வீட்டுக்குள் நுழைந்ததும், அங்குமிங்கும் அம்மாவைத் தேடி, அடுக்களைக்குள் புகுந்தாள், நந்தினி.
அங்கு, எதையோ கிளறிக் கொண்டிருந்த அம்மாவைப் பின்புறமாகக் கட்டி, கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சினாள்.
''ஜானுா... உனக்கொரு, 'சர்ப்ரைஸ்' கொண்டு வந்திருக்கேன். என்னன்னு சொல்லு பாக்கலாம்?''
''என்னாச்சுடாம்மா... இத்தனை சந்தோஷமா பாத்ததே இல்லையே... உன்னைப் பார்க்க, எத்தனை அழகா இருக்கு தெரியுமா,'' என்றாள், ஜானகி.
சட்டென்று இறுகிய முகத்துடன், அம்மாவைக் கட்டியிருந்த கைகளை விலக்கி, ''உண்மை தான், ஜானு. இத்தனை வருஷமா எந்த கணத்துக்காக காத்திருந்தேனோ... அது, இப்போ கையில.''
''இத்தனை வருஷமா காத்திருந்த சந்தோஷம்னா... நிச்சயமா, உன் வேலையா தான் இருக்கும். கரெக்ட்டுதானே, நந்துமா.''
''ரொம்ப சரி,'' கன்னத்தைக் கிள்ளினாள், நந்தினி.
''அப்பாடி, போதுண்டி ராசாத்தி... தவம் போல நீ படிச்சதுக்கும், காத்திருந்ததுக்கும் புண்ணியமா போச்சு... என்னை ஜெயிக்க வச்சுட்டே. அதான் உண்மை,'' என்று, கைகளால் திருஷ்டி சுத்தி, நெட்டி முறித்தாள், ஜானு.
''இல்ல ஜானு... என் இலக்குல ஒரு பாதி மட்டும் தான் தொட்டிருக்கேன். மறுபாதி உன்கிட்ட இருக்கு. புதுசா ஒண்ணும் இல்ல. இது நமக்குள்ள போட்டுக்கிட்ட, 'அக்ரிமென்ட்டு'தானே. சவால்ல நான் ஜெயிச்சுட்டேன். இப்போ, நீ தான் சொல்லணும்.''
''நீ, இன்னும் அத மறக்கலியா? முதல்ல என்ன வேலை... எங்கேன்னு விபரம் சொல்லு... கொஞ்ச நாள் முன், 'ஆன்லைன் இண்டர்வியூ அட்டெண்ட்' பண்ணியே... அதுவா?''
''மறக்கறதா... விளையாடுறியாம்மா.அதே தான். என், 'ஐ.டி., பீல்டு' வேலை, ஐதராபாத்ல... இன்னும், 20 நாள்ல வேலையில் சேரணும்... மெயில் அனுப்பணும். ராத்திரி டிபனுக்கப்புறமா பேசுவோம். ஓ.கே.,''
இரவு உணவுக்குப் பிறகு, மொட்டை மாடியில் சிறிது நேரம் உலாவுவது வழக்கம்.
நந்தினி எதைப் பற்றிப் பேசப் போகிறாளென்பது தெரிந்தது தான். என்றாலும் ஜானுவுக்கு, ஏனோ பதற்றமாக இருந்தது.
மொட்டை மாடியின் கீழ், எட்டிப் பார்த்தவளுக்கு, பாதி வெளிச்சமும் மீதி இருட்டுமாக, பக்கத்து வீட்டின் வாசல், பல்லைக் காட்டியது.
வாசலின் ஒரு ஓரமாய் கிடந்த கயிற்றுக் கட்டிலில், பெருத்த வயிறோடு, கருத்த உருவமொன்று, தட்டுக்கும், வாய்க்கும் வாத்தியம் இசைத்துக் கொண்டிருக்க... பக்கத்தில், ஒரு பெண்மணியும், வயது வந்த பிள்ளைகள் ஆணொன்றும், பெண்ணொன்றும், சிரிப்பும், பேச்சும் அந்த இடத்தின் கலகலப்பு... கன்னத்தில் அறைந்தாற் போல பற்றிக் கொண்டு வந்தது, நந்தினிக்கு.
''ம்மா... இங்கே வந்து பாரேன், உன் அருமைப் புருஷனை. பார்க்க கண்கொள்ளாக் காட்சியா இருக்கு.''
''ஏய்... இங்கே வா. அது, நமக்குத் தேவையா?'' கிசுகிசுத்தாள், ஜானு.
''அதத்தானம்மா நானும், வருஷக் கணக்கா கேக்குறேன். இது, நமக்கு தேவையா... மாடிக்கு வந்தா, அந்தப் பக்கமே போக மாட்டோம். ஆனா, இன்னிக்கு பாரு, அப்ப தான் உனக்கும் புரியும்.
''நாம, இன்னிக்கு ஒரு முடிவுக்கு வந்தே ஆகணும். பொண்டாட்டி புள்ளைங்களோட அந்தாளுக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு. பத்தாதுன்னு, ஊருக்குள்ள ஏகப்பட்ட பொம்பள சகவாசம். எதுக்காக, யாருக்காக இப்படியொரு அசிங்கத்துல ஒட்டிக்கிட்டு இருக்கணும்.
''எல்லாம் போதும், எதுக்காக என் வாயை இத்தனை நாள் அடைச்சு வச்சே. படிச்சு, ஒரு நல்ல வேலைக்குப் போனதுக்கப்புறமா இதப் பத்தி பேசுன்னு சொன்னேல்ல... இதோ வேலைக்கு, 'ஆர்டர்' வந்தாச்சு. இப்ப பேசித்தான் ஆகணும்.
''இந்த கணத்துக்காக தான், நான் இவ்ளோ காலம் பொருத்துட்டு இருந்தேன். ஏமாத்தி, புள்ளய குடுத்துட்டான்னு இவன்ட்ட போயி, உன் ஒட்டுமொத்த வாழ்க்கையும் அடகு வச்சியேம்மா.''
நந்துவுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே, கீழே குடும்பமாய் கூடிக் களித்துக் கொண்டிருக்கிறானே, இவள் பிறக்கக் காரணமானவன். அவனோடு இவள் பேசியதுமில்லை; நேராய் பார்த்ததுமில்லை.
தனியார் பள்ளியொன்றில் வேலைக்குப் போய்க் கொண்டிருந்த ஜானுவை, துரத்தித் துரத்தி வீழ்த்தியவன். முதல் திருமணத்தை மறைத்து, திருமணம் செய்து கொள்வதாய் ஏமாற்றி, வயிற்றில் பிள்ளையை கொடுத்து, தப்பித்தவன்.
தாய், தகப்பன் இல்லாது, தாய் மாமாவுடன் நியாயம் கேட்க போக... அது, காவல் நிலைய கதவைத் தட்டி... வேண்டா வெறுப்பாக, சூழ்நிலைக் கைதியாகி, இவள் கழுத்தில் தாலி கட்டி, வீட்டிற்கு அழைத்து வந்தான்.
இரண்டு குழந்தைகளோடு இருந்த முதல் மனைவி, இருந்த சொத்துக்களை எல்லாம் தன் பெயரில் எழுதி வாங்கி கொண்டாள்.
உயிரோடு இருக்கும் காலம் வரை, இரட்டை வீடாய் இருந்த சொந்த வீட்டின் ஒரு பக்கம், ஜானு இருந்து விட்டுப் போகட்டும் என, அனுமதித்தாள், முதல் தாரம். அப்போதைய நிலைமைக்கு ஜானுவுக்கு, அதுவே பெரிய விஷயமாகத் இருந்தது.
தாய் மாமனின் துணையோடு, பிள்ளைப்பேறு முடித்து, ஏற்கனவே பார்த்துக் கொண்டிருந்த தனியார் பள்ளி வேலையை தொடர்ந்தாள்.
எஞ்சிய நேரங்களில், நந்தினியைப் படிக்க வைக்க, தையல் மிஷினோடு வாழ்ந்தது, போதுமானதாக இருந்தது. உறவோ, ஒட்டுதலோ, அனுசரணையோ என, எதையும் எதிர்பார்க்காமல் வாழப் பழகினாள், ஜானு.
'இந்தச் சூழலிலிருந்து விடுபடவோ, அவமானங்களை துடைத்தெறியவோ வேண்டுமெனில், நீ, எப்போது உன் காலில் நிற்கிறாயோ, அப்போது தான் இதெல்லாம் சாத்தியப்படும்...' என்று சமாதானப்படுத்தி, இவளை வளர்த்திருந்தாள்.
இதை ஆழப்பதிந்துகொண்ட, நந்தினி, அதிலிருந்து மீள, மிகத் தீவிரமாக, கவனத்தைப் படிப்பில் செலுத்தினாள்.
படித்து, வேலை தேடி, சொந்தக் காலில், அம்மாவும் தானும் தனித்து இயங்க வேண்டும். அடுத்தவள் புருஷனை மயக்கிக் கட்டிக்கொண்டவள். பக்கத்து வீட்டு அப்பாவிற்கு பிறந்தவள் என்ற, அருவருப்பான அடையாளத்தையும், சூழலையும் அறுத்தெறிய வேண்டும் என்பதே, நந்துவின் முழுநேரப் பிரார்த்தனையாக இருந்தது.
நிலாவைப் பார்த்துக் கிடந்த அம்மா, இப்போது இவள் பக்கமாய் திரும்பி, இவளை அணைத்தவாறு கண்மூடிக் கிடந்தாள்.
''ஜானு... துாங்கிட்டியா?''
''இல்லை. பழசெல்லாம் வந்து மனசைப் பிசையும்போது, எங்கே துாங்குறது?''
''எனக்கும் தான். அந்தப் பழசுல உனக்குப் பிடிச்ச ஏதாச்சும் ஒண்ணு இருந்தா சொல்லேன்.''
''ம்ஹும்... அப்படி எதுவுமே இல்லங்கிறது தான் உண்மை. எனக்குப் புடிச்சது புடிக்காததுங்கிற புள்ளிய, நான் இதுவரை தொட்டதேயில்ல.''
''இப்போ, நான் கேக்குறதுக்கு, நிதானமா, யோசிச்சு, பதில் சொல்லு, ஜானு... நமக்கு, அந்தாளு தேவையா... அவரில்லேன்னா நமக்கு எந்த விதத்திலாவது பாதிப்பு இருக்கா?''
''இதுல யோசிக்க என்ன இருக்கு. நம் சம்பாத்தியத்துல தான், நாம வாழறோம். நம் எந்த தேவைகளுக்கும் அந்தாளு வந்து நின்னதில்ல. சொல்லப் போனா, நீ என்ன படிச்சே, என்ன செய்யறேன்னு கூட தெரியாது. நம்மள அவுரு குடும்பம்ன்னு வெளில சொல்லிக்கிட்டதும் கிடையாது.
''அந்தாளு, எனக்குப் புருஷன்னும்; உனக்கு, அப்பான்னும் தெரிஞ்சுபோன இடத்துல எல்லாம், நாம அவமானப்பட்டு கூனிக் குறுகி நின்னது தான் மிச்சம்... ஏதோ, நாந்தான் இன்னொருத்தி புருஷனை வளைச்சுப் போட்டுக்கிட்டா மாதிரியும்... கல்யாணம் ஆனவன்னு தெரியாமயா புள்ளய வாங்கிக்கிட்டேங்கிற என்ற, ஒத்தக் கேள்வியில செத்துப் போகுது மனசும், உடம்பும்,'' என்றாள், ஜானு.
''ஒரு பறவை, நம் தலைக்கு மேல பறக்குறதை நம்மாள தடுக்க முடியாது. ஆனா, அதே பறவை, நம் தலையில கூடு கட்டி குடும்பம் நடத்தி, குஞ்சு பொறிக்கிறதை நம்மாள தடுக்க முடியும்ன்னு எங்கியோ, எப்பவோ படிச்சது நினைவுக்கு வருது. போனது போகட்டும். இனி, நாம யாரு, என்ன செய்யணும்கிறத முடிவெடுப்போம்.
''தனியார் பள்ளியில், உனக்கு வேலை வாங்குறது ஒண்ணும் சிரமமில்ல, ரெண்டு பேரும் ஐதராபாத் போறோம். விடாம நம்மள துரத்திக்கிட்டு இருக்குற இந்த அசிங்கத்தையும், அவமானத்தையும் தலையச் சுத்தி துாக்கிப் போட்டுடுவோம். நமக்குன்னு ஒரு உலகம் வரவேற்கக் காத்துக்கிட்டு இருக்கு. நாமளும், இனி புதுசா பொறப்போம். சரிதானே, ஜானு.''
''எல்லாம் சரிதான், நந்து... கல்யாண வயசுல நிக்குற உனக்கு, நாளைக்கு, அப்பா எங்கேன்னு கேக்குற உலகத்துக்கு... நான் என்ன பதில் சொல்ல?''
''ம்மா... நடந்து முடிஞ்ச சம்பவங்களுக்கு இப்பத்தான் தீர்வு கிடைச்சுருக்கு. நீ என்னடான்னா நடக்காததெல்லாம் இழுத்து வந்து, மேல மேல கழுத்துல மாட்டிக்கிறியே... நமக்குன்னு ஒரு, 'செல்ப் ரெஸ்பெக்ட்' இருக்கு. முதல்ல, நம்மள நாம மதிக்கணும். நமக்குன்னு தனி அடையாளத்தை உருவாக்கிக்கணும்.
''எதையும் எதிர்கொள்ளுற பக்குவத்தையும், நிதானத்தையும் நம்மள கடந்து போன வாழ்க்கைக்கிட்டேருந்து நிறையவே சம்பாதிச்சு வச்சுருக்கோம். புது இடம், புது மனுஷங்க, புது சூழ்நிலை. உன்னப் பத்தி தான் எனக்குக் கவலை.
''இனி, எல்லாமே வெற்றிதான்னு நான் சொல்ல வரல. ஆனா, தோல்வியே மேல வந்து விழுந்து கடிச்சாலும், கடிச்ச இடத்துலயே விழுந்து கிடக்காம, எழுந்து நடக்கத் தெரியும். இது போதும் எதையும் எதிர்கொள்ள,'' என்றாள், நந்தினி.
''எங்கிருந்து இத்தனை நிதானமும், தெளிவும் வந்ததுடா, செல்லம்.''
ஜானுவை தோளோடு அணைத்து, முகம் உரசி, ''எல்லாமே இதோ, இங்கிருந்து தான் தங்கமே,'' என்று, இடுப்பைக் கட்டியபடி, சுற்றத் துவங்கினாள், நந்தினி.
நாலைந்து சுற்று சுற்றியதில், தலை, 'கிர்'ரென்றது இருவருக்கும்.
சிறு தடுமாற்றத்தோடு தரையில் காலுான்றி நிற்கையில், நந்தினியின் கையில் மாட்டியிருந்த ஜானுவின் கழுத்துச் சங்கிலி அறுந்து, தாலி மட்டும் தெறித்து விழுந்தது. பார்த்த கணத்தில் இருவரும், ஒரு நிமிடம் ஆடாமல், அசையாமல் நின்றனர்.
நிதானமாய், எந்த சலனமுமின்றி, ''என்னை மீறி, எப்படி வந்துச்சோ, அப்படியே போயிடுச்சு... எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் மிக நன்றாகவே நடக்கும்,'' என்றாள், ஜானு.
அன்புமணிவேல்