ராசாத் தீ...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2021
00:00

கண்ணுக்கு மை தீட்டி, விசாலமாக்கி, நீண்ட தலைமுடியை வழித்து முடியிட்டு, சுற்றி பூவால் வளையமிட்டாள், ராசாத்தி. நிலைக்கண்ணாடியில் முகம் பார்த்தபோது, நிஜமாய் அவளுக்கு பிடித்தது.
ஓங்கு தாங்கான உயரம். எடுப்பான நிறம். நீண்ட எழுத்தாணி மூக்கில், செந்நிற பொட்டாய் ஒற்றைக்கல் மூக்குத்தி. வீட்டைப் பூட்டி, வெளியில் நின்ற வண்டியில் ஏறி, புழுதி கிளப்பினாள். அந்த புழுதியோடு சேர்த்து பழைய நினைப்பும் வழித்து, வாசல் வந்தது.

சொம்பை மாதிரி தென்புலத்தில் இருந்த சிறிய ஊரில், 20 ஆண்டுகளுக்கு முன், பெண் பிள்ளைகள் வண்டி ஓட்டுவது பெரிய விஷயம். இப்போது கூட, ஒரு தினுசாய் பார்த்து சிலர், புருவம் நெளிக்கின்றனர்.
ராசாத்தி இங்கே வாக்கப்பட்டு வந்தபோது, அத்தனை சுதந்திரம் தந்தான், முத்தய்யன். ஆசைப்பட்ட அத்தனையையும் செய்தான். அவர்களுக்கு காசியப்பன் தெருவில் அடகுக்கடை இருந்தது. சின்னதும் பெரியதுமாய் நிறைய வியாபாரிகள் இருந்தனர். சரக்கு வந்து இறங்கினாலோ, போட்ட சரக்குக்கு காசு வசூலிக்க ஆட்கள் வந்து நின்றாலோ, கையில் அகப்பட்டதை எடுத்து, முத்தய்யன் கடைக்குத் தான் ஓடி வருவர்.
இன்று வரை, அவர்களுக்கு உற்ற துணையாக தான், இவர்கள் வியாபாரம் போய்க் கொண்டிருந்தது. அந்தியூர் சந்தைக்கு, ஆடு வாங்க போன போது தான், ராசாத்தியை அழைத்து வந்தான், முத்தய்யன்.
'அந்தியூர் சந்தையில அகப்பட்ட அரேபியக் குதிரை...' என்று, ஊர் குசுகுசுக்கும். அப்படி இப்படிச் சுற்றி, ராசாத்தியுடைய பிறப்பொழுக்கம் அத்தனை சுத்தமில்லை என்று, ஜனங்கள் அறிந்து கொண்டது. பிறகு, மற்றவர்கள் பார்வை ராசாத்தியின் மீது மாறித்தான் போனது.
முத்தய்யனை, 'மாமா...' என்று அழைக்கும்போது மட்டும், முன்னே விட்டு பின்னே சிரித்தனர்.
இதெல்லாம் புரிந்து கொள்ளாமல் இல்லை, ராசாத்தி.
ஒருநாள் நிலா காயும் நடுநிசியில், முத்தய்யன் மடி கவிழ்ந்து கேவினாள். அவன் ஆதரவாய் தலை வருடி, 'எதுக்கு ராசாத்தி அழுவுறே?' என்றான்.
'ஊருக்குள்ள யாருக்கும், என் ஒழுக்கத்து மேல அத்தனை உவப்பில்லை. வேரில் இருக்கிற கசப்புத்தேன் பழத்திலயும் இருக்கும்ன்னு நம்புறாக... ஒரு வாய் பேசினா தாண்டலாம்... ஊர் வாய் பேசுதே...' என்றவளை, இறுக தன்னோடு அணைத்தான்.
'யார் நம்பணும் உன்னை... உள்ளிழுத்த மூச்சு வெளியே வந்து தீரும்கிற நம்பிக்கையத்த ஜனங்களா... பதில் சொல்ல ஆரம்பிச்சா, உன் முன்னே ஆயிரம் கேள்வி விழும்... ஓராயிரம் கேலியும் விழும்... 'உன் பார்வைக்கு, நான் அப்படின்னா, அப்படியே இருந்துட்டு போறே'ன்னு பின்பக்க மண்ணை தட்டி உதறிட்டு, போயிட்டே இருக்கணும்...'
அந்த அணைப்பின் நெருக்கமும், உயிரின் இணக்கமும், அவளுக்கு அத்தனை நிம்மதியாய் இருந்தது.
பழ மரத்து கிளிகள் இரை தேட, தேவையற்று நின்றது போல், மற்றவர்கள் தீர்ப்பை பற்றிய கவலையற்று அமர்ந்திருந்தாள். மூன்று ஆண்டு தான், சந்தைக்கு போனவன், ஏதோ ஒரு வகை விஷக்காய்ச்சலோடு வந்து, நாலே நாளில் நாடி சுருண்டன.
ஜுரத்தின் அணத்தலிலும், 'விசனப்படாத ராசாத்தி... என் உருவுதான் உன்னைய விட்டு போகும்; உசிரு இல்ல. எப்பவும் உன் நேர்மைக்கு கட்டுப்பட்டு வாழு... ஊர் நினைப்புக்கு கட்டுப்படாத...' என்று, சொல்லித்தான் போனான்.
அவன் போன பிறகு, அவன் விட்டுப்போன தொழிலும், வீடும், அவளுக்கு பாதுகாப்பாய் இருந்தது. பத்து ஆண்டுகளாய், அவளே அவளாய் மட்டும் நின்றாள்.
கருநாகம் போன்ற அவளின் நீண்ட ஜடையில், மல்லிகை சூடிக்கொள்வது முத்தய்யனுக்கு கொள்ளை இஷ்டம். அவன் போன பிறகு ஒருநாள் கூட, அவள் பூச்சூட மறந்ததில்லை. அவளின் அந்த அலங்காரம் தான், ஊர் வாய்க்கு அவலாய் போனது.
அவள் தனிமைக்கு துணையாக பலர் வலை வீசத்தான் செய்தனர். அவர்களுக்கு தெரிய நியாயமில்லை, அவளுடைய தேவைகள் முத்தய்யனோடு தீர்ந்து போய் விட்டதென்று.
கடையைத் திறந்து, முத்தய்யன் படத்திற்கு பூ மாற்றி, எந்த திசைக்கு திரும்பினாலும், இவளைப் பார்த்து சிரிக்கும் முத்தய்யன் கண்களைப் பார்த்து, காதல் மொழி பேசி கல்லாவில் அமர்ந்தாள்.
கணக்கு நோட்டை பிரித்து, ஆராயத் துவங்கிய நிமிஷம், வாசலில் நிழலாடியது.
செல்வம் நின்றிருந்தான். புன்னகைத்தாள். அவளுடைய கண்கள் அனிச்சையாக நாள்காட்டியை தடவியது.
''சூரியன் கூட சுகவீனப்பட்டு ஓய்வெடுத்தாலும் எடுக்கும். உங்க காசு, சுருக்கு பையில இருக்கிற புகையிலை மாதிரி. தங்கு தாமசம் இல்லாம வந்து சேர்ந்திடும். உன்னைப் போல நாலு பேர் வரவு செலவு செய்தா போதும், எந்த துயரமும் அண்டாது,'' என, பணத்தை வாங்கி, கண்ணில் ஒற்றி கல்லாவில் போட்டு, ரசீதை கிழித்து, நீட்டினாள்.
வாங்கி பாக்கெட்டில் சொருகிக் கொண்டான்.
தயக்கமாய் நின்றான். புருவம் விரித்துப் பார்த்தாள், ராசாத்தி.
''ராசாத்தி, நான் சொல்லல... பொஸ்தகங்களுக்கு கவிதை எழுதி போடுவேன்னு... இன்னைக்கு வாரமலர்ல, என் கவிதை ஒண்ணு வந்திருக்கு,'' என்றான்.
ஆரவாரமாய் கை தட்டியவள், ''என்னய்யா சொல்ற, வாரமலர்லயா... அதொண்ணும் அம்புட்டு சுளுவான வேலை இல்லய்யா... அட்ரா சக்கை,'' என, சந்தோஷப்பட, அவனுக்குள் உற்சாகம் தொற்றிக் கொண்டது.
பனியனுக்குள் கை விட்டு புத்தகத்தை எடுத்து, அவனுடைய கவிதை வெளியான பக்கத்தை பிரித்துக் காட்டினான்.
'தன்னில் விழுந்ததெல்லாம் மட்க வைத்த மண் தான்
விதையை மட்டும் முளைக்க வைத்தது...
எங்கு விழுந்தாலும் விதையாக இரு
விருட்சமாக எழுவாய்...' வாய்விட்டு வாசித்த ராசாத்தி, கை தட்டினாள். செல்வத்திற்கு வெட்கமாக இருந்தது. ஆனால், அந்த ஆர்ப்பரிப்பு பிடித்தமாக இருந்தது.
காலையில், இதே செயலை, சரோஜாவிடம் செய்தபோது, நடந்த காட்சி கண்ணில் படமாடியது. அலட்சியமாய் பார்த்து, அடுத்த வேலைக்குப் போனாள்.
'ஏன் சரோஜா நல்லா இல்லயா?'
'அது கெடக்கடும். எம்புட்டு காசு தருவாங்க இந்த நாலு வரிக்கு? என்னமோ சின்ன புள்ளையாட்டம் கவிதை, கதை எழுதறேனுட்டு...' என்றாள்.
எத்தனை வயசானாலும், அங்கீகாரத்திற்கும், பாராட்டுக்கும், மனசு ஆசைப்படத்தான் செய்கிறது.
உலகத்தில் எதுவுமே போதுமானதாய் இருப்பதில்லை. நிற்கும்போது நடக்கவும், நடக்கும்போது ஓடவுமே பிரயாசைப்படுவாள், சரோஜா. அடுத்த கட்டத்திற்கு ஆசைப்படலாம். ஆனால், அடுக்கடுக்காய் ஆசை வந்தால் அதற்குப் பேர் பேராசை.
எப்போது சலிப்பும், வெறுப்புமாய் எரிந்து விழும் அவளுடைய குணம், அவனுக்குள் ஒவ்வாமையை உண்டாக்கியது.
இப்போதெல்லாம் செல்வத்தின் கவிதைகள், அடிக்கடி புத்தகத்தில் பிரசுரமாக, அதை எடுத்துக் கொண்டு ராசாத்தியிடம் ஓடோடி வந்தான்.
அவள் பாராட்டும், அங்கீகாரமும் பிடித்திருந்தது. பக்குவம் சொல்லும் குணமும், பேச்சு முடிவில் எப்போதும் சிதறவிடும் சிரிப்பும் பிடித்திருந்தது.
இதையெல்லாம் ஒருநாள் அவன் சொன்னபோது, அதற்கும் சேர்த்து சிரித்தாள்.
''இதப்பாருய்யா நீ ஏதோ வெள்ளந்தியா சொல்ற... நானும் விகல்பம் இல்லாம கேட்டுக்கிறேன். நெருப்பைத் தொட்டா மட்டுமில்ல, பனிக்கட்டியைத் தொட்டாலும் தான் பொறுக்க முடியாம கையை உதறுறோம்.
''இந்த ராசாத்திக்கு, ஊருக்குள்ள அம்புட்டு நல்ல பேரில்ல. அதுக்கு நான் வருந்தவும் இல்ல. நீ நல்லவன்னு எனக்குப் புரியுது, உன் பொஞ்சாதிக்கு புரியுமா?'' என்று சொல்லி, அவள் சிரித்தபோது, சிலிர்ப்பாய் நிமிர்ந்து பார்த்தான்.
அவள் உருவில் மட்டுமல்ல, ஒழுக்கத்திலும் நறுவிசானவள் என்பதற்கு, இதற்கு மேல் சாட்சி வேண்டுமா?
அவளுடன் நட்பாடுவதில் பெருமையாக உணர்ந்தான்.
அன்று, முத்தய்யன் நினைவு நாள். அவனுக்கு மலைக்கோவில் வருவதென்றால் பெரும் இஷ்டம். இந்நாளில் எப்போதும் தவறாமல் வந்து விடுவாள், ராசாத்தி.
இன்று வந்தபோது, செல்வம் குடும்பமும், குழந்தைக்கு முடி இறக்க வந்திருந்தது. ஊர்க்காரி என்ற நினைப்பு கூட தட்டுப்படாமல், கண்டதும் முகம்கோணினர், பெண்கள்.
அரசல் புரசலாய், ராசாத்தி கடைப்பக்கம், செல்வம் தென்படும் சங்கதி, சரோஜா காதுக்கு வந்து கொண்டு தான் இருந்தது. இப்போது ராசாத்தி அங்கு வந்தது கூட, செல்வத்தின் கைங்கரியம் தான் என்று, அவள் மனசு குறி சொன்னது.
''என்ன, பிள்ளைக்கு முடி இறக்க வந்தீகளா?'' வலிய சென்று விசாரித்தாள், ராசாத்தி.
''க்கும்... காலநேரத்துல எல்லாம் இறக்கிடணும்... இல்லாட்டி, அது எழுந்து நின்னு ஆட்டம் போட்டு எவ குடியையும் கெடுக்கும்,'' சரோஜாவின் அம்மா, ராசாத்தியின் கூந்தலைச் சுற்றிக்கிடந்த பூவை பார்த்து சொல்ல, அவள் முகம் சடுதியில் சுணங்கியது.
''எல்லாம் அளவோட இருக்கணும் ராசாத்தி... அயர்ச்சியா இருந்தாலும் சரி, உணர்ச்சியா இருந்தாலும் சரி, கட்டுப்படுத்தி வை. அதுதான் உன்னை நம்பி கட்டிவனுக்கு, நீ செய்யிற மருவாதை... அவன் உருவம் இல்லாம போய் இருக்கலாம்... ஆனா, அருவமா எங்கனாச்சும் இருந்து காணுவான் தானே.''
நெருஞ்சி முள்ளை நெஞ்சில் அறைந்துவிட்டு ரெண்டெட்டு நடந்தனர்.
இவள் கவிதை தோழன் செல்வம், கடைக்கண்ணால் மன்னிப்பு கேட்டு, பைகளை துாக்கி, அவர்களை பின் தொடர்ந்தான்.
ஒருதுளி கண்ணீர் முத்து உருண்டோடி, புறங்கையில் விழுந்து தெறித்தது.
''செத்த நில்லுங்க,'' குரல் ஓங்கினாள்.
நின்று, திரும்பிப் பார்த்தனர்.
முல்லைப் பல்லில் சிரித்து, ''மனசாட்சிக்கு மீறின சாமியா உலகத்துல இல்ல... அதுக்கு தெரியாதா எது நல்லது கெட்டதுன்னு?''
''அதுக்கு கட்டுப்பட்டு வாழ்றதா சொல்ற நீ, எதுக்கு தட்டுக்கெட்டு போறியாம்?''
குனிந்து, சரோஜாவின் முகம் நோக்கி, ''தப்பை நினைக்காதவன், சட்டத்தை தெரிஞ்சுக்க வேண்டிய தேவையில்லை. அவனுக்கு மனசாட்சியே பெரிது. உண்ணறதும், உடுக்கறதும் அடுத்தவரை வசீகரிக்க இல்ல.
''நீ போட்ட சட்டத்துக்குள்ள நிக்காட்டி நான் சரியில்லைன்னு சொன்னா, தப்பு என்கிட்ட இல்ல, உன் எண்ணத்துல இருக்கு... புருஷன் என்ன பூவுக்கும், பொட்டுக்கும் ஒப்பந்தக்காரனா... ஒப்பந்தம் காலாவதி ஆனதும் உதறிட்டுப் போக...
''உசிரோட இருக்கும் வரைக்கும், புருஷனை, மனுஷனா மதிக்காம... அவன் போன பிறகு, அவன் தந்ததாச் சொல்ற பூவையும், பொட்டையும் எடுத்தென்ன ஆகப்போகுது... உடம்பை மட்டுமல்ல, பலநேரம் மனசைத் தேடியும் ஆம்பிளை ஓடுவான்.
''உன் உடம்பை மட்டுமல்ல, மனசையும், அந்த மனசு நிறைய அன்பையும், அவனுக்கு உண்மையா கொடு... அதுக்கப்புறம் அவன் தப்பு செய்ததா அவனே சொன்னாலும் நீ நம்ப மாட்டே,'' எனக்கூறி, குழந்தையின் கன்னத்தில் மென்மையாய் தட்டி, கோவிலை நோக்கி நடந்தாள், ராசாத்தி.

எஸ். பர்வின் பானு

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
03-ஜூன்-202119:07:04 IST Report Abuse
Balaji நல்ல, நிறைவான மற்றும் இயல்பான கதை. சிறப்பு.
Rate this:
Cancel
நிர்மலா பள்ளிக்கரணை அருமை அருமை. குறை காணும் கண்ணுக்கு நிறை தெரியாது. எனக்கு நிறை நிறையவே தெரிகிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் பேர் பார்த்து உங்களை வாழ்த்த சங்கடப்படுபவர்களை புறம்தள்ளிவிட்டு இன்னும் அழகான படைப்புகளை தாருங்கள்.
Rate this:
Balaji - Chennai,இந்தியா
03-ஜூன்-202119:04:36 IST Report Abuse
Balajiஉங்கள் பேர் பார்த்து உங்களை வாழ்த்த சங்கடப்படுபவர்களை புறம்தள்ளிவிட்டு இன்னும் அழகான படைப்புகளை தாருங்கள். இது தேவையா? பின்னூட்டலில் ஒரு பிற்போக்கு ஓட்டல்.....
Rate this:
Girija - Chennai,இந்தியா
04-ஜூன்-202110:14:27 IST Report Abuse
Girija@Balaji - chennai, மிகவும் சரி ..போற போக்கில் கொளுத்தி போடற வேலை. அப்துல் கலாம் போலும் வரவேண்டும் என்று ஜாதி மதம் பேதமில்லாமல் நாம் நம் பிள்ளைகளை வளர்க்கிறோம் .. இது கலாம் என்றாலே கலகம் என்ற கோஷ்டியை சேர்ந்தது ....
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
31-மே-202109:20:35 IST Report Abuse
Girija பட்டிமன்றம் நடக்கும் போது கம்பராமாயணம் சிலப்பதிகாரம் உதாரணம் காட்டி பேசும் பேச்சாளர் திடிரென்று உச்ச ஸ்தாயில் வெறிபிடித்த மாதிரி பேசுவார் அது போல சாதாரண கதைக்கு தமிழ் இடியம் அண்ட் பிரேசஸ் உபயோகித்து கதை பண்ணிவிட்டார் . அது என்ன பனியனுக்குள் மறைத்துவைத்து வாரமலரை ராசாத்திக்கு மட்டும் காட்ட தோழருக்கு தோன்றியது ? கவிஞர் தாமரையின் சமீபத்திய பதிவில் அதாங்க ஸ்கொல் விவகாரத்தில் இந்த தோழர்களை தோலுரித்து தோரணம் கட்டியுள்ளார் . படியுங்கள் அதை. பெண் தனியாக இருந்தால் எப்படியெல்லாம் பிட்டு போடுவார்கள் என்று ?
Rate this:
chenar - paris,பிரான்ஸ்
02-ஜூன்-202115:55:34 IST Report Abuse
chenarஅது என்னங்க ஸ்கோல் விவகாரம் நம்மவா கலாச்சேத்திரம் என்று தைரியமா சொல்லுங்கோ...
Rate this:
Girija - Chennai,இந்தியா
03-ஜூன்-202110:15:34 IST Report Abuse
Girijaபெண்களுக்கு புரிய வேண்டிய செய்தி கையில் செய்தித்தாளை சுருட்டி வைத்துக்கொண்டு அலையும் அயோக்கிய தோழர்களை பற்றித்தான் . இந்த விஷயத்திலும் உதவி செய்கிறேன் என்ற போர்வையில் உள்ளே நுழைய பார்ப்பார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X