பா - கே - ப
அலுவலக நுாலகத்தில் இருந்த புத்தகங்களைப் புரட்டியதில் கிடைத்த தகவல்களின் தொகுப்பு மட்டுமே இந்த வாரம்...
ஆபிரகாம் லிங்கனிடம் ஒருவர், 'நீங்கள் படித்துக் கொண்டேயிருப்பதால், பணம் வந்து கொட்டப் போவதில்லை. பின், எதற்காக எப்போதும், எதையாவது படித்துக் கொண்டே இருக்கிறீர்கள்...' என்று, கேட்டார்.
'நண்பரே... நான் பணம் சேர்ப்பதற்காக படிக்கவில்லை. பணம் நமக்கு வருகிறபோது, எப்படி பண்புள்ளவனாக நடந்து, ஒரு நல்ல மனிதனாக வாழ வேண்டும் என்பதற்காக படிக்கிறேன்...' என்றார், லிங்கன்.
உங்களால் பறக்க முடியவில்லையா?
ஓடுங்கள்!
உங்களால் ஓட முடியவில்லையா?
நடந்து செல்லுங்கள்!
உங்களால் நடக்க முடியவில்லையா?
ஊர்ந்து செல்லுங்கள்!
உங்களால் ஊர்ந்து செல்ல முடியவில்லையா?
கவனியுங்கள்!
ஆனால், எதைச் செய்தாலும், உங்கள் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டே இருங்கள்.
நிச்சயம் ஒருநாள் வெற்றியடைவீர்கள்!
'பெருமைக்கு மாவு இடித்தல்' என்றால் என்ன?
வீண் பெருமைக்காகவும், புகழுக்காகவும், இல்லாத ஒன்றை இருப்பது போலவும், செய்யாத ஒன்றை செய்தது போலவும், நடக்காத ஒன்றை நடந்தது போலவும், சித்தரித்துக் காட்டுவது. மாட்டிக் கொண்டால், மானம் போய் விடும். இயல்பாக, உண்மையாக இருப்பதே எப்போதும் நல்லது.
மருத்துவரை பார்க்கச் சென்றார், ஒரு பெண்.
அப்பெண்ணிடம், 'காலையில் என்னம்மா சாப்பிட்டே...' என கேட்டார், மருத்துவர்.
'பர்க்கர், பீட்சா மற்றும் சாண்ட்விச் சாப்பிட்டேன், டாக்டர்...' என்றாள்.
அந்த பெண் பொய் சொல்கிறாள் என்பதை புரிந்துகொண்ட, டாக்டர், 'இங்க பாரும்மா, இது, 'வாட்ஸ் - ஆப்'போ, 'பேஸ் புக்'கோ இல்லே. ஆஸ்பத்திரி. உண்மையை சொல்லிடு, ஆமாம்...' என்றார்.
வெட்கத்துடன், 'பழைய சோறும், கருவாட்டுக் குழம்பும், டாக்டர்...' என்றாள்.
இதுதாங்க, பெருமைக்கு மாவு இடிக்கிறதுங்கிறது.
சமைத்த உணவுப் பொருட்கள் மீந்து போனால் அவை கெடாமலும், ஊசிப்போகாமலும் இருக்கும்பட்சத்தில், மீண்டும் வேறு விதமாக பயன்படுத்த, இதோ சில யோசனைகள்:
* சாதம் மீந்து போனால், சிறிது உளுத்தம் பருப்பை ஊற வைத்து கெட்டியாக அரைத்து சாதத்துடன் கலந்து போண்டா செய்யலாம்
* அடை மாவு மீந்து விட்டால், குக்கரில் ஆவியில் வேக வைத்து எடுத்து, உதிர்த்து, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகு, சீரகம் சேர்த்து தாளித்தால், புது டிபன் தயார்
* முதல் நாள் செய்த சப்பாத்தி மீந்து போனால், அதை மிக்சியில் போட்டு பூ போல உதிர்த்து, உப்புமா செய்யலாம்
* ரவை உப்புமா மிஞ்சினால், அதில் சிறிதளவு கரம் மசாலா பொடி கலந்து பிரெட் துண்டுகளுக்கிடையே உப்புமாவை வைத்து, 'பிரெட் உப்புமா சாண்ட்விச்' செய்யலாம்.
* இட்லி மீந்தால், உதிர்த்து உப்புமா செய்யலாம்
* காலையில் செய்த சாதம் மற்றும் சாம்பார் மீந்து விட்டால், இரவு, வாணலியில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, வரமிளகாய், பெருங்காயம் தாளித்து, சாம்பாரை கொட்டி, சாதத்தை உதிர்த்து அதில் போட்டு கிளறினால், சுவையான, சூடான, 'பிஸிபேளாஹூளி' தயார்.
ஜூன் 5, சுற்றுச்சூழல் தினம்
இந்த தினத்தில், இயற்கையை போற்றுவோம். குறிப்பாக, மரங்களை வணங்குவோம்.
எந்த மரமும் தனக்காக வாழ்வதில்லை. வாழ்ந்தால் பூவும், பழமும் தரும். வீழ்ந்தால், விறகாக வீடு வந்து சேரும்.
* பெற்றோரை முதியோர் இல்லத்திற்கு அனுப்புபவர்களுக்கு பாடம் சொல்கிறது, ஆல மரம். ஆம், தன்னை தாங்கிய அடி மரத்தை, தன் விழுது கைகளால் பூமியில் தாங்கிப் பிடிக்கிறது
* மானுட சந்ததி, மறையாத சந்ததி என்று, பூமிக்கு காட்டுகிறது, வாழை மரம்
* நிமிர்ந்து நிற்க கற்றுத் தருகிறது, பனை மரம்
* நன்றியை மறக்காத, தென்னை மரம்
* உறுதியை கற்றுத் தரும், புளிய மரம்.
ஒவ்வொரு மரமும், ஒரு போதி மரம்.
நேர்காணலுக்கு வந்திருந்தனர், மூன்று பேர். அவர்களது பொது அறிவை சோதிக்க எண்ணி, மூன்று உலக வரைபடங்களை எடுத்து, துண்டு துண்டாகக் கிழித்தார், ஒவ்வொருவரிடமும் தனித்தனியே கொடுத்து வரைபடத்தை பழைய நிலைக்கு கொண்டு வர பணித்தார், நிர்வாகி.
வெகு நேரமாகியும் முடியவில்லை எனக் கூறினர், இருவர். மூன்றாவது நபர், சரியாக செய்து முடித்தார். ஆச்சரியப்பட்டு, 'எப்படி முடிந்தது...' என கேட்டார், நிர்வாகி.
'வரைபடத்தின் பின்புறம், உலக அழகி ஐஸ்வர்யாராயின் படம் இருந்தது; எனக்கு சுலபமாயிற்று...' என்றார்.
கண்ணதாசன் ஒரு பேட்டியில் கூறியது...
ஒரு மனிதன் நல்லவனா, தீயவனா என்று எப்படி கண்டுபிடிப்பது?
அவன் நடத்தையில், பேச்சில்.
ஒருவனோடு ஒரு மணி நேரம் பேசினால், பெரும்பாலும் அவனுடைய குணம் முழுவதும் வெளிப்பட்டு விடும். பேசாமல் கழுத்தறுப்பவர்களை தான் கண்டுகொள்ள முடியாது.
ஒருசமயம், நாடகம் நடத்தி முடித்து, வாடகை காரில் திரும்பிக் கொண்டிருந்தார், எம்.ஆர்.ராதா. அது மழை காலம். அதனால், வழியெங்கும் வெள்ளம். அதில், டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் லாரி ஒன்று மாட்டிக் கொண்டது. அதில், நிறைய பாரம் இருந்தது.
கரையில் இன்னொரு லாரியை நிறுத்தி, இரண்டு லாரிகளுக்கும் கயிறு கட்டி, அந்த லாரியை கரைக்கு இழுக்க முயன்று கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த பக்கம் வந்த, ராதா, இதை பார்த்தார். உடனே, காரிலிருந்து இறங்கி, டிரைவர் மற்றும் கிளீனரிடம், 'லாரியில் இருக்கும் பாரங்களை இறக்கி, கரையில் நிற்கும் லாரியில் ஏற்றச் சொன்னார். ஏற்றி முடிந்ததும், கரையில் இருக்கும் லாரியை, 'ஸ்டார்ட்' செய்து இழுக்கச் சொன்னார். இப்போது, சுலபமாக தண்ணீரில் நின்றிருந்த லாரி, கரைக்கு வந்து விட்டது.
ராதாவுக்கு, இரண்டு லாரிக்காரர்களும் தங்கள் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்தனர். அவர் ஒரு நடிகர் என்று தெரிந்து கொண்டனர்.
இந்த சம்பவம் நடந்த சில நாட்களில், டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனி அதிபரிடமிருந்து, எம்.ஆர்.ராதாவுக்கு ஒரு கடிதம் வந்தது.
அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டபடி, மோட்டார் கம்பெனி அதிபரை சந்தித்தார், எம்.ஆர்.ராதா.
வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட தங்கள் லாரியை கரையேற்ற, ராதா சொன்ன யோசனையை நினைவுபடுத்தி, மிகவும் பாராட்டினார், டி.வி.எஸ்., அதிபர்.
அத்துடன், தங்கள் கம்பெனியின் புதிய கார் ஒன்றை ராதாவுக்கு தந்து, 'முடிகிறபோது, தவணை முறையில் பணம் தரலாம்...' என்றும் கூறினார்.
1.தெற்கு வடக்காக கட்டப்பட்ட, 7 அடி உயரம் உள்ள மதில் சுவரின் மேல், சேவல் ஒன்று, 'கொக்கரக்கோ' என்று கூவியபடி அமர்ந்திருந்தது.
அதன் தலை கிழக்கு நோக்கியும், பின்பகுதி மேற்கு நோக்கியும் உள்ளது. அது இடும் முட்டை, எந்தப் பக்கம் விழும்?
2.அண்ணன் தம்பி இரண்டு பேர் உள்ளனர். மூன்று மாம்பழங்களை வெட்டாமல் முழுமையாக அவர்களுக்கு பங்கிட்டுத் தரவேண்டும்.
பழம் யாருக்கும் அதிகமாகவோ, குறையவோ கூடாது.
உங்களால் முடியுமா?
விடை:
1. சேவல் முட்டை போடாது.
2.அண்ணன் தம்பி இரண்டு பேர் என்ற சொற்றொடர், அண்ணன் ஒருவன், தம்பி இரண்டு பேர் என்றும் பொருள் தரும். ஆகவே, அவர்கள் மூன்று பேர். மூன்று மாம்பழங்களை ஆளுக்கு ஒன்றாக பிரித்து தந்து விடலாம்.