பெண் தட்சணை கொடுங்களேன்!
மகளுக்கு, பெண் பார்க்கும் படலத்தை ஏற்பாடு செய்திருந்தார், நண்பர்.
விழா முடிந்ததும், வரனின் தகப்பனார், 'பொண்ணு, ரொம்பவும் கறுப்பா இருக்கிறதால, அஞ்சு லட்ச ரூபாயை வரதட்சணையா குடுத்தா, கல்யாணத்துக்கு உடனே நாள் குறிச்சிடலாம்...' என்றார்.
'பெண்ணுக்கு வயது கூடிக்கொண்டே போகிறது. இந்த சம்பந்தத்தையும் கை நழுவ விட்டால் அப்புறம் முதிர் கன்னி ஆகிவிடுவாளே... அதனால், கடன் வாங்கியாவது திருமணத்தை நடத்தி விடலாமா...' என, யோசித்தார், நண்பர்.
அப்போது, 'எங்கப்பா இதுக்கு சம்மதிச்சாலும், நான் சம்மதிக்க மாட்டேன். நீங்க, கறுப்பு நிறத்தை குறையா பார்த்தா, நான் சிகப்பு நிறத்தை, குறையா பார்க்கிறேன். உங்க பையன் சிகப்பா இருக்கிறது எனக்கு பிடிக்கலை...
'அந்தக் குறையைப் போக்க, நீங்க எங்களுக்கு, 'பெண் தட்சணையா' 10 லட்ச ரூபாயை குடுங்க... வேணும்னா, நீங்க கேட்ட அஞ்சு லட்சத்தை இதுல கழிச்சுட்டு, மீதி அஞ்சைக் குடுங்க...' என, நண்பரின் மகள் கூறியதும், சபை அதிர்ந்து, மவுனத்தில் உறைந்தது.
பிறகு அவளே, 'எந்த குறையையும் நிறைவா பார்க்கிற அன்பான ஆண் தான், பெண்ணுக்கு கணவனா இருக்கத் தகுதி பெற்றவன். குறையை வைத்து வியாபாரம் செய்பவன், அந்த தகுதியை இழந்து விடுகிறான்...' என, உரைக்கும்படி சொல்லி, அவர்களை மேலும் தலை கவிழச் செய்தாள்.
வரதட்சணை என்ற நெருப்பை எண்ணெய் ஊற்றி வளர்க்காமல், தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும்.
கே. ஜெகதீசன், கோவை.
அவசரம், அலட்சியம் வேண்டாம்!
வேலுார் பஸ் நிலையத்தில், பஸ்சுக்காக காத்திருந்தேன். அப்போது, அங்கே வந்த பஸ் ஒன்றில், சிலர், முண்டியடித்து அவசர அவசரமாய், தங்களது முகக் கவசங்களை கழற்றி இருக்கையில் போட்டு, இடம் பிடித்தனர். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
இத்தனைக்கும் அந்த பஸ்சில் கூட்டம் மிக குறைவாகவே இருந்தது.
முகக் கவசம் எதற்கு அணிகிறோம், அதை மற்றவர் அமரும் இடத்தில் போடுவதால், தொற்று பரவ வாய்ப்பு உள்ளது என்பது கூட தெரியாமல், அவர்கள் நடந்து கொண்ட விதம், கோபத்தை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் அனைவரும், நன்கு படித்தவர்கள் போல், 'டீசன்ட்'டாக இருந்தனர்.
என் அன்பிற்கினிய முகம் தெரிந்த, தெரியாத நண்பர்களே... அரசின் சட்டங்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். இரண்டாவதாக, அவசரம் மற்றும் ஆத்திரத்தில் எடுக்கும் முடிவுகள், ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை மனதில் கொண்டு, சிந்தித்து, செயல்படுங்கள்.
கி. சிவபச்சையப்பன், வேலுார்.
மனம் இருந்தால் போதும்!
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி, ஊர் சுற்றிக்கொண்டிருந்த இளைஞர்களுக்கு, 8ம் வகுப்பு புத்தகத்தை வைத்து, பாடம் நடத்தி வந்தார், தோழியின் கணவர்.
இச்சமயத்தில், செய்தித்தாள் ஒன்றில், சிங்கப்பூரில், 'வெல்டிங்' தொழில்நுட்பம் தெரிந்த, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு, நல்ல சம்பளத்துடன், நிரந்தர வேலை வாய்ப்பு அளிக்கப்படும், செய்தியை படித்தார்.
இதையடுத்து, அந்த இளைஞர்களை தேசிய திறந்த நிலை பள்ளியில், 8ம் வகுப்பு தேர்வை எழுத வைத்து, 55 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்களை பெற வைத்தார்.
மேலும், நகரத்தில் உள்ள, 'வெல்டிங்' பட்டறையில், இவர்களுக்கு, 'வெல்டிங்' தொழில்நுட்பத்தையும் சொல்லிக் கொடுக்க செய்து, தன் சொந்த செலவில், சிங்கப்பூர் அனுப்பி வைத்தார்.
அங்கு, அவர்கள், திறனுடன் நன்கு வேலை செய்வதுடன், நல்ல பெயர் எடுத்தனர். இன்று, அவர்களின் குடும்பங்களோ, தோழியின் கணவரை வாழ்த்திக் கொண்டிருக்கிறது. உதவி செய்ய, பணம், காசு தேவையில்லை; மனம் இருந்தால் போதும்.
- உமா புருஷோத்தமன், ஆதிச்சபுரம்