மக்கள் சேவையில், நிக்கி கல்ராணி!
'கொரோனா' தொற்று காரணமாக, இந்தியா முழுக்க ஏழை, எளிய மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பதால், அவர்களுக்கு உதவுவதற்காக, ஒரு அமைப்பு துவங்கியுள்ளார், நடிகை நிக்கி கல்ராணி. 'பொதுமக்களின் வீடுகளில் வைத்திருக்கும் பழைய ஆடைகள், பைகள், காலணிகள் மற்றும் பாத்திரங்கள் போன்றவற்றை சேகரித்து, அவற்றை விற்று, பணமாக்கி, அதை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப் போகிறேன்...' என, வீடியோவாக, 'சோஷியல் மீடியா'வில் வெளியிட்டுள்ளார். மேலும், 'உதவும் மனம் கொண்டவர்கள், என்னை தொடர்பு கொள்ளலாம்...' என்றும், கூறியுள்ளார்.
— சினிமா பொன்னையா
இளசுகளை, 'கிறுகிறு'க்க வைத்த, ஷ்ரத்தா!
த்ரிஷா, நயன்தாரா, சமந்தா என, அனைத்து நடிகையருமே, தங்களது இடுப்பு, மார்பு, தொடை என, அந்தரங்க பகுதிகளில், பச்சைக்குத்திக் கொள்வதை, 'பேஷன்' ஆகவே கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில், விக்ரம், வேதா உட்பட சில படங்களில் நடித்துள்ள, ஷ்ரத்தா ஸ்ரீநாத், தன் முன்னழகை ஒட்டிய பகுதியில், 'டாட்டூ' குத்தி, சோஷியல் மீடியாவில், புகைப்படமாக வெளியிடும் சாக்கில், 'கிக்'கான, 'போஸ்' கொடுத்து, இளசுகளை, 'கிறுகிறு'க்க வைத்துள்ளார். எல்லாரும் கப்பல் ஏறி ஆயிற்று; இனி, அம்மனார் பொற்பட்டம் கட்டப் போகிறார்!
— எலீசா
சதீஷுக்கு, அடித்த ஜாக்பாட்!
நடிகை சன்னிலியோன், கதையின் நாயகியாக நடிக்கும், ஹாரர் காமெடி படத்தில், காமெடியன் சதீஷ், அவருக்கு, ஜோடியாக நடிக்கும் பாக்கியத்தை பெற்றிருக்கிறார். இந்த அரிய வாய்ப்பு தனக்கு கிடைத்ததை அடுத்து, கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை, பிரார்த்தனைகள் செய்த சதீஷ், 'சன்னிலியோனை உலகிற்கே தெரியும். என்னை தமிழகத்தை தாண்டினால் யாருக்குமே தெரியாது. இப்போது சன்னிலியோனுடன் நடிப்பதால், நானும், 'பார்டர்' தாண்டி போகப் போகிறேன். இதற்காக, சன்னிலியோனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது...' என்று, புளங்காங்கிதம் கொள்கிறார்.
— சி.பொ.,
பார்த்திபன் கொடுக்கும், நெத்தியடி!
'சோஷியல் மீடியா'வில், சினிமாவை தாண்டி, பொது வாழ்க்கை குறித்த பல ஆக்கப்பூர்வமான பதிவுகளை, அவ்வப்போது, 'அப்டேட்' செய்கிறார், நடிகர் பார்த்திபன். சில சமயங்களில், விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட கருத்துக்களையும் வெளியிடுகிறார். ஆனால், யாரேனும் வில்லங்கமான நெட்டிசன்கள், பார்த்திபனை கலாய்ப்பது போன்று விமர்சித்தால், செம காண்டாகி, அவர்களுக்கு,'நறுக்'கென அதிரடியான பதில் கொடுத்து, ஓட வைத்து விடுகிறார்.
'பார்த்திபனிடத்தில் வாயை கொடுத்தால், நமக்கும், வடிவேலு கதி தான்...' என்று, தெறித்து ஓடுகின்றனர், நெட்டிசன்கள்.
சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
* மெரினா நடிகர், என்ன தான் மெகா நடிகையருடன் நடித்தாலும், அந்த படங்கள் காலை வாரி விடுகின்றன. அதனால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அவரது, 'ஹிட்' படங்களில் நாயகியாக நடித்த சில நடிகையர், 'மீண்டும் உங்கள், 'ஹிட் சென்டிமென்ட்'டை தொடருவோம்...' என்று, நடிகருக்கு, ரகசிய அழைப்பு விடுத்து வருவதோடு, அவரே எதிர்பார்க்காத அளவுக்கு, அன்பு உபசரிப்புகளையும் வாரி வழங்குகின்றனர். இதுபோன்ற நடிகையர், அவ்வப்போது, அவர் நடித்து வரும், 'ஸ்பாட்டு'களுக்கும், 'விசிட்' அடிப்பதால், அடுத்தகணமே, 'மேக் - அப்'பை கலைத்து, அவர்களுடன், 'ஜாலி டூர்' அடிக்க புறப்பட்டு விடுகிறார். இதனால், இத்தனை காலமும், நல்ல பிள்ளை என்று, பெயரெடுத்த, மெரினா, 'பார்ட்டி'யின், 'இமேஜ்' சமீப காலமாக, 'டேமேஜ்' ஆகிக் கொண்டிருக்கிறது.
கல்லுாரி பேராசிரியர் இருவர் பேசிக்கொண்டது...
'இரண்டு சாமி பெயர்களை, தன் பெயராக வைத்திருக்கும் பயல் செய்த அக்குறும்பை கேட்டியா?'
'யாரை சொல்றீங்க... என்னாச்சு?'
'அதாம்பா... நம் கல்லுாரியில, கல்ச்சுரல் குழுவுக்கு பொறுப்பாளரா இருக்கிறானே, சிவகார்த்திகேயன். அவன் என்ன செய்தான் தெரியுமா? ஆளே இல்லாத இடத்துல டீ ஆத்துற மாதிரி, காலேஜ் சரிவர நடைபெறாத இக்காலத்துல, கலை நிகழ்ச்சிகள் நடத்தப் போறதா சொல்லிட்டு, பொண்ணுங்களை சேர்த்துட்டு லுாட்டி அடிச்சுட்டு இருக்கிறான்...'
'அடடா... அவன் நல்ல பிள்ளைன்னு நினைச்சுட்டு இருந்தேனே... அவனா இப்படி பண்றான்...' என்றார், இன்னொரு பேராசிரியர்.
சினி துளிகள்!
* அயலான், டாக்டர் படங்களைத் தொடர்ந்து, டாண் என்ற படத்தில் நடிக்கிறார், சிவகார்த்திகேயன்.
* தமிழில் சரியான பட வாய்ப்பில்லாமல் ஆந்திராவில் தஞ்சமடைந்துள்ள, ரெஜினாவை, அங்குள்ள இயக்குனர்கள், கதையின் நாயகியாக நடிக்க வைத்து, அடுத்த லெவல் நடிகையாக்கி விட்டனர்.
* வெற்றிமாறன் இயக்கத்தில் காமெடியன் சூரி கதையின் நாயகனாக நடித்து வரும், விடுதலை படம், எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய, துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து உருவாகி வருகிறது.
அவ்ளோதான்!