சித்திரை கடைசி அல்லது வைகாசி மாத வளர்பிறை திரிதியை திதியை, அட்சய திரிதியை என்கிறோம். எல்லா மாதங்களிலும் தான், வளர்பிறை திரிதியை திதி வருகிறது... இந்த திதிக்கு மட்டும் அப்படி என்ன விசேஷம்?
ஆம்... பல விசேஷங்கள் இந்த நாளுக்கு இருக்கிறது. பஞ்சாங்கம் கணிப்பவர்கள், 'மூன்றரை முழுத்தங்கள்' (திதிகள்) என்ற சொல்லை பயன்படுத்துவர்.
அதாவது, சித்திரை மாத வளர்பிறையின் முதல் திதியான பிரதமை, ஆவணி வளர்பிறையின் பத்தாம் திதியான தசமி, சித்திரை கடைசி அல்லது வைகாசி வளர்பிறையின் மூன்றாம் திதியான திரிதியை, கார்த்திகை வளர்பிறையின் முதல் திதியான பிரதமையில், முதல், 12 மணி நேரம் ஆகியவை, புனித நாட்களாகக் கருதப்படுகின்றன. இவற்றை பிரகாச திருநாட்கள் என்பர்.
இந்நாட்களில், சூரியனும், சந்திரனும் சம அளவிலான ஒளியை பூமிக்கு வழங்குகின்றன. இந்த ஒளியே சூரியனும், சந்திரனும் பூமிக்கு வழங்கும் அதிகபட்ச ஒளியாகும். இந்த ஒளி சிந்தும் நாட்களில், மன வலிமை அதிகமாக இருக்கும்.
மன வலிமையே ஒரு செயலை வெற்றிகரமாக முடிக்க தேவையாக உள்ளது. இதனால் தான், இந்நாட்களில் துவங்கும் பணி, வளர்ச்சி பெறும் என்கின்றனர். வளர்ச்சி என்ற சொல்லின் சமஸ்கிருத பதமே, அட்சய - என்றும் குறையாதது என்ற, பொருளும் உண்டு.
மூன்றரை முழுத்தங்களில் மிக உயர்ந்தது, அட்சய திரிதியை. ஏனெனில், இந்நாளில் தான் பிரம்மாவால் உலகம் படைக்கப்பட்டது. இந்நாளில், சுப நிகழ்வுகளுக்கு அச்சாரம் இடுகின்றனர். இந்நாளில் செய்யும் தர்மம், பல மடங்கு புண்ணியம் தரும்.
அட்சய திரிதியை, கோடை காலத்தில் வருவதால், தயிர் சாதமும், குடையும், தானம் கொடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த தானம், இனி வரும், 11 தலைமுறைகளை பசியின்றி வாழ வகை செய்யும்.
அட்சய திரிதியை அன்று, புண்ணிய நதிகளில் நீராடுவது பாவங்களைக் குறைக்கும். வீட்டில் சிலை வழிபாடு செய்பவர்கள், பச்சைக் கற்பூரம், சந்தனம், குங்குமப்பூ கலவையை சிலைகளுக்கு பூசி வழிபட்டால், தோல் நோய்கள் நீங்கும்.
ஏழைப்பெண்களுக்கு, மாங்கல்யம், வெள்ளிப் பொருட்கள் தானம் செய்வது, மன நிம்மதியைத் தரும். சூரிய, சந்திரரை வழிபட்டால், மனோபலம் அதிகரிக்கும்.
அட்சய திரிதியை அன்று, ரோகிணி நட்சத்திரமாக அமைந்தால், நாம் கொடுத்து வைத்தவர்கள். ஏனெனில், இந்நாளில் நம் குலதெய்வத்திடம் வைக்கும் வேண்டுதல் பலிக்கும்.
பிரகாசத் திருநாளான அட்சய திரிதியை அன்று, தஞ்சாவூர் மாவட்டம், சூரியனார் கோவில் அருகிலுள்ள கஞ்சனுார் சுக்ரபுரீஸ்வரர் கோவில் பிரகாரத்தில், அடுத்தடுத்து அமைந்துள்ள சூரிய, சந்திரரை வழிபட்டால், மன வலிமை பெறலாம்.
தி. செல்லப்பா