இப்போதுள்ள கம்ப்யூட்டர் யுகத்தில், ஒவ்வொரு வார்த்தையாகக் கூட பாட வைத்து, பதிவு செய்துவிட முடியும். ஆனால், அன்றைய கால கட்டம் அப்படியல்ல. இசை பாடல்களை, ஒரே, 'டேக்'கில் பதிவு செய்ய வேண்டும். நடுவில் யார் தப்பு செய்தாலும், மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
இவ்வளவு சிரமப்பட்டு சினிமா பாடல்களை, பதிவு செய்யும்போது, 'ரிக்கார்டிங் ஸ்டூடியோ' அருகில் உள்ள மரங்களில் வந்தமரும் பறவைகளின் ஒலி, தொந்தரவாக இருக்கும். இதற்காக, பதிவு செய்வதற்கு முன், அதிர்வேட்டு போடுவர். சத்தத்தை கேட்ட பறவைகள் அங்கிருந்து பறந்து சென்று திரும்ப வருவதற்குள், வேலையை முடித்து விடுவர்.
ரேடியோ ஒலிப்பதிவாளராக,
எஸ்.வி.சேகர் ஆனதும், மொட்டை மாடி தான்; அவரது, முதல், 'ரிக்கார்டிங்' மையம். சினிமாக்காரர்கள் பயன்படுத்தும் அதே அதிர்வேட்டு முறையை பயன்படுத்தி, மொட்டை மாடியில், அவரது முதல் விளம்பர ஒலிப்பதிவை செய்தார். அந்த, 'சாம்பிளை' மும்பைக்கு அனுப்பி வைத்தார், அவரதுஅப்பா.
அதைக் கேட்ட, மும்பை அதிகாரி, 'உங்களிடம், 'சாம்பிள்'தானே கேட்டோம்; ஏன் ஒரிஜினலை அனுப்பியிருக்கிறீர்கள்...' என்றனர். அந்த அளவிற்கு எஸ்.வி.சேகரின் ஒலிப்பதிவு துல்லியமாக இருந்திருக்கிறது.
'ஆகா... நாம இப்ப, 'சவுண்ட் இன்ஜினியர்' ஆகி விட்டோம்...' என்று, மனதிற்குள் சந்தோஷப்பட்டார்.
இப்படி சிறு வயதிலேயே, நாடகத்தின் ஒலிப்பதிவில் பல புதுமைகளையும், தொழில்நுட்பத்தையும் செய்து, கெட்டிக்காரன் என்று பெயர் எடுத்தார். இருப்பினும், 'சினி போட்டோகிராபி' வேண்டாம் என்ற, அவரது அப்பாவின் விருப்பத்தை ஏற்று, 'பிலிம் இன்ஸ்டிடியூட்'டிற்கு அடுத்த கட்டடத்தில் இருந்த, சென்ட்ரல் பாலிடெக்னிக்கில் படித்தார்.
எஸ்.வி.சேகரிடம் ஒரு பழக்கம். தேர்வு வருகிறது என்றால், அன்றைய தேர்வுக்கான பாடத்தில், கடந்த நான்கு ஆண்டுகளாக என்ன மாதிரியான கேள்விகள் கேட்டனர் என்பதை வைத்து, ஆராய்ச்சி நடத்துவார்.
இந்த தேர்வில் இந்த கேள்விகளைத்தான் பெரும்பாலும் கேட்க முடியும் என்று முடிவு செய்து, தேர்ந்தெடுத்த கேள்விகளுக்கான பதிலை மட்டும் படித்துச் செல்வார். இந்த கல்வித் தொழில் நுட்பமும் அவரை கை விடவில்லை. ஆனால், வேலைக்கு போவதில்லை என்பதில் தீர்மானமாக இருந்து விட்டார்.
அப்பாவின் நண்பர், கே.எஸ்.
நாகராஜன் என்பவர், வாஷிங்டனில் திருமணம் என்ற நாடகம் நடத்திக் கொண்டிருந்தார். அந்த நாடகத்திற்கு டிக்கெட் வாங்கி வரும்படி, எஸ்.வி.சேகரை, அவரிடம் அனுப்பினார், அப்பா.
அவரைப் பார்த்ததும், டிக்கெட் கொடுப்பதற்கு பதிலாக ஏற இறங்க பார்த்து, 'இவன் சரியா வருவான்னு தோணுது... உடை மாற்றி கூட்டிட்டு வாங்க...' என்று, சொல்லி விட்டார்.
'எதற்கு நான் சரியாக வருவேன்; என்ன உடை மாற்றணும்...' என்று, தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தவருக்கு, சேலையை சுற்றிவிட்டு, பெண் வேடம் கொடுத்தனர்.
'சார்... எனக்கு மீசை இருக்குது...' என்று, கத்தினார்.
'சும்மாயிரு; இப்ப இருக்கிற பொண்ணுங்க சில பேருக்கு, மீசை இருக்குது...' என்று சொல்லி விட்டார். நாடகத்தில் நடிக்க வரவேண்டிய கதாநாயகி வராததால், டிக்கெட் வாங்க போன
எஸ்.வி.சேகர், கதாநாயகி ஆனார்.
எஸ்.வி.சேகரின், 18வது வயதில், கோவை மத்திய சிறைச்சாலையில் நடந்த நாடகத்தில், அவருக்கு முறைப்படி, 'மேக் - அப்' போட்டு, பொட்டு வைத்து, முதலில் நடிகராக்கியவர், நடிகர் வி.கோபாலகிருஷ்ணன் தான்.
அப்போது, எஸ்.வி.சேகரிடம், 'கலைத்துறையில் யாரிடமும் நன்றியை எதிர்பார்த்து விடாதே...' என்று கூறியுள்ளார். இன்று வரை, யாரிடமும் பொறாமையோ, விரோதமோ, வருத்தமோ இல்லாமல் இருக்கிறது என்றால், அதற்கு காரணம், அன்று அவர் சொன்ன இந்த வார்த்தை தான்.
— தொடரும்
இவரை பற்றி அவர்
என் அப்பா, எஸ்.வி.சேகர் என்று சொல்லிக் கொள்வதில், எப்போதுமே எனக்கு பெருமை தான். அவர் நாடகத்திலும், சினிமாவிலும், நகைச்சுவை நடிகராக நடித்தாலும், என்னை, வேகம் சினிமா மூலமாக, 'ஹீரோ'வாக அறிமுகம் செய்தார்.
எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல், சினிமா தான் இவர் பின்னால் வந்திருக்கிறதே தவிர, சினிமா பின்னால் இவர் போனதே இல்லை.
எனக்கு, காலை, 5:00 மணிக்கு படப்பிடிப்பு என்றால், 4:00 மணிக்கு, 'மேக் - அப்' முடித்து, 'செட்'டில் இருப்பேன். என்ன தான் எனக்கு உடம்பிற்கு முடியவில்லை என்றாலும், காட்சியில் நடித்துக் கொடுத்து விடுவேன். எல்லாம், என் அப்பா எடுத்த பாடம்.
— மகன், அஷ்வின் சேகர்
எல். முருகராஜ்