செவ்வந்தீ!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2021
00:00

''யம்ம்மா.... பொன்னி எங்கம்மா?'' என்றாள், செவ்வந்தி.
''அங்க தான் எங்கியாவது இருப்பா பாரு,'' அடுக்களையில் பாத்திரத்தை உருட்டியவாறே, மகளுக்கு பதில் கூறினாள், கோவிந்தம்மாள்.
''ஏய், செவ்வந்தி... இங்கே இருக்கேன். ஆமா, காலங்காத்தால எதுக்கு என்ன தேடுறே?'' என, பள்ளிக்கூட பையில் இருந்த காகித குப்பைகளை கொட்டியபடியே கேட்டாள், பொன்னி.
''உங்கிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன். பெத்தவள பேர சொல்லி கூப்பிடாதேன்னு, கேக்குறீயா... 16 வயசு குமரி மாதிரியா நடந்துக்கிறே... வாயில சூடு போட்டா தான் உனக்கு புத்தி வரும்,'' என்று, உரக்க கத்தியபடி, சமையல் அறையிலிருந்து வந்தாள், பாட்டி கோவிந்தம்மாள்.
அவளுக்கு பயந்து, வாசல் பக்கம் ஓடிய பொன்னி, வீட்டிற்குள் நுழைந்த காளியப்பன் மீது, மோதி நின்றாள். பீடியின் நெடியால், அவள் முகம் சுளித்தாள்.
காளியப்பனை பார்த்தவுடன் உள்ளேயிருந்த இருவரின் முகமும் வெளிறியது. காரணம், அவன் வந்தாலே, ஏதோ எழவு செய்தியாகத் தான் இருக்கும். சுத்துப்பட்டு கிராமத்தில் யார் வீட்டில் எழவு விழுந்தாலும், சேதி அனுப்புவதற்கு, காளியப்பனை தான் தேடுவர்.
'யாரோ மண்டையை போட்டுட்டாங்க போல. அதான் காலங்காத்தாலே வந்திருக்கான்...' என்று முனகியவள், ''ஏலே, காளியப்பா... இந்நேரத்துக்கு வந்திருக்கீயே, என்ன சமாசாரம்,'' என, ஏற்றத்தோடு துவங்கிய கோவிந்தம்மாளின் குரல், சற்று பிசிறியது.
''ஆத்தா... பயப்படாத, துக்க சேதி இல்ல... உம் மருமவன் செம்மங்குடிக்காரரு, சாவக் கெடக்காரு. ரெண்டு நாளா பச்ச தண்ணி தொண்டயில எறங்கலையாம். கடைசியா உன் மகளை பாத்துட்டு போக சொல்றாங்க, செம்மங்குடி ஜனங்க.
''அத சொல்ல தான் வந்தேன். இன்னிக்கி ராத்திரி வரைக்கும் கூட தாங்காதுன்னு, ஊருக்குள்ள பேசிக்கிறாங்க. உசுரோட இருக்கும்போதே கடைசியா ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுங்க.''
கோவிந்தம்மாளும், செவ்வந்தியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.
சற்று நேர அமைதிக்கு பின், ''ஆத்தா... நான் கிளம்பட்டா?'' என்றவன், இடத்தை விட்டு நகராமல், தலையை சொரிந்தான்.
முந்தானையில் முடிந்து வைத்திருந்த, 100 ரூபாயை எடுத்து, நீட்டினாள், கோவிந்தம்மாள். ரூபாயை வாங்கி சட்டை பாக்கெட்டில் சொருகி, வாசலில் நின்ற சைக்கிளில் ஏறி, சிட்டாய் பறந்தான்.
அவன் தலை மறைந்ததும், பெருங்குரலெடுத்து, ''அந்த பட்டுக்கெடப்பானுக்கு, உன்னை கட்டி கொடுத்து, கடமை முடிஞ்சிடுச்சுன்னு உங்க அப்பன் போய் சேர்ந்துட்டார். நான் தாலியறுத்தது பத்தாதுன்னு, சின்ன வயசுல நீயும் தாலியறுத்து மூலியாகணும்ன்னு ஓந்தலையில் எழுதி இருக்கு...
''என்ன பண்ணுவேன். யாருகிட்ட போயி இந்த கொடுமையை சொல்லுவேன்,'' என்ற கோவிந்தம்மாளின் அழு குரல், உச்சத்தை தொட, அக்கம் பக்கத்தினர் கூடினர்.
''எல்லாரும் கொஞ்சம் வழி விடுங்க... கோவிந்தம்மா, காளியப்பன் விஷயம் சொன்னான். அழாதே... பழச எல்லாம் நினைக்கிற நேரமா இது... மவளையும், பேத்தியையும் கூட்டிட்டு போயி, கடைசியா அந்த ஆளு மொகத்தை பார்த்துட்டு வருவீயா...
''அதை வுட்டுட்டு, ஊர கூட்டி ஒப்பாரி வைக்கிற... அந்த ஆளுக்கு எதுவும் ஆவுறத்துக்குள்ள சட்டுபுட்டுன்னு மூணு பேரும் என் மகன் ஆட்டோல கிளம்புங்க,'' என, ஊர் பெரியவர் சொல்ல, மற்றவர்கள், அவர் பேச்சை ஆமோதிப்பது போல், தலையசைத்தனர்.
அரை மணி நேரத்திற்கு பின், கழற்றி வைத்த தாலியை தேடி எடுத்து, கழுத்தில் மாட்டினாள், செவ்வந்தி, சபையறிய கழற்ற வேண்டுமே!
மகளையும், பேத்தியையும், ஆட்டோவில் ஏற்றிய கோவிந்தம்மா, ''நான் வரமாட்டேன்,'' என்று பிடிவாதமாக, மறுத்தாள்.
அம்மாவின் மனநிலையை புரிந்து கொண்ட செவ்வந்தி, ஒருவித இறுக்கத்துடன், பொன்னியோடு ஆட்டோவில் அமர்ந்தாள்.
''எனக்கு ரொம்ப பயமா இருக்கும்மா... திரும்பி பாட்டி வீட்டுக்கே போயிடலாம்,'' என்ற மகளை, ஆறுதலோடு அணைத்தாள், செவ்வந்தி.
''அம்மா இருக்கேன்ல எதுக்கு பயப்படுறே... தைரியமா இருக்கணும்,'' என்றாள்.
ஆட்டோ ஊர் எல்லையைத் தொட்ட போது, கண்ணில் பட்டது, 17 அடி உயர அய்யனார் சிலை. '13 ஆண்டுக்கு பிறகு, இந்த ஊருக்கு வரேன். அதுவும் சாவ கிடக்கிற அந்த மனுஷன பார்க்குறதுக்கு. வேற எதுனா இருந்தா, வர முடியாதுன்னு அடிச்சு சொல்லி இருப்பேன். கடைசியா ஒரு கடமை மிச்சம் இருக்கு. அதுக்காக தான் மறுப்பு சொல்லாம வரேன்...' என்று நினைத்தவளுக்கு, மனம் சில ஆண்டுகள் பின்னோக்கியது.

செவ்வந்தியின் அப்பா சின்னையா, பக்கத்து ஊரில் பெரிய பணக்காரரான, 40 வயசு இசக்கிமுத்துவுக்கு, 18 வயதே ஆன, மூத்த பெண், செவ்வந்தியை கட்டிக் கொடுக்க முன் வந்தார்.
செவ்வந்தியின் அம்மா கோவிந்தம்மாளும், ஊர் மக்களும் எவ்வளவோ தடுத்தனர்.
அப்பாவின் கடனும், குடும்ப கஷ்டத்தையும் உணர்ந்தவள், செவ்வந்தி.
குடும்பத்தின் வறுமை, தனக்கு கீழ் இருக்கும் இரண்டு தங்கைகளின் எதிர்காலம், இதையெல்லாம் மனதில் வைத்து, மறு பேச்சில்லாமல் மணமேடை ஏறினாள்.
கல்யாணத்திற்கு பிறகு தான், புருஷனின் குணம் தெரிந்தது. எதற்கெடுத்தாலும் குறை கண்டுபிடித்து, சந்தேகத்தோடு பேசத் துவங்கினான், இசக்கிமுத்து.
போகப் போக எல்லாம் சரியாகும் என, தன்னைத் தானே சமாதானப்படுத்தி, குடும்பத்தை நடத்தினாள், செவ்வந்தி.
ஆனால், அவனின் குணம் கொஞ்சமும் குறையவில்லை. வயது வித்தியாசம் பார்க்காமல், அவர்களோடு இணைத்து, அசிங்கமாய் பேச துவங்கினான். அனைத்தையும் பொறுத்து, கல்லாய் இருந்த செவ்வந்திக்கு, மறு ஆண்டு, பொன்னி பிறந்தாள்.
குழந்தையின் முகத்தை பார்த்தாவது மாறுவான் என, பார்த்தாள்; மாறவில்லை. 10ம் வகுப்பு கணக்கு பாடத்தில் பெயிலான செவ்வந்திக்கு, திரும்பவும் படிக்க ஆசை. பக்கத்து வீட்டில், பிளஸ் 2 படிக்கும், சங்கரிடம் புத்தகம் வாங்கி, படிக்க ஆரம்பித்தாள்.
அக்கா, அக்கா என, அவனும் ஆர்வத்துடன் இவளுக்கு கணக்குச் சொல்லிக் கொடுத்தான். இதை பார்த்த இசக்கிமுத்து, செவ்வந்தியை அந்த பையனுடன் சேர்த்து, அசிங்கமாக பேசினான்.
பக்கத்து வீட்டு பையன் சொல்லிக் கொடுத்ததை வைத்து, அம்மா வீட்டுக்கு சென்று, பரீட்சை எழுதி, கணக்கு பாடத்தில், 'பாஸ்' பண்ணினாள். ஆனால், இந்த விஷயத்தை புருஷனிடம் சொல்லவே இல்லை.

''அக்கா... அந்த வீடா?'' ஆட்டோ டிரைவரின் குரல் கேட்டு, சுயநினைவுக்கு திரும்பினாள், செவ்வந்தி.
''ம்.''
மகள் பொன்னியோடு ஆட்டோவிலிருந்து இறங்கியவள், வீட்டை சுற்றி கூட்டம் இருப்பதை பார்த்து, தயங்கி நின்றாள். இவளை பார்த்த ஊர் மக்கள், கண் கலங்கியபடி வழி விட்டனர்.
இசக்கிமுத்துவின் பார்வை நிலைகுத்தி கிடந்தது.
''ஐயோ... நீ, அய்யனார் கோவிலை தாண்டி இருப்பேன்னு நினைக்கிறேன். அந்த நேரத்தில்தான் உயிர் பிரிந்தது. மனுஷன் கடைசி வரைக்கும் கட்டின பொண்டாட்டியையும், பெத்த புள்ளையையும் பார்க்காமலேயே போய் சேர்ந்துட்டாரே,'' யாரோ ஒருவரின் குரல், அவள் காதுகளில் இறங்கி, மன இறுக்கத்தை குறைத்தது.
எதுவும் பேசாமல் திரும்பியவளுக்கு, வாசலில், ஊர் தலைவர் அமர்ந்திருப்பது கண்ணில்பட்டது. சட்டென்று அவர் அருகில் சென்ற செவ்வந்தி, தன் கழுத்தில் இருந்த தாலியை கழற்றி, ''ஐயா, என்ன பொறுத்தவரைக்கும் இந்த மனுஷனுக்கு, 13 வருஷத்துக்கு முன் செய்ய வேண்டிய ஈம சடங்கெல்லாம், என் மனசுக்குள்ளேயே செஞ்சுட்டேன்.
''இப்ப நான் இங்க வந்தது, எனக்கு சேதி சொல்லி விட்ட ஊர் மக்களுக்கு மரியாதை கொடுத்து தான். இனிமேலும் இந்த தாலி என் கழுத்துல இருக்கிறதுல அர்த்தமில்லை. இத, உங்ககிட்ட கொடுத்துடுறேன். நீங்க ஒப்படைக்க வேண்டியவங்ககிட்ட ஒப்படைச்சிடுங்க, நன்றி,'' என, அய்யனார் கோவிலை நோக்கி நடந்தாள்.
''செவ்வந்தி, செவ்வந்தி,'' குரல் கேட்டு, பின்னால் திரும்பினாள்.
சங்கரின் அம்மா ஓடி வந்தாள்.
''செவ்வந்தி, என் புள்ள உன் மேல ரொம்ப பாசமா இருந்தான். அக்கா, அக்கான்னு உயிரையே விடுவான். அவனுக்கு இந்த உலகத்துல வாழக் கொடுத்து வைக்கலையே... நீ எப்படி இருக்க, நல்லா இருக்கியா?''
''இப்பதான் நிம்மதியா இருக்கேன்மா... தம்பி சங்கர் எங்கிருந்தாலும், நம்மள ஆசீர்வதிச்சுகிட்டு இருப்பான்; கவலைப்படாதீங்க,'' என்றவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

அன்று நடந்த நிகழ்ச்சி, கண் முன் வந்தது.
பொன்னிக்கு, 3 வயது. பக்கத்து ஊரில் இருக்கும் இங்கிலீஷ் மீடியம் பள்ளிக்கூடத்தில் மகளுக்கு விண்ணப்பம் வாங்கி, திரும்பிக் கொண்டிருந்தாள், செவ்வந்தி. அய்யனார் கோவில் அருகே வந்தபோது, 'அக்கா... நில்லுங்க...' என்று, குரல் கேட்டு திரும்பினாள். சங்கர் நின்றிருந்தான்.
'என்ன தம்பி, நல்லா இருக்கீங்களா... வெளியூர்ல படிக்கிறதா கேள்விப்பட்டேன்...'
'நல்லா இருக்கேன் அக்கா... காலேஜ் இறுதியாண்டு படிக்கிறேங்கா...' என்றான்.
இருவரும் பேசிக் கொண்டிருந்ததை, துாரத்தில் வந்து கொண்டிருந்த, இசக்கிமுத்து பார்த்து விட்டான். ஓட்டமும் நடையுமாக வந்து, மனைவியின் தலைமுடியை கொத்தாக பற்றி இழுத்து, உதைத்து, சித்ரவதை செய்து, அசிங்கமாக பேசினான்.
இதை பார்த்த சங்கர், தடுக்க முயன்றபோது, 'என் பொண்டாட்டிக்கும், உனக்கும் கள்ளத்தொடர்பு இருக்குன்ற விஷயத்தை ஊர் மக்கள்கிட்ட சொல்லப் போறேன்...' என்று, கூச்சலிட்டான்.
அக்கம் பக்கத்தில் உள்ளோர் வேடிக்கை பார்க்க, சங்கரின் முகம், கோபத்தின் உச்சிக்கு சென்றது. கண்கள் சிவக்க இசக்கிமுத்துவை தாக்கினான்.
'கூடப் பிறந்த அக்கா மாதிரி பழகின என்னைப் போய் தப்பா சொல்லிட்டியே, உன்னை சும்மா விட மாட்டேன்...' என்றபடி, பக்கத்தில் இருந்த கல்லை எடுத்து, அடித்தான்.
அவனும் திருப்பி தாக்க, அங்கிருந்தவர்கள் இருவரையும், சமாதானப்படுத்தி, அனுப்பினர்.
விடிந்தவுடன் பக்கத்து வீட்டில் ஒரே அழுகை சத்தம். போய் பார்த்தால், நேற்று நடந்த சண்டையில், அவமானம் தாங்க முடியாமல் துாக்கில் தொங்கியிருந்தான், சங்கர்.
'ஐயோ... என் பிள்ளைக்கு கிரகம் சரி இல்லைன்னு ஜோசியக்காரன் சொன்னானே... அவன் சொன்ன மாதிரியே ஆயிடுச்சே...' என்று, தலையில் அடித்து அழுத சங்கரின் அம்மாவை, கட்டிக் கொண்டு அழுதாள், செவ்வந்தி.
'ஏய் செவ்வந்தி, கள்ளக்காதலன் போயிட்டானேன்னு அழறீயா...' என்று, அசிங்கமான வார்த்தையை திரும்பவும் கூறினான், இசக்கிமுத்து.
அடுத்த நிமிடமே கையை ஓங்கிய செவ்வந்தி, 'இனி, ஒரு வார்த்தை பேசினே, சும்மா இருக்க மாட்டேன். நானும் பத்தினி தான். உன்னையும், இந்த ஊரையும் சேர்த்து என்னாலயும் எரிக்க முடியும். பொறுத்து போறேன்னு என்னை சாதாரணமா எடை போடாதே...
'கட்டுனவனுக்கு மரியாதை கொடுக்கணும்ன்னு, பொறுமையா போறேன். இனி, அப்படி இருக்க மாட்டேன். உன் மேல கை வைக்க எவ்வளவு நேரமாகும். கை வெக்காம போறேனேன்னு, சந்தோஷப்படு. இனி, நீ செத்தா தான் உம் முகத்துல முழிப்பேன். இது, சத்தியம்...' என்று, அன்று, தன் பெண்ணை அழைத்து வந்தவள் தான்.

அய்யனார் கோவில் அருகே வந்தாள், செவ்வந்தி.
'ஊருக்கெல்லாம் காவல் தெய்வம்ன்னு சொல்ற இந்த அய்யனாரு, அன்று, எனக்கு நடந்த கொடுமைகளை பார்த்து, சும்மா தானே இருந்தாரு...' என்ற கோபத்தோடு, சிலையை ஏறிட்டாள்.
வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தது. அய்யனார் முகம் பிரகாசமாக இருந்தது. சற்று நேரத்தில், திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்து, அவளை முழுமையாக நனைத்தது. அசைவற்று அதே இடத்தில் நின்றாள். மழைநீரில் நெற்றி பொட்டு கரைந்து, நிலத்தில் ஓடியது.
முகத்தில் அமைதி, அய்யனார் தன்னை ஆசீர்வதிப்பதாய் உணர்ந்தாள், செவ்வந்தி.

டெய்சி மாறன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
11-ஏப்-202123:43:33 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI இப்பவும் இப்படியெல்லாம் அவமானப்படுத்தற (கணவன்மார்கள்) கள்ளர்கள் இருக்கிறார்கள். ேல்தட்டு வர்கத்தில் பணம் இருப்பதால் இவர்களை கண்டுெெள்ள தில்லை. நடுத்தர குடும்பத்தில் இருந்தாலும் பெரும்பாலானேர் சகித்து வாழ்கிறார்கள். ஆனால் எல்லை மீறினால் தர்மம் வெல்லும். ஆனால் ஒரு ெண்ணை மனதளவில் பாதிக்கப்படுத்தினால் அவன் சாவு உறுதி
Rate this:
Cancel
11-ஏப்-202115:17:26 IST Report Abuse
எஸ்ரா ரொம்ப டிராமாத்தனமா இருக்கு கதை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X