ப
முன்னாள் பிரதமர் நரசிம்மராவிடம் தனி செயலராக இருந்த, பி.வி.ஆர்.கே.பிரசாத் என்பவர், 'நடந்தது நடந்தபடி' என்ற நுாலில், தன் அனுபவங்களை எழுதியுள்ளார். அதில் ;
ஆரம்பத்தில், ஆந்திர பிரதேசத்தில், திருப்பதி தேவஸ்தானத்தின் செயலாட்சி அதிகாரியாக இருந்தேன். பிறகு, அங்கிருந்து மாற்றப்பட்டு, வேறு துறையில் சில மாதங்கள் பணிபுரிந்து, மேற்படிப்புக்காக ஓராண்டு, லண்டன் சென்றேன்.
திரும்பி வந்ததும், 'உங்கள் மீது மூன்று குற்றச்சாட்டுகள் உள்ளன...' என்று, நண்பர்கள் கூறியபோது, அதிர்ந்தேன்.
அப்போது, ஆந்திரபிரதேச முதல்வராக இருந்த, என்.டி.ஆரை சந்தித்து, விளக்கம் கூற விரும்பினேன். எனக்கு, முதல்வர் என்.டி.ஆரிடம் ஏற்கனவே அறிமுகம் உண்டு. திருப்பதி தேவஸ்தானத்தில், செயலாட்சி அதிகாரியாக நான் பணிபுரிந்ததும், அவருக்கு தெரியும். முதல்வரின் அனுமதி பெற்று, அவரை சந்திக்க சென்றேன்.
உள்ளே சென்ற உடன், 'பிரசாத்ஜீ, உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்...' என்றார்.
'நல்லவிதமாகவா... கெட்ட விதமாகவா சார்...' என்றேன்.
'இரண்டு விதமாகவும் தான்...'
'சார், என்னைப் பற்றி நல்ல விதமாக நீங்கள் அறிந்திருப்பதை தெரிந்து கொள்ள, எனக்கு ஆர்வமில்லை. உங்களுக்கு தடையேதும் இல்லையென்றால், கெட்ட விதமாக என்னைப் பற்றி நீங்கள் அறிந்ததை, நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்...' என்றேன்.
'நீங்கள், மூன்று குற்றங்கள் புரிந்திருப்பதாக புகார் வந்துள்ளது...' எனக் கூறி, முதல் இரு குற்றங்களை கூறினார்.
முதல் இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் சரியான விளக்கம் அளித்தேன்.
திருப்தியடைந்தவர், 'இனி, மூன்றாவது குற்றத்துக்கு போவோம். வெங்கடாஜலபதிக்கு, வைர கிரீடம் செய்வதற்காக, வைரங்கள் வாங்கியதில் உள்ள பண மோசடியை பற்றி என்ன கூறப் போகிறீர்கள். சுங்கத்துறை வழங்கிய வைரங்களை வேண்டாமென்று தள்ளி விட்டு, தனியாரிடம் வாங்குவதற்கு பேரம் பேசியதாக தெரிகிறது.
'உங்கள் வீட்டை சோதனையிட்டால், படுக்கை மற்றும் தலையணை கீழ் வைரங்களை பதுக்கி வைத்திருப்பது வெளிப்படும் என்று நினைக்கிறேன்...' என்றார்.
அடக்க முடியாமல், சிரித்து விட்டேன்.
சற்று அதிர்ந்த முதல்வர், 'இதில், சிரிப்பதற்கு என்ன இருக்கிறது...' என்றார்.
'இந்த குற்றச்சாட்டு, சிரிப்புக்கு இடமானது. ஏனெனில், வைரங்கள் வாங்குவதற்கு, ஹாலந்து நாட்டிற்கு போவதற்கு முன்பே, நான் திருப்பதி தேவஸ்தான பதவியிலிருந்து மாற்றப்பட்டு விட்டேன். எனக்கு அடுத்து வந்த, ஜி.குமாரசாமியே வைரங்கள் வாங்குவதில் கலந்துகொள்ளும் உரிமையை பெற்றிருந்தார்.
'திருப்பதி வெங்கடேஸ்வரருக்கு, வைர கிரீடம் செய்ய வேண்டும் என்ற திட்டத்திற்கு மூலகர்த்தா, நான் தான். அதற்காக, சிறந்த கலைஞர்களையும், ஆபரண நிபுணர்கள் குழுவையும் அமைத்தோம். எஞ்சியிருக்கும் வேலை, வைரங்கள் வாங்குவது தான்.
'இந்த சமயத்தில், பிரதமராக இருந்த இந்திரா, திருமலைக்கு வர நேர்ந்தது. அவரிடம், மாதிரி வைர கிரீடத்தை காட்டி, 'சுங்கத்துறையில் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் வைரங்களை, வைர கிரீடம் செய்வதற்கு கிடைக்கும்படி செய்யுங்கள்...' என்று, நான் வேண்டிக் கொண்டேன்.
'வைரங்களுக்கான விலையை, திருப்பதி தேவஸ்தானம் தர தயாராக இருந்தது என்றதும், உடனே, எங்கள் வேண்டுகோள் ஒப்புக்கொள்ளப்பட்டு, உத்தரவும் வழங்கப்பட்டது.
'உத்தரவு வழங்கப்பட்ட ஒரு வாரத்திற்குள், பிரதமரின் தலைமை செயலர், கிருஷ்ணசாமி ராவ் சாகேப், தொலைபேசியில் அழைத்து, சுங்கத்துறையால் பறிமுதல் செய்த கடத்தல் வைரங்களை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பாக அறிவுரை வழங்கினார். அதற்கு அவர் கூறிய காரணமும், ஏற்றுக்கொள்ளும்படி இருந்தது.
'அதாவது, 'சுங்க சோதனையில் சிக்காமல் இருப்பதற்காக, வைரங்களை, உடம்பின் மறைவான பாகங்களில் ஒளித்து வைத்து எடுத்து வருவர், கடத்தல்காரர்கள். அத்தகைய துாய்மையற்ற வைரங்களை இறைவனின் கிரீடத்தை அலங்கரிக்க வேண்டுமா...' என்று கிருஷ்ணசாமி கேட்டார்.
'இந்த விஷயம், பிரதமர் இந்திராவின் கவனத்துக்கு சென்று, அவரும், இந்த ஏற்பாட்டை எதிர்ப்பதாக தெரிவித்தார்.
'கடத்தல் வைரங்களை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பாக கிருஷ்ணசாமி கூறியபோது, நான் சோர்ந்து போனேன். மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல், இதற்கு ஒரு தீர்வை சொல்லுமாறு அவரை, நான் வேண்டினேன். ஏனெனில், வைரங்களை தேர்ந்தெடுக்கும் திறமையோ, அனுபவமோ, அவைகளை வாங்கும் வியாபார நுணுக்கமோ, திருப்பதி தேவஸ்தானத்திடம் இல்லை என்பதால், அவர், என்னை டில்லிக்கு வருமாறு கூறினார்.
'இந்திராவின் தலைமை செயலர், மத்திய அரசின் நிறுவனமான இந்துஸ்தான் டைமண்ட் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குனருடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். சந்திப்பின்போது, இந்துஸ்தான் டைமண்ட் கார்ப்பரேஷனிடம், வைரங்களை வாங்குவதாக ஒப்புக்கொண்டு, வெளிப்படையாக தேர்வு செய்தல், தர சோதனை, விலை நிர்ணயம், பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் காப்பீடு ஆகிய விஷயங்களை முடிவு செய்தோம்.
'சார்... இந்த ஏற்பாட்டால், ஒரு வைரத்தை கூட மோசடி செய்ய முடியாது; விலையையும் மாற்ற முடியாது. இந்த சூழ்நிலையில், நான் வேறு துறைக்கு மாற்றப்பட்டேன். அதனால், எனக்கு வைரங்களை பார்க்கும் சந்தர்ப்பமே கிடைக்கவில்லை.
'ஒருவேளை, நான் இருந்திருந்தாலும், இறைவனுக்கானதை, கொள்ளையடித்த வைரங்களை படுக்கை மற்றும் தலையணை கீழ் பதுக்கி வைக்கும் அளவுக்கு தாழ்ந்து போயிருக்க மாட்டேன். என்னை, நீங்கள் குற்றவாளி என்று நம்பினால், எந்த தண்டனையையும் ஏற்க தயார். அதை, இறைவன் செயல் என, நினைத்துக் கொள்கிறேன்...' என்றேன்.
திகைத்த என்.டி.ஆர்., எழுந்து வந்து, என் முதுகில் தட்டிக்கொடுத்து, சமாதானப்படுத்தினார்.
பின் அவரே, 'நாங்கள் சொன்னதெல்லாம் எங்கள் கருத்து என்று, உன்னிடம் சொல்லவே இல்லையே. இவை யாவும், சிலரால் எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டுகள். அதனால், உன்னிடம் விளக்கம் கேட்டேன். இப்போது, அந்த குற்றச்சாட்டுகள் அர்த்தமற்றதாகி விட்டது...' என முடித்தார்.
பிறகு என்ன... பொதுவாக, அரசு பணியில் இருப்பவர்கள் வெளிநாடு சென்று படித்து வந்தால், மீண்டும் உத்தியோகத்தில் சேரும் உத்தரவை, அரசு தான் தரவேண்டும். அடுத்த ஒரு மணி நேரத்தில், என்.டி.ஆர்., ஆணைப்படி, ஆந்திர மாநில கூட்டுறவு வங்கியின் நிர்வாக இயக்குனராக, நியமிக்கப்பட்டேன்.
இரண்டு மாதம் கழித்து, ஒரு வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார், என்.டி.ஆர்., அதில், 'செய்தி, விளம்பரம், திரைப்பட கலை மற்றும் பண்பாட்டு அலுவல் மற்றும் அரசு செயலர் என்ற பதவியில் அமர்த்தப்பட்டுள்ளீர்கள்...' என்று தெரிவித்திருந்தார்.
நேர்மையான அரசு உயர் அதிகாரிகளின் நிலையை எண்ணியவாறு, புத்தகத்தை மூடி வைத்தேன்.