பரிசு வந்தது... நிம்மதி போச்சு!
என் தோழி, அவள் மாமியார் மற்றும் கணவருடன், பிரபல, 'டிவி' சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். வீட்டில், மாமியாரால், கணவன் - மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்னை மற்றும் உறவினர்களால் மாமியார் - மருமகளுக்கு இடையே நடக்கும் பிரச்னை என, அனைத்தையும், 'டிவி'யில் சொல்லி, கை தட்டல்களைப் பெற்று, பரிசுகளையும் அள்ளி வந்தனர்.
பிறகு தான் ஆரம்பித்தது வினை...
'நான் என்ன கொடுமைக்கார மாமியாரா... இனி, நான் எப்படி வெளியே தலை காட்டுவேன்...' என்று, மாமியார் ஒருபுறம். 'நாங்க என்ன உங்கள் குடும்பத்தை பிரிக்கிறோமா...' என்று, உறவினர்கள் ஒருபுறம்.
'சபையில் என்னை, தலையாட்டி பொம்மை என்று எப்படி சொல்வாய்; அலுவலகத்தில் என்னை எப்படி மதிப்பர்...' என்று, கணவர் ஒருபுறம்.
'இவ்வளவு பிரச்னைகளுக்கு நடுவில், நீ ஏன் கூட்டு குடும்பத்தில் இருக்க வேண்டும்; தனிக்குடித்தனம் வந்து விடு...' என்று, தாய் வீட்டினர் ஒரு பக்கம் என, தினமும் ஒரு சண்டையாக, அவளை வாட்டி எடுத்து விட்டனர்.
'குடும்பத்தில் ஆறு மாதமாக நிம்மதியே இல்லை...' என்று புலம்பினாள், தோழி.
கேமரா முன் நன்றாக பேசி பிரபலமாக நினைத்து, குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்னைகளை சுவாரசியமாக கூறி, நிம்மதி இழந்தவர் பலர்.
எனவே, பொது இடத்தில் பேசும் முன், எதையும் யோசித்து பேச வேண்டும். எங்கு, எவ்வளவு குறை கூறினாலும், திரும்ப வந்து வாழவேண்டியது, நம் குடும்பத்துடன் தான் என்பதை பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் நினைவில் கொள்ள வேண்டும்.
திருமணத்திற்கு முன், காதலர்களாக, 'டிவி' நிகழ்ச்சியில் பங்கேற்று, அதற்கு பின் பிரிந்த ஜோடிகளின் கதைகளும் உண்டு. பிரச்னைகளை பொது இடத்தில் பேசினால், அனுதாபமும், பரிசும் வரும். ஆனால், வாழ்க்கை நரகமாகும் என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
கே.எஸ். கல்பனா, சென்னை.
ஏலம் விடலாமே!
வங்கிகளில் வைக்கப்பட்ட நகைகளை, உரிய காலத்தில் மீட்காவிட்டால், முறைப்படி, பதிவுத் தபாலில் அறிவிப்பு செய்து, ஏலத்தில் விட்டு, பணம் பார்க்கிறது, வங்கி நிர்வாகம்.
காவல் துறையினரால் விபத்து, திருட்டு வழக்கு அல்லது உரிய ஆவணங்கள் இல்லாதது என்று, பல காரணங்களால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், காவல் நிலையத்திலேயே ஆண்டுக் கணக்கில் கிடந்து, துருப்பிடித்து, மக்கி மண்ணோடு மண்ணாக போகிறது.
இதனால், யாருக்கு என்ன லாபம்...
அதை, நீதிமன்றமோ, காவல் நிலையமோ இந்த வாகனங்களை ஏலத்தில் விட்டு, அரசுக்கு வருமானம் ஈட்டி தரலாமே... அரசு சிந்திக்குமா?
— எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.
காதல் செய்ய வேறு இடமே இல்லையா?
சமீபத்தில், வெளியூர் செல்ல, எங்கள் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். அப்போது, காலியான பேருந்தில் ஏறிய கல்லுாரி மாணவனும் - மாணவியும், நடத்துனர் வரும் வரை, 'கடலை' போட்டபடி, அதில் அமர்ந்திருந்த மற்றவர்களை பற்றி கவலைப்படாமல், ஆபாசமாக சீண்டிக் கொண்டிருந்தனர்.
நடத்துனர் வந்தவுடன், அங்கிருந்து நழுவி, மற்றொரு காலியான பேருந்தில் ஏறி அமர்ந்து, அவர்களின் சில்மிஷத்தை தொடர்ந்தனர். இதைப் பார்த்த பலரும் முகம் சுளித்து, முணுமுணுத்தனர்.
மொபைல் போனோடு சுற்றிய சில விடலைகள், அந்த ஜோடியின் காதல் லீலைகளை படம்பிடித்துக் கொண்டிருந்தனர். ஒருவனது மொபைல் போனை பிடுங்கி, அந்த காதல் ஜோடியிடம் காண்பித்து, அறிவுரை கூறி கண்டித்தேன். மேலும், மொபைலில் உள்ள பதிவுகளை அழித்து, அந்த விடலைகளையும் திட்டி அனுப்பினேன்.
பின்விளைவுகளை அறியாமல், பொது வெளியில் அநாகரிகமாக நடந்து கொள்வது சரியா... இப்படிப்பட்டோர் இனியாவது திருந்தினால் நல்லது.
- எஸ். விஜயன், கடலுார்.