விதியின் விளையாட்டு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2021
00:00

''காவ்யா,'' என, கூப்பிட்டபடியே உள்ளே நுழைந்தான், விவேக்.
இருட்டில், படுக்கையில் அழுது கொண்டிருந்தாள், காவ்யா.
''என்ன ஆச்சு... ஏன் அழறே?'' என்றான்.
''முடியலை, விவேக். இது, இரண்டாவது முறை. இதுவும் தோல்வி. ஒரு குழந்தைக்காக, ஏழு வருஷம் தவம் இருந்தாச்சு. ஏதாவது செய்,'' காவ்யாவின் அழுகை அதிகமாயிற்று.
''கொஞ்சம் பொறு. டாக்டர் சொன்னதை நீ கேட்டேல்ல. நம்பிக்கையை விடாதே,'' என்றான், விவேக்.
திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிறது. செயற்கை கருத்தரிப்பு, இரண்டு முறை தவறியது. ஒவ்வொரு முறையும், காவ்யா படும் கஷ்டத்தை அவனால் தாங்க முடியவில்லை.
''காவ்யா... நமக்கென்று குழந்தை எப்போது பிறக்குமோ, பிறக்கட்டும். நாம் ஒரு குழந்தையை தத்தெடுக்கலாம். ஒவ்வொரு முறையும், நீ படும் கஷ்டத்தை என்னால் தாங்க முடியவில்லை.''
''அப்பா, அம்மா இதுக்கு ஒத்துக்கணுமே,'' என்றாள், காவ்யா.
''அவர்களிடம் நான் பேசுறேன். அது, என் பொறுப்பு. நீ கவலைப்படாதே. எழுந்து வெளியே வா,'' என்றான், விவேக்.
காவ்யாவின் ஏக்கம், நாளுக்கு நாள் அதிகரிக்கவே, தத்தெடுக்கும் முயற்சியில் தீவிரமானான். கடைசியாக ஒரு அழகிய, மென்மையான பூச்செண்டு, அவர்கள் வாழ்க்கையில் வந்தது. பெண் குழந்தை. ஒரு நல்ல குடும்பத்திலிருந்து வந்தது போல இருந்தது.
திருமணம் ஆகும் முன், பெண்ணின் காதலன் விபத்தில் இறந்து விட்டதால், அவளின் வருங்காலத்தை எண்ணி, பிறந்த உடனேயே குழந்தையை, அநாதை ஆசிரமத்தில் பெற்றோர் விட்டு விட்டதாக, கூறினாள், ஆசிரம தலைவி.
அவர்கள் வாழ்க்கையையே மாற்றினாள், குழந்தை வினயா. அவளுக்காகவே, வேலையை விட்டாள், காவ்யா.

மூன்று ஆண்டுகள் ஓடின. தனக்கு குழந்தை வேண்டும் என்ற ஆசையே மறந்து போனது, காவ்யாவுக்கு.
சிட்டியிலேயே மாண்டிசரி பள்ளியில், 'அட்மிஷன்' கிடைத்தது.
மற்ற குழந்தைகள் அலறியதைப் பார்த்து, ''ஏம்மா, ஸ்கூல் ஜாலிதானே... ஏன் அழறாங்க?'' என்றாள்.
''அம்மாவை விட்டு இருக்க பயமாயிருக்கும் இல்லையா... கொஞ்ச நாளில் பழகிடும்,'' என்றாள், காவ்யா.
''அம்மா, எங்க டீச்சர் ரொம்ப ஸ்வீட். எனக்கு ரொம்ப பிடிக்கும்.''
''அப்படியா,'' என்று, காவ்யா கண்ணை உருட்டியவுடன், அவசரமாக, ''உன்னை விட ஸ்வீட் இல்லை. நீ தான் உலகத்திலேயே, 'பெஸ்ட்' அம்மா,'' என்றாள், வினயா.
விவேக்கிடம், ''மனிதர்களை வளைத்துப் போட, உங்க பெண்ணுக்கு சொல்லித்தர வேண்டாம்,'' என்றாள், காவ்யா.
படிப்பில் மட்டுமல்ல, பாட்டு, விளையாட்டு எல்லாவற்றிலும் முதலாக இருந்தாள், வினயா. குடும்பத்தினர் அனைவரும், அவள் மேல் அன்பை பொழிந்தனர்.
வினயாவுக்கு ஒன்பது வயது. நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். அவள் பள்ளிக்கு சென்ற பின், மாடியிலிருந்து இறங்கிய விவேக், காலை உணவில் நாட்டமில்லாமல் இருப்பதைப் பார்த்து, ''என்ன ஆச்சு, விவேக்... ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?'' என்றாள்.
''காவ்யா... என்னை, அமெரிக்காவில் உள்ள நியூயார்க் ஆபீசுக்கு, 'டிரான்பரில்' போகச் சொல்லியுள்ளனர். இரண்டு மாதத்தில் கிளம்ப வேண்டும். வினயாவுக்கு, தன் பள்ளி மற்றும் நண்பர்களை விட்டு போவதால் பாதிப்பு இருக்குமோன்னு பயமாயிருக்கு.''
''இதுதான் சரியான தருணம். வினயாவுக்கும் பரிட்சை முடிந்து விடும். இந்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாது,'' என்றாள், காவ்யா.
''அவளை நாம் தத்து எடுத்துக் கொண்ட விபரத்தை சொல்ல வேண்டாமா?''
''வேண்டாம், விவேக். அவளுக்கு பக்குவம் வரட்டும். இரண்டு, மூன்று வருஷம் போகட்டும். நாம் இந்தியாவை விட்டு போவதும் நல்லது தான். அவளுக்கு தற்செயலாய், பெற்ற தாயை பார்க்கும் வாய்ப்பு கூட இருக்காது,'' என்றாள், காவ்யா.

வினயாவுக்கு, படு குஷி. வகுப்பில் ஒருவர் விடாமல், அமெரிக்கா போகும் செய்தியை சொல்லியாயிற்று. கடைசியில் அந்த நாளும் வந்தது.
நியூயார்க் சிட்டியிலிருந்து சற்று தள்ளி, வசதியான வீடு பார்த்தனர். அழகான வீடு. சுற்றிலும் நிறைய நிலம். வந்த ஒரு மாதத்திலேயே அழகான தோட்டத்தை உருவாக்கினாள், காவ்யா.
வினாயாவுக்கும் பள்ளி மிகவும் பிடித்தது. நிறைய நண்பர்கள். விடுமுறை நாட்களில், 'மேன்ஹாட்டன்' எனும் சிட்டியை சுற்றிப் பார்த்தனர்.
''அம்மா... வர்ற ஞாயிற்றுக் கிழமை, என் நாலு ப்ரெண்ட்சை, சாப்பிடக் கூப்பிடலாமா,'' கேட்டாள், வினயா.
''கூப்பிடேன். அவர்களுக்கு என்ன பிடிக்கும்ன்னு கேளு,'' என்றாள், காவ்யா.
''அன்னிக்கு உனக்கு, ஒரு, 'சர்ப்ரைஸ்' இருக்கு,'' என்றாள், வினயா.

ஞாயிற்றுக் கிழமை -
குழந்தைகள் மூன்று பேர் வந்தனர். ஒரே கூத்தும், கும்மாளமும் தான்.
''நான்காவது ப்ரெண்ட் எங்கே... என்னோட, 'சர்ப்ரைஸ்' காணோம்?'' கேட்டாள், காவ்யா.
''வெயிட் பண்ணும்மா,'' என, வினயா, சொல்லி முடிக்கவும், வாசலில் மணி சத்தம் கேட்டது. கதவை திறந்த காவ்யா, மலைத்து நின்றாள்.
வினயாவின் சின்ன வடிவம் அங்கு நின்று கொண்டிருந்தது.
''நான், மாயா வீட்டில் வேலை செய்யும் பெண். எத்தனை மணிக்கு வந்து, திருப்பி அழைத்துப் போகலாம்?'' என்றாள், அவளுடன் வந்த பெண்.
''நான்கு மணிக்கு,'' என்ற காவ்யா, மாயாவை உள்ளே வருமாறு கூறினாள்.
வினயாவும், மற்ற சினேகிதியரும் ஓடி வந்தனர்.
''அம்மா... இதுதான் நான் சொன்ன, 'சர்ப்ரைஸ்!' மாயா, என் க்ளாஸ் இல்லை. ரெண்டு க்ளாஸ் கம்மி. ஆனால், நாங்க ஒண்ணா, 'கேம்ஸ்' விளையாடுவோம். இவ, என்னை மாதிரியே இல்லை... நாங்க சிஸ்டர்ஸான்னு ஸ்கூலில் கேப்பாங்க,'' என்றாள், வினயா.
காவ்யா செய்த, மசால் தோசையை, ரசித்து சாப்பிட்டனர்.
அவர்கள் போன பிறகு, ''அம்மா... மாயா, எப்படி என்னைப் போல் இருக்கா?'' கேட்டாள், வினயா.
''வினயா... உலகத்திலே ஏழு பேர் ஒரே மாதிரி இருப்பாங்களாம். அதுதான் இந்த அதிசயம்,'' என சிரித்தாள், காவ்யா.

அன்று இரவு-
''விவேக்... நான் நினைப்பதை தான், நீங்களும் நினைக்கிறீங்களா... மாயாவின் அம்மா தான் வினயாவின் அம்மாவா... மாயாவின் அம்மாவை பார்க்க நேர்ந்து, வினயா கேள்வி கேட்டால் என்ன சொல்வது?''
''கவலைப்படாதே, வினயாவுக்கு உண்மையை எடுத்துச் சொல்லும் நேரம் வந்து விட்டது,'' என்றான், விவேக்.
''அந்த நாளை நினைத்தாலே பயமாயிருக்கு,'' என்றாள், காவ்யா.
அவள் பயந்த நாளும் வந்தது.
''அம்மா... சனிக்கிழமை, மாயா வீட்டில் எங்களுக்கெல்லாம் சாப்பாடு. நீ, என்னை, 10:00 மணிக்கெல்லாம், 'ட்ராப்' பண்ணிட்டு, 2:00 மணிக்கு, 'பிக் - அப்' பண்ணணும்,'' என்றாள், வினயா.
''ஓ.கே., உத்தரவுபடியே நடக்கட்டும் மஹாராணி,'' என்றாள், காவ்யா.
நல்ல வேளை, மாயாவின் வீட்டில் வேலை செய்பவள் தான், கதவைத் திறந்தாள். வினயாவை விட்டு விட்டு, திரும்பிய காவ்யாவின் மனதில் துளி கூட நிம்மதி இல்லை. எப்போது, 2:00 மணியாகும் என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
மாயாவின் வீட்டுக் கதவை திறந்த பெண்ணைப் பார்த்ததும், அவளுக்கு பேச்சே வரவில்லை.
மாயா, வினயா இருவரின் அச்சாக, ஒரு அழகிய பெண், அவளை வரவேற்றாள்.
''என் பெயர், மாலா. அவசரம் இல்லைன்னா உள்ளே வாங்களேன்,'' என்றாள்.
காவ்யா உட்கார்ந்தவுடன் சிறிது நேரம் பொதுவாக பேசினர். திடீரென்று மாலா, ''காவ்யா... வினயா எந்த ஆண்டு பிறந்தாள்... இந்தியாவில், நீங்க எங்கே வசித்தீர்கள்?''
''மாலா... நீங்க ஏன், இந்த கேள்வியைக் கேக்கறீங்கன்னு எனக்கு தெரியும். வினயாவை, நாங்க தத்து எடுத்துக்கிட்டோம். அவளுக்கு, அது தெரியாது.''
மாலாவின் கண்களில் நீர் நிரம்பியது.
''காவ்யா... நான் தான் அந்த துரதிருஷ்டசாலியான, அம்மா. என் கணவர், ரொம்ப நல்லவர். திருமணத்திற்கு முன்பே, அவரிடம், என் கதையை சொல்லி விட்டேன். நான் தான் அவள் அம்மான்னு, வினயாவிற்கு உண்மை தெரிய வேண்டாமா... நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?''
''மாலா... அவசரப்பட வேண்டாம். அவளுக்கு, எங்களைத் தவிர வேற யாரையும் தெரியாது. அவள் இல்லாமல் எங்களுக்கு வாழ்க்கையே கிடையாது. வீட்டிற்கு போனதும், அவளுடைய பல கேள்விகளுக்கு பதில் சொல்லணும். விதிதான் நம்மை கொண்டு சேர்த்திருக்கிறது. நானும், விவேக்கும், அவளுடன் பேசி, புரிய வைக்கிறோம்,'' என்றாள், காவ்யா.
வழியில் வினயா ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
வீட்டில் நுழையும்போதே, விவேக்கை பார்த்ததும், ஓடிப்போய் கட்டிக் கொண்டாள்.
''அப்பா... உங்க ரெண்டு பேர்கிட்டேயும் நான் ஒரு விஷயம் பேசணும்.''
''நான் கேட்க ரெடி. காவ்யா ரெடியா?'' சிரித்தான், விவேக்.
பார்வையாலேயே அவனை அடக்கினாள்.
''அப்பா... என் ப்ரெண்ட் மாயா, அவம்மா, நான் மூணு பேரும் எப்படி ஒரே மாதிரி இருக்க முடியும்... நான் எப்படி அவங்களைப் போல இருக்கேன்... உங்களைப் போல் ஏன் இல்லை... எனக்கு பயமாயிருக்கு,'' என்றாள், வினயா.
''எதுக்கு கண்ணா பயம். உனக்கு, நான் ஒரு கதை சொல்ல போறேன். கவனமா கேளு,'' என்றான், விவேக்.
காவ்யாவின் உடம்பு நடுங்கியது.
''வினயா... 10 ஆண்டுகளுக்கு முன், ஒரு அப்பா, அம்மாவுக்கு குழந்தை இல்லாததால், அழகான ஒரு ராஜகுமாரியை தத்து எடுத்துக்கிட்டாங்க. அவர்களுக்கு அந்த குழந்தை இல்லாமல் வாழ்க்கையே இல்லை. அந்த குழந்தை தான் அவர்களுடைய உயிர்,'' என்றான், விவேக்.
''அப்பா... அப்படின்னா, மாலா ஆன்ட்டி தான், என்னை பெத்த அம்மாவா?'' என்ற வினயாவை, அணைத்துக் கொண்டாள், காவ்யா.
''உன்ன பெத்த அப்பா, அம்மாவைப் பற்றி எங்களுக்கு தெரியாது. உனக்கு, அப்பா - அம்மா நாங்க தான்,'' என சொல்லி, விம்மி அழுதாள், காவ்யா.
''அம்மா... எனக்கு, அப்பா - அம்மா நீங்க தான். உங்களைத் தவிர வேறு யாருமில்லை. ஆனா, என்னை ஏன் வேணான்னு துாக்கிப் போட்டாங்க?'' கேட்டாள், வினயா.
''வினயா... யாருமே தான் பெற்ற குழந்தையை துாக்கிப் போட மாட்டாங்க. ரொம்ப கடினமான, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தான், அப்படி செய்திருப்பர். நீ குழந்தை, உனக்குப் புரியாது,'' என்று, அவளை அணைத்துக் கொண்டான், விவேக்.
வினயா இருவரையும் கட்டிக் கொண்டு, ''நீங்க, எனக்கு அப்பா - அம்மா. நான் உங்க குழந்தை. இதை யாராலையும் மாத்த முடியாது,'' என்றாள், தீர்க்கமாக.
இருவரும், கண்ணீருடன் சிரித்தனர்.

வாசலில் மணி அடித்தது. மாயா, மாலா, அவள் கணவன் மகேஷ் மூவரும் உள்ளே நுழைந்தனர். காவ்யாவின் வயிற்றைப் பிசைந்தது.
அவர்களைப் பார்த்த உடனேயே, 'வினயாவுக்கு உண்மை தெரிந்து விட்டது...' என்று, மாலாவுக்கு புரிந்தது.
அவள் பேச ஆரம்பிக்கும் முன், சிரித்தபடியே, ''நீங்க, என் அம்மாவை விட வயதில் சின்னவங்கதானே... நான் உங்க அக்கா குழந்தை. உங்களை சித்தின்னு கூப்பிடலாமா?'' என்றாள், வினயா.
''நீ, என் அக்காவுடைய குழந்தை தான். என்னை, சித்தின்னே கூப்பிடு,'' என்றாள், மாலா.
அவள் கண்ணில் நீர் நிறைந்தது.
காவ்யாவும், விவேக்கும் அசந்து நின்றனர்.
புத்திசாலியான வினயா, 'நான், இவர்களுக்கு தான் குழந்தை...' என்று, சொல்லாமல் சொல்லி விட்டாள்.
பெருமிதம் பொங்க இருவரும், வினயாவை அணைத்துக் கொண்டனர். இவளை விட சிறந்த பரிசு, வாழ்க்கையில் வேறென்ன வேண்டும்?

பானு சந்திரன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
05-மே-202105:33:22 IST Report Abuse
Manian இரண்டு பேர்கள் ஒன்று போல் இருப்பமை டோப்பெல்கேங்கர் (doppelgänger) என்பார்கள். இது ஜெர்மன் மொழி வார்த்தை ஹிட்லர் இப்படி ஒருவரை தன்னிடம் பாதுகாப்பு காரணமாக வைத்திருந்தார். பெண்கள் மைட்டோகோண்டிரியா( Mitochondrial DNA ) என்ற மரபணு 7000 தலை முறைகளில் மாறவில்லை. ஆண்கள் மரபணுவே மாறும். பகுத்தறிவு ஜீவி ஜாதி வெறியர்கள் கவனிக்க ஆக 128 கோடி இந்தியர்களில் 2குழந்தைகள் அபூர்வமாக இருந்தால், ஒரே தாய்-தந்தைக்கே அவை பிறந்ததாக கை எழுதுவது? மேலும், இரண்டு குழந்தைகளும் ஒரே ஊரில் சந்திப்பது, புள்ளி விவர இயல்படி (1/12,80,00,000 x 1/12,80,00,000 = 1/ 128 கோடி x 1/ 128 கோடி) ஆக கதை கருத்து சரியே என்றாலும், மின் வைத்தளத்தில் தேடி கருத்துப் பிழைகளை சரி செய்யாமை, தமிழ் கல்வியின் குறையா? கல்வியின் சதியா?
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
03-மே-202109:08:29 IST Report Abuse
Girija ரூம் இல்ல செட் போட்டே யோசிச்சிருக்காங்க.... ஒரு வருஷ சீரியல் பண்ணலாம். அதென்ன தத்து எடுக்கும் கதைகளில் அமெரிக்கா, புத்திசாலி குழந்தை என்று பீல்ட் அப் ?
Rate this:
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
04-மே-202107:59:47 IST Report Abuse
naadodiஅதானே மான்ஹாட்டன் நியூ யார்க் அவசியமே இல்லை கதைக்கு.....
Rate this:
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
02-மே-202111:26:25 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே அழகு அழகு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X