அன்புள்ள சகோதரி —
இல்லத்தரசி, வயது: 58. கணவர், தபால் துறையில், 'போஸ்ட்மேனாக' இருந்து ஓய்வு பெற்று, தற்போது, தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.
எங்களுக்கு மூன்று மகள்கள். மூத்தவள், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறாள். அவளுக்கு, இரண்டு மகன்கள். மூத்த மகளின் கணவர், காவல்துறையில் பணிபுரிகிறார்.
இரண்டாவது மகள், எம்.எஸ்சி., அக்ரிகல்சர் படித்து, ஆபிசராக பணிபுரிகிறாள். அவளது கணவன், அரசுக் கல்லுாரி விரிவுரையாளர். இரண்டு மகள்கள் உள்ளனர்.
மூன்றாவது மகள், ஆர்.டி.ஓ.,வாக பணிபுரிகிறாள். அவளது கணவன், கேஸ் ஏஜன்சி நடத்துகிறார். திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை இல்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, கணவன் - மனைவி இருவரும், பிரபல கருத்தரிப்பு மையத்துக்கு சென்று, சிகிச்சையும், மருத்துவ ஆலோசனையும் பெற்று வருகின்றனர்.
இருவருக்கும், பரிசோதனை செய்ததில், கணவனுக்கு எந்த பிரச்னையும் இல்லை. மனைவிக்கு தான், முட்டைக்கரு உற்பத்தி செய்யும் திறன் அறவே இல்லை என்று, தெரிய வந்தது.
'எந்த பெண்ணிடமாவது முட்டைக்கரு தானம் பெற்று, கணவனின் விந்தணுவுடன் சேர்த்து, சில நாட்கள், பரிசோதனை கூடத்தில் வைத்திருந்து, மகளின் கர்ப்பப்பையில் செலுத்தி விடலாம். சுகபிரசவத்திலோ, சிசேரியனிலோ குழந்தை பெற்றுக் கொள்வாள்.
'வெளியிலிருந்து முட்டைக்கரு தானம் பெற, 2 லட்சம் ரூபாய் தரவேண்டியிருக்கும். உங்கள் குடும்ப பெண்கள் யாராவது முட்டைக்கரு தானம் செய்ய முன் வந்தால், பைசா செலவின்றி, செயற்கை கருத்தரிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்...' என்கிறார், மருத்துவர்.
மூத்த இருமகள்களிடம் பேசினேன். தங்கள் கணவரிடம் கேட்க வேண்டும் என்றனர்.
சில நாட்களுக்கு பின், 'எங்கள் கணவர் அனுமதித்தாலும், நாங்கள் முட்டைக்கரு தானம் செய்ய தயாராய் இல்லை. அத்துடன், எவ்வளவு தைரியம் இருந்தால், கடைசி மகளுக்காக முட்டைக்கருவை மடிப்பிச்சை கேட்க வந்திருப்ப?' என, என்னை திட்டி தீர்க்கின்றனர்.
'என் அக்காகளில், யார் முட்டைக்கரு தானம் செய்ய முன் வந்தாலும், நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். தவிர, எவளோட முட்டைக்கருவையும் வைத்து, நான் கர்ப்பம் தரிக்க தயாரில்லை...' என, கத்துகிறாள், மூன்றாவது மகள்.
மூன்றாவது மகளின் கணவரோ, 'முகம் தெரியா பெண்ணின் முட்டைக்கருவை தானமாக பெறுவோம்...' என்கிறார்.
முகம் தெரியா பெண்ணிடம் முட்டைக்கரு பெறாமல் இருந்தால், 2 லட்சம் ரூபாய் மிச்சம். யாரோ ஒரு அந்நிய பெண்ணிடமிருந்து முட்டைக்கரு பெறுவதற்கு பதில், உடன் பிறந்த சகோதரிகளிடம் ஒன்றை பெறுவது, சிறப்பான விஷயம் அல்லவா!
முட்டைக்கரு தானம் செய்யும் பெண், நாளையே, என் மகளின் குழந்தையை தன் குழந்தை என, உரிமை கொண்டாடினால் என்ன ஆவது? உங்கள் ஆலோசனை என்ன சகோதரி?
— இப்படிக்கு
உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
உடல் தானம், ரத்த தானம், சிறுநீரக தானம், கல்லீரல் தானத்தை தொடர்ந்து, விந்தணு தானமும், முட்டைக்கரு தானமும் கூட, சர்வ சாதாரணமாய் நிகழும் நடைமுறை விஷயங்களாகி விட்டன. உன் மூன்றாவது மகளின் விஷயத்தில், பல உணர்வுப்பூர்வமான வேகத்தடைகள் உள்ளன.
வேகத்தடை ஒன்று: தங்களின் முட்டைக்கருவை, தங்கை கணவர் விந்தணுவுடன் இணைத்து குழந்தை பெற்றால், அவருடன் தாம்பத்தியம் செய்து, குழந்தை பெற்றதற்கு சமம் என, உன் மூத்த இரு மகள்கள் நினைக்கக் கூடும். அக்குழந்தை பிறந்து வளரும்போது, முட்டைக்கரு தானம் செய்த தனக்கும், தன் கணவருக்கும் ஒரு தர்மசங்கடமான நிலை ஏற்படும் என, மூத்த மகள்கள் கணக்கு போடுவர்.
வேகத்தடை இரண்டு: உன் மூன்று மகள்களுக்கும் இடையே ஒற்றுமையும், பாசபிணைப்பும் இல்லாதிருக்கக்கூடும். சண்டைக்கார சகோதரிகளிடம் முட்டைக்கருவை தானமாய் பெற, மூன்றாவது மகள் தயாரில்லை.
அக்காள்களில் ஒருத்தியின் முட்டைக்கருவை, கணவர் விந்தணுவுடன் இணைத்து குழந்தை பெற்றால், தன் கணவர், அக்காளுடன் தாம்பத்தியம் செய்து குழந்தை பெற்றதற்கு சமமாகி விடுமே என, உன் மூன்றாவது மகள் யோசிக்கிறாளோ என்னவோ!
வேகத்தடை மூன்று: யாரோ ஒருத்தியின் முட்டைக்கருவை தானமாக பெற்று, குழந்தை பெற்றுக் கொண்டால், அது பாதுகாப்பானதா என்கிற கேள்வி, மூன்றாவது மகளின் முன் விஸ்வரூபித்து நிற்கிறது.
பணத்தையும் பெற்று, பின்னால், 'நீ வளர்க்கும் குழந்தை, எனக்கும், உன் கணவருக்கும் பிறந்தது. நீ வாடகை தாயாய் இருந்திருக்கிறாய். குழந்தையை என்னிடம் கொடுத்து விடு அல்லது என்னை, உன் கணவர், சட்டப்படி மனைவியாக்கி கொள்ளட்டும் அல்லது உங்கள் சொத்தில் ஒரு பகுதியை என் குழந்தையின் பெயரில் எழுதி, குழந்தையை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்...' என, மிரட்டினால் என்ன செய்வது என, உன் மூன்றாவது
மகள் பயப்படுகிறாள்.
நீ, கருத்தரிப்பு மையத்தின் நம்பகத்தன்மையை ஆராய். இதுவரை, எத்தனை பெண்களின் முட்டைக்கருக்கள் தானமாய் பெறப்பட்டுள்ளன... தானம் கொடுத்த பெண்கள் ஏதேனும் பிரச்னை செய்துள்ளனரா...
தானம் கொடுப்பவர், யாருக்கு கொடுக்கிறார் என்பது ரகசியமாக பாதுகாக்கப்படுகிறதா... தானம் கொடுப்பவருக்கும், மருத்துவமனைக்கும் எழுத்துப்பூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படுகிறதா?
எல்லா கேள்விகளுக்கும் திருப்தியான பதில் கிடைத்தால், தயங்காமல், முட்டைக்கரு தானத்தை ஏற்றுக்கொள்; மகளையும் ஏற்றுக்கொள்ள வை.
— என்றென்றும் பாசத்துடன்,
சகுந்தலா கோபிநாத்.