நகைச்சுவை மன்னன் எஸ்.வி. சேகரின் டிராமாயணம் (6) | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
நகைச்சுவை மன்னன் எஸ்.வி. சேகரின் டிராமாயணம் (6)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2021
00:00

குழுவில் எஸ்.வி.சேகருக்கு வாய்ப்பு கொடுத்து, சிங்கப்பூர், மலேஷியா ஆகிய இடங்களுக்கு கூட்டிச் சென்றார், நடிகர் கோபாலகிருஷ்ணன். அங்கே கிடைத்த கசப்பான அனுபவங்களால், சொந்தமாக நாடக குழு ஆரம்பிக்க முடிவெடுத்தார்.
எம்.வி.சிதம்பரம் என்ற கப்பலின் மேல் தளத்தில், விநாயகர் படம் வைத்து, கப்பலின் சமையல் அறையில் கிடைத்த தேங்காயை உடைத்து, 'நாடகப்பிரியா' என்ற நாடகக்குழு ஆரம்பிக்கப்பட்டது. தண்ணீரில் ஆரம்பித்தாலும், இன்று வரை, நாடகப்பிரியா, 'ஸ்டெடி'யாக பயணத்தை தொடர்கிறது.

சொந்தமாய் நாடகக் குழு ஆரம்பிப்பது என்று முடிவாகியது. ஆனால், அதற்கு பொருளாதார பலம் வேண்டுமே...
யாரையும் கேட்க வேண்டாம், நாமே ஆளுக்கு ஐந்து ரூபாய் போட்டு ஆரம்பித்து விடுவோம் என்று முடிவு செய்து, ஆளுக்கு ஐந்து ரூபாய் போட்டனர். நண்பரான கமலஹாசனும், ஐந்து ரூபாய் கொடுத்தார்.
நாடகம் போட ஆரம்பித்து, எட்டு மாதத்திற்கு பின், எல்லாருக்கும் அந்த ஐந்து ரூபாய் திருப்பிக் கொடுக்கப்பட்டது; கமலஹாசனுக்கு மட்டும் தரவில்லை. அது, அவரது ஆசீர்வாதமாக இருக்கட்டும் என்பது தான் காரணம்.
ஆரம்பத்தில், நடிகர், இயக்குனர் மவுலியின், அவன் ஒரு தனி மரம் என்ற நாடகம் போட்டனர். நாகேஷ், கதாநாயகன். அப்போது, சென்னையில், 145 நாடக குழுக்கள் இருந்தன. சிவாஜி கணேசன் துவங்கி, மனோரமா வரை சினிமாவில் இருந்தாலும், நாடகத்தில் நடிப்பதை பெருமையாக கருதிய காலமது.
அடுத்தடுத்து, கே.கே.ராமனின், கண்ணாமூச்சி, திரும்பி வந்த மனைவி போன்ற நாடகங்களை, பிரபலங்கள் இல்லாமல் நடத்தினர். பிரபலங்கள் இல்லாத நாடகம் என்றே விளம்பரமும் செய்தனர்.
பின், கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் என்று போட்ட நாடகத்திற்கு, எஸ்.வி.சேகரால் அறிமுகம் செய்யப்பட்ட மோகன், பின்னர், கிரேசி மோகன் ஆனார். 100 நிமிடத்தில், 200 முறை சிரிக்க வைக்க வேண்டும் என்று, அன்று முடிவு எடுத்தார். அதை, இன்று வரை செயல்படுத்தியும் வருகிறார்.
நாடகம் பார்த்தவர்களிடம் நல்ல வரவேற்பு. ஆனாலும், சபாக்களில் வரவேற்பு இல்லை.
சென்னையில் பிரபலமாக இருந்த ஒரு சபாவில் வாய்ப்பு கேட்டபோது, 'இந்த சபாவில் நாடகம் போட, உனக்கு என்ன தகுதியிருக்கு...' என்று, ஏகத்திற்கு கிண்டல் செய்து அவமானப்படுத்தினார், சபா செயலர்.
'இதே சபாவில், இதே செயலரே வலிய வந்து, என் நாடகத்தை போடச் சொல்லி கேட்க வைக்க வேண்டும்' என்று, மனதிற்குள் சபதம் எடுத்தார்.
அவன் ஒரு தனிமரம்,
கண்ணாமூச்சி - 1974,
திரும்பி வந்த மனைவி - 1975,
கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் - 1976,
மகாபாரதத்தில் மங்காத்தா - 1980,
காதல் இல்லையேல் சாதல்,
காதுல பூ - 1981,
ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ
சிந்தாமணி 1984,
வால் பையன் 1985,
எல்லாமே தமாஷ் தமாஷ்தான்,
எல்லோரும் வாங்க - 1987.
அதிர்ஷ்டக்காரன் - 1990,
யாமிருக்க பயமேன் - 1991,
பெரிய தம்பி - 1992,
சின்ன மாப்பிளே பெரிய மாப்பிளே - 1993,
எப்பவும் நீ ராஜா - 1994,
தத்துப்பிள்ளை - 1996,
அல்வா - 1997,
பெரியப்பா - 2000,
குழந்தைசாமி - 2002 மற்றும்
மெகா வசூல் - 2004 என்ற, 24 நாடகங்கள், 6,500 முறை மேடையேறி இருக்கிறது.
இதில் மூன்று நாடகம், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடையைக் கண்டிருக்கிறது. 90 நாட்களில், 110 நாடகங்கள். ஒரே நாளில் எட்டு நாடகங்கள் என்பது போன்ற சாதனைகளால், எஸ்.வி.சேகர் பெயர், 'லிம்கா' புத்தகத்தில் மூன்று முறை இடம் பெற்றிருக்கிறது.
'எல்லாம் சரி, சேகர், நீங்கள் போட்ட சபதம் என்னவாயிற்று...' என்கிறீர்களா.
அதை அடுத்த வாரம் சொல்கிறேன்.

— தொடரும்

இவரைப் பற்றி அவர்
நகைச்சுவை உணர்வுடன், சமூக விழிப்புணர்வுக்கும் வித்திடும் வகையிலும் நாடகம் நடத்தி வரும் நீங்கள், மரம் நடுதல், மழை நீர் சேகரித்தல், கண் தானம், ரத்த தானம், ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்தல், ஊனமுற்றோருக்கு உதவுதல் போன்ற நல்ல காரியங்களிலும் ஈடுபாடு காட்டி வருவது குறித்து மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்!
—முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்.

எல். முருகராஜ்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X