ஒருமுறை, நடிகர், என்.எஸ்.கிருஷ்ணனும், அவரது நண்பர்களும் சென்ற கார், சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. புளிய மரத்தில் சாய்ந்தபடி நின்று விட்டது.
காரில் இருந்த அனைவருக்கும் சிறு காயங்கள். அனைவரும் மிகவும் சிரமப்பட்டு, காரிலிருந்து வெளியேறி, சாலையில் அமர்ந்து, தங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சித்தனர்.
விபத்து குறித்து கேள்விப்பட்ட ஊர் மக்கள், ஓடி வந்து, 'என்ன சார் ஆக்சிடெண்டா...' என்று கேட்டனர்.
'இல்லப்பா, ரொம்ப துாரத்துலேர்ந்து வர்றோம். காரை, புளிய மரத்துல சாத்தி வெச்சுட்டு, 'ரெஸ்ட்' எடுக்கறோம்...' என்றார், என்.எஸ்.கிருஷ்ணன்.
ஊர் மக்களும் சிரித்தனர்; காயம் பட்டவர்களும், தங்கள் காயம் மறந்து சிரித்தனர்.
இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டிய நெருக்கடியான காலம் அது. நாகர்கோவில் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக, டில்லியில் இருந்தார், காமராஜர். அப்போது, சிறப்பு விருந்தினராக, டில்லிக்கு வந்திருந்தார், அமெரிக்க அதிபர், நிக்சன்.
காமராஜரின் நேர்மை, எளிமை குறித்து கேள்விப்பட்ட, நிக்சன், அவரை சந்திக்க விரும்பி, 'எப்போது சந்திக்கலாம்...' என்றும் கேட்டிருந்தார்.
'எனக்கும் ஆசைதான். ஆனால், நேரம் இல்லை. நான் ஊருக்கு செல்ல வேண்டும். உடனே கிளம்ப வேண்டியுள்ளது என்று சொல்லி விடுங்கள்...' என்றார், காமராஜர்.
அப்போது, காமராஜருடன் இருந்தவர்களுக்கு அதிர்ச்சி.
அவர்களிடம், 'நிக்சன் பெரிய ஆளா இருக்கலாம். யாரு இல்லைன்னது. ஆனா, நம் அண்ணாதுரை, அமெரிக்கா சென்றபோது, அவரை பார்க்க முடியாதுன்னு, நிக்சன் சொல்லிட்டாரு. நம் ஊர்காரரை பார்க்க விருப்பம் இல்லாதவரை, நாம் ஏன் பார்க்கணும்னேன்...' என்றார், காமராஜர்.
புத்தகங்களை தேடித் தேடி படிப்பார், ஆபிரகாம் லிங்கன். அனைத்து புத்தகங்களையும் வாங்கி படிக்க வசதி இல்லாதபோதும், தன்னை சுற்றி உள்ளவர்களிடம் கடன் வாங்கியாவது படித்து விடுவார். அப்படி அவர் இரவல் வாங்கி படித்த புத்தகம், அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த, ஜார்ஜ் வாஷிங்டன் வாழ்க்கை வரலாறு.
அந்த புத்தகத்தை ஓர் இரவு படித்து விட்டு, ஜன்னல் ஓரமாக வைத்து, துாங்கி விட்டார். இரவில் பெய்த மழை, ஜன்னலோரமாக இருந்த புத்தகத்தை நனைத்து விட்டது.
புத்தகத்தை இரவல் கொடுத்தவரோ, கண்டிப்பானவர். புத்தகத்தை மழையில் நனைத்ததற்காக, அவருடைய தோட்டத்துக்கு மூன்று நாட்கள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என, தண்டனை கொடுத்தார். மகிழ்ச்சியுடன் தண்டனையை ஏற்றுக் கொண்டார், லிங்கன்.
தோட்ட வேலையை சிறப்பாக செய்ததை கவனித்த புத்தகத்தின் சொந்தக்காரர், ஆபிரகாம் லிங்கனே அந்த புத்தகத்தை வைத்துக் கொள்ள சம்மதித்தார்.
கணித மேதை ராமானுஜம், சிறு வயதில், தினமும் தன் வீட்டிலிருந்து சுடுகாட்டு பாதை வழியாக பள்ளிக்கு செல்வது வழக்கம். அவருடன் படித்த பிற மாணவர்கள் அனைவரும், வேறு பாதையில் பள்ளிக்கு சென்றனர்.
அதை கவனித்த அவரது அம்மா, 'நீ மட்டும் சுடுகாட்டு பாதை வழியாக, தினமும் பள்ளிக்கு செல்வது ஏன்?' என்று கேட்டார்.
'பிறப்பு என்பது, நான்கு எழுத்து. இறப்பு என்பதும், நான்கு எழுத்து. நான்கிலிருந்து நான்கை கழித்தால் கிடைப்பது பூஜ்ஜியம். வாழ்க்கை என்பதும், வெறும் பூஜ்ஜியம் தான். இந்த பாடம், என் மனதில் ஆழமாக பதிய வேண்டும் என்பதற்காகவே, தினமும் சுடுகாட்டு பாதை வழியாக பள்ளி செல்கிறேன்...' என்றார், ராமானுஜம்.
நடுத்தெரு நாராயணன்