பழங்காலம் தொட்டே கஞ்சா செடிகள், இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மக்களால் பயிரிடப்பட்டு வருகிறது.
'கன்னபிடியோல்' என்று அழைக்கப்படும் கஞ்சா, அதன் மருத்துவ குணத்தின் காரணமாக, இப்போது மக்கள் மத்தியில் மதிப்பை பெற்று வருகிறது.
மருத்துவ குணமுள்ள, 'மரிஜுவனா' செடியை பற்றி பேசும்போது, அதில் உள்ள கன்னபிடியோல் என்ற வேதிப்பொருளைப் பற்றி குறிப்பிடுவர், மருத்துவ அறிஞர்கள்.
கன்னபிடியோல் என்ற வேதிப்பொருள், 'மரிஜுவனா' அல்லது 'ஹெம்ப்' என்ற கஞ்சா செடியிலிருந்து கிடைக்கிறது.
கஞ்சா எண்ணெயின் நன்மைகள்:
* கன்னபிடியோல் அல்லது சி.பி.டி., என்ற ஒரு வகையான எண்ணெய், கஞ்சா செடியிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த எண்ணெயின் சில துளிகளை உணவு, பானம் அல்லது கேப்சூல்களில் அடைத்து சாப்பிடலாம்.
* இந்த எண்ணெய், பொதுவான கவலை, அதீத மன உளைச்சல் மற்றும் எடுத்தற்கெல்லாம் பயப்படும் பிரச்னைகளை குணப்படுத்த, மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது
* 'ஹீமோதெரபி'யின் வீரியத்தை வலுப்படுத்த உதவுகிறது. அதே நேரத்தில், அதன் பக்க விளைவுகளை குறைக்க உதவுகிறது. புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை குறைத்து, அதற்கு எதிராக போராடுகிறது
* முதிய வயதில் ஏற்படும், 'அல்சைமர்' மறதி நோய், வலிப்பு மற்றும் 'பர்கின்சன்' - நடுக்குவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருந்தாக இந்த எண்ணெயை பயன்படுத்தலாம்
* இந்த எண்ணெயில் வீக்கத்திற்கு எதிரான துகள்கள் உள்ளதால், மூட்டு வலி, ஒற்றைத் தலைவலி, தலைவலி மற்றும் நாள்பட்ட வலி போன்ற பிரச்னைகளுக்கு பயன்படுத்தலாம்.
கஞ்சா எண்ணெயின் ஆபத்துகள்:
* உடல் எடை மற்றும் நம்மிடம் இருக்கும் பிரச்னை ஆகியவற்றைப் பொறுத்து, அதை அளவுடன் சாப்பிட வேண்டும். மருத்துவரின் பரிந்துரை மற்றும் அவருடைய மேற்பார்வை இல்லாமல் பயன்படுத்த கூடாது
* மனநிலை மற்றும் நடவடிக்கைகளில் மாற்றம் அல்லது திரிபு ஏற்படலாம்
* ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படலாம்
* கல்லீரலில் பாதிப்பு ஏற்படலாம். போதை மற்றும் ஆல்கஹாலுக்கு அடிமையாகும் வாய்ப்பு ஏற்படலாம்
* இரைப்பையில் பிரச்னை ஏற்படலாம்.
இந்தியா உட்பட, உலகம் முழுவதிலும் உள்ள சமூக ஆர்வலர்கள், கஞ்சா பயன்பாட்டை, சட்டப்பூர்வமாக்க போராடி வருகின்றனர்.
மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில், மருத்துவ காரணங்களுக்காக, கஞ்சாவை பயன்படுத்தலாம் என்று சட்டம் இருக்கிறது. இமாச்சல பிரதேச மாநிலமும், மருத்துவம் மற்றும் நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக கஞ்சா வளர்ப்பதை சட்டமாக்க ஆலோசனை நடத்தி வருகிறது.
தரமிக்க கஞ்சா!
இமாச்சல பிரதேச சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட, 2021 - 22ம் ஆண்டு பட்ஜெட் மீது, முதல்வர் ஜெயராம் தாக்கூர் உரையாற்றுகையில், 'நம் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் கஞ்சா, தரம் மிகுந்ததாக இருக்கும். அதே நேரத்தில், அதை ஒரு கட்டுப்பாட்டோடு வளர்ப்பதற்கு அரசிடம் ஆற்றல் இருக்கிறது...' என்று தெரிவித்தார்.
மருத்துவ சிகிச்சை, மற்ற பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் கஞ்சாவை பயிரிட்டால், பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அவர்களின் பொருளாதார நிலையும் உயரும்.
பாலாஜி கணேஷ்