தத்துவமேதை சாக்ரடீசைத் தேடி வந்த இளைஞன், 'நீங்கள் எடுத்துக்கொண்ட செயல்கள் அனைத்திலும் எப்படி வெற்றி பெறுகிறீர்கள்...' என்று கேட்டான்.
'அதற்கான பதிலை, நாளை வா சொல்கிறேன்...' என்றார், சாக்ரடீஸ்.
அடுத்த நாள் அந்த இளைஞன் வந்தபோது, ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார், சாக்ரடீஸ். அவனை அருகில் அழைத்தார்.
அருகில் வந்தவனை, திடீரென்று நீருக்குள் அழுத்தினார். மூச்சுத்திணறி தவித்தவன், சாக்ரடீஸின் கைகளை தள்ளிக்கொண்டு தலையை வெளியே எடுத்து, வேக வேகமாக காற்றை சுவாசித்தான்.
பிறகு அவனிடம், 'தண்ணீரில் மூழ்கியிருந்த நேரத்தில், நீ என்ன நினைத்தாய்...' என்று கேட்டார், சாக்ரடீஸ்.
'எப்படியாவது தலையை வெளியே எடுக்க வேண்டும் என்றே முழு மூச்சுடன் முயன்றேன்...' என்றான், இளைஞன்.
'அதே போலதான் நானும். எப்போதும் எடுத்துக் கொண்ட செயலில் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்பதை மட்டும், மனதில் நிறுத்தி செயல்படுவேன்...' என்றார்.
புகழ்பெற்ற இந்திய நாவலாசிரியரான, கே.ஏ.அப்பாஸ், பொது நலத்திற்காக, பலரிடம் சென்று நிதி வசூல் செய்து கொண்டிருந்தார். அப்போது, பம்பாய் நகரத்துக்கு, மால்கம் ஹெய்லி என்ற வெள்ளைக்காரர் கவர்னராக இருந்தார்.
அந்த கவர்னரையும் சந்தித்து, நிதி உதவி கேட்டார், அப்பாஸ்.
முதலில் தர மறுத்த கவர்னர், 'உங்களுக்கு தான் ஆங்கிலேயர்களை கண்டால் பிடிக்காதே... எங்களை தான் நாட்டை விட்டே விரட்டியடிக்கப் பார்க்கிறீர்களே... பிறகு, எங்களிடம் ஏன் நிதி கேட்கிறீர்கள்...' என்றார்.
கம்பீரமாக குரலை உயர்த்தி, 'கவர்னர் அவர்களே... நாங்கள் ஒன்றும் உங்களிடம் பிச்சை கேட்டு வரவில்லை. நுாறாண்டுகளுக்கு மேலாக, எங்கள் மக்களின் செல்வங்களை சுரண்டி எடுத்துச் சென்றீர்களே, அதில் சிறு பகுதியைத்தான் உங்களிடம் திரும்ப கேட்டு வந்திருக்கிறோம்...' என்றார், அப்பாஸ்.
மறு பேச்சு பேசாமல், 100 ரூபாயை அன்பளிப்பாக வழங்கி, அவர்களை வழியனுப்பி வைத்தார், கவர்னர்.
காமராஜர் ஆட்சியில், மலையை குடைந்து அருமையாக கட்டப்பட்டது, குந்தா அணைக்கட்டு. அப்போது, அவரை சந்தித்த அதிகாரி ஒருவர், 'மலையை குடைந்து அருமையாக கட்டப்பட்ட அணையை பற்றி நாமே மக்களிடம் சொல்வதை விட, திரைப்படமாக எடுத்து காண்பித்தால், பாமர மக்களுக்கும் சுலபமாக புரியும்...' என்றார்.
'அதற்கு எவ்வளவு செலவாகும்...' என்று கேட்டார், காமராஜர்.
'மூன்று லட்சம் ரூபாய் வரை செலவாகும்...' என்றார், அதிகாரி.
'அடப்பாவிகளா, மூன்று லட்சமா... அந்த மூன்று லட்சம் ரூபாய் இருந்தால், 10 ஊர்களுக்கு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுப்பேன். புள்ளைங்க படிக்க வழியை காணோம். அரசு செய்ததை, 'நியூஸ் ரீல்' காட்டி, என் சாதனைன்னு வெளிச்சம் போட்டு காட்ட பாக்கறீங்களா...' என்று சொல்லி, மறுத்து விட்டார், காமராஜர்.
தினமணி ஆசிரியராக, சாவி பணியாற்றியபோது, கவிஞர் கண்ணதாசனுடன் நீண்ட நேரமாக பற்பல விஷயங்கள் குறித்து, தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். உரையாடலின் முடிவில், 'நம் பத்திரிகைக்கும் ஏதாவது எழுதுங்கள்...' என்று கண்ணதாசனிடம் கேட்டார், சாவி.
'சரி...' என்று ஒப்புக்கொண்டார், கவிஞர்.
'இப்போதே தலைப்பை சொல்லுங்கள். உடனே, பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து விடுகிறேன்...' என்றார், சாவி.
கவிஞரும் உடனே, 'அர்த்தமுள்ள இந்து மதம்...' என்று, தலைப்பை சொன்னார். என்ன எழுதுவது என்று திட்டமிடப்படாமலேயே துவங்கிய அந்த தொடர் வெளிவந்த போது, பெரும் வரவேற்பை பெற்றது.
புத்தகமாக வெளிவந்த போதும், பல பதிப்புகள் கண்டது. இன்று வரை, தமிழில் அதிகமாக விற்பனையான கட்டுரை நுால் தொகுப்பு, இது தான்.
நடுத்தெரு நாராயணன்