உயிரோடு உறவாடு... (8)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2021
00:00

முன்கதை சுருக்கம்: நடிகர் சுதீஷுடன் பேசி முடித்தவுடன், 'உன்னை சென்னைக்கு அனுப்பியதே தவறு...' என, அப்பா கோபப்பட, அவரை பின்தொடர்ந்தாள், தமிழ்ச்செல்வி. ரிஷியை தன் அறைக்கு அழைத்த தலைமை பொறுப்பாளர் ஜனா, பேட்டி குறித்து கேட்க, அவனது பதிலால், அதிர்ச்சி அடைந்தார்-

ஜனாவிடம், ஆரம்பத்திலிருந்த அலட்சியம், இப்போது இல்லை. அவரின் மரியாதை கலந்த செயற்கையான பேச்சோ, இல்லை. வளைத்து வளைத்து அவர் கேட்ட கேள்விகளோ, ரிஷியை எதுவுமே செய்யவில்லை.
அவர் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும், 'கெத்'தாக பதில் சொன்னான்.
'இந்த நிகழ்ச்சி மூலமாய் ரிஷி, அந்த சேனலில் அவனை மிக பலப்படுத்திக் கொண்டு விடுவான்...' என்று தான், அவருக்கு தோன்றியது.
இப்போது, அவன், நிகழ்ச்சி உதவியாளர். இந்த நிகழ்ச்சி ஜெயித்து, அதுவரை வந்திராத, 'ரேட்டிங்' வந்து விட்டால், ரிஷி தான் நிகழ்ச்சி அமைப்பாளர்!
ஜனா மேற்கொண்டு பேச முடியாமல் சிந்தனையில் ஆழ்ந்து விட, 'இனி, என்கிட்ட வெச்சுக்காதீங்க...' என்பது போல் பார்த்தபடியே, ''சார்... நீங்க எந்த உதவியும் செய்ய வேண்டாம். துார நின்னு பாருங்க. அது போதும்,'' என்று, 'பஞ்ச்சிங்'காக சொல்லி, அங்கிருந்து விலகினான், ரிஷி.

வீட்டுக்குள் நுழைந்ததிலிருந்தே யாரிடமும் பேசவில்லை, தமிழ். அவளின் அப்பத்தாள் மட்டும் பெரிய தண்டட்டி காதோடு, ''அய்ய... என் மயிலு என்னா இப்படி, கானக் குயிலு கணக்கா கருத்துடுச்சு... பட்டணம் பக்கமெல்லாம் அனுப்பக் கூடாதுன்னு தலப்பாடா அடிச்சுக்கிட்டேன். என் பேச்ச யாரு இங்க கேட்டா,'' என்று, புலம்பிக் கொண்டிருந்தாள்.
தமிழ் முறைக்கவும், புகையிலை பெட்டியோடு, எதற்கு வம்பு என்பது போல் ஒதுங்கிக் கொண்டாள்.
சந்தானமும் விட்டுப்பிடிக்க விரும்பியவர் போல, தமிழிடம் பெரிதாக எதுவும் பேசவில்லை. ஆனால், அவள் காதுபட சிலருக்கு போன் செய்து, ''கூடிய சீக்கிரம் ஒரு நல்ல காரியம் நடக்கப் போகுது. எல்லாரும் வந்து ஆசிர்வாதம் பண்ண தவறக் கூடாது,'' என்று சொன்னதன் மூலம், தமிழை மறைமுகமாய் கலக்கிக் கொண்டிருந்தார்.
ரிஷியிடம் எல்லாவற்றையும் சொல்லி அழவேண்டும் போல் இருந்தது, தமிழுக்கு. போன் செய்து பேசலாம் என்றால், அருகிலேயே சுற்றி சுற்றி வந்தார், சந்தானம்.
வாசலில் வாடகை கார் வந்து நிற்கும் அரவம் கேட்டு, எட்டிப் பார்த்தார், சந்தானம்.
மைத்துனர் கந்தசாமியும், மாப்பிள்ளை சுகுமாரும் வந்திருந்தனர். இருவரை காணவும், ஒரு பரபரப்பு. சட்டையை அணிந்து, ''வாங்க... வாங்க...'' என்று, குரல் கொடுத்தார்.
மீதி, 30 ரூபாயை தராமல், வண்டியை கிளப்ப தயாரான டிரைவரை, இழுத்துப் பிடித்து, ''30 ரூபா, உனக்கு என்ன சில்லரை காசா... அம்புட்டு ரூபாயை, உனக்கு, 'டிப்ஸா' கொடுக்கிற அளவுக்கு இங்க ஒண்ணும் பணம் மரத்துல காய்க்கல... மீதியை கொடுத்துட்டு கிளம்பு. இந்த, 470 ரூபாயே உனக்கு அதிகம்,'' என்று, கத்தினான், சுகுமார்.
பதிலுக்கு, டிரைவர் ஒருமாதிரியாக முறைக்க, நெருங்கி வரும் சந்தானத்தின் காதில் விழுகிறார் போல், இடையில் புகுந்த கந்தசாமி, ''எலேய்... விடுறா... போனா போவட்டும். அதான் லட்சத்துல சம்பாதிக்கிறே... இது என்ன சுண்டக்காய்,'' என்றார்.
''என்ன மச்சான்... விடுங்க, நான் பார்த்துக்கறேன்,'' என்று, சந்தானம் நெருங்கும் முன், 30 ரூபாயை விட்டெறிந்து, காரை கிளப்பினான், டிரைவர்.
''முப்பது ரூபாயோ, மூணு ரூபாயோ... கணக்கு கணக்கா இருக்கணும்பா. இதுக்கு தான் சொந்த கார் வாங்கணும்ங்கறேன்,'' என்றான், சுகுமார்.
சந்தானத்தை அசத்த வேண்டுமென்றே, ''இப்ப என்ன... அதான் கறிகாயை கூறு கட்டி விக்கிற மாதிரி ரோட்டோரமா, சாமியானா பந்தல் போட்டு, கூவி கூவி விக்கிறாங்களே... வாங்கிட வேண்டியதுதானே,'' என்று எகத்தாளமாய் சொல்லிச் சிரித்தார், கந்தசாமி.
ஆனால், சந்தானத்திற்கு அது புரியவே இல்லை. மாப்பிள்ளை சுகுமார், அப்பாவுக்கு அடங்கிய பிள்ளையாகவும், பணத்தை கணக்காய் கையாள்பவனுமாய் தான், அவருக்கு தோன்றியது.

பேசியபடியே உள்ளே வந்தனர். ஹாலில் சுமாராய் ஒரு சோபா. உட்காரும் பாகம், 'டொக்கு' விழுந்திருந்தது. கந்தசாமியும் உட்கார்ந்தார். சுகுமார் மட்டும் அமராமல் ஒரு மூலையில் நின்று, தன்னை பார்த்துக் கொண்டிருந்த, தமிழ்ச்செல்வி அருகில் சென்றான்.
அவன் சிகரெட் பிடித்தது தெரியாமலிருக்க, சூயிங்கம் மென்றிருந்தான். அதையும் மீறி, அவன் அருகில் நெருங்கவும், வாடை வீசிற்று.
தமிழிற்கு மோப்ப மூக்கு. விரல்களால் தேய்த்துக் கொண்டே அவனை பார்த்தாள்.
''என்ன தமிழு... நல்லா இருக்கியா... எப்ப வந்தே,'' என்று, இரு கேள்விகளுடன் துவங்கினான்.
அவன், அவளோடு சகஜமாய் பேசத் துவங்கியதை ரசித்தார், சந்தானம்.
''அவங்க பேசிக்கிடட்டும்... அதுக்கு தானே அவன் வந்திருக்கான். அப்புறம்?'' என்றார், கந்தசாமி.
''என்ன மச்சான், திடுதிப்புன்னு வந்து நிக்கறீங்க... ஒரு போன் போட்டுட்டு வரலாம்ல?'' என்றார், சந்தானம்.
''நான் கூட சொன்னேன்... 'வேண்டாம்பா, 'சஸ்பென்சா' போய் நிற்போம். அப்பதான் தமிழை இயற்கையா பார்க்க முடியும். நாம வரப்போறது தெரிஞ்சா, அது, 'மேக் - அப்' பண்ணிகிட்டு நிற்கும்'னான்.''
''மாப்பிள்ளை விவரம் தான். ஆனாலும், தமிழ் இப்ப கொஞ்சம் எளப்பு தான். எல்லாம் ஹாஸ்டல் சாப்பாடு. இவளை, இனி தேத்திட மாட்டேனா.''
''அப்ப, இனி, தமிழ் பட்டணம் போகப் போறதில்லைன்னு சொல்லுங்க.''
''ஆமாம். வேலையை விட்டுடச் சொல்லிட்டேன். நாம, கல்யாண சோலிய பார்க்க வேண்டியது தான்,'' சந்தானம் உற்சாகமாக சொன்னதை கேட்டு, சற்றே சிந்திக்கலானார், கந்தசாமி.
''என்ன யோசனை?''
''ஒண்ணுமில்ல... இங்க உம்ம பொண்ணு சரின்னுட்டா. ஆனா, என் பையன் தான், 'ஒரு ஆறு மாசம் செல்லட்டும்பா'ங்கிறான்.''
அந்த பதில், சந்தானத்தை ஒரு பிடி பிடித்தது. கணுக்காலை, வளை நண்டு ஒன்று கவ்விப்பிடித்தது போல இருந்தது.
''நீங்க, உடனே மலைக்க வேண்டாம். அதுக்கு, ஒரு சரியான காரணம் இருக்குது. கேட்டா, சந்தோஷப்படுவீங்க,'' பீடிகை போட்டார், கந்தசாமி.
''அப்படி என்ன காரணம்?''
''நாங்க குடியிருக்கற தெருவுல, ஒரு கல்யாண மண்டபம் இருக்கறது தெரியும் தானே?''
''அதுக்கென்ன?''
''விலைக்கு வருது. அதை எப்படியாவது வாங்கி, கொஞ்சம் உள் வேலை எல்லாம் பார்த்து, அதுல தான் முதல் கல்யாணம் நடக்கணுமாம். நல்ல நெனப்பு தானே?'' கந்தசாமி கேட்கவும், சந்தானத்துக்கும் பெரும் நிறைவு.
''ஆஹா... நான் கூட என்னவோ, ஏதோன்னு நினைச்சுட்டேன்.''
இதையே, தமிழ்ச்செல்வியிடம் வேறு மாதிரி சொல்லிக் கொண்டிருந்தான், சுகுமார்.
''உடனே, நமக்கு கல்யாணம்ன்னு சொன்னாரு, என் அப்பா. நான் தான், ஆறு மாசம் செல்லட்டும்னேன். என்ன தான் நீ, என் அத்தை மகளா இருந்தாலும், நாம நெருங்கிப் பழகினதில்லையே, உனக்கு மேலுார் - எனக்கு திருமங்கலம்...
''நாம ஒரு நாலஞ்சு வாட்டி பார்த்திருப்போமா... அதுவும், நம் உறவுக்காரங்க சாவு வீட்டுக்கு துக்கம் கேட்டு வரையில தான் பார்த்துக்கிட்டிருப்போம். இல்லியா?'' என்று அவன் கேட்க, ஆமோதித்து தலையை அசைத்தாள், தமிழ்.
சுகுமார் பேசத் துவங்கியதிலிருந்து, மூன்று முறைக்கு மேல், கூப்பிட்டு விட்டான், ரிஷி.
அவனுக்கு தெரியாமல், 'கட்' செய்து கொண்டே இருந்தாள், தமிழ். நான்காவது முறையும் கூப்பிட்டான்.
''யாரது, ஓயாம... என்னன்னு கேட்டு, பிறகு பேசச் சொல்லு,'' என்று, சற்று சலிப்போடு சொன்னான்.
அவனை விழிகளில் விழுங்கியபடியே, மொபைலுக்கு காதை கொடுக்கலானாள்.
''என்ன தமிழ்... ஏதாவது இக்கட்டான சூழ்நிலையா, 'கட்' பண்ணிக்கிட்டே இருக்கே?''
''கொஞ்சம் அப்படித்தான்... நானே கூப்பிடறேன், ரிஷி.''
''லுக்... இங்க எல்லாமே ரொம்ப, 'பாசிடிவா' போய்க்கிட்டிருக்கு. நீ வந்துட்டா இன்னும், 'கிராண்ட்' ஆயிடும்.''
''பேசறேன்... கொஞ்ச நேரம் காத்திரு. நான் கூப்பிடறேன்,'' என்று, 'கட்' செய்தாள்.

''போன்ல யாரு?'' மிக உரிமையாக கேட்டான், சுகுமார்.
''ஆபீஸ்லருந்து என் கொலிக்.''
''அது என்ன, ரிஷின்னு பேரு... ரிஷின்னா சாமியார்தானே?''
அவன் அப்படி கேட்டது பிடிக்கவில்லை, தமிழுக்கு. பதிலேதும் சொல்லாமல், அவனை ஒரு மாதிரி பார்த்தாள்.
''கேட்டா, பதில் சொல்ல மாட்டியா... அழுத்தமா யார் இருந்தாலும், எனக்கு பிடிக்காது. நல்லா மனம் விட்டு பேசணும். அதுதான் அழகு,'' தமிழ்ச்செல்வியை துாண்டுவது போல, அவன் சொன்ன கருத்து, அவளை சற்று அசைத்தது.
''எனக்கு, ஒரு உதவி செய்வியா?'' என்று, மெல்ல ஆரம்பித்தாள்.
''என்ன செய்யணும்?''
''ஆறு மாசம் கழிச்சு தான், நம் கல்யாணம்ன்னு சொன்னீங்கல்ல.''
''ஆமாம்... அதுக்கென்ன?''
''அதை ஏன், ஒரு வருஷம்ன்னு ஆக்க கூடாது?''
''அடி ஆத்தி... ஏன் அப்படி?''
''காரணமா தான். சேனல்ல, எனக்கு இப்ப ஒரு நல்ல வாய்ப்பு வந்துருக்கு. உங்களுக்கு, நடிகர் சுஜித்குமாரை தெரியும்தானே?''
''என்ன அப்படி கேட்டுட்டே... நான், அவரோட ரசிகன்ல.''
அவன் அப்படி சொன்ன நொடியே, தமிழ்ச்செல்விக்குள் சற்று தேன் சுரப்பது போல் ஒரு மகிழ்ச்சி.
'அப்பாடா' என்றாள், நெஞ்சில் கை வைத்து.
''எதுக்கு இந்த பெருமூச்சு?''
''ரசிகன்னு சொல்லவும், ஒரு சந்தோஷம். நீங்க இதுவரை பேசினதுலயே இதுதான் எனக்கு பிடிச்ச வார்த்தை.''
''அவரை பத்தி இப்ப எதுக்கு கேட்டே?''
''எங்க சேனலுக்காக, நான் அவரை பேட்டி எடுக்க போறேன். அதான் கேட்டேன்.''
''நெசமாவா?''
அவன், நம்பாமல் கேட்க, உடனே, மொபைல் போனை திறந்து, 'செல்பி'யை காட்டினாள். அவன் முகத்தில் சூரியப்பிரகாசம்.
''இப்ப, நம்பறீங்களா?''
''ஆமா... அவரு, யாருக்கும், எதுக்கும் பேட்டி தரமாட்டாரே, உங்க சேனலுக்கு மட்டும் எப்படி சரின்னாரு?''
''நான் தான் கஷ்டப்பட்டு சம்மதிக்க வெச்சேன்.''
''அட்றா சக்கைன்னானாம். நான்லாம் அவரை பார்ப்பேனான்னு ஏங்கிட்டு இருக்கேன்,'' உற்சாகமாக பேசினான், சுகுமார்.
தமிழ்ச்செல்வியும் இதுதான் சந்தர்ப்பம் என்று, ''அப்ப நான் பேட்டி எடுக்கும்போது, கூட இருங்க. அறிமுகப்படுத்தி வைக்கிறேன்,'' என்றாள்.
''எப்ப... எப்ப?'' அவனிடம் பரபரப்பு.
''இன்னும் ஒரு ரெண்டு, மூணு நாள்ல எல்லாம் முடிவாயிடும். ஆனா, என் அப்பா, நம் கல்யாணத்தை சொல்லி, வேலையை விட்டுடு, உங்களுக்கு பிடிக்காதுங்கறார்,'' என்று, பீடிகை போட்டாள்.
''நீ, கவலையை விடு. மாமாவ நான் பார்த்துக்கறேன்.''
''தேங்க்யூ வெரிமச்,'' என்று, அவனை சற்று பனித்த விழிகளுடன் பார்த்தாள்.
அவனும், சந்தானத்தை நோக்கி நடந்தான்.

அந்த இடைவெளியில், ரிஷியிடம், ''நான் எப்ப வரவேண்டியிருக்கும்?'' என்றாள், எடுத்த எடுப்பில்.
''இப்பவே வா... அவ்வளவு வேலை இருக்கு. ஆமா, ஆஸ்பிடல்ல இருக்கியா... ஏதாவது அசவுகரிய சூழ்நிலையா,'' என்று, பதிலுக்கு கேட்டான், ரிஷி.
'அசவுகரிய சூழல் தான். ஆனால், என்னை பணயம் வைத்து, அதை ஜெயித்து விட்டேன்...' என்று, மனதுக்குள் சொல்லியபடியே, ''ரிஷி... எல்லா ஏற்பாட்டையும் செய். எவ்வளவு சீக்கிரம் வரமுடியுமோ வரேன்... அதே சமயம் இதுதான் என், 'கேரியரோட எண்டா'வும் இருக்கும்...'' என்று, தமிழ் சொல்லவும், ரிஷியிடம் ஏராள அதிர்ச்சி!
தொடரும்
இந்திரா சவுந்தர்ராஜன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X