கடவுள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2021
00:00

அதிகாலை, 5:40 மணி. தெருவில் மக்கள் நடமாட்ட சத்தம் கேட்டது. வழக்கமாக, 4:00 மணிக்கே கண் விழிக்கும், முத்து, அன்று, படுக்கையை விட்டு எழவில்லை. உடம்பு அசதியில், அடக்கமான போர்வையும், உறக்கத்துக்கு உறுதுணையாக இருந்தன.
திடீரென, கடிகார சத்தத்தில், அலறியடித்து எழுந்தவன், பதற்றமானான். அவன் ஊரிலிருந்து புறப்படும் முதல் பேருந்து கிளம்ப, இன்னும், 15 நிமிடமே இருந்தது.
அவசரமாய் குளித்து, கிளம்பி, மனைவியைப் பார்த்தான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள், சுவாசத்தில், அவளது பருத்த வயிறு, ஏறி இறங்கியது.

வயிற்றில் மெல்ல செவி சாய்த்தான். குழந்தையின் அசைவு லேசாக தெரிந்தது.
அதிர்ந்து எழுந்தவள், ''என்னங்க... இன்னுமா கிளம்பல... உடம்பு முடியல, சாப்பாடு வெளியில பாத்துக்கறீங்களா?'' என்றாள்.
''நீ, கவலைப்படாத,'' என்றான்.
''இன்னிக்கி வருமானம் எப்படி இருக்குமோ தெரியாது. அடுப்படியில், சக்கரை டப்பாவுக்கு கீழ, 300 ரூபா இருக்கு எடுத்துக்கோங்க,'' என்றாள்.
தவறுதலாய் உப்பு டப்பாவுக்கு அடியில் கை வைத்தான்; 500 ரூபாய் இருந்தது.
செல்லமாய், 'சிறுக்கி, செருவாடு சேர்த்து வைக்கிற இடத்தப் பாரு...' என முணுமுணுத்தபடியே, வாசலுக்கு வந்தான்.
தயாராய் இருந்தது, பேருந்து. நடத்துனர் விசில் ஊதியதும், சுறுசுறுப்பானார், ஓட்டுனர். அதிகாலை வேளை, வியாபாரிகள் அதிகம் அமர்ந்திருந்தனர்.
முத்து வரவும், பேருந்து கிளம்பியது.
''முத்து... ஏன், இவ்வளவு லேட்?''
''அசதியில் துாங்கிட்டேன்,'' என்றபடியே, பணத்தைக் கொடுத்தான்.
சற்று நேரத்தில், புகையை கக்கி, உருமிய பேருந்து, நகர ஆரம்பித்தது.
ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தான்.
''டேய் முத்து... தாய் - தகப்பன் இல்லாதவ, நிறை மாசமா இருக்கா. உன்னை நம்பி வந்தவ, தலைச்சன் புள்ளடா. இப்பவும் தொழிலைக் கட்டி அழறியே... உனக்கு, கொஞ்சமாவது அறிவிருக்கா. வலி வந்தா, அவளுக்கு உதவ யாருடா இருக்கா?'' என்றாள், பின் இருக்கையில் இருந்த பாட்டி.
''என்ன செய்யிறது ஆச்சி... அந்த ஏரியாவுல, 'பஞ்சர்' பார்க்க, என்னை விட்டா யாருமில்ல. ஒருநாள் கடை திறக்கலேன்னாலும், தேடி வர்றவங்க, ஏமாந்துடுவாங்க,'' என்றான்.
''செய்யிற தொழிலை, கடவுளா நினைக்கிறவன், நீ. உனக்கு ஒரு துன்பமும் வராதுடா, பேராண்டி. உன் நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்,'' என்றாள், பாட்டி.
நேரம் கடந்தது, கையில் கட்டியிருந்த வாட்ச், 6:00 மணி காட்டியது.
ஐந்து நிமிடத்தில், 'முத்து பஞ்சர் கடை ஸ்டாப்பிங்'கில் நின்றது, பேருந்து.

எட்டு ஆண்டுகளுக்கு முன், வெறும் காற்றடிக்கும் பம்பும், பஞ்சர் ஒட்டும் சாமான்களும் தான் அப்போதைய முதலீடு. பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை என்றாலும், கடை பெயரில், 'ஸ்டாப்பிங்'காக பிரபலமாகி இருப்பதே, முத்துவுக்கு பெருமகிழ்ச்சி.
கடையைத் திறந்ததும், பஞ்சர் பார்க்க பயன்படுத்தும், சிமென்ட் தொட்டியை கவனித்தான். தண்ணீர் மாற்றி இரண்டு நாட்கள் ஆகிவிட்டதை, 'கலங்கல்' காட்டியது.
அருகிலிருந்த செடிகளுக்கு ஊற்றி, மீண்டும் தண்ணீர் நிரப்பி, முகம் பார்த்தான். தண்ணீரின் துாய்மையைக் காட்டியது, தெளிவான முகம்.
கடை வாசலில், வழக்கமாக வரும் சில பெரிசுகள், செய்தித்தாளின், பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தனர். முதல் போணியாக, காய்காறி வியாபாரி ஒருவரின் சைக்கிளுக்கு, பஞ்சர் ஒட்டினான். அதன் பின், வேலை இல்லை.
'அழகு கொடுத்த காச வச்சுத்தான் பொழுத ஓட்டணும்...' நினைத்தபடியே, செய்தித்தாளை புரட்டினான்.
நேரம் விரைவாய் கடந்தது. மதியவேளை, மொபைல் போனை எடுத்து, ''சாப்பிட்டியா அழகு... வலி வந்தா, உடனே போன் பண்ணும்மா... இன்னிக்கி சீக்கிரமா வந்துடறேன்,'' என்றான்.
''அவசரம்ன்னா போன் பண்றேன். நீங்க வழக்கமா வர்ற பேருந்துலயே வாங்க,'' அழகு பேசி முடித்ததும், சற்று தெளிவானான்.
அதன் பிறகு, பஞ்சர் பார்க்க, வாகனங்கள் தொடர்ந்து வந்தன. வேலையில் நேரம் போனதே தெரியவில்லை. கடிகாரத்தில், இரவு, 8:00 மணி. லேசாக மழை துாறல் ஆரம்பித்தது.

பொருட்களை எடுத்து வைத்து, விளக்கை அணைத்தான்.
''தம்பி...'' குரல் கேட்டு திரும்பினான், முத்து.
இருசக்கர வாகனத்தோடு நின்றிருந்தார், ஒருவர்.
''பஸ் வர்ற நேரமாச்சு. மனைவிக்கு உடம்பு முடியல. கிளம்பிட்டேன்,'' எனக் கூறி, பதற்றமாய் சாலையை பார்த்தான்.
''உங்க கடையை விட்டா இந்த ஏரியாவுல வேறெங்கும் கடையில்லைன்னு சொன்னாங்க. 1 கி.மீ., தள்ளிக்கிட்டே வந்தேன். அவசரம், கொஞ்சம் தயவு பண்ணுங்க தம்பி,'' கெஞ்சினார், வந்தவர்.
அதன்பின், அவனால் மறுத்துப் பேச முடியவில்லை. வேலையை ஆரம்பித்தான். வந்தவர் அவ்வப்போது கைக்கடிகாரத்தைப் பார்த்தவாறே இருந்தார். அப்போது, அவன் செல்ல இருந்த பேருந்து, சில பயணியரை இறக்கி விட்டு, புறப்பட்டது.
பஞ்சர் ஒட்டி முடிக்கும்போது, மணி, 9:30. கை கால்களை சுத்தம் செய்து திரும்புவதற்குள், பணம் கொடுக்க மறந்து, வேகமாய் புறப்பட்டு விட்டார்.
'அவருக்கு என்ன அவசரமோ...' என முணுமுணுத்தான், அனாதையாக கிடந்த மொபைல் போனில், அழகு பெயரில் ஐந்து, 'மிஸ்டு கால்'கள் இருந்தன.
'ஐயோ... என்னாச்சோ தெரியலையே...' எதிர்க்கடை பரோட்டா மாஸ்டரிடம் ஓடினான்.
''அண்ணே... அடுத்த பஸ் வர நேரமாகும்போல, மனைவி நிறை மாச கர்ப்பிணி. காலையிலயே உடம்புக்கு முடியாம இருந்தா. என்னாச்சுன்னு தெரியல. போன்ல நிறைய, 'மிஸ்டு கால்'கள் இருக்கு,'' என்றான்.
''என்ன வேணும் முத்து... ஏன் பதட்டப்படறே?''
''உங்க வண்டிய கொஞ்சம் கொடுத்தா, உதவியா இருக்கும்ண்ணே.''
''எத்தன முறை இந்த வண்டிக்கு காத்தடிச்சு, பஞ்சர் ஒட்டிக் கொடுத்திருப்பே. அவசரத்துக்கு எடுத்துட்டு போப்பா,'' என்றார், மாஸ்டர்.
வீடு போய் சேரும்போது, இரவு மணி, 10:00.
மின் விளக்குகள் எரிந்ததை, ஜன்னல் வெளிச்சம் உணர்த்தியது.
'அப்பாடா... அவள் விழித்திருக்கிறாள்...' என, ஒரு கணம் மகிழ்வதற்குள், பதற்றமாய் ஓடி வந்தாள், பக்கத்து வீட்டு பாட்டி.
''எங்கடா போய்த் தொலைஞ்சே... எத்தன தடவ உனக்கு போன் பண்றது... அவளுக்கு என்னாச்சோ... பாவம், தாய் - தகப்பன் இல்லாத பொண்ணு. உடனே ஹாஸ்பிட்டலுக்கு போடா,'' என, விரட்டினாள்.
பதற்றமும், பயமும் அதிகமாகி, மனசு தெரித்தது.
நிதானிக்க நேரமின்றி, விரைவாய் புறப்பட்ட முத்து, 11:00 மணிக்கு, மருத்துவமனை வாசலில் இருந்தான். உள்ளே, ஒரே பரபரப்பு. அங்கு, அவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
இரவு வேலை முடித்து, வீட்டிற்கு செல்ல இருந்த பேருந்து விபத்துக்குள்ளாகி, பலர் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு வந்துள்ளது, தெரிய வந்தது. கனத்த மனதுடன், பிரசவ வார்டின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ஓடினான். அங்கும் பரபரப்பாய் இருந்தது.
கண்ணாடி கதவை திறந்து, ''ஏம்மா... அழகுன்ற பெண்ணுக்கு உதவியா யாராவது இருக்கீங்களா?'' குரல் கொடுத்தார், வார்டு நர்ஸ்.
பதற்றமாய் ஓடிய முத்து, ''நான்தாம்மா அவ புருஷன்,'' என்றான்.
''உடனே, இதையெல்லாம் வாங்கிட்டு வா,'' என்று, ஒரு சீட்டை கொடுத்தார்.
சில நிமிடங்களில், மருந்துகளோடு நின்றிருந்தான்.
அதை வாங்கி, உள்ளே சென்ற நர்ஸ், சிறிது நேரத்தில், ''ஏம்பா... உன் மனைவிக்கு, பெண் குழந்தை பிறந்திருக்கு,'' என சொல்லி, மீண்டும் உள்ளே சென்று விட்டார்.
அதற்கு பிறகு எந்த தகவலும் இல்லை.

அதிகாலை -
''முத்து... தாயும், பிள்ளையும் நல்லா இருக்காங்க. இப்போதான் மயக்கம் தெளிஞ்சுது. நீங்க, பொது வார்டுல போய் பாருங்க,'' என்றார், நர்ஸ்.
ஆசையாய் வார்டுக்கு ஓடினான். அவனைக் கண்ட அழகும், நிம்மதியானாள்.
அருகே சென்று தலையைக் கோதியபடி, உறக்கத்தில் இருந்த, குழந்தையை பார்த்தான்.
''நீங்க வழக்கமா வர பஸ், விபத்தாயிடுச்சுன்னு சொன்னாங்க. அந்த அதிர்ச்சியிலயே வலி வந்துடுச்சு. பக்கத்துல இருந்தவங்க தான், ஆம்புலன்சுக்கு போன் பண்ணி, அழைச்சுட்டு வந்தாங்க,'' என்றாள்.
''முக்கியமான நேரத்துல இருக்காம போயிட்டேன். பஸ்சை தவற விட்டுடோம்ன்னு வருத்தப்பட்டேன். ஆனா, அதுவும் நல்லதுக்கு தான். ஒரு வேளை, அந்த பேருந்துல வந்து, எனக்கும் ஏதாவது ஆகியிருந்தா, தேவையில்லாம பொறந்த பச்சப் புள்ளமேல பழியை போட்டிருப்பாங்க,'' சொன்னவாரே, சட்டென திரும்பினான்.
அழுகுக்கு பிரசவம் பார்த்த
டாக்டர் நின்றிருந்தார்.
கைகூப்பி வணங்கினான்.
''தம்பி... உன் குழந்தை பிழைச்சதே அரிதுப்பா. நீ, கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும்.''
''என்ன சார் சொல்றீங்க?'' பதறினான்.
''தொப்புள்கொடி சுத்தி, குழந்தைக்கு மூச்சுத் திணறல்ன்னு அவசர அழைப்பு. வேகமாக புறப்பட்டு இரு சக்கர வாகனத்துல வரும்போது, வழியில், வண்டி பஞ்சர் ஆயிடுச்சு. யாரோ ஒரு புண்ணியவான், அவர் முகத்தைக் கூட சரியா பார்க்கல... கடை மூடப்போகும் நேரத்துல, பஞ்சர் போட்டு கொடுத்தார். இல்லைன்னா, ரொம்ப சிரமமாயிருக்கும்,'' என்றார்.
''ஐயா... நான் தான் உங்க வண்டிக்கு, பஞ்சர் ஒட்டி கொடுத்தேன். என் பேர், முத்து. கடை மூடப்போற நேரத்துல வந்ததால, உங்களை கொஞ்ச நேரம் அலைக்கழிச்சுட்டேன்,'' கலங்கியபடி, காலில் விழுந்தான்.
''தம்பி... தாயையும், சேயையும் காப்பாத்தணுங்கற அக்கறையில தான், உங்களை அவசரப்படுத்தினேன். அவசரத்துல பஞ்சர் ஒட்டினதுக்கு, பணம் கொடுக்காம வந்துட்டேன். மனசு உறுத்திக்கிட்டே இருக்கு. இந்தாங்க தம்பி,'' என, 100 ரூபாயை நீட்டினார், மருத்துவர்.
''ஐயா... பணம் கிடக்கட்டும், என் குழந்தையை காப்பாற்றிய கடவுள் நீங்க... உங்க வாயாலயே என் குழந்தைக்கு ஒரு பேர் வச்சிடுங்க,'' என்றான்.
முத்துவின் கைகளிலிருந்து குழந்தையை வாங்கிய மருத்துவர், அதன் காதில், ''முத்தழகு... முத்தழகு... முத்தழகு...'' என, மூன்று முறை சொன்னார்.
மெதுவாக கண் திறந்த, முத்தழகு, கடவுளைப் பார்த்த உணர்வில், புன்னகைத்தது.

பூபதி பெரியசாமி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman - Porur, Chennai,இந்தியா
15-ஜூன்-202110:50:29 IST Report Abuse
Anantharaman கண்கள் கலங்கியது......கடவுள் எங்கும் இருக்கிறார்.....அவ்வப்போது மனித ரூபத்தில்
Rate this:
Cancel
Sri Kumaran -  ( Posted via: Dinamalar Android App )
09-ஜூன்-202120:02:24 IST Report Abuse
Sri Kumaran அருமை.
Rate this:
Cancel
Mohanraj Raghuraman - Madurai,இந்தியா
09-ஜூன்-202112:36:29 IST Report Abuse
Mohanraj Raghuraman திரு ஆர் ஜானகிராமன் நல்ல ஆய்வு செய்திருக்கிறார். இருப்பினும் கதை மிகவும் அருமை. கடைசியில் உள்ள திருப்பங்கள் மனம் கலங்கச் செய்துவிட்டன. கடவுள் இருக்கிறாரோ இல்லையோ (கற்பனை கதை தானே) மனிதர்கள் நல்மனம் கொண்டவர்களாக இருந்தாலே போதும் எல்லோருக்கும் நல்லதே நடக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X