சக மனிதராக மதிக்கலாமே!
சில மாதங்களுக்கு முன், என் வீட்டிற்கு, 35 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர் யாசகம் கேட்டு வந்தார். மிகவும் சோர்வாக, பாவமாகவும் இருக்கவே, 'சாப்பிடுகிறாயா...' என, கேட்டேன். 'சரி...' என்று கூறவே, சாப்பாடு போட்டேன்.
வெயிலில் வந்த களைப்பில், சாப்பிட்டவுடன், திண்ணையில் படுத்து துாங்கியவர், மாலை தான் எழுந்தார். பெயர் கேட்டதற்கு, 'கார்த்திகா' என்றார். அன்று, என் வீட்டு வேலைக்காரம்மா வரவில்லை.
நான் வேலை செய்வதை கவனித்த திருநங்கை, 'என்னை வேலைக்கு சேர்த்துக் கொள்ளுங்கள். எல்லா வேலைகளையும் நான் செய்கிறேன். எனக்கு, மூன்று வேளை சாப்பாடு போட்டு, தங்க இடம் கொடுத்தால் போதும்...' என்றார்.
'சரி, என் வீட்டுக்காரர் வந்ததும் கேட்டு சொல்கிறேன்...' என்று கூறி, கணவர் வந்ததும் கேட்டேன்; சம்மதித்தார். அவரை வேலைக்கு அமர்த்திக் கொண்டேன். இதனால், அக்கம்பக்கத்தினர், எங்களை ஒரு மாதிரியாக பார்த்தனர். எங்களுடன் பழகுவதை, பேசுவதை தவிர்த்தனர்.
பத்திரிகையிலும், வலைதளங்களிலும் திருநங்கையரை பற்றி பரிவாக, உயர்வாக பேசும் உலகம், நிஜத்தில் அப்படி இல்லை என்பதை உணர்ந்தேன். நாம் வெறுத்து ஒதுக்கும்போது தான், அவர்கள் தவறு செய்ய முனைகின்றனர். சக மனிதர்களாக மதித்து அரவணைத்தால், அவர்கள் வாழ வழி செய்த புண்ணியம் நமக்கு கிடைக்கும்.
- பி. ராஜேஸ்வரி, மதுரை.
மாமியார் - மருமகள் பிரச்னையா?
நானும், என் மனைவியும் வேலைக்கு செல்வதால், தனியாக வசிக்கும் அம்மாவை கவனிக்க நேரமில்லாது போய் விடுகிறது. மகன், தன்னை கவனிக்காமல் போனதற்கு, மருமகள் தான் காரணம் என எண்ணி, மனைவியுடன் பேசுவதில்லை, அம்மா.
வீட்டுக்கு வீடு இருக்கும் மாமியார் - மருமகள் பிரச்னை தான் என, ஒதுங்கி போகாமல், சில மாற்று வழிகளை முன்னெடுத்தேன். அதன்படி, மனைவிக்கு, ஒரு சேலையும், பேன்சி பொருட்களும், என் அம்மா வாங்கிக் கொடுத்தது போல கொடுத்தேன். அதேபோல், மனைவி கொடுத்ததாக சொல்லி, அம்மாவுக்கு தின்பண்டங்களும், மருந்து, மாத்திரைகளும் வாங்கிக் கொடுத்து வந்தேன்.
இதை அவர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டேன். இது, மாமியார் - மருமகள் இடையே உறவை வளர்த்ததோ இல்லையோ, பகையை வளர்க்காமல் இருந்தது. இதனால், தன்னை மருமகள் கவனிக்கவில்லையே என்ற குறைபாடு, அம்மாவிடம் மறைந்தது.
கொஞ்ச நாள் தான் இதுபோல் செய்தேன். நாளடைவில், அக்கறையுடனும், அன்புடனும் பழகுகின்றனர். இதனால், வீட்டில் நிம்மதி கூடியது. உங்கள் வீட்டில், மாமியார் - மருமகள் பிரச்னையா... நீங்களும், இதுபோல முயற்சிக்கலாமே!
- பா. சுபானு, காரைக்குடி.
அமைதி காத்திடுங்கள்; அதுவே தீர்வு!
சமீபத்தில், என் மொபைல் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
எதிர்முனையில் பேசிய ஆண், 'மேடம்... நாங்கள் தனியார் வேலை வாய்ப்பு மையத்திலிருந்து பேசுகிறோம். உங்க வீட்டுல படித்த ஆண் - பெண் யாருக்காவது வேலை வேணும்ன்னா, இந்த எண்ணுக்கு கூப்பிடுங்க; நிறைய ஆட்கள் தேவைப்படுகிறது. நல்ல சம்பளம், இ.எஸ்.ஐ., - பி.எப்., உண்டு...' என்று, ஏதேதோ கூறினார்.
எதுவும் சொல்லாமல், 'தேவைன்னா கூப்பிடுகிறேன்...' என்று கூறி, இணைப்பை துண்டித்தேன். மறுநாள், அதே எண்ணிலிருந்து திரும்பவும் அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்காமல், 'கட்' செய்தேன். இதுபற்றி, பக்கத்து வீட்டு சகோதரியிடம் தெரிவித்தேன்.
அவரோ, 'இது மாதிரி அறிமுகமில்லாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தால், போனை, 'ஆன்' செய்து விட்டு, அமைதியாக இருங்கள்; எதிர் முனையில் பேசுபவர், குழப்பத்திலும், ஏமாற்றத்திலும் தவிப்பதோடு, ஏதேனும் விபரீதம் ஆகிவிடுமோ என்ற அச்சத்தில், திரும்பவும் அழைக்க மாட்டார்...' என்றார்.
அந்த சகோதரி கூறிய அணுகுமுறையை கடைப்பிடித்தேன். அதற்கு, நல்ல பலனும் கிடைத்தது. இரண்டு நாட்களுக்கு பின், எந்த அழைப்பும் வரவில்லை.
தனிமையில் இருக்கும் இல்லத்தரசிகள் அல்லது பணிக்கு செல்லும் பெண்களின் மொபைல் எண்களை எப்படியோ தெரிந்து கொள்ளும் சில, 'சபலிஸ்டு'களின் விஷமத்தனம் தான் இதுபோன்ற அனாவசியமான அழைப்புகள் என்பதை விளக்கினார், அந்த சகோதரி.
ஆம், பெண்களே... தேவையற்ற எண்ணிலிருந்து, உங்களுக்கு அழைப்பு வந்தால், போனை, 'ஆன்' செய்து விட்டு, அமைதியாக இருங்கள். எத்தனை முறை வந்தாலும், இதையே செய்யுங்கள்; தீர்வு கிடைக்கும்.
- ஏ. ரோசம்மாள், மதுரை.