா.
''உங்கள் இருவரிடமும் மனம் விட்டு பேசியதே எனக்கு தெம்பாகவும், தைரியமாகவும் இருக்கிறது. பழுதாகிய என் வாழ்க்கையை நானே சீர் செய்து கொள்கிறேன்,'' என்றாள்.
''டேய் கிரிதரா... நல்ல வேளையா சீக்கிரம் வந்தே... உன் பொண்டாட்டி பண்ற அசிங்கத்தை பாருடா,'' என்று, மகனை கை பிடித்து, வீட்டினுள் அழைத்து வந்தாள், சத்யாவின் மாமியார்.
யோசனையுடன் வீட்டினுள் நுழைந்த கிரிதரன், திகைத்து போனான்.
'டிப் டாப்'பாய் உடையணிந்த ஆண்கள், 12 பேருக்கு மேல், வட்ட வடிவில் அமர்ந்திருக்க, நடு நாயகமாய் குழந்தையுடன் வீற்றிருந்தாள், சத்யா.
''கைக் குழந்தையுடன் இருக்கும் என்னை, மணம் செய்ய முன் வந்ததற்கு மிகவும் நன்றி. உங்களை பற்றிய விபரங்களை எனக்கு, 'வாட்ஸ் ஆப்'பில் அனுப்புங்க. எனக்கும், உங்களுக்கும் வாழ்க்கை நல்லபடியாக அமையும் என்ற நம்பிக்கை வரும் நபர்களுக்கு நான் குறுஞ்செய்தி அனுப்புகிறேன்.
''உங்கள் பெற்றோருடன் வந்து, என்னை பாருங்கள். ஒத்துப்போனால், உங்களில் ஒருவரை நான் மணம் செய்து கொள்கிறேன். இப்போது நீங்கள் போகலாம்,'' கை குவித்து அவர்களுக்கு விடை கொடுத்தாள், சத்யா.
''அடி கட்டையால... என்னடி நடக்குது இங்கே?'' கூவினான், கிரிதரன்.
''கிரிதரன், ஒழுங்கா, 'பிஹேவ்' பண்ணுங்க... இந்த நவீன சுயம்வரத்தோட வீடியோ, மீடியாவில் வெளிவரவும் வாய்ப்பிருக்கு,'' என்றாள்.
''எவனாவது இங்கே வந்தீங்க, காலை உடைத்து விடுவேன். மரியாதையா போங்கடா,'' கோபத்தில் கண்கள் சிவக்க, உறுமினான், கிரிதரன்.
''கூல்... மிஸ்டர் கிரிதரன். எதற்கு உங்களுக்கு இவ்வளவு கோபம்... நீங்க, திருட்டுத்தனமா உங்க மனைவிக்கு துரோகம் செய்தீர்கள். அவங்களோ, நடந்த உண்மையை சொல்லி, தனக்கொரு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கிறாங்க. இதில் என்ன தப்பிருக்கிறது?'' என்றான், ஒருவன்.
''வெளில போடா,'' என கத்தினான், கிரிதரன்.
''மிஸ்டர், உன்னை பார்த்து நான் ரொம்ப பரிதாபப்படுகிறேன். திருமண வாழ்க்கையோட உன்னதம் தெரியாத உனக்கெல்லாம் கல்யாணம் செய்து வைத்ததே தப்பு,'' என்றான்.
அடிக்க கை ஓங்கிய கிரிதரனை, மற்ற ஆண்கள் குண்டுகட்டாய் துாக்கி சோபாவில் அமர வைத்தனர்.
''அமைதியாய் இருங்கள், மிஸ்டர் கிரிதரன். நீங்க ஆடியதெல்லாம் போதும். அமைதியா உட்கார்ந்து நடக்கிறதை வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு வழியில்லை. இந்த நிகழ்ச்சி, 'டிவி'யில் ஒளிபரப்பாகப் போகிறது,'' என்றான், மற்றவன்.
அப்பட்ட அதிர்ச்சி தெறித்த அவன் முகத்தை, கேமரா உள்வாங்கியது.
''கேமராவை, 'ஆப்' பண்ண சொல்லுடி... உன்கிட்ட பேசணும்,'' என்றான்.
''நோ வே... என்ன பேசணும்ன்னு நினைக்கறீங்களோ, அதை எந்தவித தயக்கமும் இல்லாம கேட்கலாம்,'' என்றாள், சத்யா.
''புருஷன் தப்பு பண்ணா, அதான் சாக்குன்னு ரெண்டாவது கல்யாணத்திற்கு மாப்பிள்ளை தேடறியே, நீயெல்லாம் தமிழ்ப் பெண்ணா... கலாசாரம், பண்பாடு எல்லாம் எங்கே போயிற்று?'' கோபம் தெறித்தது, அவன் கேள்வியில்.
''கலாசாரம், பண்பாடு பற்றியெல்லாம், நீ பேசுகிறாய்... என்ன கொடுமை இது...'' என்று நக்கலாக சிரித்தவள், ''இதோ பாருங்க, கிரிதரன்... வாழ்க்கை நீர்க்குமிழி போல் நிலை இல்லாதது. நீ செய்த தவறுக்காக, நான் ஏன் என் வாழ்க்கையை, இளமையை வீணடித்து, தியாகம் செய்ய வேண்டும்...
''உன்னைப் போன்ற ஒரு கெட்டவனை மணந்ததற்காக, நானும், என் குழந்தையும், ஏன் எங்கள் வாழ்நாட்களை தனிமையிலும், துன்பத்திலும் கழிக்க வேண்டும்?
''இந்த உலகத்தில் வாழ, எனக்கும் உரிமை இருக்கிறது. நேர் வழியில், நல்ல துணையை தேர்ந்தெடுத்து, வாழ்க்கையை வாழ எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அதற்கு யார் அனுமதியும் எனக்கு தேவையில்லை... புரிந்ததா?'' என்றாள், சத்யா.
கேமராவை நிறுத்தி, கை தட்டிய, அந்த இளைஞன், ''வெல் ஸெட் மேம்... உங்களை போல் எல்லா பெண்களுக்கும் தைரியம், துணிவு, வாழ்க்கை பற்றிய புரிதலும் இருந்தால், இனி, எந்த ஆணாலும், பெண்களை அடிமைப்படுத்தவோ, ஏமாற்றவோ, உரிமையை பறிக்கவோ முடியாது,'' என்றான்.
''நன்றி,'' என்று கூறி, புன்னகைத்தாள், சத்யா.
''மாப்பிள்ளை திருந்துவதற்காக தானே இவ்வளவு நாடகமும்... நீ புத்திசாலி சத்யா,'' என்றாள், அம்மா.
சற்றே விரக்தியாய் சிரித்தவள், ''இல்லேம்மா... கிரிதரன் திருந்துவதற்காக நான் இதை செய்யவில்லை. அவனை திருத்துவது என் வேலையுமில்லை. எப்படி எல்லா பெண்களும் நல்லவர்கள் இல்லையோ, அதே போல், எல்லா ஆண்களும் கெட்டவர்கள் இல்லையம்மா.
''மகனுக்கு நல்ல தகப்பனாகவும், எனக்கொரு வாழ்க்கைத் துணையாகவும், நிச்சயம் ஒரு ஆண் கிடைப்பான் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. நல்லவர்கள், நன்றாக வாழ வேண்டும் அம்மா,'' என்றாள்.
ஆனந்த கண்ணீருடன், சத்யாவின் கைப்பற்றிக் கொண்டாள், அம்மா.

பொற்கொடி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
deep - Chennai,இந்தியா
13-ஏப்-202119:09:39 IST Report Abuse
deep அபத்தக் களஞ்சியம்
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
04-ஏப்-202113:44:28 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI எல்லாம் நல்லா தாங்க இருக்கு. நடைமுறையில் ஒத்துவருமா என்பது யோசிக்க வேண்டிய விஷயம். இந்த உலகில் 90% ஆண்கள் மண், பொன் மற்றும் பெண் ஆசை பிடித்தவர்கள் தான். மனதின் ஆசைகளை கட்டுப் படுத்த தெரியாதவர்கள் பலர். எனவே பெண்கள் தான் புத்திசாலித்தனமாக இருக்கவேண்டும்.
Rate this:
Manian - Chennai,ஈரான்
08-ஏப்-202111:27:08 IST Report Abuse
Manianஉண்மைதான் ஆனால் பருவம், ஈர்ப்பு, துணை தேடுதல், கனவு உலக வாழ்க்கையை சினிமா, சீரியல் பார்த்தல், எவனையும் தன்னால் திருத்த முடியும் என்ற நளாயினி மனப் பக்குவத்தி இருக்கும் பெரும்பாலான பெண்களுக்கு, ஒரு புள்ளே பொறந்த பின்தானே அவர்கள் புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது அதை எப்படி மாற்றுவது? அமெரிக்கா, ஐரோப்பா, ஒலகம் பூரா இதே வேதனைதானே ஆகவேதான் பெரியார் சங்க கால களவு மணம் போதும், தாலி வேண்டாம் "தாலி கழன்றது புருசன் தொல்லை ஒழிந்தது -லிவிங் டுகெதரே இருவருக்கும் பயம் தரும், புள்ளேக பொறந்து அலங்கோலம் நடக்காது" என்றார் என்ன ஒரே வம்புன்னா,தற்போதய ஆராச்சி படிசுஆர் 20% ஆம்பளை பயலுகளுக்கு புள்ளே பொறக்காத, பொண்ணுகளு்கு 35 வயசானப்புறம் பொறக்குற புள்ளேகளுக்கு மரபணு சிதைவு நோய் ஜாஸ்தி, ஆக தீர்வே இல்லயே...
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
04-ஏப்-202107:11:53 IST Report Abuse
Girija எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க ? இப்படி seivathaal தங்கை திருமணம் பாதிக்காதா ? டி வீ சேனல் ஆண்கள் எல்லாம் யோக்கியமா ? டி வீ ஷுட் செய்யும் bothu மேக்கப் சரியில்லை என்று evargal செய்யும் அத்துமீறல்கள் பற்றி தெரியுமா ? பர் வெட்டிங் ஷுட் என்ற பெயரில் நடப்பதைவிட மோசமாக இருக்கும். ரிகர்சல் என்ற பெயரில் தனியே வர sol வான் gal பெண் தனியாக இருக்கிறாள் என்றாலே போதும் உன் புருஷன் போல பிட்டு போட. இந்த சமூக னல தொண்டர்கள் கூடி விடுவர் . இதில் அறுபது வயது கிளங்களும் இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X