அதிகபட்ச தண்டனை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2021
00:00

குமாரசாமியின் ஒன்றுவிட்ட அக்காள் மகளுக்கு, திருமணம்.
திருமண மண்டபம், நிரம்பி வழிந்தது. சாப்பாட்டு கூடத்தில் நின்றிருந்த அக்கா அருகில் சென்றார், குமாரசாமி.
''வாப்பா தம்பி... ரொம்ப சந்தோஷம்; வரமாட்டியோன்னு நெனச்சேன்.''
''என்னக்கா நீ... உன் கையால எவ்வளவு சோறு சாப்பிட்டிருப்பேன். பொண்ணும், மாப்பிள்ளையும் ஜோடி பொருத்தம் சூப்பர். எந்த ஊரு?''
''திருநெல்வேலி பக்கம். சரி... எங்க சம்சாரம்?''
''ஊர்ல ஒரு கல்யாணம்.''
''சரிப்பா... டிபன் சாப்பிட்டியா?''
''இதோ,'' என்று, பந்தியில் உட்காரப் போனார், குமாரசாமி.
வரிசையில், மணப்பெண்ணின் தாய் மாமன், மாதவன் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை கண்டு, சட்டென்று திரும்பினார்.
''என்ன தம்பி... சாப்பிடல?''
''கைய கழுவிட்டு வந்துடறேன்,'' என்று சொல்லி, வெளியே வந்தார்.
திருமண கூடத்தில் சிரிப்பும், கும்மாளமும் ஆக்கிரமித்திருக்க... ஓரமாக நாற்காலியில் அமர்ந்தார், குமாரசாமி.
நாதஸ்வரம் மங்களகரமாக முழங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று, எல்லா சத்தங்களையும் மீறி, பின் வரிசையில் ஒரு சலசலப்பு... திரும்பி பார்த்தார், குமாரசாமி.
ஆஜானுபாகுவான நபர், மற்றொரு நபரின் சட்டை காலரை பிடித்து அடிக்காத குறையாக, ''மச்சான்னு பார்க்க மாட்டேன். வகுந்துடுவேன். யாருடா உங்ககிட்ட மரியாதையா எதிர்பார்த்தாங்க. பெருசா விசாரிக்கிற... அப்பவே நினைச்சேன், இங்க வந்தா, உன் முகத்துல முழிக்கணுமேன்னு...
''எனக்கு வாச்சாலே ஒருத்தி, அவ சொல்லி அனுப்புனா, 'பார்த்தா, நாலு கேள்வி கேளு'ன்னு... தோ பாரு, காசு, பணம் இருக்குன்னு ஆடாத... அழுகி, செத்துடுவ... என் சாபம் பலிக்குதா இல்லியான்னு பாரு...
''வெள்ளை வேட்டி, சட்டையோட வந்துட்ட கல்யாணத்துக்கு... சொன்ன வார்த்தையை காப்பாத்த முடியாதவன்,'' பிடியில் மாட்டிய நபரின் கண்களில், கோபம் கொப்பளித்தாலும், கொஞ்சம் மிரண்டு தான் போனார்.
''என்ன மாமா... நாலு பேர் முன், ஏன் இப்படி நடந்துக்கறீங்க... நாம, பேசி எத்தனை நாளாச்சு?'' பதிலுக்கு, கோபப்படாமல் கேட்டார்.
அதற்குள் சிலர், அவர்களை விலக்கி விட்டனர்.
குமாரசாமி இருக்கும் இடத்தை நோக்கி வந்தார், மாதவன். அதை தவிர்க்கும் பொருட்டு, கத்திய நபரிடம் சென்று, தோள் தட்டி, அரவணைத்து, வேறு வரிசைக்கு அழைத்துச் சென்றார், குமாரசாமி.
''உடம்பு படபடக்குது. யாராவது கொஞ்சம் காபி கொண்டாங்களேன்,'' பக்கத்தில் உள்ளவரிடம் கேட்டார், குமாரசாமி.
கொஞ்ச நேரம் குமாரசாமியும் பேசவில்லை; அந்த நபரும் பேசவில்லை.
காபி வந்தது. வேண்டாம் என்று மறுத்தார்.
அவரின் தாடை நரம்புகள் துடிப்பதை பார்த்த குமாரசாமி, காபியை வற்புறுத்தி கொடுத்தார். சில மடக்குகள் குடித்தவர், தலை குனிந்து சிந்தித்தார்.
அவருடைய எண்ண ஓட்டத்தை மாற்ற, ''எம் பேரு, குமாரசாமி... கல்யாண பெண்ணோட ஒண்ணுவிட்ட தாய் மாமன். நீங்க?''
''நான், வேலுமணி. மாப்பிளையோட உறவு. என்ன இருந்தாலும், நான் அப்படி நடந்துகிட்டிருக்க கூடாது. சே... சின்ன பசங்க மாதிரி, சட்டைய பிடிச்சு, கத்தி சுத்தியுள்ளவங்கள்லாம் பார்த்து... நீங்க, என்ன தப்பா நினைச்சீங்களோ,'' என்றார், வேலுமணி.
''கண்டிப்பா இல்ல. சில பேர் உணர்ச்சிய காட்டிக்க மாட்டாங்க. நீ, மறைக்க தெரியாத வகை. ஆனா, ஒரு விசேஷத்துல, இது மாதிரி நடக்க கூடாது தான்,'' மென்மையாக அவருக்கு புரிய வைத்தார், குமாரசாமி.
''உங்கள, அண்ணனா நெனச்சு சொல்றேன். பணமில்லாதப்ப ஒண்ணு, பணமிருக்கிறப்ப ஒண்ணுன்னு, நாக்கு புரண்டு பேசுது... ஏன் சார், உலகம் இப்படி சுயநலமா மாறிடிச்சு... பாதிக்கப்பட்டவனுக்கு தானே தெரியும், இது மாதிரி ஆளோட செயல் தந்த வலி,'' வேலுமணி சொல்ல, ஓரளவுக்கு இவர் பாதிக்கப் பட்டிருக்கிறார் என்று புரிந்தது, குமாரசாமிக்கு.
ஆனால், ஏதும் பேசவில்லை.
''இந்தப்பய, என் சொந்த மச்சான். ஸ்கூல்ல படிக்கும்போது, அவனோட அக்காவை கட்டிக்கிட்டேன். கூடப்பிறந்த தம்பியாட்டம் பார்த்துகிட்டேன். எனக்கு, பொண்ணு பொறந்தா... நானும், மனைவியும், இவனையே மாப்பிள்ளையா நினைச்சோம்... மாமனார், மாமியாரும் ஒத்துகிட்டாங்க. இவன் கூட, அப்ப அத மறுத்து பேசினதில்ல.
''ஆனா, பயலுக்கு, 'கவர்மென்ட்' வேலை கெடைச்சது. ரொம்ப மாறிட்டான். நடுவுல, பெரியவங்களும் போய் சேர்ந்தாங்க. இவனுக்கு எடுத்து சொல்ல ஆளில்ல... வேலை பார்க்குற பொண்ணு தான் வேணும்ன்னு வேற எடத்துல போனான். சரி, விதின்னு விட்டேன்.
''அந்த மகராசி என்ன சொன்னாளோ தெரியல. 'இது, எங்கப்பா வீடு. கிளம்புங்க'ன்னு சொல்லிட்டான். 'பொண்ணுக்கும் சொத்துல உரிமை உண்டு'ன்னு சட்டம் பேச, எனக்கு பிடிக்கல. மரியாதை இல்லைன்னு வெளியேறிட்டேன்...
''இதை, நன்றியில்லேன்னு சொல்றதா; இல்ல, நம்பிக்கை துரோகம்ன்னு சொல்றதான்னு தெரியல. ஆனா, அவன் மேல கோபம் மட்டும் குறையல. நான் பண்ணின பாவம், இது மாதிரி கல்யாணத்துல பார்க்க வேண்டிருக்கு. நானே முகத்த திருப்பிக்கிட்டாலும், வந்து, 'அக்கா சவுக்யமா'ன்னு கேட்டு நடிக்கிறான், இந்த நாசக்காரன். நான் கோபப்படறது நியாயம் தான?'' என்றார், வேலுமணி.
சிரித்தார், குமாரசாமி.
''கண்டிப்பா நியாயம் தான். அதுமட்டுமில்ல, அதிகபட்ச தண்டனை தரணும்,'' என்றார்.
''என்ன சொல்றீங்க... தண்டனையா?''
''ஆமாம், வேலுமணி... இப்ப நீங்க கோபப்பட்டீங்களே... இது, தண்டனை இல்ல. இதால உங்க உடம்புக்கு தான் கெடுதல். நான் சொல்ற தண்டனை, உங்க மனசுக்கும், உடம்புக்கும் நல்லது.''
கொஞ்சம் நார்மலாகி சிரித்தார், வேலுமணி.
''அது என்ன தண்டனை?''
''இங்க... கல்யாண பெண்ணுக்கு, சொந்த தாய் மாமன் ஒருத்தர் இருக்காரு; எனக்கு, ஒண்ணுவிட்ட தம்பி. அவனும், நானும், 10 ஆண்டுகளுக்கு முன், திருப்பூர்ல, ஒரு கம்பெனி ஆரம்பிச்சோம். ரெண்டு பெரும், ஆளுக்கு, 20 லட்சம் போட்டோம். கஷ்டப்பட்டு தான் புரட்டி குடுத்தேன்.
''ஆனால், விதி... ஒரே வருஷத்துல, என் மனைவிக்கு நோய் வந்தது. வேற வழியில்லாம, கம்பெனி லாபத்துல, தம்பிக்கிட்ட சொல்லி, சிறு தொகையை, கடனா எடுத்துக்கிட்டேன். ஒரு கட்டத்துல, சில பேப்பர்ல கையெழுத்து போடச் சொல்லி, கொஞ்சம் பணத்தை கொடுத்து, என்னை கம்பெனியிலேர்ந்து விலக்கிட்டான்.
''கடைசியில, நான் ஆரம்பிச்ச இடத்துலேயே வந்து நின்னேன். வாடகை வீடு. அவன் நினைச்சிருந்தா, எனக்கு கொடுத்த பணத்தை, கடனா நினைச்சு, வட்டியோட திரும்ப வாங்கி, என்னை கம்பெனியிலேயே வெச்சிருந்திருக்கலாம்.
''ஆசை, பேராசை... என் நிலைமைய சாதகமா பயன்படுத்திக்கிட்டான். அவமானப்பட்டு, ஏமாந்தவன்னு பட்டம் வாங்கினது தான் மிச்சம். ஆனா, அப்புறமா வேற தொழில் பண்ணி, இப்ப நல்லா இருக்கேன். எதுக்கு இத சொல்றேன்னா, அவன் மேல கோபப்படல. ஆனா, அவனுக்கு தண்டனை தரணும்ன்னு நினைச்சேன்,'' என்றார், குமாரசாமி.
''கோபம் வரல... ஆனா, தண்டனை... புரியலீங்க,'' என்றார், வேலுமணி.
''நீங்க, எங்க வீட்டுப்பிள்ளை படம் பாத்திருக்கீங்களா?'' சம்பந்தமில்லாமல் கேட்டார், குமாரசாமி.
''ம்... பார்த்திருக்கேன்,'' என்றார், வேலுமணி.
''சரி... அந்த படத்துல எந்த காட்சி உங்களுக்கு பிடிக்கும்?''
''எம்.ஜி.ஆர்., பாடிக்கிட்டே நம்பியாரை சாட்டையால அடிக்குற காட்சி. எனக்கு மட்டுமில்லை. எல்லாருக்கும் பிடிக்கும்.''
''வெரிகுட்... அந்த படத்துல அதுதான் பிடிச்ச காட்சி இல்லியா?''
''ஆமாம்.''
''சரி... அதே படத்துல, மற்ற எவ்வளவோ காட்சிகள் வரும். அதுல, எவ்வளவு சுவாரஸ்யம் இருக்கும்ன்னு சொல்ல முடியுமா?''
'ம்ஹூம்... சில காட்சிகள் போரடிக்கலாம்.''
''அதெல்லாம் ஞாபகம் இருக்கா... உங்களுக்கு?''
''ம்ஹூம்... எப்படி ஞாபகம் வரும், ஏன் அத ஞாபகம் வெச்சுக்கணும்... நமக்கு பிடிக்காத காட்சி, எப்படி நம் மனதில் தாங்கும்?'' என்றார், வேலுமணி.
''அப்ப, வாழ்க்கையில் நமக்கு பிடிக்காதவங்கள பத்தியும், பிடிக்காமல் நிகழ்ந்த சில நிகழ்வுகள் பத்தியும் ஏன் ஞாபகம் வெச்சுக்கணும்... புரியுதா, வேலுமணி?'' என்று கேட்டார், குமாரசாமி.
''புரியுது. ஆனா, சினிமா வேற. வாழ்க்கை வேற தான?''
''ஒரு சினிமாவுக்கே மதிப்பு கொடுத்து, பிடிச்சத ஞாபகம் வச்சுக்கிட்டு, பிடிக்காத காட்சிகளை மறக்கறோம்னா... வாழ்க்கையில், மன நிம்மதிக்கும், உடல் நலத்துக்கும் ஊறு விளைவிக்கும் பிடிக்காத நபர்களை, பிடிக்காத விஷயங்களை ஏன் மறக்க கூடாது?'' என்றார், குமாரசாமி.
வேலுமணிக்கு புரிந்தது.
''எனக்கு ஏற்பட்ட அந்த சோகத்துக்கு அப்பறம், என் தம்பிய பத்தி பேசறதே இல்ல; நினைக்கறதும் இல்ல. சொல்லப் போனா, அவன ஒரு பொருட்டா நினைச்சு, என் நேரத்தை செலவழிக்க மாட்டேன். நேரம் எனக்கு ரொம்ப முக்கியம். இதுபோல, ஒரு பொது நிகழ்ச்சியில பார்த்தா, கண்டுக்காம நகர்ந்திடுவேன்.
''இப்ப கூட பாருங்க, தம்பிய பார்த்ததும், விலகி வந்திட்டேன். காலம் பூரா அவன நினைச்சு கோபப்படறது; நியாயம் கேக்கறேன்னு, பொது இடத்துல அவனை முறைக்கிறது; பார்க்கிறவங்ககிட்ட, அவன பத்தி புறம் பேசறது...
''அவனுக்கு கெட்ட பேரு வரணும்ன்னு, மனசுக்குள் திட்டம் போடறது; இப்படி நான், என் நேரத்தை அந்த கெட்டவனுக்காக ஒதுக்கறது சரியா... சீ... இவன் எல்லாம் ஒரு மனுஷனான்னு நினைச்சு, விலகறது சரியா... அவனை ஒரு புழுவா கூட நினைக்காம இருக்கறதுதான், நான் அவனுக்கு கொடுக்கற தண்டனை...
''சம்பந்தப்பட்டவங்க போகப் போக புரிஞ்சுப்பாங்க... யாருக்குமே, ஒரு பெரிய அவமானம்ன்னா அது, மத்தவங்க தன்னை மதிக்காம போறது தான். வேண்டாத விஷயங்கள நினைக்கிற நேரத்துல, நம் முன்னேற்றத்த பத்தி நினைக்கலாமே... புரிஞ்சுக்குங்க, வேலுமணி,'' என, முடித்தார், குமாரசாமி.
''ரொம்ப நன்றிங்க... ரொம்ப வருஷமா, இது, என் புத்திக்கு எட்டல... நினைக்க எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்க... எதுக்கு இந்த புழுக்களை பத்தி நினைச்சு நேரத்தை வீணடிக்கணும்... வேறு வழியில்லாம, எங்கேயாவது பார்க்க நேர்ந்தா, புது ஆள் மாதிரி கடந்து போயிடணும்.
''அப்படியும் பேச நேர்ந்தா, கடமைக்காக, இரண்டொரு வார்த்தை பேசிட்டு, போக வேண்டியது தான். அதுதான் நாம கொடுக்கற, தண்டனை,'' என்றார், வேலுமணி.

கீதாசீனிவாசன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balajilakshmi - PARAMAKUDI,இந்தியா
27-ஏப்-202113:39:59 IST Report Abuse
balajilakshmi அருமையான கதை... ரொம்ப ரொம்ப சூப்பர். அனைவரின் வாழ்க்கையிலும் இது போன்ற அனுபவம் கண்டிப்பாக இருக்கும். நல்ல கதை. குமாரசாமி கதாபாத்திரம் போல் அனைவரும் இருந்தால் நன்மையே. நானும் என்னை மாற்றி கொள்ள முயற்சிக்க இந்த கதை உதவும். என்னை மட்டும் அல்ல என்னை போல் பலரையும். கீதா சீனிவாசன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.. நன்றி.
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
22-ஏப்-202105:07:59 IST Report Abuse
Manian மேல் நாட்டு ஆராச்சிப் படி, சாவதற்கு முன் பலர் சொன்ன வருத்தமான செய்தி "எனக்கு தீமை செய்தவர்களை மன்னித்து மறக்காமல், அவர்கள் நமக்கு வழி காட்ட வந்த சரியானன பாதையில் செல்ல திசை திருப்பிகள் என்பதை உணரவில்லை என்பதே". இதையே "தன்னை அறிந்து மேல் செல்ல வழி", எதிரியை பழி வாங்குதலில் நேரத்தை கடத்தாதே இதைப் புரிந்து கொண்டதால், இன்றும் என் பயழ எதிரிகளுக்கு அன்போடு வணக்கம் சொல்கிறேன். இவர்கள் "எதிர்மறை கிரியா ஊக்கிகள்".
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
21-ஏப்-202102:27:57 IST Report Abuse
Girija மிக நல்ல கதை , நான் இந்த முறையை தான் பின்பற்றுகிறேன். நல்ல மதிப்பும் மரியாதையையும் பெற்று தருகிறது . தவிர நாம் மற்றவர்களின் வம்பு பேச்சில் சிக்காமல் இருக்கவும் செய்கிறது .
Rate this:
Girija - Chennai,இந்தியா
21-ஏப்-202111:23:49 IST Report Abuse
Girijaஇந்த பண்பு குழந்தைகளிடம் இயல்பாகவே உள்ளது. அவர்களை யாராவது துன்புறுத்தினால் அடுத்த முறை அவர்களை பார்க்கும்போது ஒதுங்கி சென்றுவிடும். அவர்கள் பக்கமே போகாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X