பள்ளிக்கூடத்தில் ஐஸ் விற்கும் பாட்டியிடம் பட்ட ஒரு ரூபாய் கடனை எப்படி அடைப்பது என்ற யோசனையில் இருந்தார், எஸ்.வி.சேகர். அவரது பாட்டிக்கு ஆஸ்துமா பிரச்னை இருந்தது. அதற்கான, 30 மாத்திரை, மந்தைவெளியில் ஒரு ரூபாய். ஆனால். ராயப்பேட்டையில், அதே ஒரு ரூபாய்க்கு, 60 மாத்திரை கிடைப்பதாக, நண்பன் மூலம் தகவல் கிடைத்தது.
பாட்டியிடம், 'இரண்டு மாத மாத்திரையை வாங்கிக்கோ...' என்று சொல்லி, இரண்டு ரூபாயை வாங்கி, ராயப்பேட்டை வரை நடந்து சென்று (சுமார், 4 கி.மீ., துாரம்) அதில் மிச்சப்படுத்தி, பள்ளிக்கூட பாட்டியின், ஒரு ரூபாய் கடனை அடைத்துள்ளார். அன்று ஒரு முடிவு எடுத்தார்.
வாழ்க்கையில் எதற்காகவும், எவருக்காகவும், எந்த சூழ்நிலையிலும் கடன் வாங்குவது இல்லை என்பதே. அதை இன்று வரை, கடைப்பிடித்து வருகிறார். ரேடியோ கூத்தபிரான் அண்ணாவால், வேப்பம் பூ பச்சடி என்ற ரேடியோ நாடகத்தில் நடித்த போது, வயது, 10. அதே வயதில், மேடையில், துப்பறியும் சாம்பு நாடகத்திலும் நடித்தார்.
நடிகர், மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில், ஒரு நாடக காட்சியில், குடும்பத்தினர் பயணம் செய்யும் கார் திடீரென பள்ளத்தில் உருண்டு, இரண்டு பேர் மட்டுமே பிழைப்பர். நாடகத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் இந்த காட்சியை வெறும் சவுண்ட் மற்றும் லைட் உத்தியுடன் மேடையில் ஏற்படுத்தி, பலரது பாராட்டையும் பெற்ற போது, அவரது வயது, 13.
படித்துக் கொண்டிருக்கும் போதே, போட்டோ எடுக்கும் கலையில் தேர்ச்சி பெற்றார். போட்டோ எடுக்க கற்றுக் கொண்டது கொஞ்சமும் எதிர்பாராதது.
கும்பகோணத்தில், சித்தப்பா திருமணத்தை, படம் எடுக்க வேண்டிய போட்டோகிராபர் வரவில்லை. அப்பா தன்னிடம் இருந்த, 'ப்யூஜிகா ட்வின்லென்ஸ்' கேமராவை கொடுத்து, 'இது, போகஸ்; இது அப்பரச்சர்...' என்று, 10 நிமிடம், அவருக்கு போட்டோ எடுக்க சொல்லிக் கொடுத்தார். 14 வயதில், போட்டோகிராபராகி விட்டார்.
படத்தை கழுவி பிரின்ட் போட்டுப் பார்த்தால், அவருக்கும், அப்பாவுக்கும் ஆனந்த அதிர்ச்சி. காரணம், எடுத்த படங்களில், 99 சதவீதம் சரியாகவே வந்திருந்தது. இதையடுத்து அவருக்கு, போட்டோகிராபியில் ஆர்வம் அதிகரித்தது.
அதன்பின், குடும்பம், நண்பர்கள் வட்டத்திற்கு அவர் தான் போட்டோகிராபர். பின்னாளில், போட்டோகிராபியில் பல விருதுகள் வாங்கும் அளவிற்கு பிரபலமானார். ரேடியோவில், முதல் வர்த்தக விளம்பரம், ஒலிச்சித்திரம், தொலைக்காட்சி தொடர், முதன் முதலில் அமெரிக்கா சென்ற நாடக குழு என்று, பல முதன்முறைகளுக்கு அவர் தான் காரணமாக இருந்தார்.
இலங்கை வானொலிக்காக, 275 ஒலிச்சித்திரம் தயாரித்துள்ளார். அந்தக்காலத்தில் பெண்களின் பேராதரவு பெற்றது, இந்த ஒலிச்சித்திரம் என்பதை, இப்போதும் சொல்பவர் உண்டு. துார்தர்ஷனில் ஒளிபரப்பான முதல் ஐந்து வார தொடர், இவரது, காட்டுல மழை நாடகம் தான். மீண்டும் மீண்டும் என்று, பல முறை ஒளிபரப்பு செய்யப்பட்ட, 13 வாரத்தொடரான, வண்ணக்கோலங்கள் நாடகமும் இவருடையது தான்.
முதன்முதலாக, நாடகத்தை ஆடியோ கேசட்டாக போட்டதும், எஸ்.வி.சேகர் தான். வெளிநாட்டு வாழ் தமிழர்கள் பயணத்தின் போது, கேட்டு மகிழ எடுத்துச் செல்லும் கேசட்டுகளில் முதல் கேசட், இவருடையதாகத்தான் இன்று வரை இருக்கிறது.
'என் கார் பயணத்தின் போது, விரும்பி கேட்பது, எஸ்.வி.சேகர் நாடகங்கள் தான்...' என்று, சொல்லியுள்ளார், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
எல்லாம் சரி, படிப்பு என்னாச்சு என்கிறீர்களா? அதை அடுத்த வாரம் சொல்கிறேன்.
இவரைப் பற்றி அவர்
எந்த ஒரு அரங்கமானாலும், சூழ்நிலைக்கு ஏற்ப சமயோசிதமாக வசனங்களை, அந்நேரத்தில் பேசி, ரசிகர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, அவர்களை சிரிப்பலையில் மூழ்க வைப்பது, எஸ்.வி.சேகருக்கு கை வந்த கலை. அன்று, அவர் எனக்கு ரசிகர்; இன்று, நான் அவரது ரசிகன்.
- நடிகர் நாகேஷ்
— தொடரும்.
எல். முருகராஜ்