ரஜினி போட்ட, 'ஸ்பீடு பிரேக்!'
அண்ணாத்த படத்தில் நடித்துள்ள, ரஜினியைத் தேடி, பல இயக்குனர்கள் கதை சொல்ல ஆர்வம் காட்டினர். ஆனால், அனைவருக்குமே, ஒரு, 'ஸ்பீடு பிரேக்' போட்டு வைத்துள்ளார், ரஜினி. 'அண்ணாத்த படத்திற்கு, எந்த மாதிரியான வரவேற்பு கிடைக்கப் போகிறது என்பதை அறிந்த பிறகு தான், அடுத்த கதையை தேர்வு செய்யப் போகிறேன். ஒருவேளை, நான் பறந்து பறந்து சண்டை போடும், 'மாஸ் ஹீரோ'வாக நடிப்பதை, ரசிகர்கள் விரும்பாத பட்சத்தில், புதிய படங்களில், பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் பாணியில், என், 'ரூட்'டை மாற்றிக் கொள்ளவும் தீர்மானித்துள்ளேன்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
சுடச்சுட களமிறங்கும், நந்திதா!
பக்கத்து வீட்டு பெண் போன்றிருக்கும், அட்டகத்தி நந்திதாவிற்கு, அந்த தோற்றத்திற்காகவே நடிக்க வாய்ப்பு கொடுத்து வந்தனர். ஆனால், அவருக்கு பட வாய்ப்பு இல்லாததால், கவர்ச்சி ரவுண்டுக்கு வரிந்து கட்டி நிற்கிறார். அதிலும், 'இவரெல்லாம், 'அதுக்கு' செட்டாக மாட்டார்...' என்று, ஒரு காலத்தில், 'கிளாமர்' வேடங்களில், நந்திதாவை நடிக்க வைக்க தயங்கிய இயக்குனர்களே, அவரைப் பார்த்து மலைத்து போயினர். 'இத்தனை நாளும் இந்த விஷயம் தெரியாம போச்சே...' என்று, அவரை சுடச்சுட களத்தில் இறக்கி விடும் சூப்பரான கேரக்டர்களை தயார் பண்ணத் துவங்கியுள்ளனர். அறியாத ஊருக்குப் புரியாத வழி காட்டினாற்போல்!
எலீசா
புடவையில் பேரழகியாக மாறும், நயன்தாரா!
பெரும்பாலும் பெண்களின், 'பேவரிட் டிரஸ்' என்றால், அது, புடவை தான். ஆனால், நயன்தாராவோ, முக்கிய பண்டிகை நாட்களில் மட்டும் தான், புடவையை உடுத்திக் கொள்வதாக சொல்கிறார். 'மற்ற நாட்களில் எப்போதுமே, 'மாடர்ன்' உடையணிந்து, பண்டிகை நாட்களில் மட்டும், புடவைக்கு மாறும்போது, அளவற்ற சந்தோஷம் கிடைக்கிறது. அதோடு, மற்ற உடைகளை விட, புடவையில் நான் பேரழகியாகி விட்டது போன்று உணர்கிறேன். புடவை அணியும்போது, என்னை விதவிதமான கோணங்களில் புகைப்படம் எடுத்து, அவ்வப்போது, பார்த்து மகிழ்ச்சி கொள்கிறேன். என் தோழியருக்கு அந்த புகைப்படங்களை அனுப்பும்போது, பெருமையாக இருக்கிறது...' என்கிறார். அதிசயமான ரம்பை, அரிசி கொட்டுகிற தொம்பை!
—எலீசா
எதற்கும் கவலைப்படாத, விஜய் சேதுபதி!
சினிமாவில் நடிப்பதில் எப்படி, 'இமேஜ்' பார்ப்பதில்லையோ, அதேபோல் தான், நரைத்த தாடியுடன் வெளியில் வருகிறார், விஜய் சேதுபதி. 'இப்படி வருவது, உங்களது, 'இமேஜை' பாதிக்காதா?' என்று, அவரிடம் சிலர் கேட்டனர். 'நான், வில்லனாக நடித்தபோதும், 'உங்களது, 'ஹீரோ இமேஜ்' பாதிக்காதா?' என்று, சிலர் கேட்டனர். அப்போது, 'ஹீரோ என்று, என்னை நான் சொல்லவே இல்லை. நான் நடிகன்...' என்று சொல்லிக் கொண்டே, வில்லனாக நடித்தேன். அதேபோல் தான், இப்போதும் சொல்கிறேன். நான் நடிகன் என்பதை விட, ஒரு யதார்த்தமான மனிதன். அதனால், என் யதார்த்த முகத்தை காண்பிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. எப்போதும் நான் நானாக இருக்கவே ஆசைப்படுகிறேன்...' என்று, கேஷுவலாக சொல்கிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
தற்போதைய இளவட்ட இயக்குனர்கள் சிலர், தன் முந்தைய படக்கதைகளுக்கு புதிய முலாம் பூசி, படமாக்கி வருவதால், உஷாராகி விட்டார், முருங்கைக்காய் மன்னன். தன் கதைக்கருவை எப்படி மாற்றி, அவர்கள் புதிய தோசையாக சுட்டாலும், மோப்பம் பிடித்து விடுகிறார். அதையடுத்து, சம்பந்தப்பட்ட இயக்குனர்களை அழைத்து, 'எனக்கு வெட்ட வேண்டியதை வெட்டி விடு. இல்லையேல், நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு சந்தி சிரிக்க வைத்து விடுவேன்...' என்று, மிரட்டி, சத்தமில்லாமல், கட்டுகட்டாக கரன்சிகளை கறந்து விடுகிறார். முருங்கைக்காய் நடிகர், இப்படி திடீரென்று கதை புலனாய்வில் இறங்கியிருப்பதால், விவகாரமான குடும்ப கதைகளை படமாக்குவோர், பயந்து போய் உள்ளனர்.
'ஒரு காலத்தில், ரியல் எஸ்டேட்காரங்க எல்லாரும், வீட்டின் உள் அலங்கார நிபுணரான, பாக்யராஜுக்கு அடிமையாக இருந்தாங்க. அந்த அளவுக்கு அவரது உள் அலங்காரம் பிரமாதமா இருக்கும்.
'இப்ப நிறைய பேர், அந்த துறைக்கு வந்துட்டாங்க. இருந்தாலும், பாக்யராஜ் அளவுக்கு இப்ப செய்ய முடியலைன்னு சில முதலாளிகள், 'பீல்' பண்றாங்க. அதுக்காக, பாக்யராஜ் செய்த அலங்காரங்களை காப்பியடித்து, சிறிது மாற்றம் செய்து, உருவேத்திட்டு இருக்காங்க, புதுப்பசங்க.
'தொழிலில் நொடித்து போயிருக்கும், பாக்யராஜ் இதைப் பார்த்தார். அந்த மாதிரி காப்பி அடிப்பவர்களை அணுகி, ஆதாரத்துடன் நிரூபித்து, வழக்கு போடுவதாக மிரட்டுகிறார். எதற்கு வம்பு என்று, ஒரு தொகையை கொடுத்து, அவர் வாயை அடைத்து விடுகின்றனர்...' என்று, பேசிக்கொண்டனர், இரு, 'ரியல் எஸ்டேட்'காரர்கள்.
சினி துளிகள்!
* மணிரத்னத்தின், பொன்னியின் செல்வன் படத்தில், ராஜராஜ சோழனாக நடிக்கும் ஜெயம்ரவிக்கு அக்காவாக, குந்தவை என்ற வேடத்தில் நடிக்கிறார், கீர்த்தி சுரேஷ்.
* தனக்கு நடிக்க வாய்ப்பளித்து வரும் இயக்குனர்களிடம், தன் மகன் சாந்தனுவை நாயகனாக வைத்து, படம் இயக்குமாறு கோரிக்கை வைப்பதை வழக்காகக் கொண்டுள்ளார், கே.பாக்யராஜ்.
* தனுஷுடன் கர்ணன் படத்தில் அறிமுகமான மலையாள நடிகை, ராஜிஷா விஜயன், அடுத்து, கார்த்தி நடிக்கும், சர்தார் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
அவ்ளோதான்!