சொல்லுக்கும், நெல்லுக்கும் பெயர் பெற்ற, தஞ்சாவூர் கிழக்கு வானில் அன்று, ஒரு அபூர்வ நட்சத்திரம் தோன்றியது. அந்த நட்சத்திரம் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து, மேல வீதியில் ஒரு வீட்டின் மேலே நிலைபெற்று நின்றது. நட்சத்திரத்தின் பிரகாசம் அதிகமாகியது. அதே நேரம், அந்த வீட்டினுள் பிறந்த குழந்தை ஒன்றின், 'சிரிக்கும் குரல்' தெரு முழுவதும் கேட்டது.
'என்னய்யா இது... குழந்தையின் அழுகுரல்தானே கேட்க வேண்டும். சிரிக்கும் குரல் என்று எழுதுகிறீர்கள்...' என்று, கேட்க வேண்டாம்.
ஏனென்றால், அந்த குரலுக்கு சொந்தக்காரர், எஸ்.வி.சேகர்.
எப்படி சிரிக்கும் குரல் சாத்தியமில்லையோ, அதே போலத்தான் வானமும், நட்சத்திரமும் கூட உண்மை இல்லை. இவர், இங்கே பிறந்தார் என்று சொல்வதை விட, கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்ட, சொன்ன வார்த்தைகள் தான் மேலே கூறியவை.
ஆனால், வளர்ந்த பிறகு, புகழ் வானில், மின்னும் தனி நட்சத்திரமாக மாறிப்போனவர், எஸ்.வி.சேகர். தமிழகத்தின் புகழ்பெற்ற மேடை நாடகக் கலைஞர் மற்றும் நடிகர்.
நாடகத்துறையில் மிகவும் சிறப்பு பெற்று விளங்கும் இவர், இதுவரை, 24க்கும் மேற்பட்ட நாடகங்களை தயாரித்து, 6,500 முறைக்கும் மேலாக மேடையேற்றியுள்ளார்.
'கொரோனா' காலத்தில் கூட, மக்கள் சிரிப்பை மறந்து விடக்கூடாது என்பதற்காக, 'ஆன்லைனில்' இரண்டு மணி நேரத்தில், 200 ஜோக்குகள் கொண்ட நாடகத்தை நடத்திக் கொண்டு இருப்பவர்.
கடந்த, 1980ல், வறுமையின் நிறம் சிவப்பு என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி, கை தட்டலை அள்ளியவர். தொடர்ந்து, 90-க்கும் மேற்பட்டத் திரைப்படங்களில் நடித்துள்ளார்; நடித்தும் வருகிறார். 50 ஆண்டுகளாக, நாடகம், சினிமா என்று பயணப்படுபவர். பக்தியும், நேர்மையும், உழைப்பும் ஒரு போதும் கைவிடாது என்பதில், உறுதியாக இருப்பவர்.
அ.தி.மு.க.,வின் சார்பில், மயிலாப்பூர் தொகுதி, எம்.எல்.ஏ.,வாக வலம் வந்தவர்.
கோடிக்கணக்கில் பணம் புரளும் இடத்தில், ஒரு பைசா லஞ்சம் வாங்காமல், பல நல்ல காரியங்களை மக்களுக்கு செய்து கொடுத்தவர். இப்போது, பிரதமர் மோடி அழைப்பின்படி, அவர் மீதான அளவற்ற அன்பின் காரணமாக, பா.ஜ.,வில் ஏழு ஆண்டுகளாக இருப்பவர்.
இவையெல்லாம் வெளியில் தெரிந்த விஷயங்கள். ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்வது, ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்வது, கண் தானத்தை ஊக்குவிப்பது, சக கலைஞர்களுக்கு பாசக்கரமும் மற்றும் ஆபத்தில் இருப்பவர்களுக்கு நேசக்கரமும் நீட்டுவது என, தெரியாத சேவைகள் இன்றளவும் தொடர்ந்து வருகின்றன.
53 முறைகளுக்கு மேல் ரத்ததானம் செய்துள்ளார்.
ஒருவரின் உணர்வுகளை துாண்டி, உள்ளிருக்கும் சோகத்தை கிளறிவிட்டால், ஒரு நொடியில் யாரையும் அழவைத்து விடலாம். ஆனால், சிரிக்க வைப்பது, சிலரால் மட்டுமே முடிந்த தனி கலை.
அந்தக் கலையில் மிகவும் தேர்ந்தவரான இவரைப் பற்றிய ஒரு அலசல் தான், இந்த தொடர்; படிக்கும் வாசகர்களுக்கு வித்தாக மாறும் என்பது நிச்சயம்.
இவரைப் பற்றிச் சொல்வதற்கு முன், இவரது அப்பா, எஸ்.வெங்கட்ராமன் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அவரைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.
இவரைப் பற்றி அவர்: இயல், இசை, நாடகக் கலையில், நாடகத்தின் மூலம் நல்ல பல கருத்துக்களை நகைச்சுவையாக சொல்பவர், எஸ்.வி.சேகர். இவரது நாடகங்கள் மக்களின் கவலைகளை, பிரச்னைகளை மறக்கச் செய்கிறது. இவரது சேவைகள், தமிழ் மக்களுக்கு தொடர ஆசீர்வதிக்கிறேன்.
- காஞ்சி ஜெயேந்திரர் சுவாமிகள்
— தொடரும்
- எல். முருகராஜ்