உயிரோடு உறவாடி... (9)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2021
00:00

முன்கதை சுருக்கம்: மகன் சுகுமாருடன், தமிழ்ச்செல்வியின் வீட்டிற்கு வந்தார், கந்தசாமி. அப்போது, நடிகர் சுஜீத்தை பேட்டி எடுக்க உள்ளதாகவும், ஓராண்டு கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்றும், சுஜித்தை அறிமுகப்படுத்தி வைப்பதாகவும் தமிழ்ச்செல்வி கூற, சுகுமாரும் சம்மதித்தான். இதையடுத்து, விரைவில் சென்னை வருவதாக ரிஷியிடம் கூறினாள் -

தமிழ்ச்செல்வியின் பதிலால் அதிர்ந்து போன ரிஷி, ''என்ன தமிழ்... 'எண்டு'ன்னு சொல்லி குண்டெல்லாம் போடறே?'' என்று, படபடப்பாக கேட்டான்.

''இப்போதைக்கு அதுதான் என் நிலை... இந்த நாட்டுல, இன்னும் பெண்களுக்கு பூரண சுதந்திரம் கிடைக்கல, ரிஷி.''
''ஏய்... என்ன ஏதேதோ சொல்றே... அப்படி என்ன நடந்துடிச்சு?''
''நேர்ல சொல்றேன். இப்ப இவ்வளவு போதும்,'' என்று போனை, 'கட்' செய்து திரும்பினாள்.
கந்தசாமியோடும், சந்தானத்தோடும் பேசியபடி இருந்தான், சுகுமார்.
''மாமா... நான், கல்யாணத்துக்கு ஆறு மாசம் தான் கேட்டேன். ஆனா, தமிழ், ஒரு வருஷம் கேட்குது. நானும் சரின்னுட்டேன்,'' என்றவனை, இருவரும் வெறுப்புடன் பார்த்தனர்.
''என்ன மாமா... என்னப்பா அப்படி பார்க்கறீங்க?''
''என்ன மாப்ள... ஆறு மாசத்துக்கு எனக்கு அவ்வளவு பிரியமில்ல. ஏதோ கல்யாண மண்டபத்தை விலைக்கு வாங்கி, அதுல உங்க கல்யாணம் நடக்கணும்ன்னு ஆசைப்படறதால சரின்னேன்... இப்ப என்னடான்னா, ஒரு வருஷம்ங்கறீங்க?''
''ஒரு வருஷம்ன்னு நான் சொல்லல... தமிழ் தான் கேட்டுச்சு, பார்க்கற வேலையில கொஞ்சம் ஏதோ சாதிக்கணும்ன்னு நினைக்குது... அதை ஏன் நாம கெடுக்கணும்?''
''இல்ல மாப்ள... இந்த கல்யாணமே, என் பொண்டாட்டிய தட்டி எழுப்பத்தான். இதை ஒரு வருஷத்துக்கெல்லாம் இழுக்கறது சரியா படல மாப்ள... ஆறு மாசம் தான். அதே சமயம், இந்த வாரமே நிச்சயதார்த்தத்தை முடிச்சிடறேன். அதுதான் ஆஸ்பத்திரியில கிடக்கிற அவளையும் கொஞ்சம் எழுப்பி உட்கார வைக்கும்,'' சந்தானம் சொல்லச் சொல்ல, தமிழ்ச்செல்விக்கு அவரை ஓங்கி அறையலாமா என்றிருந்தது. அடக்கிக் கொண்டாள்.
''அப்படின்னா சரி மாமா... உங்க இஷ்டம்,'' என்ற சுகுமார், திரும்பி தமிழ்ச்செல்வியை பார்த்து, ''சாரி, தமிழ்... என் மேல வருத்தப்பட்டுக்காத... எனக்கு, ஆறு மாசம்னாலும் சரி, ஒரு வருஷம்னாலும் சம்மதம்,'' என்று, 'ஸ்டைலாக' தோளை குலுக்கிக் கொண்டான்.
அதற்கு மேல் மவுனமாக இருந்து வேடிக்கை பார்த்தால், முதலுக்கே மோசம் வந்துவிடும் என, உணர்ந்த தமிழ், ''அப்பா... குறைஞ்சபட்சம், இந்த ஆறு மாசம் என்னை வேலை பார்க்கவாவது விடுங்க. நான் வேலை பார்த்தது போதும்ன்னு மட்டும் சொல்லாதீங்க,'' என்றாள், மிக வேகமாய்.
பதிலுக்கு அவளை உற்றுப் பார்த்தார், சந்தானம்.
''இந்த ஆறு மாசத்துல அப்படி என்னத்த கண்ணு நீ சாதிக்கப் போற... உங்கம்மா பக்கத்துல இருந்து, அவங்க உடம்பை பார்த்துக்கலாம்ல?'' என்று, இடையிட்டார், கந்தசாமி.
''மாமா... ப்ளீஸ்... உங்க எல்லார் விருப்பத்துக்கும் தான் சரின்னுட்டேனே... இந்த சின்ன ஆசைக்காவது என்னை அனுமதிக்கக் கூடாதா?'' என்று, உடைந்து விசும்பும் குரலில் கேட்டாள்.
எல்லாரிடமும் சற்று அமைதி. அதை முதலில் உடைத்த சுகுமார், ''நீ போ தமிழ்... கட்டிக்கப்போற நான் சொல்றேன். விடுங்க மாமா, போகட்டும். என்ன இப்ப, இப்படிங்கறதுக்குள்ள, ஓடிடப் போகுது,'' என்றான்.
அதற்கு சந்தானத்திடமும் எந்த எதிர்ப்புமில்லை.
கண்ணாடி முன் நின்று முகத்தை பார்த்து, 'ஷேவ்' செய்து கொள்வதா, இல்லை அப்படியே விட்டு விடுவதா என்று யோசிக்கலானான், ரிஷி.
அப்போது, ஒரு வகை மசால் வாசம், அவன் அனுமதியின்றி மூக்கில் நுழைந்திட, பின்னாலேயே ஒரு மூடிய தட்டில், பூரி - மசாலோடு வந்து நின்றாள், மாமி.
''மாமி... நீங்க வரதுக்கு முந்தியே வாசனை வந்துடுச்சு.''
''வந்தாகணுமே... என் கைராசி அப்படி. இந்தா, இதுல பூரி - கிழங்கு. ஒரு பிடி பிடி.''
''எதுக்கு மாமி, உங்களுக்கு இந்த சிரமமெல்லாம்?''
''முதல்ல இப்படி, பேசறத விடு. உன்னை, நாங்க எங்க பிள்ளையா பார்க்கும்போது, இதெல்லாம் ஒரு சிரமமா?''
''தேங்க்ஸ் மாமி... பையன் பையன்னு சொல்லி பாசத்தை பொழியற உங்களுக்கு, நான் என்ன கைமாறு செய்யப் போறேனோ?''
''பதிலுக்கு பாசம் காட்டு. முடிஞ்சா, மாமின்னு கூப்பிடறத உட்டுட்டு, அம்மான்னு கூப்பிடப் பாரு,'' என, சொல்லவும், அவனுக்கு, சிலீர் என்றது.
சில விநாடிகள் எதுவும் பேசாமல் வெறித்தான்.
''என்ன பார்க்கறே... சூடு ஆறிப் போறதுக்கு முந்தி சாப்பிடு,'' என்று, தட்டை டேபிள் மேல் வைத்து, சில அடி துாரம் சென்றவள், ''ரிஷி... நீ, 'லிவிங் டுகெதர் கப்புள்ஸ்' பத்தி அன்னிக்கு பேசினதானே?'' என்று கேட்டாள்.
தலை அசைத்தான்.
''இந்த தெருவிலேயே ஒரு ஜோடி, அந்த மாதிரி இருக்கா... தெரியுமா உனக்கு?''
''அப்படியா?''
''ஆமாம்... என், 'ப்ரெண்ட்' விசாலி இருக்கற, 'அப்பார்ட்மென்ட்'ல, நாலாவது மாடியில ஒரு வீடு. அங்க தான் அந்த ஜோடி இருக்கு. ரொம்ப நாளா யாருக்குமே இது வெளில தெரியல. அவாளை புருஷன் பொண்டாட்டின்னு தான் நினைச்சுண்டிருக்கா... இப்ப தான் அவாளுக்கு விஷயம் தெரிய வந்ததாம்.''
''பன்டாஸ்டிக் மாமி... அவங்க என்ன பண்றாங்க... அனேகமா, ஐ.டி.,யா தான் இருக்கணும்.''
''அதே தான்... ஒரே இடத்துல ஒண்ணாதான் வேலை பார்க்கறாளாம்... கை நிறைய சம்பளம் வரதாயிருக்கும். அந்த, 'ப்ளாட்'டுக்கு, 20 ஆயிரம் வாடகை தரான்னா பார்த்துக்கோயேன்.''
''இருபதாயிரம் அதிகமா, மாமி?''
''பத்தாயிரத்துக்கே ஆள் வராம அல்லாடிண்டிருந்தது, அந்த ப்ளாட். நாலாவது மாடி வேற... இதுகள், வாடகை அதிகம் தரவும், எக்கேடோ கெட்டுப் போங்கன்னு விட்டுட்டான், வீட்டுக்காரன். பணம்தானே இப்ப எல்லாம்?''
''இதுகள்னு ஏன் மாமி ஒரு மாதிரி சொல்றீங்க... ஒரு ஆணும், பெண்ணும், ஒரு ஒத்திகை வாழ்க்கை வாழறது தப்பா... அன்னிக்கும் இப்படி தான், 'நெகடிவா'வே பேசினீங்க.''
''தண்ணில நீச்சல் கத்துக்கணும்னா, இடுப்புல ஒரு கயித்தை கட்டிண்டு இறங்கி பழகிப் பார்க்கலாம்... இதையே நெருப்புல யாராவது செய்வாளா?''
''மேல் நாடுகள்ல, இது சர்வ சாதாரணம் மாமி.''
''நாடு, நில அமைப்புல வேணும்னா, மேல் நாடா இருக்கலாம். மத்ததுல அதெல்லாம் கீழ் தான். 50 வயசானாலே, அங்க ஒரு தனிமை வந்துடறதாமே... அப்புறம் உறவுகள்ன்னு, பெருசா அங்க என்ன இருக்கு?
''இங்கே, அம்மா - அப்பா, அக்கா - தம்பி, அண்ணன், மாமா - மாமி, சித்தி - சித்தப்பா, அத்தை - அத்திம்பேர், அத்தான், அம்மாஞ்சி, தாத்தா - பாட்டி, சகலபாடி, மச்சினன் - மச்சினின்னு எத்தனை வகை... அப்படி அங்க எத்தனை இருக்கு, சொல்லேன் பார்ப்போம்,'' பட்டிமன்றத்தில் ஆணித்தரமாக, எதிர் அணியை பார்த்து கேள்வி கேட்பவள் போல கேட்டாள், மாமி.
'திருதிரு'வென்று விழித்தான், ரிஷி. சட்டென்று ஒரு பதில் சொல்லத் தோன்றவில்லை.
''சரி சரி, நீ சாப்பிடு... அன்னிக்கு கேட்டியேன்னு சொன்னேன். விட்டா நான் பேசிண்டே இருப்பேன். என்கிட்ட இப்படி ஒரு வீக்னஸ்,'' என்று, தனக்கு தானே விமர்சனம் செய்து, விலகினாள், மாமி.
மெல்ல தட்டை திறந்து பார்த்தான், ரிஷி.
மசாலாவில் முட்டிக் கொண்டிருந்த உருளைக்கிழங்கு, அவன் நாவில் ஒரு நிரூற்றை உருவாக்கவும், கைகளை கூட கழுவாமல் ஒரு பிடி பிடித்தான். அப்போதைய பசிக்கும், மனநிலைக்கும் அந்த பூரி - மசால், அவன் உயிர் மூலம் வரை சென்று, ஒரு சுகத்தை அளித்தது.
அதேவேளை மனதுக்குள், அந்த ஜோடியை விட்டு விடக்கூடாது என்றும் தீர்மானித்துக் கொண்டான். அப்படியே சுஜித்குமாரை பேட்டி காண்பது தொடர்பான கேள்விகளில் ஒன்றாய், 'லிவ்விங் டுகெதரை' பற்றியும் கேட்டால் என்ன என்றும், நினைத்துக் கொண்டான்.

சேனல் ஆபீஸ்!
பைக்கை விட்டு, முதுகு பையுடன் கேபினுக்குள் நுழையவும், ரிஷியின் மொபைல் போனில், ஜனாவிடமிருந்து அழைப்பு. முதுகு பையை ஓரம் கட்டி, மொபைலை சார்ஜரில் போட்ட ரிஷிக்கு, சலிப்பாக இருந்தது.
சுஜித்குமாரின் நிகழ்ச்சி தொடர்பாக தான் கேள்விகள் இருக்கும் என்ற எண்ணத்தோடு, எதிரில் போய் நின்றான்.
ஜனா டேபிள் மேல், ஒரு பெரிய மலர் கொத்து; கூடவே பெரிய, 'கிப்ட் பாக்ஸ்!'
வழக்கம்போல உட்கார சொல்லாமல், ''லெட் வீ மூவ்?'' என்றார், ஜனா.
''எங்க சார்?''
சற்று முறைத்தவர், ''சுஜித் சாரை பார்க்க தான்,'' என்றார்.
''என்ன சார் திடீர்ன்னு?''
''திடீர்னா... நேத்தே, நான் உனக்கு மெயில் போட்டிருந்தேனே பார்க்கலியா, நீ? 'நெட் பிளிக்ஸ், அமேசான்'னு சீரிஸ்ல மூழ்கிட்டியா?'' என்றார்.
கிண்டலாக அவர் கேட்கவும் தான், மெயில் பாக்ஸ் ஞாபகமே வந்தது. மவுனமாக மலங்க மலங்க பார்த்தான்.
''இரண்டு நாள்ல, சேனலுக்கு வந்து பேட்டி கொடுக்கப் போறவரை, நேர்ல போய் பார்த்து, 'இன்வைட்' பண்ண வேண்டாமா?''
''நிச்சயமா சார்... அதுக்கு முந்தி, அவர்கிட்ட, 'அப்பாயின்ட்மென்ட்' வாங்கணுமே சார்.''
''எம்.டி., போன்லயே அதையெல்லாம் முடிச்சு, என்னையும் இந்த, 'கிப்ட் பாக்ஸ்' எடுத்து போய் பார்க்க சொல்லிட்டார்.''
''ஓ... எம்.டி.,யே பேசிட்டாரா?''
''செட் ஒர்க்கும் போய்கிட்டு இருக்கு. ஆர்ட் டைரக்டருக்கும் அவரே, 'இன்ஸ்ட்ரக் ஷன்' கொடுத்திருக்கார். ஆமா, தமிழ்ச்செல்வி வருவாளா, இல்லை ராஜினாமாவா?'' ஜனாவின் கேள்வி, ரிஷியின் சட்டையை அவர் எக்கிப்பிடித்து கேட்டது போல் உணர்த்தியது.
''ராஜினாமா... என்ன சார் சொல்றீங்க?''
''அவ வர்றது சந்தேகம் ரிஷி. நான், அவங்க அம்மா உடம்பு எப்படி இருக்குன்னு கேட்க, போன் பண்ணினேன். அப்ப, அவ போனை, அவங்க அப்பா தான் எடுத்து பேசினாரு. அவளுக்கு கல்யாண ஏற்பாடெல்லாம் நடக்குதாமே?
''அதனால, 'என் மகள், இனி வேலைக்கு வரமாட்டா சார். அப்படியே வந்தாலும், ஆறு மாசம் தான் இருப்பா... ஏன்னா, இப்ப நிச்சயதார்த்தம், ஆறாம் மாசம் கல்யாணம்'ன்னு சொன்னார். ஆமா, நீ அவளுக்கு ரொம்ப நெருங்கியவன் ஆச்சே... ஒருவேளை, உன்னை, 'கட்' பண்ணத்தான் இந்த ஏற்பாடுகளோ?''
ஜனா ஒரு பலவண்ண பச்சோந்தி போல, தகவலுக்கு தகவல், அப்படியே அதில் பல ஊசிகள் என்று, குத்தலாக கேட்கவும், ரிஷிக்கு, உடல் நடுங்க ஆரம்பித்தது.
தொடரும்
இந்திரா சவுந்தர்ராஜன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X