உயிரோடு உறவாடு... (5)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2021
00:00

முன்கதை சுருக்கம்: திரைப்பட இயக்குனர் கே.வி.ஏ., பேசிய விபரத்தை தமிழ்ச்செல்விடம் கூற, அலுவலகம் சென்ற ரிஷியிடம், அம்மாவுக்கு, 'ஹார்ட் அட்டாக்' என்பதால், அவள் ஊருக்கு கிளம்பி விட்டதாக கூறினாள், பத்மஜா. போனில் தமிழ்ச்செல்வியிடம் தொடர்பு கொண்ட போது, சுஜித் மேட்டரை ரிஷியே, 'டீல்' செய்யுமாறு கூறினாள்-

கலங்கிய கண்களோடு, சிலையாக நின்ற, ரிஷியை கலைத்தாள், பத்மஜா.
''ரிஷி... என்னாச்சு... தமிழ் அம்மாவுக்கு ஏதாவது?'' என்று இழுத்தவள் முன், கண்களை கசக்கினான்.
''இது, துக்க கண்ணீர் இல்ல, பத்மஜா... தமிழ்ச்செல்விய நினைச்சு எனக்குள்ள ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீர்,'' என்றான்.
''ஆனந்தக் கண்ணீரா?''
''யெஸ்... ஆமா, இன்னிக்கு காலைல நடந்த எதையுமே, தமிழ் உன்கிட்ட, 'ஷேர்' பண்ணலையா?''
''காலைல அப்படி என்ன நடந்தது?''
''சொன்னா, நீ நம்ப மாட்டே.''
''சொன்னாதானே தெரியும்.''
நடந்ததை அப்படியே சொன்னான். பத்மஜாவிடமும், அவன் எதிர்பார்த்த அதே திகைப்பு.
''தமிழ்... நம்ப சேனலுக்கு மட்டும், 'ப்ரமோஷன்' கொடுக்கல... எனக்கும் தான். என் வரையில இந்த நாள், நல்ல அதிர்ஷ்டமான நாள். தமிழோட அம்மாவுக்கு எதுவும் ஆகாது. அவங்க குணமாகி, நல்லபடியா திரும்பிடுவாங்க பார்.''
''உன் வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்... நிஜமா இது, நல்ல விஷயம் தான்.
20 வருஷமா, 'பீல்டுல' இருக்கற, சுஜித், யாருக்கும் பேட்டி கொடுத்ததே இல்லை. தன் படத்தோட, 'ப்ரமோஷ'னுக்கும் வந்ததில்ல. அந்த வகையில நம்ப சேனல்ல தலைய காட்ட சம்மதிச்சது, ரியலி கிரேட்.
''போ... போய் முதல்ல, தலைமை பொறுப்பாளரிடம் சொல்.''
''நான் சொல்றது இருக்கட்டும். 'ஷூட்' முடியற வரை, இது ரகசியமா இருக்கறது தான் சரி. விஷயம் வெளிய கசிஞ்சு, நம்ப போட்டி சேனல்காரங்க, சுஜித்கிட்ட போய், 'நாங்க என்ன பாவம் செஞ்சோம்'ன்னு ஆரம்பிச்சா... அவ்வளவு தான்.''
''கரெக்ட்... இப்பவே எதை செய்தாலும், அதுக்கு உடனே ஒரு போட்டிய துவங்கிடறாங்க... உனக்கு ஒண்ணு தெரியுமா... 'நீ நான் நாம்'ங்கற நம்ப, 'டாக் ஷோ'க்கு போட்டியா, அதே நேரத்துல, 'அவன் அவள் அவர்கள்'ன்னு துவங்கப் போறாங்களாம்... தகவல் வந்துருக்கு.''
''அப்ப, இந்த விஷயத்தை, சிதம்பர ரகசியமா தான் வெச்சுக்கணும். உன்கிட்ட கூட ஒரு சாட்சிக்காக தான் சொன்னேன். இங்க நம் ஆட்களையே நம்ப முடியலியே,'' என்று கூறியபடியே, தன் முதுகு பையை இறக்கி வைத்து, தலைமை பொறுப்பாளர், ஜனார்த்தனம் என்கிற ஜனா அறை நோக்கி நடந்தான், ரிஷி.
தன் முன்னால் இருக்கும், 'சீரியல்' தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர், கதாசிரியருடன் காரசாரமாக பேசிக் கொண்டிருந்தார், ஜனா.
''கதைப்படி, நீங்க அந்த கல்யாண மண்டபத்துக்குள்ள நுழைஞ்சு, சரியா ஒரு மாசம் ஆயிடுச்சு. ஆனா, இன்னும், 'ஹீரோ - ஹீரோயின்' கழுத்துல தாலிய கட்டலை. கதைப்படி, தாலிய கட்டணும்... அப்ப போலீஸ் வந்து, 'ஹீரோ'வை கைது பண்ணணும்... இதுக்கு இன்னும் எவ்வளவு நாள் ஆகும்?''
''அதெல்லாம் பரபரன்னு இன்னும் நாலு, 'எபிசோட்'ல முடிஞ்சுடும் சார்,'' என்றார், இயக்குனர்.
''நாலு, 'எபிசோட்' ரொம்ப அதிகம். இங்க போன் வர ஆரம்பிச்சிடுச்சு, 'கல்யாணம் நடக்குமா, நடக்காதா... 'சீரியலை' ஏன் இப்படி ஜவ்வா இழுக்கறீங்க'ன்னு, ஒரு வி.ஐ.பி., நேயரே கேட்டுட்டாங்கன்னா பார்த்துக்கங்களேன்.''
''அப்ப, அவங்க ரொம்பவே ரசிக்கிறாங்கன்னு தானே சார் அர்த்தம்?''
''அப்படியும் சொல்லலாம். அதுக்காக, ஓவராவும் இழுத்துடக் கூடாதுல்ல?''
''விஷயத்தோடதானே சார் இழுக்கறோம்... 'ஹீரோயின்' கட்டியிருக்கிற பட்டுப் புடவையோட விலை, 7 லட்சம் சார்... 'ஹேர்ஸ்டைலு'க்கு மட்டுமே ஒண்ணேகால் லட்சம் செலவாகியிருக்கு. கல்யாண வீட்டு கூட்டமும், 100 பேருக்கு மேல சார்...
''ஒருத்தருக்கு, மினிமம், 500ன்னாலும் நீங்களே கணக்கு போட்டுக்கங்க...
50 ஆயிரம் சம்பளம். சும்மா, 'ப்ரேம்'ல தெரியற கூட்டத்துக்கே போயிடுது.''
''உடனேயே ஆரம்பிச்சிடுவீங்களே... நீங்க என்னவோ பண்ணிக்குங்க. எனக்கு புகார் வரக்கூடாது. 'ரேட்டிங்'கும், 'டிராப்' ஆகக் கூடாது... அப்புறம் இந்த வெடிகுண்டு வைக்கிற கற்பனையே வேண்டாம்.
''தினமும், ஏதாவது ஒரு, 'சீரியல்'ல வெடிகுண்டு காட்சி வந்துடுது. வெடிக்குதான்னா, அதுவும் கிடையாது. 'ஓவர் பில்ட் - அப்' கொடுத்து, கடைசியில, 'புஸ்'ன்னு ஆக்கிடறீங்க.''
ஜனா சொல்வதை எல்லாம் கர்ம சிரத்தையாக, குறிப்பெடுத்துக் கொண்டார், எழுத்தாளர்.
அப்போது, கதவை லேசாய் திறந்து எட்டிப் பார்த்தான், ரிஷி.
''சொல்லு ரிஷி... ஏதாவது முக்கிய விஷயமா... அஞ்சே நிமிஷம்... இவங்களை அனுப்பிடறேன்,'' என்று, ஜனா கூற, தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் எழுத்தாளரும் எழுந்தனர்.
''நான் சொன்னதை எல்லாம் மனசுல வெச்சுக்கங்க... அப்புறம், கொஞ்ச நாளைக்கு, வளசரவாக்கம் பிள்ளையார் கோவில் வேண்டாம். எல்லா தொடரிலும் அந்த கோவில் வந்துடுச்சாம்... 'சிங்கார சென்னையில, கோவிலுக்கா பஞ்சம்'ன்னு ஒரு கடிதம் வந்துருக்கு.''
'ஓ.கே., சார்... நாங்க பார்த்துக்கறோம் பை...' என்றபடியே, மூவரும் அங்கிருந்து கிளம்பினர்.
உள்ளே நுழைந்தான், ரிஷி.
''வாப்பா... எதாவது முக்கியமான செய்தியா?'' என்று கேட்க... சுஜித் விஷயத்தை, அவரிடம் சொல்லி முடித்தான்.
ஜனாவிடம் ஒருவித ஸ்தம்பிப்பு. முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல், ரிஷியை ஊடுருவியவர், ''சுஜித், நம்ப சேனலுக்கு வந்து பேட்டி தருவார்ன்னு இப்பவும் நீ நம்பறியா?'' என்று, நம்ப முடியாத தொனியில் கேட்டார்.
''சார்... நான் சொன்னது சத்யமான உண்மை. வேணும்ன்னா நானும், தமிழ்ச்செல்வியும் சுஜித் சாரோட எடுத்த படத்தை காட்டவா?'' என்றான்.
''செல்பியா?''
''ஆமாம் சார்.''
''அது ஒரு பெரிய விஷயமா... நான் பார்த்தா, கேட்டா எனக்கும், ஓ.கே., சொல்லத்தான் போறாரு.''
''அப்ப, நீங்க என்ன சொல்ல வர்றீங்க சார்?''
''நான் இதை நம்பல, ரிஷி. நீ பார்த்திருக்கலாம், பேசியிருக்கலாம். சேனலுக்கும் கூப்பிட்டிருக்கலாம். அவர், உங்களை தவிர்க்க வழி தெரியாம, 'சரி பார்க்கலாம்'ன்னு சொல்லியிருக்கலாம். அது, முழு சம்மதம் ஆகாது.''
''இல்ல சார்... பேட்டிய கூட தமிழ் தான் எடுக்கணும்... வழக்கமான கேள்விகள் கூடாதுன்னு தெளிவா சொன்னார்.''
''நீங்க ரெண்டு பேருமே புதியவர்கள். இதுக்கெல்லாம் அனுபவம் வேணும். எதை நம்பி தமிழை இதுல இறக்க முடியும். அப்புறம் இருக்கற சீனியர்களுக்கு என்ன பதில் சொல்றது?''
''இதெல்லாம் ஒரு பிரச்னையா சார்... அவர் வரேன்னு சொன்னது எவ்வளவு பெரிய விஷயம்?''
''இதோ பார்... ரசிகனுக்கு வேணும்ன்னா சுஜித், பெருசா தெரியலாம். பொதுமக்களை பொறுத்தவரையில், அவர் பிரபலமானவர், அவ்வளவு தான்.''
''அப்ப என்ன செய்யலாம் சார்?''
''நீ, இதை மறந்துட்டு வேலையை பார்... நான், எம்.டி.,கிட்ட பேசறேன். அவர் இதை கேட்டுட்டு, சந்தோஷமும் பட மாட்டார்; வருத்தமும் பட மாட்டார்.
''ஒன்று மட்டும் உறுதியா சொல்வார். 'அவர் வந்துட்டு போறதால, இங்குள்ள சீனியர்கள் யாருக்கும் வருத்தம் வந்துடக் கூடாது. வருத்தம் வரும்ன்னா, அவர் வரத்தேவை இல்லை'ன்னு சொல்லிடுவார். அவருக்கு நம்ப, 'யூனிட்டி, டிசிப்ளின்' தான் முக்கியம். 'ஓவர்லுக்' பண்றதெல்லாம் சுத்தமா பிடிக்காது.''
''அவர் வர்றதால நமக்கு,
டி.ஆர்.பி., எகிறும்ன்னு மட்டும் தான், நாங்க நினைக்கிறோம். நீங்க தான், சீனியர், ஜூனியர் ஏதேதோ சொல்றீங்க.''
''ஓ... அப்ப நான் சரியில்ல... தப்பா பேசறேன்... அப்படித்தானே?'' தோட்டாவால் சுட்டு விட்டதை போல கேட்டார்.
''ஆமாம் சார்... அதுல சந்தேகமே இல்லை. உங்களுக்கு தெரியாம இருக்கக் கூடாதுன்னு தான், முதல்ல உங்ககிட்ட பேசினேன். நீங்க சந்தோஷப்படாம, 'டிஸ்கரேஜ்' பண்ற மாதிரியே பேசறீங்க. பரவாயில்ல... இதை நான் வேற மாதிரி, 'டீல்' பண்ணிக்கறேன்... வரேன் சார்,'' என்றான், ரிஷி.
''வேற மாதிரின்னா எப்படி... இங்க நீ வேலை பார்க்கணுமா வேண்டாமா... எங்கிட்ட விட்டுடு, நான் பார்த்துக்கறேன்னு சொன்ன பிறகும், நீ இப்படி மரியாதை இல்லாம பேசறது சரியில்ல, ரிஷி,'' அவர் தொடர்ந்து பேசப் பேச... அதை சட்டை செய்யாமல், அந்த அறையை விட்டு வெளியேறினான்.
சோர்ந்த முகத்துடன் கேபினுக்குள் நுழைந்தவனை பார்த்தாள், பத்மஜா.
''என்னப்பா, 'டல்'லா இருக்கே... என்னாச்சு?''
''என்னன்னு சொல்ல பத்து... நாங்க, சுஜித் சாரை பார்த்து, பேசி, பேட்டிக்கு சம்மதம் வாங்கினதை, ஜனா சாரால ஜீரணிக்க முடியல. 'நேத்து வந்தவங்க சாதிச்சுட்டாங்க... நீங்கல்லாம் எதுக்கு இருக்கீங்க'ன்னு,
எம்.டி., கேட்டா, என்ன பண்றதுங்கற பயம் வந்துடுச்சு. அவர் பாட்டுக்கு, 'நெகட்டிவா' பேசிட்டு போறாரு...
''கடைசியா, இந்த மேட்டரை அவர்கிட்ட விட்டுட்டு, என் வேலையை பார்க்கணுமாம். எல்லாத்தையும் அவர் பார்த்துக்குவாராம். நுங்கு பறிச்சது ஒருத்தன்; அதை நோண்டி திங்கறது இன்னொருத்தனா... இது, கொடுமையா இல்ல?''
''அப்ப உங்களுக்கு, எந்த, 'கிரெடிட்'டும் இல்லேன்னுட்டாரா?''
''எனக்கு எதுக்கு பத்து... பாவம் தமிழ்... இதுல, அவ முயற்சி தான் எல்லாம்... அவதான் தன்னை பேட்டி எடுக்கணும்ன்னு, சுஜித் சாரே சொல்லும்போது, இவர் என்னன்னா, 'சீனியர் ஹோஸ்ட்டு'ங்க கோவிச்சுக்குவாங்களாம்.
''அவளும், நானும், புதுமுகமாம்; எங்களுக்கு அனுபவம் பத்தாதாம்... இப்படி, அவர் இஷ்டத்துக்கு பேசறாரு... 'சரிதான் போய்யா, இதை வேற மாதிரி, 'டீல்' பண்ணிக்கிறேன்'னு சொல்லிட்டு, நான் பாட்டுக்கு வந்துட்டேன்.''
''மை குட்னஸ்... என்ன ரிஷி, இவ்வளவு முன்கோபமா உனக்கு... அப்புறம் உன்னை வேலையை விட்டு துாக்கிட போறான்,
அந்த ஆளு.''
''துாக்கினா துாக்கட்டும். சினிமா துறையை தான், என் வாழ்க்கையா நினைக்கறேன். எங்கெனாச்சும் ஒரு கதவு திறக்கப்
போகுது. அதேசமயம், நான் சும்மா போக மாட்டேன். இந்த ஆளோட சுயரூபத்தை எல்லாருக்கும் தெரியும்படி பண்ணிட்டு தான் போவேன்.''
''கூல்... கூல்... கொஞ்சம் மெல்ல பேசு. யார் காதுலயாவது விழுந்துடப் போகுது.''
''விழட்டும்... எனக்கு பயமில்லை.''
''உன்னால என்ன பண்ண முடியும். ஜனா சாரா, நீயான்னா... ஜனா சார் பக்கம் தான், எம்.டி., நிற்பார்.''
''அதையும் பார்க்கறேன்,'' என்றவன், தன், 'லேப் டாப்'பை திறந்து, 'மெயில் பாக்ஸ்'சில் நடந்ததை அப்படியே, எம்.டி.,க்கு தெரிவிக்கும் விதமாய், 'டைப்' செய்யத் துவங்கினான்.

ஹாஸ்பிடல் -
முகத்தில், 'ஆக்சிஜன் மாஸ்க்'குடன் படுத்திருந்த சந்திராவை, சற்றே மூச்சிறைப்போடு பார்த்த தமிழ்ச்செல்வி, மெல்ல, ''அம்மா,'' என்றாள்.
அந்த சொல், சந்திராவின் கண்களை திறக்க வைத்தது. அருகில், தமிழ்ச்செல்வியின் அப்பா, சந்தானம்.
''சந்திரா, தமிழ் வந்துட்டா பாரு... கேட்டுட்டே இருந்தியே?''
''தமிழ்... எப்பம்பா வந்தே?''
''இப்பதாம்மா... உன்னை சிரமப்படுத்திக்காதே... நான், உன் கூடவே தான் இருக்கப் போறேன்,'' தமிழ்ச்செல்வி ஆறுதலாக சொன்னபோது, சந்தானத்தின் போன் சத்தமிட்டது.
சற்று விலகிச் சென்று, காதை கொடுத்தார்.
அவர் மச்சினனும், சந்திராவின் ஒன்றுவிட்ட அண்ணனுமான கந்தசாமி, ''மாப்ள... என் மகன், தமிழ்ச்செல்விய கட்டிக்க சம்மதம்ன்னு சொல்லிட்டான். நீங்க மத்த ஏற்பாடுகள செய்யலாம்,'' என்றார்.
தொடரும்

இந்திரா சவுந்தர்ராஜன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X