பொள்ளாச்சி பகுதி தென்னையில் வாடல் நோய் | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements
பொள்ளாச்சி பகுதி தென்னையில் வாடல் நோய்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
00:00

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் உள்ள தென்னை மரங்களை 'வேர் வாடல் நோய்' தாக்கி விளைச்சலையும், மரங்களையும் பாதித்து வருகிறது. விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியான இழப்பை ஏற்படுத்துவதால் கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் குமார் வழிகாட்டுதல் படி பயிர் நோயியல் துறை வல்லுனர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் குழுவினர் இப்பகுதியை ஆய்வு செய்தனர்.
பொள்ளாச்சியில் உள்ள 32 கிராமங்களில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதிகள் கேரள மாநிலத்தை ஒட்டிய பகுதிகளில் உள்ளது கண்டறியப்பட்டது. பெரும் பாலான கிராமங்களில் 20 சதவீத நோய் பாதிப்பும் அதிகபட்சமாக 65.82 சதவீத பாதிப்பும் உள்ளது.
நோய் தாக்கிய தென்னையின் இலை மட்டைகள் கீழ் நோக்கி வளைந்து விலா எலும்பு போல மாறிவிடும். இலைகள் மஞ்சள் நிறமாகவும் ஓரங்கள் கருகுவதும் நோயின் அறிகுறி. இலைகளின் எண்ணிக்கை குறைந்து குட்டையாகவும் மெலிந்தும்விடுகிறது.
மட்டைகள் மற்றும் தேங்காய் பருப்புகளின் தடிமன் குறைந்து விடும். நோயின் தன்மையை பொறுத்து 12 முதல் 90 சதவீதம் வரை வேர்அழுகல் காணப்படும். மரங்களில் பூங்கொத்து தாமதமாக மலரும். பாளை வளர்ச்சி குன்றி சிறுத்தும் வெடிக்காமல் கருகி விடும். பூங்காம்புகளில் நுனியிலிருந்து கருகும். குரும்பைகள் அதிகமாக உதிரும்.
தரமற்ற சிறிய காய்கள் உருவாவதால் மகசூல் இழப்பு ஏற்படும். 'பைட்டோ பிளாஸ்மா' எனும் நுண்ணுயிரி மூலம் இந்நோய் பரவுகிறது. தத்துப்பூச்சி மற்றும் கண்ணாடி இறக்கைப் பூச்சிகளின் மூலமாக இந்த நுண்ணுயிரி ஒரு மரத்திலிருந்து அடுத்த மரத்திற்கு பரவுகிறது.

நோய் மேலாண்மை செய்வது எப்படி
ஆரம்ப நிலையில் பாதிப்புக்கு உள்ளான தென்னை மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்.பாதிப்பு மிக அதிகமாக உள்ள பகுதிகளில் குறைவாக காய்க்கும் மரங்களை வெட்டி அகற்றினால் மற்ற மரங்களுக்கு நோய் பரவுவது தடுக்கப் படுகிறது.
ஆண்டுக்கு ஒருமுறை மரம் ஒன்றுக்கு 50 கிலோ தொழு உரம், 100 கிராம் பேசில்லஸ் சப்டிலஸ், 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும். 1.3 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் பாஸ்பேட், 3.5 கிலோ பொட்டாஷ், 1 கிலோ மெக்னீசியம் சல்பேட் என ஒரு மரத்திற்கு ஆண்டுக்கு ஒருமுறை இட வேண்டும்.
வட்டப்பாத்தியை தென்னை மட்டைகளைக் கொண்டு மூடாக்கு அமைக்கவேண்டும். ஏப்ரல், மே மாதங்களில் தட்டைப்யிறு, சணப்பை, கல்லகோனியம் மியூக்கனாய்ட்ஸ், பியூரேரியா ஜவானிக்கா அல்லது தக்கைப்பூண்டு ஏதாவது ஒன்றை பயிரிட்டு பூக்கும் முன் மடக்கி உழ வேண்டும் வாழை, மிளகு, கோகோ, மஞ்சள், ஜாதிக்காய், கருணைக்கிழங்கு போன்றவற்றை ஊடுபயிர் மற்றும் கலப்பு பயிராக பயிரிடலாம்.
நுண்ணுயிரியைப் பரப்பும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். 200 கிராம் மணலுடன் 20 கிராம் போரேட் குருணை மருந்து கலந்து குருத்தின் அடிப்பகுதியில் இட வேண்டும். இதனுடன் சேர்ந்து வரும் இலை அழுகல் நோயை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட மட்டையை அகற்றி அழிக்க வேண்டும். அழுகிய பகுதிகளை வெட்டிய பின் அந்த இடத்தில் 300 மில்லி தண்ணீரில் 2 மில்லி ஹெக்சகோனசோல் மருந்து கலந்து குருத்தில் ஊற்றலாம். அல்லது 3 சதவீதம் மேன்கோசெப் மருந்தை தெளிக்கலாம்.

-கார்த்திகேயன், தலைவர் பயிர் நோயியல் துறை
பிரபாகர், இயக்குனர்
பயிர் பாதுகாப்பு இயக்குனரகம்
கோவை வேளாண் பல்கலை
0422 - 243 5503

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X