அன்புள்ள அம்மா —
வயது: 28. எம்.இ., கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடித்து, 'மல்ட்டிநேஷனல்' கம்பெனியில் வேலை செய்கிறேன். ஆறு மாதங்களுக்கு முன், என் பைக்கின் மீது, ஒரு பெண், ஸ்கூட்டியை மோதி விட்டாள். கன்னாபின்னாவென்று அவளை திட்டினேன். பதிலுக்கு, அவளும் திட்டினாள்.
மோதலில் ஆரம்பித்தது, எங்கள் காதல். அதன்பின், அவளை துரத்தி துரத்தி காதலித்தேன். அவளோ, என்னை விட்டு விலகினாள். அவள், அரசுப் பணியில் இருந்தாள்.
ஒருநாள், என் காதலை அவளிடம் கொட்டி விட்டேன்.
என்னை முழுவதும் பேச விட்டு, மெதுவாக, 'நான் ஒரு திருநங்கை. பெண்ணாக மாறுவதற்காக, அத்தனை அறுவை சிகிச்சைகளையும் செய்துள்ளேன். என்னால் ஒரு குழந்தையை பெற்றுத் தர முடியாது. திருநங்கையை திருமணம் செய்து கொள்ள, உங்கள் பெற்றோர் முதலில் சம்மதிக்க மாட்டார்கள். என்னை மறந்து, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்...' என்றாள்.
உண்மையை கூறிய அவள் மேல், காதல் பெருகியது. ஒரு கட்டத்தில் அவளும், என்னை காதலிக்க ஆரம்பித்தாள். பெற்றோரிடம் கூறினேன். கடும் எதிர்ப்பு கிளம்பியது.
எனக்கு இரண்டே கேள்விகள் தான்.
வீட்டை எதிர்த்து, அவளை பதிவு திருமணம் செய்ய விரும்புகிறேன். திருநங்கையை, ஒரு ஆண் திருமணம் செய்து கொள்ள சட்டம் அனுமதிக்கிறதா... திருமணத்திற்கு பின், நாங்கள் வேலை செய்யும் இடங்களில் பிரச்னை வருமா?
எங்கள் இருவருக்கும் தாம்பத்திய சுகம் கிட்டுமா... ஆண் - பெண் குழந்தைகள் ஒன்றை, சட்டப்படி தத்தெடுக்க விரும்புகிறோம். தத்தெடுக்க முடியுமா?
திருநங்கையின் வளர்ப்பு மகன் அல்லது வளர்ப்பு மகள் என்கிற விதத்தில், தத்து குழந்தைகளுக்கு பின்னாளில் ஏதேனும் பிரச்னை வருமா? சந்தேகங்களை தீர்த்து வையுங்கள் அம்மா.
— இப்படிக்கு,
அன்பு மகன்.
அன்பு மகனுக்கு —
காதல் ஒரு அதிநுட்பமான விஷயம். அது, மொழி, இனம், நிறம், பொருளாதார நிலை, பால் பேதம் தாண்டி மலரும், அதிசய பூ. நீ காதலிக்கும் திருநங்கை, மனதளவில் முழுமையான பெண்.
மகனே... உன் கேள்விகளுக்கு வரிசையாக பதிலளிக்கிறேன்.
நீயும், உன் காதலியும், திருமண வயது பூர்த்தியானவர்கள். உன் குடும்பத்தினர் விடாப்பிடியாக உங்கள் திருமணத்துக்கு மறுத்தால், நீங்கள் பதிவு திருமணம் செய்து கொள்ளலாம்.
பால்மாற்று அறுவை சிகிச்சை செய்து, பெண்மை தன்மை உள்ள திருநங்கையாக மாறியதற்கான மருத்துவ ஆதாரங்களையும், நீதிமன்ற சான்றுரைப்பையும் திருமண பதிவு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
திருநங்கையை திருமணம் செய்து கொள்வதால், பணி இடத்தில் எந்த பிரச்னையும் வராது. மாறாக, உன்னுடன் பணி செய்வோர், உன்னை கேலி செய்யக்கூடும்; அவர்களை உதாசீனப்படுத்து.
நீங்கள், கோவிலில் திருமணம் செய்து, பதிவு செய்து கொள்ளலாம். ஒரு ஆண், திருநங்கையை திருமணம் செய்து கொள்வதை, இந்து திருமண சட்டம், 1955ன்படி, சென்னை உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் அனுமதித்திருக்கிறது.
கோவிலில் அல்லது பதிவு அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டாலும், உரிமையியல் வழக்கறிஞரின் ஆலோசனையை பெறுவது அவசியம். முடிந்தால் திருமணத்தின் போது, உரிமையியல் வழக்கறிஞரை உடன் வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களிருவருக்கும் தாம்பத்திய சுகம் கிட்டுமா என, கேட்டிருக்கிறாய். கட்டாயம் தாம்பத்திய சுகம் கிட்டும்.
குழந்தைகளை தத்தெடுப்பதற்கான சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஆணும் - ஆணும், பெண்ணும் - பெண்ணும் திருமணம் செய்து, தத்தெடுக்க முடியாது.
ஒரு திருநங்கையை திருமணம் செய்த ஆண், கருணை இல்லங்களிலோ, தனி பெற்றோரிடமோ சட்டப்படி தத்தெடுக்க முடியும். தத்தெடுக்க செல்லும் முன், உரிமையியல் வழக்கறிஞருடன் கலந்தாலோசியுங்கள். தத்து எடுக்கும்போது அவரும் உடன் இருக்கட்டும்.
தத்து கொடுக்கும் ஏஜென்சி, நீங்கள் இருவரும் சட்டப்படி திருமணம் செய்துள்ளீர்களா... குழந்தையை வளர்ப்பதற்கு தேவையான வருமானம் உங்களிடம் இருக்கிறதா... குழந்தை வளர்ப்பில் உங்களுக்கு உதவ உறுதுணையாக வீட்டு பெரியவர்கள் யாராவது இருக்கின்றனரா போன்ற, பல கேள்விகளை கேட்கும். தத்தெடுக்கும் கணவன் - மனைவியிடம் நேர்காணல் நடத்தி, உள்நோக்கத்தை ஆராய்வர்.
தத்து கொடுக்கும் ஏஜென்சிகள், தத்து குழந்தை சிறப்பாக வளர்கிறதா என, கண்காணிப்பர். தத்து எடுத்தோர், ஒவ்வொரு காலாண்டுக்கும், ஒரு அறிக்கையை ஏஜென்சிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இந்திய பெற்றோர் தத்தெடுக்க, 46 ஆயிரம் ரூபாய் செலவாகும். பதிவுக்கு, 1,000 ரூபாய், 'ஹோம் ஸ்டடி' வழிமுறைக்கு, 5,000 ரூபாய், குழந்தைகள் பராமரிப்பு நிதிக்கு, 40 ஆயிரம் ரூபாய்.
காதலித்த திருநங்கையை திருமணம் செய்து கொள்வது மட்டுமே, காதலின் வெற்றியாகி விடாது. திருமணத்திற்கு பின், கணவன் - மனைவிக்கிடையே ஆயிரம் பிரச்னைகள் வரும். சண்டையின் போது, அவதுாறு பேசி விடாதே. ஆயுளுக்கும் அவள் மேல் காதலை கொட்டி தாம்பத்தியம் செய்.
முதலில், பெண் குழந்தையை தத்தெடு. நான்கு ஆண்டுகளுக்கு பின், ஆண் குழந்தையை தத்தெடு. தத்தெடுத்த குழந்தைகள், உன் மனைவியை, அம்மா ஸ்தானத்தில் வைத்து கொண்டாடும்.
வாழ்த்துகள் மகனே!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.