துாய்மையான அன்பு, அனைவருக்கும் இருக்கிறது. இருந்தும், அன்பு வெளிப்பட்டு விடாதபடி கோபம், ஆசை, பிடிவாதம் முதலான தீய குணங்கள், அதை மூடிக்கிடக்கின்றன. அந்த தீய குணங்களை தாமாகவே விலக்கிக் கொள்பவர்கள், மகான்கள். இயலாதவர்கள், மகான்களை நெருங்கி, அவர்கள் அருளால் நீக்கிக் கொள்வர். அப்படிப்பட்ட மகான் ஒருவர் வாழ்வில் நடந்தது...
மகான் வியாசராயரின் சீடர்களில் ஒருவர், கனகதாசர். ஒரு சமயம், உடுப்பியில் எழுந்தருளியிருக்கும் கண்ணனை வழிபடச் சென்றார், கனகதாசர். ஏதேதோ காரணம் சொல்லி அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.
மனம் வருந்தி, கோவிலின் பின்புறம் நின்று, கண்ணனைத் துதித்தார். அதே விநாடி, கண்ணன், கனகதாசர் பக்கம் திரும்ப, கோவில் சுவரில் வெடிப்பு ஏற்பட்டு, ஒரு துவாரமும் உண்டானது.
கண்ணனைத் தரிசித்து, பாடி மனம் மகிழ்ந்தார், கனகதாசர். கனகதாசருக்காக, திரும்பிய கண்ணன் இன்றும் அப்படியே இருந்து, தரிசனம் தருகிறார்.
கனகதாசரை, எமனின் அவதாரமாக சொல்வர்.
கர்நாடக மாநிலத்தில், மதனபள்ளிக்கு அருகே, கந்துகூர் எனும் பகுதியில், வியாசராயர் தங்கியிருந்த நேரம்.
'குருதேவா... இவ்வூர் ஏரி மதகை, ஒரு பெரும் பாறை அடைத்துக் கொண்டிருக்கிறது. அதனால், இவ்வூரில் தண்ணீர் கஷ்டம் ஏற்பட்டுள்ளது. தாங்கள் தான் அத்துயரைத் தீர்த்து, எங்களைக் காப்பாற்ற வேண்டும்...' என்று முறையிட்டனர், மக்கள்.
அப்போது, குருநாதரை வணங்கி, 'அடியேனுக்கு, மந்திர உபதேசம் செய்து அருள வேண்டும்...' என வேண்டினார், கனகதாசர்.
'இந்த கனகதாசர் எமனுடைய அவதாரம். இவரைக் கொண்டு, மக்களின் துயர் தீர்க்க வேண்டும்...' என, தீர்மானித்தவர், 'நினகேனோ கோணா மந்த்ர?' என, கேட்டார், வியாசராயர்.
கோணா என்ற சொல்லுக்கு, கன்னடத்தில் எருமை என்று பொருள். எமனுக்கு வாகனம் எருமை.
'எமனுடைய அவதாரமான உனக்கு, எதற்கு மந்திர உபதேசம்?' எனும் பொருளில் கேட்டார், வியாசராயர்.
'கோணா' எனும் வார்த்தையையே மந்திர உபதேசமாகக் கொண்டு, அதையே தீவிரமாக ஜபம் செய்தார், கனகதாசர்.
ஜபத்தின் பலனாக, பெருத்த, திடகாத்திரமான ஓர் எருமை அங்கே பிரசன்னமானது. அதைக் கண்டவர், குருநாதரிடம் ஓடிப்போய் கூறினார்.
அந்த எருமையிடம், 'நீ போய், தண்ணீர் வராமல் தடுத்து நிற்கும் அந்தப் பெரும் பாறையை தகர்த்து வா...' என, உத்தரவிட்டார், வியாசராயர்.
எருமையும் பாறையை முட்டித் தகர்த்தது. அடைபட்ட தண்ணீர் பொங்கிப் பிரவாகமாய் பெருக்கெடுத்து ஓடியது. குதுாகலித்தனர், மக்கள்.
அந்த மதகு, 'கோண துாபு' - எருமைக்கடா மதகு என்றும், அந்த ஏரி, 'வியாச சமுத்திரம்' என்றும் அழைக்கப்படுகிறது.
வழிகாட்டி வாழ வைத்த, இப்படிப்பட்ட மகான்கள் பலர் அவதரித்த பூமி, நம் ஞான பூமி!
ஆன்மிக தகவல்கள்!
மணியோசை மங்களகரமானது. இதை எழுப்பினால் தீய சக்திகள் மறைந்து, தெய்வீக சக்தி அதிகரிக்கும். எந்த பூஜையையும் மணி ஒலிக்காமல் செய்ய வேண்டாம்.
பி. என். பரசுராமன்