என்னில் உன்னைக் காண்கிறேன்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2021
00:00

''இது, தேவையில்லாத வேலை. எப்போ, இரண்டு பேருக்கும் ஒத்துப் போகலையோ, விவாகரத்து செய்வது என்ற முடிவுக்கு வந்தோமோ, அப்புறம் என்ன... இருவரும் சேர்ந்து, கிராமத்து திருவிழாவுக்குப் போக வேண்டியிருக்கு,'' என்று, எரிச்சலுடன் பெட்டியில் துணிமணிகளை எடுத்து வைத்தான், பரணி.
''இங்கே பாருங்க... நம் விஷயம், இரண்டு வீட்டுக்கும் தெரியாது. சொல்லத்தான் போறோம். பிரிவுங்கிறது முடிவானது. இருந்தாலும், போன வருஷம், அப்பா ரொம்ப முடியாமல் இருந்தப்ப, 'அவர் உடம்பு, பூரண குணமானால், திருவிழா சமயத்தில், உங்களோடு வந்து மாவிளக்கு போடறேன்'னு வேண்டிக்கிட்டேன்.
''இதுவே நாம் இரண்டு பேரும் சேர்ந்து போற கடைசி பயணம். தயவுசெய்து, மாட்டேன்னு சொல்லாம கிளம்புங்க. இரண்டு நாளில் திரும்பிடலாம். வந்ததும், நீங்க சொன்னபடி வக்கீலைப் பார்த்து, சமரசமா, விவாகரத்தான்னு முடிவெடுப்போம்,'' கெஞ்சுதலுடன் பேசிய நந்தினியிடம், மறுப்பு சொல்ல முடியவில்லை.
சொன்னது போல, அவளுடன் சேர்ந்து போவது, இதுவே கடைசியாக இருக்கட்டும்.
அந்த ராட்சசியுடன், வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட முடியாது. கல்யாணம் பண்ணிய இந்த இரண்டு ஆண்டில் எத்தனை சண்டை, எவ்வளவு வாக்குவாதம். அப்பப்பா, போதும் போதும் என்றாகி விட்டது.
எதிர்திசையில் வேகமாக கடந்து செல்லும் மரம், செடி, கொடிகளை, ரயில் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தாள், நந்தினி.
'எவ்வளவு எதிர்பார்ப்புகள், ஆசைகளை மனதில் தேக்கி, அவர் மனைவியாக புது வாழ்க்கை ஆரம்பித்தேன். ஒரு பெண்ணின் மென்மையான உணர்வுகளை புரிந்துகொள்ளாத ஜடம். இவருக்கு எதற்கு கல்யாணம்.
'வேலைக்காரியாக, அடிமையாக வாழ, துணை தேவைப்பட்டிருக்கிறது. அதற்கு, நான் பலிகடா ஆகியிருக்கிறேன். இருட்டான எதிர்காலம் வேண்டாம். கல்யாண பந்தத்திலிருந்து விடுபட்டால் போதும்...' என, நினைத்துக் கொண்டாள்.

''நீயும், மாப்பிள்ளையும் திருவிழாவுக்கு வந்தது, ரொம்ப சந்தோஷம். அம்மன் அருளால், அடுத்த வருஷம் குழந்தை பிராப்தம் கிடைக்கட்டும்,'' என்றார், நந்தினியின் அப்பா.
குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்று, மாவிளக்கு, அர்ச்சனை என்று, வேண்டுதலை நிறைவேற்றியவர் களிடம், ''அம்மா, வந்த காரியம் நல்லபடியாக முடிஞ்சுது. காலையில் ஊருக்குக் கிளம்பறேன்மா,'' என்றாள், நந்தினி.
''நல்லபடியா போயிட்டு வா, நந்தினி. உனக்காக, நானும் வேண்டிக்கிட்டேன். அடுத்த வருஷம், கையில் குழந்தையோடு வருவே பாரேன். அப்புறம் சொல்ல மறந்துட்டேன். ஊட்டியில் வேலை பார்த்திட்டுருந்தாளே, மீரா சித்தி. அவ, 'ரிடையர்ட்' ஆகி, நம் கிராமத்துக்கே வந்துட்டா...
''நீ வந்தால், அவசியம் அவளைப் பார்க்க வரச்சொன்னா. அடுத்த தெருவில் தான் இருக்கா. நீயும், மாப்பிள்ளையும் போய் பார்த்துட்டு வாங்க,'' என்றாள், நந்தினியின் அம்மா.
''கல்யாணமே பண்ணிக்காமல் சுதந்திரமாக வாழ்ந்தவங்க தானே... இப்ப எப்படிம்மா இருக்காங்க?''
''அவளுக்கென்ன, வேலைக்கு இரண்டு ஆள். சம்பாதித்த காசை சேமிச்சு வச்சு, சந்தோஷமா தான் இருக்கா.''
''அவசியம் அங்கெல்லாம் போகணுமா?'' என்றான், பரணி.
''ஆமாங்க, இவ்வளவு துாரம் வந்துட்டு, பார்க்காமல் போனால் வருத்தப்படுவாங்க. என் மேல் அளவு கடந்த பிரியம். ஒரு அரைமணி நேரம், ப்ளீஸ்,'' என்றாள், நந்தினி.

''நந்தினி வாம்மா... வாங்க, மாப்பிள்ளை,'' புன்னகையோடு வரவேற்றாள், மீரா
இந்த வயதிலும், இளமையுடன், பார்ப்பதற்கு களையாக இருந்தாள்.
பரணியை பார்த்ததும், ''கல்யாணத்தில் பார்த்தது, உங்களுக்கு மறந்திருக்கும். நல்லாயிருக்கீங்களா... நீங்க வருவீங்கன்னு, அக்கா போனில் சொன்னாங்க... உனக்கு பிடிச்ச குலோப்ஜாமூன் செய்யச் சொன்னேன், நந்தினி. இருங்க, போய் எடுத்துட்டு வரேன்,'' என்றாள், சித்தி.
''இப்ப எதுவும் வேண்டாம் சித்தி... கொஞ்ச நேரம் ஆகட்டும். உட்காருங்க, பேசிட்டு இருப்போம்,'' என்றவள், ''சொல்லுங்க சித்தி... 'லைப்' எப்படிப் போகுது?'' என்றாள்.
''எந்தக் குறையுமில்லை. மனதளவில் சந்தோஷமாக வாழ்ந்துட்டு இருக்கேன், நந்தினி.''
''ஆமாம் சித்தி... கல்யாணம்ன்னு ஒண்ணு நடந்திருந்தால்... புயல் காற்றும், தென்றலும் மாறி, மாறி வந்திருக்கும். இப்ப எந்த பிரச்னையுமில்லாமல், சுதந்திரமாக, சந்தோஷமாக இருக்கீங்க... சரிதானே?''
''நீ, நினைப்பது தப்பு, நந்தினி... எனக்கு, கல்யாணமாகலைன்னு யார் சொன்னது?''
''சித்தி.''
''என் மனசில் புதைந்து கிடக்கும் சில விஷயங்களை, உங்க இரண்டு பேருகிட்டேயும் பகிர்ந்துக்கிறேன். காலேஜ் படிக்கும்போது, என்னுடன் படித்தவரை காதலித்தேன். அவரும், என் மேல் உயிரையே வச்சிருந்தார். நேரம் போவது தெரியாமல் இருவரும் மணிக்கணக்காக பேசுவோம்.
''எதிர்காலத்தை எப்படி அமைச்சுக்கணும், எத்தனை குழந்தைகள் பெத்துக்கணும், என்ன பெயர் வைக்கணும், என்றெல்லாம் முடிவு பண்ணியிருந்தோம்.
''படிப்பு முடிஞ்சவுடன், 'எனக்கு, கப்பலில் வேலை கிடைச்சுருக்கு. நைஜீரியா போறேன். இரண்டு வருஷம். கணிசமான தொகை சம்பாதிச்சிட்டு வந்து, ஊரறிய உன் கழுத்தில் தாலி கட்டறேன். அதுவரை எனக்காக காத்திருப்பியா மீரா'ன்னு என் கைப்பிடிச்சு, கண்ணீரோடு கேட்டார்.
''நானும், 'ஆறு மாதத்துக்கு முன், கோவிலில், என் கையில் மோதிரம் போட்டீங்களே... அந்த நிமிடமே, மனசளவில் உங்க மனைவியாகிட்டேன். நீங்க நல்லபடியா போயிட்டு வாங்க... மீரா, உங்களுக்காகக் காத்திருப்பா...' என்று, கனவுகளோடு அவருக்காக காத்திருந்தேன்.
''ஆறு மாதம் வரை என்னுடன் தொடர்பில் இருந்தவர், அதன்பின் பேசலை. நைஜீரியாவில், கடற் கொள்ளையர்கள் ஒரு கப்பலைப் பிடிச்சு வச்சுக்கிட்டாங்கன்னு செய்தியெல்லாம் வந்தது. நிச்சயம் அவருக்கு எதுவும் ஆகாது. ஒரு நாள், என்னைத் தேடி வருவாருன்னு, நம்பிக்கையோடு, இந்த நிமிஷம் வரை காத்திருக்கேன்,'' என்றாள்.
கண்கள் அகல சித்தியை பார்த்து, ''அதுக்காக இத்தனை வருஷமா... எப்படி சித்தி, உங்களால் காத்திருக்க முடியுது?''
''முடியும் நந்தினி... கல்யாணங்கிறது ஆயுட்கால பந்தம். ஊரறிய நடந்தாலும், மனசளவில் நடந்தாலும் ஒண்ணு தான். அவ்வளவு சீக்கிரம் உதற முடியாது. அவர், என் அருகில் இல்லாவிட்டாலும், என்னோடு இருக்கிற உணர்வு தான் இப்ப வரைக்கும் என்னை சந்தோஷமாக வச்சிருக்கு...
''உனக்கு ஒண்ணு சொல்லட்டுமா... இந்தக் காலத்தில், சடங்கு, சம்பிரதாயத்தை பெரிசா மதிக்கிறதில்லை. மூணு முடிச்சு போட்டு, அக்னி சாட்சியா, இவள்தான் என் மனைவின்னு ஏத்துக்கிற கணவன், தன் வாழ்க்கையின் ஒரு அங்கமா இருக்கிற அவளுடைய உணர்வுகளுக்கு மதிப்பு தர்றதில்லை.
''அதேபோல, மனைவியும், சகலமும் எனக்கு இனி இவர்தான்கிற அர்ப்பணிப்பு உணர்வோடு வாழறதில்லை. அற்ப விஷயங்களால், அன்பு, புரிதல், விட்டுக்கொடுத்தல்ங்கிற நல்ல குணங்களை துார வச்சுட்டு, ஆணவம், அகங்காரம் தலை துாக்க, கல்யாண பந்தத்தை மதிக்காமல் விலக நினைக்கிறாங்க.
''அவருடன் நான் பழகியது, சில நாட்கள் தான். ஆனால், அதற்குள் எங்களுக்குள் ஏற்பட்ட அன்பு, புரிதல், இந்த நிமிஷம் வரை உயிரோடு இருக்கு. என் உயிர் மூச்சு நிற்கும் வரை, அவர் நினைவோடு தான் வாழ்வேன். அடுத்த ஜென்மம்ன்னு ஒண்ணு இருந்தால், அவர் நினைவுகள் என்னைத் தொடரணுங்கிறதுதான் என் விருப்பம்.
''என்னைப் பத்தி பேசியதில் உங்களைக் கவனிக்கலை. இருங்க, போய் ரெண்டு பேருக்கும், 'ஸ்வீட்' எடுத்து வரேன்,'' என்று, எழுந்து உள்ளே போனாள், மீரா.

'இவளிடம் அப்படி என்ன குறையைக் கண்டேன். என்னை நம்பி கைப்பிடித்து வந்தவள், என் வாழ்க்கையின் ஒரு அங்கம். முட்டாள்தனமான கோபத்தால், இவளை இழக்கப் போகிறேனா... மாட்டேன்...' என, வெட்கத்தில், மெல்ல நந்தினியின் கை பிடித்தான், பரணி.
'என் வாழ்க்கையே அவர்தான்னு நினைத்திருந்தால், அவருக்காக விட்டுக்கொடுத்து வாழ்ந்திருக்கலாமே. சித்தி சொன்னது போல், அற்ப விஷயங்களுக்காகத்தானே, அவரிடம் சண்டை போட்டேன்...' பாதுகாப்பு உணர்வோடு, அவன் கைக்குள் தன் கையை நுழைத்து, இறுகப் பற்றினாள், நந்தினி.
இணைந்த கைகள், இனி, நமக்குள் பிரிவில்லை என்பதை வெளிப்படுத்தியது.

பரிமளா ராஜேந்திரன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஏப்-202122:52:24 IST Report Abuse
keerthi venkat நல்ல முடிவான கதை
Rate this:
Cancel
15-ஏப்-202122:49:39 IST Report Abuse
keerthi venkat அருமையான கதை
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
13-ஏப்-202103:28:00 IST Report Abuse
Manian ஆகவே கூட படிச்சவனையே காதலிச்சு கலியாணம் செய்விர்கள் அது சரி, ஜாதி, மதம், அந்தஸ்த்து,சடங்குகள், சொந்தங்கள், பழக்க வழக்கங்களை தள்ளி- சமரசம் செய்ய ஏன் இதுவரை பள்ளிகளில் கல்வி இல்லை? அய்யோ,அப்படியானா இட ஒதுக்கீடு என்னாகும்? போலி ஓபிசி சர்டிபிகேட் மாமூல் கொடுத்து வாங்கி, அரசாங்க வேலையே மாமூல் மூலம் வாங்கி சிங்கப்பூருக்கு உல்லாசப் பயணம் போகவேணாமா? பெரியார் பெயரிட்ட "காட்டு மிராண்டிங்க" நாம "நாட்டுமிராண்டிளாக" மாறி, தாலி கெட்டாமா "லிவிங்க் டுகெதர்னா" எத்தினி சின்னவூடு அய்யோ நூத்துக் கணக்கிலே காட்டுமிரா்டிங்க நம்ம வாரிசு தருதலைப் புள்ளேங்களை எப்படி சமாளிக்கறது? அது வேணம், இதுவே போதும் என்று பரணியும், நந்தினியும் எப்படியோ புரிந்து கொண்டார்கள். சித்தியும், கிரியா ஊக்கியாக இவிங்கை சேத்து வச்ச எனக்கு மட்டும் அந்த மாதிரி யாருமில்லேயே என்று மனதில் சிரித்துக் கொண்டாள் சித்தி அணில் புதைத்து வளர்ந்த பூத்து, காய்க்காத தனி மரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X