உயிரோடு உறவாடி... (6)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2021
00:00

முன்கதை சுருக்கம்: சுஜீத் பேட்டி தருவதாக சொன்னதை தலைமை பொறுப்பாளரிடம் கூற, தானே அதை, 'டீல்' செய்வதாக கூறினார். கோபமான ரிஷி, அவர் அறையிலிருந்து வெளியேறி, நடந்த விஷயத்தை, எம்.டி.,க்கு, 'மெயில்' அனுப்பினான். மருத்துவமனையில் அம்மா சந்திராவிடம் பேசி கொண்டிருக்கையில், மகன் சம்மதித்து விட்டதால், திருமண ஏற்பாடு செய்யுமாறு, தமிழ்ச்செல்வியின் அப்பாவிடம் போனில் தெரிவித்தார், மைத்துனர் -

மைத்துனர் கந்தசாமியின் பேச்சு, அந்த நேரத்துக்கு இதமாக இருந்தது, சந்தானத்துக்கு.
''ரொம்ப சந்தோஷம் கந்தசாமி... சென்னையிலிருந்து, தமிழும் கிளம்பி வந்துடுச்சு. அதுகிட்டயும் பேசிடறேன்.''
''பேசிடுங்க... முதல்ல இந்த விஷயத்தை, சந்திராகிட்ட சொல்லுங்க. மக கல்யாணத்தை கண்ணார பார்க்கணும்ங்கிற ஆசையே, அவளை பாதி குணமாக்கிடும். மீதியை மாத்திரை, மருந்து பார்த்துக்கிடும்.''
''உண்மை தான் கந்தசாமி... இப்பவே போய் சொல்லிடறேன்.''
''ஒரே ஒரு விஷயம் தான். என் மகன் சுகுமார், தமிழ், வேலைக்கு போறதை விரும்பல. அவன் நடத்தற கேபிள், 'டிவி' பிசினசுக்கு, அவளும், அவ படிப்பும் ஒத்தாசையா இருந்தா போதும்ன்னு நினைக்கிறான். ஆகையால, அவ திரும்பி, சென்னைக்கு போய் ஹாஸ்டல்ல தங்கி கஷ்டமெல்லாம் படவேண்டாம். அதையும் சொல்லிடுங்க.''
''பேசிடறேன். எனக்கும் அதே கருத்து தான். பிள்ளைய இப்ப பார்க்கையில கண்றாவியா இருக்கா. ஹாஸ்டல் சாப்பாடு அந்த லட்சணத்துல இருந்திருக்கு.''
''நல்ல முடிவு... மத்தபடி ஆகவேண்டியதை பாருங்க... நாளைக்கே சுகுமாரோட, நான் நேர்ல வர்றேன். மிச்சத்த நேரில் பேசிக்கலாம்,'' என்று கந்தசாமி முடித்துக் கொள்ள, திரும்பி வந்தார், சந்தானம்.
டாக்டரோடு பேசிக் கொண்டிருந்தாள், தமிழ்.
''உங்கம்மாவோட உடம்புல பெருசா எந்த குறைபாடும் இல்லை. ஆனா, சொல்ல முடியாத அளவுல, 'ஸ்ட்ரெஸ்' இருக்குது. 'ஸ்ட்ரெஸ்' என் வரையில, கேன்சர் செல்லை விட மோசமானது,'' என்றார், டாக்டர்.
''நான், சென்னையில தனியா இருக்கேன்கிற கவலை தான் அவங்களுக்கு. நான் தான் வந்துட்டேனே... இனி, 'ஸ்ட்ரெஸ்' சரியாயிடும் தானே?''
''நிச்சயமா... ஆனா, இது தற்காலிகம் தான். நிரந்தரமா அவங்க நல்லா இருக்கறதுங்கிறது, உங்க கையில தான் இருக்கு,'' என்ற டாக்டரை, சற்று திகைப்போடு பார்த்த தமிழ்ச்செல்வி, 'அது எப்படி டாக்டர் முடியும்?' என்று மனதுக்குள் நினைத்ததை, கண்ணில் காட்டினாள்.
இடையில் புகுந்த சந்தானம், ''அதெல்லாம் இனி ஒரு பிரச்னையுமில்ல டாக்டர். இனி, மக எங்க கூடதான் இருக்கப் போறா. இவ கூடவே இருக்கணும்கறத விட, இவளுக்கு நல்லபடி கல்யாணமாகி, பேரன் - பேத்திகளை பார்க்கணும்ங்கிற ஆசை தான் அதிகம் சந்திராவுக்கு.''
''அப்ப, கல்யாண ஏற்பாடு செய்யுங்க... ஏன்னா, இப்ப வந்திருக்கிற, 'அட்டாக்' திரும்ப எப்ப வேணா வரலாம். மூணு தடவை தான் அதுலயும் தப்பலாம். நாலாவது தடவை வந்தா, கடவுளால கூட காப்பாத்த முடியாது. நம் உடம்போட, 'சிஸ்டம்' அப்படி.''
டாக்டரும், அப்பா சந்தானமும் பேசிக் கொள்வது, தமிழ்ச்செல்வியின் அடிவயிற்றை கலக்கிற்று. அதன்பின், டாக்டர் விலகிச்செல்ல, சந்தானமும், தமிழும் மட்டுமே இருந்தனர்.
''என்னம்மா, உங்கம்மாவை பார்த்தியா... ஏதாச்சும் பேசினாளா?''
''பேசினாங்கப்பா... ஆனா, டாக்டர் தடுத்துட்டார். நான் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கலப்பா.''
''எதிர்பாராததெல்லாம் நடக்கறதுதானேம்மா மனுஷ வாழ்க்கை?''
''அது சரி, ஏதோ என் கல்யாணம், நான் இங்கேயே இருந்துட போறேன்னுல்லாம் சொன்னீங்களேப்பா?''
''ஆமாம்மா... நீ, இனி திரும்பி சென்னைக்கு போக வேண்டாம். அந்த, 'டிவி' வேலையும் வேண்டாம், விட்டுத் தள்ளு... உனக்கு, கல்யாணம் பண்றதுன்னு முடிவு செய்துட்டேன்.''
''அப்பா...''
''ஆமாம்மா... அம்மா நிலையை பார்த்தேல்ல... டாக்டர் சொன்னதையெல்லாம் கேட்டேல்ல?''
''அப்பா... இதெல்லாம் உங்க, யூகங்கள். இப்ப கல்யாண எண்ணமே எனக்கு இல்லை. என்னோட துறையில நான் நிறைய சாதிக்கிற நோக்கத்துல இருக்கேன்பா. ஒரு மாசம் கூட விடுப்பு போட்டுட்டு, நான் இங்க இருக்கேன். இல்ல, அம்மாவை சென்னை கூட்டிகிட்டு போய், என் கூட வெச்சுக்கறேன். கல்யாணம் மட்டும் வேண்டாம்ப்பா.''
தமிழின் பேச்சு, சந்தானத்தை சற்று கட்டிப்போட்டு, தடுமாற விட்டது. அவர் எதிர்பார்க்காத பேச்சு அது. நெடுநேரம் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்து, ''எதையோ சாதிக்கப் போறேன்னியே... எதைம்மா அப்படி சாதிக்கப் போறே... அதை கொஞ்சம் சொல்லேன்,'' என்றார், நிதானமாக.
''அதை எப்படிப்பா இப்ப என்னால சொல்ல முடியும்... சொன்னாலும் உங்களுக்கு புரியாதுப்பா.''
''எனக்கு புரியாத ஒண்ணை சாதிக்கிறதுல, அப்படி என்னம்மா உனக்கு பெருமை?''
''அப்படி இல்லேப்பா... நான் ஒரு தொகுப்பாளினி. 'டிவி'ல வர வர பிரபலமாவேன். வருமானமும் அதிகமாகும். அப்புறம் நானே நிகழ்ச்சிகளை தயாரிக்கிற தயாரிப்பாளர் ஆவேன். அதனால, வளரத் துடிக்கிற பல கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியும்.''
''இதை, நீ இங்க இருந்து, கல்யாணமும் பண்ணிக்கிட்டு, உன் புருஷனோட சேர்ந்து செய்யேம்மா.''
''யார் புருஷன்கிறது முதல் கேள்வி. அடுத்து, இதுக்கு சென்னை தான் தோது. மதுரை இன்னும் பெருசா வளரலப்பா.''
''உன் மாமா, கந்தசாமியோட மகன் சுகுமார்தாம்மா மாப்ள. அவரும், உன்னை பார்க்கறச்சேல்லாம், 'என்ன, மருமவளே'ன்னு தான் கூப்பிடுவார். ஞாபகம் இருக்குல்ல?''
''ஐய்யோ அப்பா, சுகுமாரா?'' அதிர்ந்தாள், தமிழ்.
''என்னம்மா ஐய்யோங்கற... அவன், டிகிரி முடிச்சிருக்கான். கேபிள், 'டிவி' ஆபிஸ் வெச்சுருக்கான். 5,000 இணைப்புக்கு மேல கொடுத்துருக்காம்மா... ஒரு இணைப்புக்கு, 260 ரூவான்னா, 5,000துக்கு எவ்வளவுன்னு கணக்கு போடு... 13 லட்சம்.
''இதுல சரிபாதி சம்பளம். அது, இது, போலீசுக்கு லஞ்சம், ஆபீசருக்கு லஞ்சம்ன்னு போனாலும், மீதி, 6 - 7 லட்சம் அப்படியே நிக்குதே. உனக்கு, 'டிவி'ல, 30 ஆயிரம் தர்றாங்களா?''
நெடுநேரம் ஏதும் பேசாமல் அவரை பார்த்தாள், தமிழ்.
இடையில் அவள் அலைபேசியில் அழைப்பொலி. திரையில் ரிஷியின் பெயர்.
''சாரிப்பா... ஒரு நிமிஷம்...'' என்று, ஒதுங்கிச் சென்று பேசத் துவங்கினாள்.
''சொல்லு ரிஷி.''
''அம்மா எப்படி இருக்காங்க?''
''உயிருக்கு ஆபத்து இல்ல... ஓ.கே.,''
''இப்ப, ஆஸ்பத்திரியில தான் இருக்கியா?''
''ஆமாம்.''
''பை த பை... இங்க நம்ம சுஜித் சார் மேட்டர் ஒரு புரட்சியையே பண்ணிடிச்சு... இது சம்பந்தமா பேசத்தான் கூப்பிட்டேன். இப்ப பேசலாமா?''
''பேசு... நீயாவது எனக்கு பிடிச்ச விஷயத்த பேசு.''
''என்னாச்சு... யார் உன்கிட்ட பிடிக்காத விஷயமெல்லாம் பேசினாங்க?''
''எப்படி சொல்வேன், ரிஷி... ஒரு தமிழ் சினிமா காட்சி மாதிரியே இங்க ஓடிகிட்டிருக்கு... அம்மாவுக்கு, 'ஹார்ட் அட்டாக்!' உடனே, மகளுக்கு கல்யாண முயற்சி. 'உன் கல்யாணத்தை என் கண்ணார பார்த்துட்டு தான், நான் கண்ணு மூட விரும்பறேன்...' என்ற வசனத்தை மட்டும் தான் எங்கம்மா பேசலை.
''மத்த எல்லாம் நடந்துடுச்சு. மாப்பிள்ளையை பார்த்துட்டார், அப்பா. உம்ன்னா, நாளைக்கே கூட கல்யாணம் நடந்துடலாம்.''
''வாரே வா... அப்ப மேடத்துக்கு கல்யாணமா... அட்வான்ஸ் வாழ்த்துகள்.''
''இப்ப மட்டும் நான் நேர்ல இருந்திருந்தா, உன்னை அறைஞ்சிருப்பேன். அவர் தான், 1980ல இருக்கார்னா, நீ அதுக்கு ஒத்து ஊதப் பார்க்கறியா?''
''சாரி... சும்மா காமெடி பண்ணினேன். தப்பா எடுத்துக்காதே. ஆமா, என்ன பண்ணப் போறே?''
''தெரியல ரிஷி... அப்பா, பெரிய கனவுல இருக்காரு. அந்த கனவுகள்ல மிதந்துகிட்டு தான் பேசறாரு... மாப்ள, என் ஒண்ணுவிட்ட மாமா மகன் தான்.
''அவன், தெலுங்கு படத்துல வர்ற கோமாளி வில்லன் டைப். அடிக்கற மாதிரி கலர்ல, இறுக்கமா சட்டை போடுவான். இந்த காலத்துலயும் புலி நகம் வெச்ச டாலர் செயின்லாம் போட்ருக்கான்னா பார்த்துக்கயேன்.''
''வெரி இன்ட்ரஸ்டிங்... அப்ப, உனக்கு கல்யாணத்துக்கு பிறகு, மாப்பிள்ளையை இப்ப இருக்குற, 'டிரெண்டு'க்கு மாத்தற பெரிய பொறுப்பெல்லாம் இருக்குன்னு சொல்லு.''
''ரிஷி, விளையாடாதே. அப்புறம் நான், 'சுவிட்ச் ஆப்' பண்ணிடுவேன்.''
''சாரி... சாரி... நான், நம்ம விஷயத்துக்கு வரேன். இங்க, தலைமை பொறுப்பாளர் ஜனா, எதிர்பார்த்த மாதிரியே தான் நடந்துக்கிட்டாரு. நாம் சுஜித்தை சந்திச்சதை, அந்தாளால துளி கூட ஜீரணிக்க முடியல. பார்த்தேன், 'போய்யா, நீயும், உன் ஒத்துழைப்பும்'ன்னு, நடந்ததை எல்லாம் விளக்கி, எம்.டி.,கிட்ட, 'மெயில்' போட்டேன்.
''அதுல, 'நீங்க என் பேச்சை கேட்கவோ, நம்பவோ மாட்டீங்க... ஜனா சார், சீனியர். அவர் பக்கம் தான் நிப்பீங்க. ஆகையால, நீங்களா என்னை, 'டெர்மினேட்' பண்றதுக்கு முந்தி, நானா, 'ரிசைன்' பண்ணிடறேன்'னும் குறிப்பிட்டிருந்தேன்.''
''அடப்பாவி.''
''கேளு... அடுத்த ஒரு மணி நேரத்துல, அவர்கிட்டயிருந்து பதில் வந்துடுச்சு. 'சுஜித் ப்ரோகிராமை, நீயே, 'டிசைன்' பண்ணு. தமிழ்ச்செல்வியே பேட்டி எடுக்கட்டும். அசத்துங்க... உங்களுக்கு, 'செக் ஷன்'ல எல்லாரும், எல்லா உதவியும் செய்வாங்க'ன்னு, அவர் எனக்கு பதில் போட்டார்.
''அதுமட்டுமில்லாம, 'காப்பி டு ஜனா சார், ப்ரோகிராமிங் ஹெட் பார்த்திபன்'னு, எல்லாருக்கும் குறுஞ்செய்தி அனுப்பிட்டார்.''
''சபாஷ்... உன் துணிச்சலே உனக்கு கை கொடுத்துடுச்சு.''
''உனக்கா... நமக்குன்னு சொல். ஏன் பிரிச்சு பேசறே?''
அவனுடைய அந்த கேள்வி, தமிழ்ச்செல்வியை சற்று திகைக்க வைத்து, மவுனத்தில் ஆழ்த்தியது.
''என்ன தமிழ்... மவுனமாயிட்டே?''
''என்ன பேசறதுன்னு தெரியல... இங்க நிலைமையே சரியில்ல. கடவுளுக்கு என் மேல என்ன கோபமோ தெரியல, ஒரு கதவை திறந்து விட்டா, ஒரு கதவை மூடிடுறான்.''
''வசனம் நல்லா இருக்கு. நான் படம் பண்ணும்போது உபயோகப்படுத்திக்கிறேன். நீ, எப்ப வருவே... ஏன்னா, நீ தான் இந்த நிகழ்ச்சியோட ஆணிவேர்.''
''ஆணி வேராவது, ஊசி வேராவது... அப்பா, வேலையை ராஜினாமா பண்ணச் சொல்லிட்டிருக்கார். நீ, ஆணிவேர்ங்கறே... நான் என்ன பண்ணட்டும்?''
''என்ன கேட்டா... ஒரு முக்கியமான விஷயம், நான் உடனேயே சுஜித் சார் கூட பேசினேன். உன் நிலையை சொன்னேன். அவர் உன் கூட பேசறேன்னு சொன்னார். அனேகமா, கொஞ்ச நேரத்துல அவரே கூப்பிடுவார், பாரேன்.''
''நிஜமாவா?''
''அவருக்கு, உன்னை ரொம்ப பிடிச்சு போச்சு, தமிழ். நீ பெரிய இடத்துக்கு வருவியாம்... அவருக்கு நம்பிக்கை இருக்காம்,'' ரிஷி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, சுஜித்குமாரிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.
தொடரும்
இந்திரா சவுந்தர்ராஜன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X