* ஏ. கோபாலன், நெல்லை: சிலர் சுயேச்சையாக போட்டியிடுகின்றனரே, அவர்கள் பற்றி உங்கள் கருத்தென்ன...
கோமாளிகள் என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான்!
என். பாலசுந்தரம், துாத்துக்குடி: நான் ஓட்டு போடவில்லை; என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வெளியே சொல்லாதீர்கள்; வெட்கக் கேடு!
ஆர். சாந்தி, வலையபட்டி:தீபா என்ன ஆனார்... எங்கே இருக்கிறார்?
ஜெ., சொத்தின் மீது இருந்த ஆசையெல்லாம் நிறைவேறாது என்பது தெரிந்ததும், அரசியலை விட்டு விலகி, மவுனமாக கை கட்டிக்கொண்டு, சென்னையில் தன் வீட்டில் இருக்கிறார்!
எம். காளியப்பன், நாகர்கோவில்: கைகளில் ரேகைகள் இல்லாமல் இருந்தால்...
மரத்தடிகள் பலவும் காலியாக இருந்திருக்கும்!
த. சிவாஜி மூக்கையா, சென்னை: நான் ஓட்டுப் போட்டேன்; எனக்கும், ஓட்டுக் கேட்டு வரும் வேட்பாளர்களுக்கும் என்ன வித்தியாசம்?
ஓட்டுக் கேட்டு வருபவர்கள், ஐந்து நாள் தான் கும்பிடு போடுவர். நீங்கள் ஓட்டுப் போட்டு விட்டு, ஐந்து ஆண்டுகள் அவர்களுக்கு கும்பிடு போட வேண்டும்; இது தான் வித்தியாசம்!
* அ. கணேசன், திருநெல்வேலி: மனிதனோடு பிறக்கிறதா, நாத்திகக் கொள்கைகள்?
மனிதன் பிறக்கும்போதும் சரி... இறக்கும்போதும் சரி... அவன் ஆத்திகன் தான். இடையில் சிலர் தான் நாத்திகனாக நடிக்கின்றனர்.
என். கனகவேல், தென்காசி: பல பிரச்னைகள் என்னை தாக்குகிறது. நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
உள்ளம் கலங்கக் கூடாது; மன அமைதியை இழந்து விடக்கூடாது. அப்போது தான் சாதிக்க முடியும்!
* பா. ஜெயப்பிரகாஷ், தேனி: 'தமிழகத்தை மூன்று மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும்...' என்ற, பா.ம.க., நிறுவனர் ராமதாசின் கோரிக்கை பற்றி...
எப்படியாவது தன் மகன் அன்புமணியை முதல்வராக பார்த்து விட வேண்டும் என்ற நப்பாசை தான்!