'ஆமை புகுந்த வீடு உருப்படாது...' என்பர். கல்லாமை, இயலாமை, முயலாமை போன்ற குணங்கள் உள்ள வீட்டில், இல்லாமை என்ற ஏழ்மை புகுந்து விடும் என்பதையே, நம் மக்கள், ஆமை என்ற ஊர்வன ஜந்துவாக இருக்குமோ என, நினைத்துக் கொண்டனர்.
உண்மையில், அற்புதமான ஜந்து, ஆமை. ஓட்டுக்குள் தன்னை அடக்கி, அமைதியாக நகர்ந்து செல்லும். இதனால் தான் திருமால், இந்த ஜந்துவை, தன் அவதாரத்துக்காக தேர்ந்தெடுத்தார். இதை, கூர்மம் என்பர். இதற்கு, ஆந்திராவில் ஒரு கோவிலே இருக்கிறது.
ஆனி மாதம், தேய்பிறை துவாதசி திதியன்று, கூர்ம அவதாரம் எடுத்தார், திருமால்.
துர்வாச முனிவர் கொடுத்த பிரசாத மாலையை அவமதித்தான், இந்திரன். இதனால், செல்வத்தை இழந்தான். இதைப் பயன்படுத்திக் கொண்ட அசுரர்கள், தேவர்களைக் கொன்று குவித்தனர். ஆனால், போரில் இறந்த அசுரர்களை சஞ்சீவினி எனும் மருந்து மூலம், அவர்களது குரு சுக்ராச்சாரியார் உயிர்ப்பித்தார்.
தேவர்கள் மடிந்தனர். திருமாலிடம் சென்று, இந்திரனின் தவறுக்கு மன்னிப்பு கேட்டனர், தேவர்கள்.
'அமிர்தம் எனும் மருந்து இருந்தால், இறந்த தேவர்களை எழுப்ப முடியும்; பாற்கடலைக் கடைந்தால் அதைப் பெற முடியும்...' என்றார், திருமால்.
தன் மாயச் செயல் மூலம், தேவர்களையும் துணைக்கு சேர்த்து கடலை கடைய ஏற்பாடு செய்தார். பிரமாண்ட ஆமை வடிவம் எடுத்து, கடலுக்குள் சென்றார்.
ஆமையின் முதுகின் மேல், மந்தர மலையை மத்தாகவும், வாசுகி என்ற தேவலோக பாம்பைக் கயிறாகவும் கொண்டு, கடலைக் கடைந்தனர். அமிர்த கலசத்துடன் தன்வந்திரி என்ற தேவர் வெளிப்பட்டார். மகாலட்சுமி, கற்பகத்தரு போன்றவையும் வெளி வந்தன. மகாலட்சுமியை மணந்து கொண்டார், திருமால்.
ஆமை யாருக்கும் துன்பம் செய்யாது. எனவே தான், கூர்ம அவதாரம் எடுத்த திருமால், எந்த அசுரனையும் வதைக்கவில்லை.
இத்தகைய புகழ்பெற்ற கூர்ம அவதாரத்துக்கு, சுவேதபுரத்தை (ஆந்திராவில் ஸ்ரீகாக்குளம் தாலுகாவிலுள்ள ஸ்ரீகூர்மம் என்ற கிராமம்) ஆட்சி செய்த, சுவேத மன்னன் கோவில் கட்டினான். விரத நாளில், மனைவியுடன் தாம்பத்யம் கொள்ள வேண்டும் என்ற இவனது ஆசைக்கு, ஆமை போல், அடக்கம் கொள்ள வேண்டும் என உணர்த்தினார், திருமால்.
திருந்திய மன்னன், ஆமையை மூலவராகக் கொண்ட இந்தக் கோவிலை எழுப்பியதாக, வரலாறு கூறுகிறது.
மூலவர் கூர்மநாதருடன் - கூர்மநாயகியும் அருள்பாலிக்கிறாள். இங்கு, கூர்ம அவதார விழா, ஜூன் 26ல், சிறப்பாகக் கொண்டாடப்பட இருக்கிறது.
சென்னையில் இருந்து ஸ்ரீகாக்குளம், 910 கி.மீ., சென்னையிலிருந்து புவனேஸ்வர், ஹவுரா செல்லும் ரயில்கள் ஸ்ரீகாக்குளம் ரோடு ரயில் நிலையத்தில் நிற்கும். இங்கிருந்து ஸ்ரீகாக்குளம் வழியாக, ஸ்ரீ கூர்மம் கோவிலுக்கு, 30 கி.மீ., செல்ல வேண்டும்.
தி. செல்லப்பா