என். ராஜகுமாரன், பாளையம்கோட்டை: நான், பி.இ., படித்துள்ளேன்; வேலை ஒன்றும் கிடைக்க மாட்டேன் என்கிறது. லாபகரமான வியாபாரம் ஒன்றை துவங்க, என்ன செய்ய வேண்டும்?
'வெரி சிம்பிள்...' உடனே ஒரு, 'நர்சரி ஸ்கூல்' ஆரம்பித்து விடுங்கள்; கோடீஸ்வரனாகி விடலாம்!
* ஆர். கார்த்திக், திசையன்விளை:என் நண்பனாக இருந்தவன், இப்போது விரோதியாகி விட்டானே...
விரோதிகளை வளர்த்துக் கொள்ளக் கூடாது; வளர்த்துக் கொண்டால், மன நிம்மதி கெட்டு விடும். அவர்களுடன் போராடிப் போராடியே நம் காலம் காணாமல் போய் விடும்!
க. லட்சுமி, அம்பா சமுத்திரம்: எதற்காக கவலைப்பட வேண்டும்?
எதற்காகவும் கவலைப் படாமல் இருக்க வேண்டுமே என்று கவலைப்பட வேண்டும்!
ஏ. ராஜா, தென்காசி: ஒருவன் தன்னை, எப்போது,'கெட்டிக்காரன்' எனச் சொல்லிக் கொள்ளலாம்?
அவன், தன்னுடைய தோல்விக்கான உண்மைக் காரணங்களை உணரும்போது!
பொ. பாலாஜி, சிதம்பரம்: நீங்க சூப்பரா காபி போடுவீங்களாமே... நிஜமா?
அவர் என்று, எனது காபியைக் குடித்தார்... விடுங்கள்! தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்ட, 'ஸ்பெஷல்'களையும் அதே சுவையுடன் சமைக்க என்னால் முடியும்!
ந. ராமசாமி, கரூர்: உலகமே அழிந்தாலும், மதுக்கடைகளுக்கு மட்டும் விடுமுறை தர மறுக்கின்றனரே... ஏன்?
தமிழர்களும் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்பதால் தான்!
* அ. கோவிந்தன், கோவில்பட்டி: சமதர்மம் என்கின்றனரே... அப்படி என்றால் என்ன?
மனிதர்கள் அனைவருக்கும் - உலகில் உள்ளோருக்கு, உணவு, உடை, குடியிருப்பு இவைகள் அனைத்தும், சம சவுகரியங்களோடு இருக்க வேண்டும் என்பது தான் சமதர்மம்!
அனிதாகுமார், திருச்சி: நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தில் வந்துள்ளதே? வாக்காளர்களின் எண்ணம் என்னவாக இருக்கும்?
அரசியலுக்கு ரஜினி வருவார் என்றபோது, நடுநிலை வாக்காளர்கள் மகிழ்ந்தனர்; இரு திராவிடக் கட்சிகளும் ஒழிந்து விடும் என்று. ஆனால், அவர், 'ஜகா' வாங்கி விட்டார். நடுநிலையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனால் தான், நாம் தமிழர் கட்சியாவது வரட்டுமே என, வாக்களித்துள்ளனர்!
பி. ஜான்சாலமன், ஆழ்வார்திருநகரி, நெல்லை: பச்சைப் பொய் என்றால் என்ன?
ஆளும் கட்சியினர் மீது எதிர்க்கட்சிகள் கூறுவது; அவற்றில், 90 சதவீதம் இருப்பது தான் பச்சைப் பொய்!