உயிரோடு உறவாடு... (14)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2021
00:00

முன்கதை சுருக்கம்: ரிஷி மற்றும் தமிழ்ச்செல்வி வந்த பைக்கை பின்தொடர்ந்த கார் இடிக்க, சாக்கடை கால்வாயில் விழுந்ததில், ரிஷிக்கு காலில் காயம் ஏற்பட்டது. விபத்து காரணமாக, நிகழ்ச்சியில் இவர்களால் பங்கேற்க முடியாது என, ஜனா உற்சாகமாக இருப்பதை, தமிழ்ச்செல்வியிடம் போனில் தெரிவித்தாள், பத்மஜா.

பத்மஜாவின் கேள்வியால், சில விநாடிகள் திகைத்த தமிழ், ''நானும், ரிஷியும் இன்னும் கொஞ்ச நேரத்துல ஆபீஸ்ல இருப்போம். நீ பேசினதுல இருந்து, ஜனா சார் தான் ஏதோ திருகு வேலை பார்த்துருக்காருங்கறது நல்லா தெரியுது.

''எங்களுக்கு நடந்த விபத்தும் தற்செயலானது இல்லை. டீக்கடைகாரர் கூட அதை கவனிச்சு சொன்னாரு. நிச்சயமா இது, ஜனா சாரோட சதி வேலை தான். இதுக்கு நாங்க பலியாகி, அவரை ஜெயிக்க விடத் தயாரில்லை.
''நீ, ஜனா சாருகிட்ட, நாங்க வந்துகிட்டிருக்கோம்; எங்களுக்கு எதுவுமில்லைன்னு மட்டும் சொல்லி வை. அது போதும்,'' என்ற தமிழ்ச்செல்வி, காலில் கட்டு போட்டுக் கொண்டிருக்கும் ரிஷியை நெருங்கினாள்.
கட்டு போட்டு முடித்து, ''நல்ல ஓய்வு ரொம்ப முக்கியம்... இந்த காலோடு நடந்தாலோ, இல்லை நின்னாலோ, ரத்தம் கட்டி, வீக்கம் ஏற்படும். குணமாகவும் நாளாகும்,'' என்றார், டாக்டர்.
டாக்டர், சற்று விலகவும், ரிஷியை மிகக் கூர்மையாக பார்த்தாள், தமிழ்.
''என்ன தமிழ்?''
''ஒரு டாக்சி பிடிச்சு, நாம நேரா உன் வீட்டுக்கு போறோம், ரிஷி. முதல்ல உடை மாத்தறோம். அப்புறம் ஆபீசுக்கு புறப்படறோம்,'' என்றாள்.
''டாக்டர் சொன்னதை கேட்ட தானே... என்ன விட்டுடு... நீ புறப்படு. நீதான் தொகுப்பாளினி; நீதான் இன்னிக்கு முக்கியமும் கூட... நான், 'பேக்ட்ராப்'ல இருந்து உனக்கு உதவறவன் தானே... என் இடத்துல உனக்கு இன்னிக்கு பத்மஜா உதவி பண்ணுவா... நானும் அவகிட்ட பேசிடறேன்,'' என்றான், ரிஷி.
''பத்மஜா இப்பதான் பேசினா... இந்த விபத்து நாம சந்தேகப்பட்ட மாதிரி, ஜனா சார் வேலையே தான்... இப்ப சொல், நாம இரண்டு பேரும் போகப் போறோமா இல்லையா?''
தமிழ் முடிக்கும் முன், ரிஷியிடம் பலத்த மாறுதல்.
''நாம கட்டாயம் போறோம். கால் வீங்கினா வீங்கட்டும். அந்தாள மட்டும் ஸ்கோர் பண்ண விடவே கூடாது. ஆமா, நீயும்தானே டிரஸ் மாத்தணும்?''
''நிச்சயமா.''
''அப்ப எப்படியும், இரண்டு மணி நேரம் ஆகுமே தமிழ்?''
''ஆகட்டும்... கார்ல போகும்போதே, நான், எம்.டி.,க்கு மெயில் போட்டுடறேன்... விபத்து குறித்து சொல்லி, 'சின்ன காயம் தான், சமாளிச்சு வந்துகிட்டிருக்கோம்'ன்னு சொல்லிடறேன்... சுஜித் சாருக்கும் போன் பண்ணி சொல்லிடுவோம்.''
''ஆமா... முதல்ல அவருக்கு சொல்வோம்,'' என்ற ரிஷி, தமிழிடமிருந்து போனை வாங்கி, சுஜித்குமாருடன் தொடர்பு கொண்டான்.
''வணக்கம் சார்.''
''சொல்லுங்க ரிஷி... எல்லா ஏற்பாடும் நடந்துகிட்டிருக்கா?''
''ஆமாம் சார்... அதேசமயம், நாங்க உங்களை, 'இன்டர்வியூ' பண்ணி பிரபலமாயிடக் கூடாதுன்னு சதி வேலைகளும் நடந்துகிட்டிருக்கு. அதனால, ஒரு விபத்தை, நானும், தமிழும் சந்திக்க நேர்ந்தது. நல்லவேளை சார், எனக்கு மட்டும் தான் காயம், தமிழ் தப்பிட்டா.''
ரிஷி சொன்ன மறுநொடி, சுஜித்குமாரிடம் ஒரு அடர்ந்த மவுனம்.
''சார்...'' என்றான், ரிஷி.
''சொல்லுங்க ரிஷி... ஆமா, சேனல்ல இப்படி எல்லாம் கூடவா நடந்துப்பாங்க?'' என்ற சுஜித்தின் குரலில் கவலை தெரிந்தது.
''உங்க நிகழ்ச்சி அவ்வளவு பெருசு சார்... அதுல கிடைக்கிற ரேட்டிங், விளம்பர வருமானம் எல்லாமே ரொம்ப பெருசா இருக்கும்போது, போட்டியும், பொறாமையும் கூட பெருசாதானே இருக்கும்?''
''புரியுது... இப்ப, நீங்க எங்க இருக்கீங்க?''
''ஆஸ்பத்திரியில முதலுதவி எடுத்துக்கிட்டிருக்கேன் சார். உடையெல்லாம் சகதி ஆயிட்டதால, வீட்டுக்கு போய், உடை மாற்றி வந்துடறோம் சார்.''
''ஓ.கே., பதட்டமோ, அவசரமோ வேண்டாம். நீங்க வந்தா மட்டும் தான், நான் உங்க சேனலுக்கே வருவேன். எல்லாம் தயார் பண்ணிட்டு போன் பண்ணுங்க,'' என, சுஜித் சொன்ன விதம், மிக இதமாக இருந்தது, ரிஷிக்கு.

சுஜித் நடந்து வருவது போல், திரும்பிப் பார்ப்பது போல், கையெடுத்து கும்பிடுவது போல், பல கோணங்களில் வரிசையாக, 'கட் - அவுட்'கள். அத்தனையும், சேனல் அமைந்திருக்கும் தெருவில் வைக்கப்பட்டு, சேனலின் செக்யூரிட்டி கதவு முன்னால் சுஜித்குமாரின், 50 அடி உயர, 'கட் - அவுட்'டும் நிறுத்தப்பட்டிருந்தது.
வரவேற்பறை அருகே அமைக்கப்பட்டிருந்த ஷாமியானா பந்தலையும், அதன் முகப்பில், 'கலையுலகின் தலையான தலைவனே வருக...' என்கிற பேனரையும் பார்த்தபடியே, ரிசப்ஷனை கடந்து, மூன்றாம் மாடியில் உள்ள செட்டுக்குள் நுழைந்தார், ஜனா.
அப்போது, காத்திருந்தது போல், அவரை பிடித்தாள், பத்மஜா.
''சார்...''
பதிலுக்கு அவர் பார்க்க மட்டும் செய்தார்.
''தமிழும், ரிஷியும் போன் பண்ணாங்க சார். அவங்களுக்கு விபத்துல பெருசா காயம் எதுவும் இல்லையாம். இன்னும் ஒரு மணி நேரத்துல இங்க இருப்பாங்களாம்,'' என்றாள்.
ஜனாவின் நெற்றி மேல், பல்லி விழுந்து தெரித்துக் குதித்தது போல், அவரிடம் ஒரு பதட்டம்.
''என்ன... என்ன சொல்றே நீ... பெரிய விபத்து. எழுந்து நடக்கவே ரெண்டு மூணு நாள் ஆகும்ன்னு போன் வந்ததே?''
''யார் சார் அப்படி போன் செய்தது... 'நாங்க யாருக்குமே போன் பண்ணல... அப்படி இருக்க, ஜனா சாருக்கு மட்டும் எப்படி தெரிஞ்சது'ன்னும் கேட்டா சார்,'' கிடைத்த சந்தர்ப்பத்தில், போட்டு வாங்கினாள், பத்மஜா.
ஜனாவுக்கும், தான் சிக்கிக் கொண்டு விட்டது, அந்த நொடியே புரிந்து விட்டது. முகத்தில் அதற்கான மாற்றங்கள் ரேகைகளாக ஓடிற்று.
''என்ன சார்... பதிலே இல்லை. யார் சார் உங்களுக்கு போன் பண்ணினா?'' சற்று அழுத்தமாக கேட்டாள், பத்மஜா.
''இப்ப அதுதான் முக்கியமா? யாரோ சொன்னாங்க... அவங்களுக்கு எதுவுமில்லல்ல... அது போதும் விட்டுத் தள்ளு,'' என்று, சற்று கத்தியபடி அவளை சமாளிக்க முனைந்தார், ஜனா.
''நீங்க எதுவும் செய்ய வேண்டாம்ன்னு அழுத்தி சொல்லச் சொன்னா சார், தமிழ். ஆரம்பம் முதல் முடிவு வரை அவங்க ஒரு திட்டம் போட்டுருக்காங்க. அதுல எந்த மாற்றமும் இருக்க கூடாதாம்,'' என, பத்மஜா சொல்லச் சொல்ல, ஜனாவுக்குள் எரிச்சல் பீறிட்டது.
தான் ஏற்படுத்த நினைத்த ஒரு, 'டுவிஸ்ட்'டுக்குள் தானே சிக்கிக் கொண்டு விட்டதும் புரிந்தது.
இனி, அப்படியே தலைகீழாக மாற வேண்டியது தான். இல்லாவிட்டால் கதை கந்தலாகி விடும் என்று உணர்ந்தவர், ''இப்பதாம்மா எனக்கு நிம்மதியா இருக்கு... எப்படியோ நிகழ்ச்சி நல்லபடியா நடந்தா சரி,'' என்று, ஒரு பல்டி அடித்தார்.
பதிலுக்கு பத்மஜாவும் ஒரு சிரிப்பு சிரித்தாள்.

வாடகை காரில், ஈர உடையோடு வந்திறங்கிய ரிஷியை பார்த்த மாமி, பதட்டமானாள்.
''ரிஷி... என்னாச்சு, இது என்ன கோலம்?''
''அதை ஏன் கேட்கறீங்க மாமி... ஒரு சின்ன விபத்து.''
''ஐயோடா... அதான் கார்ல வந்துருக்கியா... கால்ல கட்டு, ரத்தம் கசியறா மாதிரி இருக்கே?''
''காலை அப்படி இப்படி அசைக்கக் கூடாதுன்னார், டாக்டர். அப்படியெல்லாம் இருக்க முடியுமா மாமி... அதுலயும் இன்னிக்கு எப்படிப்பட்ட நிகழ்ச்சி?'' என்றான், ரிஷி.
''ஆமால்ல... இன்னிக்குன்னு பார்த்தா உனக்கு இப்படி நடக்கணும். எல்லாம் திருஷ்டி பண்ற வேலை,'' மாமி சொல்லச் சொல்ல, சற்று சிரமப்பட்டு படிகளில் ஏறியவன், ஐந்து நிமிடங்களில் மாற்றுடைக்கு மாறி, இறங்கி வந்தான்.
அவனையே பரிதாபமாக பார்த்தாள், மாமி.
''என்ன மாமி?''
''ஜாக்கிரதை ரிஷி... என் வயித்துல பொறந்தது தான் விபத்துல போயிடுத்து... உனக்கும் விபத்துன்னா, உடனே எனக்கு மனசே கலங்கறது. இந்த வீட்டுல ஏதாவது வாஸ்து கோளாறு இருக்குமோ?''
மனதுக்குள் மாமியின் மையம் எதுவென்று புரிந்தது, ரிஷிக்கு.
''மாமி, நீங்க தப்பா யோசிக்கிறீங்க. சொல்லப் போனா உங்க வாழ்த்து தான், இப்ப நான் உயிரோட இருக்கவே காரணம். கொஞ்சம் விட்டிருந்தாலும் நசுங்கிச் சட்னியாகி இருப்பேன். அதையெல்லாம் இப்ப பேச நேரமில்லை; நான் கிளம்பறேன்.
''என் ப்ரெண்ட் தமிழ், ஒருவழியா வந்துட்டா. இன்றைய நாள் அவளோடது மாமி. நல்லவேளை, என் கூட வந்த அவளுக்கு எதுவும் ஆகலை. நீங்க, 'டிவி'யை பாருங்கோ, உங்களோடது தான் முதல் கேள்வி. உங்க முகத்தை இன்னிக்கு தமிழ்நாடே பார்க்கப் போகுது. 'ஆல் த பெஸ்ட்'ன்னு சொல்லி வழியனுப்புங்க,'' என்றான், ரிஷி.
அவன் பேச்சை கேட்டபடியே வந்த நடராஜனும், ''உனக்கு ரொம்பவே பாசிடிவ் மைண்ட் ரிஷி... இன்னிக்கு மட்டுமல்ல, எப்பவும் நீ சாதிக்க என் வாழ்த்துகள்,'' என்றார்.
காத்திருந்த வாடகை காரில் ஏறி புறப்பட்டான், ரிஷி.
சற்று கெந்தியபடி, ஆனால், முகம் முழுக்க சிரிப்புடனும் சேனலுக்குள் நுழைந்த ரிஷியையும், தமிழ்ச்செல்வியையும் அவனது சகாக்கள் கை தட்டி வரவேற்றனர்.
'என்ன விபத்து... எங்கே, யாரால், எப்படி' என்கிற எந்த கேள்வியையும் அனைவரும் கேட்க, இருவரும் இடம் கொடுக்கவில்லை. மாறாக எதுவுமே நடக்காத அந்த மன உணர்வுடன் தான் செயல்பட்டனர்.
ஜனாவின் கேபினுக்குள் நுழைந்து, 'சாரி சார், உங்கள, 'டென்ஷன்' படுத்திட்டோம். இந்த நிகழ்ச்சி வெற்றிகரமா நடந்து முடிய உங்க ஆதரவு ரொம்ப முக்கியம்...' என்று, துளி சந்தேகமும் அவர் மேல் இல்லாதது போலவே நடந்து கொண்டனர்.
கேள்விக்கான தன் பைலை எடுத்துக் கொண்டான், ரிஷி. அவனோடு செட்டுக்கு சென்று, ஒரு பார்வை பார்த்தாள், தமிழ். கேமராவின் பொசிஷனை ஒரு பார்வை பார்த்துக் கொண்டவள், சுஜித் அமர்வதற்காக போடப்பட்ட சிம்மாசனம் போன்ற நாற்காலியை பார்த்தாள்.
''ப்ளீஸ்... இதை எடுத்துடுங்க. சாதாரண சேர் போதும்,'' என்றாள்.
''நோ நோ... அதுல சுஜித் சார் உட்கார்ந்தா தான் கம்பீரமா இருக்கும்,'' என்று, ஜனா சாரால் அமைக்கப்பட்டிருந்த ஒரு ஜால்ரா கூறினான்.
''அவரே தன் வாயால் சொல்வார் பாருங்க. அப்ப எடுத்துதானே தீரணும்?'' என்று சிரித்தபடியே கேட்டாள்.
''தமிழ், உன்னோட காஸ்ட்யூம் எது... அதோட ஒரு, 'ரிகர்சல்' பார்த்துடலாமா,'' என்று ஒருவன் கோடிட, ''நான், கதர் புடவையில, பின்னி வாரிய தலைல கொஞ்சம் போல மல்லிகை பூ வெச்சுக்கிட்டு, பாரம்பரிய தமிழ் பெண்ணாதான் பேட்டி எடுக்க போறேன். புடவையை கொண்டு வந்துட்டேன். சேனலோட, 'பிராப்பர்ட்டி' எதுவும் தேவையில்லை,'' என்றாள்.
நேரம் ஓடியபடியே இருந்தது. இரவு, 8:00 மணிக்கு, நேர்முக அலைவரிசையில் பேட்டியும், கேள்வி - பதில் அரங்கமும் துவங்க இருந்தது. தமிழ், தன் கடிகாரத்தை பார்த்தபோது, மணி, 4:00.
ஆறு மணிக்கு, ஒரு ரிகர்சலை பார்த்து விடலாம் என்று, ரிஷியையே, சுஜித் போல அவள் நடிக்கச் சொல்ல, 'செட் பிராப்பர்ட்டி கோட்' ஒன்றை போட்டு, காலின் வலியை காட்டிக் கொள்ளாமல் நடந்து வந்து, அந்த சிம்மாசன நாற்காலியில் அமர்ந்தான், ரிஷி.
அப்போது, தமிழும், அவன் காதில் மட்டும் விழும்படியாக, ''ரிஷி... அடுத்த சுஜித்குமாரா நீ வருவே. இதேபோல, நிஜமாலுமே, நீ ஒருநாள் இந்த நாற்காலியில் வந்து இயக்குனரா உட்காருவே... அப்ப நான் இதேபோல பேட்டி எடுப்பேன். அப்படி நடந்துட்டா அதுக்கு பேர் தான் வெற்றி,'' என்றாள்.
அந்த நொடியில், ரிஷியின் கண்கள் கலங்கி விட்டது.
அப்போது, தமிழின் கைபேசியில், சுகுமாரின் அழைப்பொலி. காதை கொடுத்தாள், தமிழ்.
''என்ன புள்ள இப்படி என்னை அம்போன்னு உட்டுட்டே... இன்னிக்கு தானே சுஜித்குமார் சாரோட நிகழ்ச்சி? அப்ப, நான் உன் கூடவே இருக்கணும்ன்னு சொல்லியிருந்தேன்ல... இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடல, நான் இப்ப சென்னை ஏர்போர்ட்ல இருந்துதான் பேசறேன்...
''உன் சேனலுக்கு எப்படி வரணும்ன்னு டாக்சிகாரனுக்கு சொல்லிடறியா?'' என்று சுகுமார் கேட்க, தமிழ்ச்செல்விக்குள், தன்னை ஒரு புதிய பிரச்னை மெல்ல வளைப்பது போல் ஒரு பிரமை தட்டத் துவங்கியது.

தொடரும்
இந்திரா சவுந்தர்ராஜன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X