* அரங்க.சேகர், சென்னை: ஏழு பேர் விடுதலையாக வாய்ப்புள்ளதா?
தமிழக முதல்வர், ஜனாதிபதிக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதம், 'ஷ்ரெட்டிங் மிஷினுக்கு' தான் செல்லும் என, நினைக்கிறேன்!
கோ. குப்புசுவாமி, சங்கராபுரம்: கமல் கட்சியிலிருந்து எல்லாரும் வெளியேறி வருகின்றனரே... இதுபற்றி...
போகிற போக்கைப் பார்த்தால், கமல் மட்டுமே அவர் கட்சியில் இருப்பார் போல் தெரிகிறது!
ஆர். மனோகரி, கடையம்: நடந்ததையே நினைத்திருந்தால்...
மன நிம்மதி நிச்சயம் பறிபோய் விடும். நடந்த கெட்டவைகளை மனதை விட்டு துாக்கி எறியுங்கள்!
* ஆர். தியாகு, நெல்லை: நண்பன் ஒருவன் என்னைத் திட்டிக் கொண்டே இருக்கிறானே...
அதைப் பற்றி கொஞ்ச நேரம் சிந்தியுங்கள்; பின்னர் அதை மறந்து விட்டு, அடுத்த வேலையைப் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள்!
ஆர். சாந்தி, பாளையங்கோட்டை: நமக்கு வேண்டியது மன அமைதியா?
ஆமாம்! பல லட்சங்கள் கொடுத்து, வைர நெக்லஸ் வாங்கி விடலாம்! ஆனால், எத்தனை லட்சங்கள் கொடுத்தாலும் மன அமைதியை வாங்க முடியுமா?
கே. கலா, திசையன்விளை: நான், உங்களை சந்திக்க விரும்புகிறேன்... என்ன செய்ய வேண்டும்?
ஒவ்வொரு ஞாயிறும் நாம் சந்தித்துக் கொண்டே தானே இருக்கிறோம். ஒவ்வொரு ஞாயிறும், 'வாரமலர்' வாங்குங்கள் நம் சந்திப்பு தொடரும்!
* சுகந்தி முத்து மன்னார், சென்னை: எடப்பாடியார், தான் இருந்த அரசு இல்லத்திலேயே தொடர்ந்து இருக்க கோரிக்கை வைத்ததையும், அதை தமிழக அரசு ஏற்றுக்கொண்டதையும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
அவர் சென்னையில் வாடகை வீடு தேடி இருக்கிறார். 'அரசியல்வாதிகளுக்கு வீடு கொடுக்க மாட்டோம்...' என, அனைவரும் மறுத்து இருக்கின்றனர். எதிர்க்கட்சி தலைவராகி விட்டாரே... அவரது கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்!