'அட, போங்கய்யா... நன்றியாவது, ஒண்ணாவது. இந்த காலத்துல அதெல்லாம் சரிப்பட்டு வராது...' என்று பலர் கூறுவதை கேட்டிருக்கலாம்.
'நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்' என்று, வள்ளுவர் கூறியது பொய்யா?
உதாரணமாக, வீதியில் போய்க் கொண்டிருக்கிறோம். தரையில், 100 ரூபாய் கிடக்கிறது. அது நம்முடையது அல்ல. ஒன்று செய்யலாம்... அருகிலிருக்கும் யாரையாவது அழைத்து, தகவல் தெரிவித்து ஒதுங்கலாம் அல்லது 100 ரூபாயை எடுத்து, ஏழை யாருக்காவது கொடுத்து விடலாம்.
இவ்வாறு செய்வதால், நம்மை அறியாமலேயே நமக்குள் இனம்புரியாத ஓர் இன்பம், உலகமே நம் காலடியின் கீழ் இருப்பதாகத் தோன்றும். உடம்பில் உள்ள, செல்கள் எல்லாம் புத்துணர்ச்சி பெற்று, புதிய உத்வேகத்தை அளிக்கும்.
ஒருசில விநாடிகள், 'நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்' எனும் வள்ளுவர் வாக்குப்படி நடந்ததற்கே இப்படியென்றால், முழுதாகக் கடைப்பிடித்தால், என்னவாகும்?
கம்பரை பலவிதங்களிலும் ஆதரித்தவர், சடையப்ப வள்ளல். அவர் மீதுள்ள நன்றியை வெளிப்படுத்தும் முகமாக, ஓர் அரிய நுாலை எழுதத் தீர்மானித்தார், கம்பர்.
சடையப்பர் தடுத்து, 'அதற்கு பதிலாக, உழவின் மேன்மையை விளக்கும் வகையில், ஒரு நுால் எழுதுங்கள்...' என்றார்.
சடையப்பரின் வேண்டுகோளை ஏற்று, 'ஏர் எழுபது' எனும், 70 பாடல்கள்
அடங்கிய நுாலை எழுதி முடித்தார், கம்பர். அந்நுாலின் அரங்கேற்றத்திற்கு பெருமளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
தெய்வத்தை வணங்கி, சடையப்பருக்கு தன் நன்றியை கண்ணீர் மல்க தெரிவித்த, கம்பர், நுாலை அரங்கேற்றத் துவங்கினார். ஏராளமானோர் கூடிக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, சேதிராயர் எனும் முக்கியஸ்தரை, பாம்பு ஒன்று தீண்ட, விஷம் தலைக்கேறி, மயங்கி விழுந்தார். அனைவரும் கவலையில் ஆழ்ந்தனர்.
தன் விரிவுரையை நிறுத்தி, மேடையிலிருந்து இறங்கி, சேதிராயரை நெருங்கிய, கம்பர், அவர் அருகில் அமைதியாக அமர்ந்தார். கடவுளை வணங்கி, மூன்று வெண்பா பாடல்கள் பாடி, சேதிராயரின் உடலை மென்மையாகத் தடவிக் கொடுத்தார்.
அதே விநாடி, உயிர் நீத்தவரைப் போலக் கிடந்த சேதிராயர், துாக்கத்திலிருந்து எழுபவரைப் போல எழுந்தார்; கூட்டம் ஆர்ப்பரித்தது.
அரங்கேற்றம் தொடர்ந்து நடந்து, முடிந்தது. சடையப்ப வள்ளலோ, ஏராளமான நிலங்களை நன்கொடையாக வழங்கினார்.
நல்ல பழக்கவழக்கங்கள் ஆழமாகப் பதிந்தால், தெய்வ அருள் தானே வந்து கூடும்; அரும்பெரும் செயல்களைச் செய்யும் என்பதை விளக்கும் வரலாற்று நிகழ்வு இது.
பி. என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்!
மகாவிஷ்ணுவுக்கு நெல்லி இலையால் அர்ச்சனை செய்வதும், நெல்லிக்கனியை படைப்பதும் சிறப்பானது. நெல்லி மரம் இருக்கும் இடத்தில், மகாவிஷ்ணு - மகாலட்சுமியுடன் தங்கியிருப்பார்.