பா-கே-ப
அலுவலகத்தில், மதிய உணவு இடைவேளைக்கு பின், ஆசிரியரின் அறையிலிருந்த, புத்தக அலமாரியை சுத்தம் செய்து கொண்டிருந்தேன்.
ஒரு தட்டில், உதிரியாக சில படைப்புகள் தாறுமாறாக கலைந்து கிடக்க, ஒழுங்காக அடுக்கி வைக்க முற்பட்டேன். அதில், 'ரிப் நீரோட்டம்' என்ற தலைப்பில், தமிழில் ஒரு கட்டுரை கண்ணில் பட்டது.
அதுபற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்திலும், யார் எழுதியது என்று அறியவும், பக்கங்களை புரட்டினேன். முனைவர் வீ.எஸ்.சந்திரசேகரன், ஓய்வுபெற்ற முதன்மை விஞ்ஞானி, மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் என்றிருந்தது.
படிக்க ஆரம்பித்தேன். அக்கட்டுரையின் சுருக்கம் இதோ:
செய்தித் தாள்களிலும், 'டிவி' சேனல்களிலும் நாம் அடிக்கடி அறியும் ஒரு சம்பவம், அவ்வப்போது கடலில் மூழ்கி இறந்தவர்கள் பற்றியது.
கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்கள், அலையால் இழுத்துச் செல்லப்பட்டு, பிறகு அவர்களது உடல்கள் சில கி.மீ. துாரம் தள்ளி கரை ஒதுங்குகிறது. ஆழ் கடல் இல்லாமல், இடுப்பளவு அல்லது நெஞ்சளவு ஆழத்தில் இவை நடப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நீச்சல் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், இவ்வாறு கடலுக்குள் இழுத்துச் செல்லும் ஆபத்தை, 'ரிப் நீரோட்டம்' என்று அழைப்பர்.
இத்தகைய ரிப் நீரோட்டம், கடற்கரை ஓரங்களில் அலையடிக்கும் இடத்தில் ஏற்படுவது. இந்த நீரோட்டம், ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறுகலான நீரோட்டமாக கடற்கரையிலிருந்து கடலை நோக்கி வேகமாகவும், பலம் பொருந்தியதாகவும் உருவாகக் கூடும்.
இதில் சிக்கிக் கொண்டோர், என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கு முன்பே, கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுவர். அவ்வாறு இழுத்துச் செல்லப்பட்டோர், பயத்தாலும், குழப்பத்தாலும் கரையை நோக்கி நீந்தி வர முயற்சி செய்தும், முடியாமல், உடல் சோர்வுற்று, மூச்சுத் திணறி இறந்து விடுகின்றனர்.
கடற்கரையில் கணுக்கால் அல்லது முழங்கால் அளவு நீரில் நிற்கும்போது, அலை வந்து திரும்பும்போது, நம் கால்களை இழுப்பது போன்று உணர்கிறோம் அல்லவா... இது ஆபத்தில்லாதது. இதை, ரிப் நீரோட்டம் என, தவறாக எண்ணக் கூடாது.
ரிப் நீரோட்டம் என்பது, நம் உடல், கடல் நீரில் ஓரளவு மிதக்கும் நிலையில் இருந்தால், நம்மை வேகமாக கடலுக்குள் இழுத்துச் சென்று விடும். அந்த நீரோட்டத்தை எதிர்த்து போராடாமல், அதன் திசையிலேயே சென்று, கொஞ்சம் கொஞ்சமாக பக்கவாட்டில் நீந்தி, கால்வாய் போன்ற அந்த நீரோட்டத்திலிருந்து தப்பி விடலாம்.
ஆனால், இதைப்பற்றி விபரம் தெரியாதவர்கள், நீரோட்டத்தின் பாதையிலேயே எதிர்த்து, கரையை நோக்கி நீந்தி வருவர். தங்களால் முடிந்த வரை முயன்று, தோல்வியடைந்து, கடலில் மூழ்கி விடுகின்றனர்.
வளர்ந்த நாடுகளில், கடற்கரையில் பொழுதுபோக்கிற்கு குளிக்க வருவோர், நீரில் சிக்கி தத்தளிக்கும்போது, கடற்கரையோர பாதுகாப்பு நீச்சல் வீரர்கள், அவர்களை தொலைநோக்கி மூலம் பார்த்து, உடனே சென்று காப்பாற்றுவர். இப்படி காப்பாற்றப்படுவோரில், 80 சதவீதம் பேர், இதுபோன்ற, ரிப் நீரோட்டத்தில் சிக்கியவர்கள் தான்.
இத்தகைய ரிப் நீரோட்டத்தை, முறையாக பயிற்சியெடுத்த நீச்சல் வீரர், கண்டுபிடித்து விடுவார். இது, கரையிலிருந்து கடலை நோக்கிச் செல்லும் ஒரு அலையில்லாத சாலை போல அல்லது வாய்க்கால் போல இருக்கும்.
இந்த ரிப் நீரோட்டம், சற்று துாரம் கடலை நோக்கி சென்ற பிறகு வலுவிழந்து விடும். எனவே, ரிப் நீரோட்டத்தில் சிக்கியவர்கள், பதட்டப்படாமல் அந்த நீரோட்டத்தின் திசையிலேயே சென்று, பிறகு பக்கவாட்டில் நீந்தி வந்து விடலாம்.
மேலும் சில தற்காப்பு நடவடிக்கைகள்:
* கிணறு, ஆறு, குளங்களில் நீச்சல் அடிப்பது போல அல்ல, கடல் நீச்சல். உள்ளிழுக்கும் கடல் அலையின் தாக்கம், அதன் உயரத்தையும், வேகத்தையும் பொறுத்து மாறுபடும். நீச்சல் தெரிந்த திறமைசாலிகள் கூட, இங்கு கரை சேர முடியாது
* ஒவ்வொரு கடலும் ஒவ்வொரு இயல்பில் இருக்கும். உதாரணமாக, திருச்செந்துாரில், கரையிலிருந்து, 1 கி.மீ., துாரத்துக்கு முன்பே அலைகளை, பாறைகள் தடுத்து நிறுத்தி விடுவதால், அலையின் வேகம் குறைவு. இதனால், இதை, 'பாதுகாப்பான கடல் பகுதி' என்று சொல்லலாம். இதுவே, சென்னை, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் அலை ஆக்ரோஷமாக இருக்கும் என்பதால், இவை, 'ஆபத்தான கடல் பகுதி'கள்
* கடல் குளியலை சாகசமாக நினைப்பது, மற்றவர்கள் முன்னிலையில் பந்தா செய்வது, ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு ஆழத்துக்கு செல்வதெல்லாம், உயிர் பறிக்கும் ஆபத்துகள்
* கடலில் குளிக்க ஆசைப்படுவோர், குறைந்தபட்ச விலையாக, சில ஆயிரம் ரூபாயிலிருந்து கிடைக்கும், 'லைப் பாய்' - காற்று நிரப்பிய டியூப் அல்லது 'லைப் ஜாக்கெட்' போன்றவற்றை பயன்படுத்தலாம்
* கடலில் குளிக்க காலை, 10:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை பாதுகாப்பான நேரம். அமாவாசை, பவுர்ணமி தினம் மற்றும் அதற்கு முன், பின் இரண்டு நாட்களில் அலையானது, ஆக்ரோஷத்துடன் கரையை தாக்கும் அல்லது உள் வாங்கும். எனவே, இந்த நாட்களிலும் மற்றும் காற்று அதிகமாக வீசும்போதும், மழை பொழிகிற போதும், கடல் பக்கம் செல்ல வேண்டாம்
* சென்னை மெரினா கடற்கரையில் மட்டும் ஆண்டுக்கு, 50க்கும் மேற்பட்டோர், கடல் அலையில் சிக்கி இறந்து போகின்றனர். இந்த கடற்கரையை பொறுத்தவரை, வடகிழக்கு பருவக்காற்று வீசும், அக்டோபர் முதல் ஜனவரி மாதங்களில், கடல் அலை ஆக்ரோஷமாக இருக்கும்.
தென்மேற்கு பருவக்காற்று வீசும் மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை, சில நாட்கள் சாதாரணமாகவும், சில நாட்கள் வேகம் அதிகரித்தும் காணப்படும். ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை, பெரும்பாலும் அலையின் உயரம் குறைவாகவும், ஆக்ரோஷம் இல்லாமலும் காணப்படும்.
படித்து முடித்ததும், 'கடலில் இத்தனை ஆபத்து உள்ளதா?' என்று யோசித்தபடி நின்றிருக்க, உள்ளே வந்தார், ஆசிரியர்.
'மணி... உனக்காக தான் இக்கட்டுரை எடுத்து வைத்திருந்தேன். பா.கே.ப., பகுதியில் வெளி வந்தால், பலருக்கும் எச்சரிக்கை கொடுத்தது போல் இருக்கும் அல்லவா?
'கடலில் குளித்த கல்லுாரி மாணவர்களை அலை இழுத்துச் சென்றது; ஆக்ரோஷ அலையில் சிக்கி, சிறுவர்கள் பலி போன்ற செய்திகள் இனி வராமல் இருக்கட்டும்...' என்றார், ஆசிரியர்.