'தெய்வம் மனுஷ்ய ரூபேண...' -அதாவது, தெய்வம், மனித வடிவில் வரும் என்பது, முன்னோர் வாக்கு. ஆம்... தெய்வம் மனித வடிவில் தான் வரும்; அல்லல் தீர்த்து அருள் புரியும். இதில் சந்தேகமேயில்லை. மனித உருக்கொண்ட நமக்கு அருள் புரிய, தெய்வமும் மனித வடிவம் தாங்கியே வருகிறது. இதை, இதிகாசங்களும், புராணங்களும் விரிவாகவே கூறுகின்றன. அவற்றில் ஒன்று:
சுந்தரமூர்த்தி சுவாமிகள் எனும் சுந்தரர், திருத்தலங்களைத் தரிசித்தபடியே வந்தார். சீர்காழியைத் தரிசித்து, அங்கிருந்து திருக்குருகாவூர் எனும் திருத்தலத்திற்கு புறப்பட்டார்.
நடந்து வருகையில், வெயிலால் தாகமும், பசியும் சுந்தரரை வருத்தின. அவருடன் வந்த அடியார்களுக்கும் அதே நிலை தான்.
அதை அறிந்த சிவபெருமான், அடியார் வடிவில் எழுந்தருளினார். சுந்தரர் வரும் வழியில், இலர்கள் வருகைக்காக தண்ணீர் பந்தலை அமைத்து, காத்துக் கொண்டிருந்தார்.
அடியார்களுடன் வந்த சுந்தரர், தண்ணீர் பந்தலைப் பார்த்தார். அனைவரும் உள்ளே புகுந்தனர்.
அவர்கள் அனைவரையும் அன்போடு வரவேற்ற, ஈசன், 'நீங்கள் எல்லாரும் பசியால் மிகவும் வாடிப்போய் இருக்கிறீர்கள். உணவு தயாராக வைத்திருக்கிறேன். காலம் தாழ்த்தாமல், அனைவரும் சீக்கிரமாக உண்ணுங்கள். தாகம் தீர, நீர் அருந்தி, இளைப்பை போக்கிக் கொள்ளுங்கள்...' என்றார்.
அவர் அருகில், 'சிவாய நம' என்றபடியே அமர்ந்த, சுந்தரர், ஈசன் அளித்த உணவைப் பெற்று, அடியாருடன் உண்டு மகிழ்ந்தார். அனைவரும் உணவு உண்டு, நீரருந்தினர்.
இறைவனின் அருள் திறத்தை எண்ணித் துதித்த, சுந்தரரும், அவருடன் வந்த அடியார்களும், உண்ட களைப்பு தீர, அங்கேயே படுத்து உறங்கினர்.
அதே வேளையில், தாம் அமைத்த தண்ணீர் பந்தலுடன் அங்கிருந்து மறைந்தார், ஈசன்.
உறக்கத்திலிருந்து விழித்தார், சுந்தரர். அடியார்களும் உறக்கம் நீங்கினர். தண்ணீர் பந்தலையும் காணவில்லை; உபசரித்து, உணவூட்டி பசி தீர்த்த, அடியாரையும் காணவில்லை.
களைத்துப் பசித்து, தாகத்தால் இளைத்து வந்தவர்களுக்கு, தண்ணீர் பந்தல் வைத்து, உணவூட்டி, தாகம் தீர்த்தவர், இறைவனே என்பதை உணர்ந்த சுந்தரர், 'இத்தனை யாம் ஆற்றை அறிந்திலேன்' என்ற பதிகம் பாடியவாறே, அங்கிருந்து புறப்பட்டார்.
ஒன்பதாம் நுாற்றாண்டு வரலாறு இது. தெய்வம், மனித வடிவில் வரும்; உதவி செய்யும்; துயரங்களை நீக்கும் என்பதை விளக்கும் நிகழ்வு இது.
இன்றைய கால கட்டத்தில் பலரும், பல விதங்களிலும் நமக்கு உதவி செய்கின்றனர். அவர்களைத் தெய்வமாக மதிக்கிறோமோ இல்லையோ; மனிதர்களாகவாவது மதிப்போம்; உயர்வோம்!
பி. என். பரசுராமன்