'லிப்லாக்' காட்சி : கமல் கொடுத்த, அதிர்ச்சி!
கமல் படம் என்றாலே, கண்டிப்பாக ஏதாவது ஒரு காட்சியில், கதாநாயகியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், உதட்டு முத்தம் பதித்து விடுவார். ஒரு காலத்தில், இதற்காகவே, கமல் படங்களை பார்க்க சென்ற இளைஞர் கூட்டமும் உண்டு. அப்படிப்பட்டவர், இப்போது, அரசியல் தலைவராகி விட்டதால், 'விக்ரம் படத்தில், உதட்டு முத்தக் காட்சியில் நடிக்க வேண்டும்...' என்று, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சொன்னபோது, 'ஷாக்' ஆகி விட்டார். 'இப்போது நான், நடிகர் கமல் மட்டுமல்ல, மக்கள் தலைவர் கமல். அதனால், அதை மனதில் கொண்டு, காட்சி வையுங்கள்...' என்று, கூறி விட்டார். இதனால், விவகாரமான காட்சிகளுக்கு கத்தரி போட்டு விட்டார், லோகேஷ் கனகராஜ். கமலின் இந்த திடீர் கொள்கை மாற்றம், அவரது நீண்ட கால ரசிகர்களுக்கு, அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
— சினிமா பொன்னையா
இயக்குனர் ஷங்கரை, 'இம்ப்ரஸ்' பண்ணிய, நடிகை!
இயக்குனர் ஷங்கரைப் பொறுத்தவரை, தன் கதைக்கு பொருத்தமாக இருக்கும் நடிகை என்பது மட்டுமின்றி, அவர்கள் நடிப்பு மூலம், ஏதாவது ஒரு வகையில், தன்னை, 'இம்ப்ரஸ்' பண்ண வேண்டும் என்றும் நினைப்பார். அந்த வகையில், வட மாநில நடிகையரில், கியாரா அத்வானி, தன் சின்னச்சின்ன அசைவுகள் மூலம், ஷங்கரை பெரிதாக கவர்ந்த, 'ரொமான்டிக்' நடிகை. அதன் காரணமாக, சிரஞ்சீவியின் மகன் ராம்சரண், ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து, அடுத்தடுத்து தான் இயக்கும் இரண்டு படங்களுக்கும், நாயகியாக, கியாரா அத்வானியை, 'டிக்' அடித்து விட்டார், ஷங்கர். இதனால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த இன்ப அதிர்ச்சியில் இருக்கிறார், நடிகை. பழம் நழுவி பாலில் விழுந்தது; அதுவும் நழுவி வாயில் விழுந்தது!
— எலீசா
உருமாறிய, இந்துஜா!
நல்ல வாட்டசாட்டமாக இருப்பதோடு, நீளமான கூந்தலை வைத்து, ரசிகர்களை அசரடித்து வந்தார், மேயாத மான் இந்துஜா. தற்போது, 'ஸ்டைலை' மாற்றுகிறேன் என சொல்லி, கூந்தலை, 'கட்' பண்ணி, ஆளே அடையாளம் தெரியாமல் மாறி விட்டார். அதைப்பார்த்து, அவரது நீண்ட கூந்தலில் முடிந்து கிடந்த இளவட்ட ரசிகர்கள், கொந்தளித்து, 'உங்களுக்கு, அழகே கூந்தல் தான். அதை கத்தரித்து, உங்கள் அழகை சிதைத்து விட்டீர்களே...' என சொல்லி, அவருக்கு, அதிர்ச்சி கொடுத்தனர். அதையடுத்து, ரசிகர்கள் விரும்பும் தன் அழகின் ரகசியம் இதுதானா என்பதை புரிந்து கொண்டவர், கூந்தலை வேக வேகமாக உரம் போட்டு வளர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். பலன் தேடப் போய் பழி வந்து நேர்ந்தது போல்!
— எலீசா
இயக்குனர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும், சந்தானம்!
காமெடியனாக இருந்து, 'ஹீரோ'வாக, 'பிரமோஷன்' பெற்றுள்ள, சந்தானத்தை, காமெடி காட்சிகளிலும் நடிக்குமாறு இயக்குனர்கள் சொன்னால், மறுத்து விடுகிறார். 'காமெடியனாக இருந்து, 'ஹீரோ'வாகி விட்ட நான், மீண்டும் வந்த திசையை திரும்பிப் பார்க்கக் கூடாது. அப்படி நடித்தால், என்னை மறுபடியும் காமெடியனாகவே பார்க்கத் துவங்கி விடுவர். 'ஹீரோ இமேஜை' உருவாக்க, நான் பட்ட கஷ்டமெல்லாம் போய்விடும். அதோடு, விஜய், அஜீத் படங்களில் வருவது போன்று, எனக்கும், 'எமோஷனல், ஆக் ஷன்' காட்சிகளாக வையுங்கள். நானும், அந்த மாதிரி நடிக்க, 'ஒர்த்'தான, 'ஹீரோ'தான்...' என்று, தனக்கான வசனங்களையும் முன்வரிசை, 'ஹீரோ'கள் பாணிக்கு மாற்ற சொல்கிறார், சந்தானம்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
* பிரியமான அந்த நடிகை, 'என் கவர்ச்சி, 'கவுன்ட் டவுண்' ஆரம்பமாகி விட்டது...' என்று சொன்னபோதும், அந்த பேச்சில், இயக்குனர்களுக்கு பெரிதாக நம்பிக்கை ஏற்படவில்லை. பொறுத்துப் பார்த்த அம்மணி, தற்போது, அருவியில் ஆனந்தமாய் குளியல் போடும் புகைப்படங்களை அனுப்பி, 'இது போதுமா... இன்னும் வேண்டுமா...' என்று, 'மெசேஜ்' அனுப்ப, 'இதைத்தான் நாங்க எதிர்பார்த்தோம். இப்ப தான் நீ, முழு நடிகையாகி இருக்கே...' என்று, ஒப்பந்த, 'அக்ரிமென்ட்' போட்டு வருகின்றனர். இதையடுத்து, அம்மணியுடன் குளியல் காட்சியில் நடிக்க ஆசைப்படும் சில இளவட்ட, 'ஹீரோ'களும், 'பிரியமான நடிகையின் பிரியம் கிடைக்குமா...' என்ற, 'பீலிங்சில்' சுற்றிக் கொண்டிருக்கின்றனர். இதனால், 'ஒரு புகைப்படத்தில், ஒட்டுமொத்த கோலிவுட்டையே வளைத்துப்போட்டு விட்டோமே... இந்த வித்தை இத்தனை நாளும் தெரியாம போச்சே...' என்று, வெற்றிக்களிப்பில் மிதந்து கொண்டிருக்கிறார், நடிகை.
* 'பக்கத்து வீட்டு, பெண்ணான ப்ரியா பவானிக்கு, மிகப்பெரிய நிறுவனத்தில் வேலை கிடைச்சுருக்குன்னு, கேள்விப்பட்டோம் இல்லையா... வேலைக்கு சேர்ந்த புதிதில், அந்நிறுவனமே எனக்கு சொந்தம் என்ற ரீதியில் நடந்துக்கிட்டா... அவ கொடுத்த அலம்பலை பார்த்த நிறுவனம், கொஞ்சம் கொஞ்சமாய் ஓரம் கட்ட துவங்கியது.
* 'விடுவாளா... நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களை கவர, என்னென்னமோ மாய்மாலம் செய்து, பதவி உயர்வுக்கு அடி போட்டு விட்டாள். இப்ப, அங்கு பணிபுரியும் இளவட்டங்களும், அந்த பொண்ணுக்கு பக்கபலமா இருக்க முண்டியடிச்சுக்கிட்டு வழியறாங்க! என்னத்த சொல்ல, கலி காலம் முத்திடுச்சு...' என்று, இரு தோழியர் பேசிக் கொண்டனர்.
சினி துளிகள்!
* 'கைவசமுள்ள படங்களை முடித்ததும், முன் வரிசை நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே, 'கால்ஷீட்' கொடுப்பேன்...' என்று, கூறி வருகிறார், பிரியா பவானி சங்கர்.
அவ்ளோதான்!