''என்ன, இன்னிக்காவது வாயைத் திறப்பீங்களா?'' சேகரிடம் மறுபடியும் கேட்டாள், ஆனந்தி.
''இன்னும் காரியமே முடியல... அதற்குள், நீ மனுஷி தானா?'' முறைத்தான், சேகர்.
குரலை உயர்த்தியவள், ''ஏன்... எப்படித் தெரியுது? நான் என்ன அப்படி அயோக்கியத்தனமா கேட்டுட்டேன்னு பொங்கறீங்க. உங்க அண்ணன் சொத்தையா கேட்டுட்டேன்... நியாயமா நமக்கு என்ன சேரணுமோ அதைத்தானே கேட்கச் சொல்றேன்,'' என்றாள்.
''சரி... அதற்கு இது தானா சந்தர்ப்பம்? போகட்டுமே கொஞ்சகாலம்,'' என்றான்.
''இதோ பாருங்க, ஆறின கஞ்சி பழம் கஞ்சி. உங்க அப்பா - அம்மா இதுக்கு ஒரு முடிவு செஞ்சிருக்கணும்... அப்பா போய்ச் சேர்ந்து ஆறு வருஷம் ஆச்சு... இப்ப அம்மாவும் சேர்ந்துட்டாங்க.''
''அதனால என்ன?''
''என்னவா... பங்கு, யார் பிரிக்கிறது?''
''ஏன் பிரிக்கணும்... இப்ப என்ன, நாம சாப்பாட்டுக்கு கஷ்டப்படறோமா? நல்ல உத்தியோகத்தில் இருக்கேன். பிளாட் வாங்கியாச்சு. சம்பளம் வருது. அண்ணாவும் அப்பப்போ என் பங்குன்னு சொல்லி, பணம் அனுப்புறார்.''
''பொல்லாத பணம்... எவ்வளவு அனுப்புறார்?'' வெடுக்கென்று கேட்டாள், ஆனந்தி.
''எவ்வளவு அனுப்புனா என்ன... அனுப்பினாரா இல்லையா?''
''ஏங்க, ஒண்ணரை ஏக்கர் நிலம். பாதி வீடு. இன்னைக்கு பார்த்தா, 30 - 40 லட்சத்துக்கு போகும். வங்கி வட்டின்னு போட்டாலும், 2 லட்சம் பெறும்... உங்க அண்ணன் விளையல கொள்ளலேன்னு ஏதோ சாக்கு போக்கு சொல்லி, 15 ஆயிரமோ, 20 ஆயிரமோ தர்றார்.''
''இதப்பாரு ஆனந்தி... நிலத்துல உழைச்சு பார்த்தா தான், நீக்கு போக்கு தெரியும். அவர் என்னவோ, 10 லட்சம் லாபம் பண்ணி, எல்லாத்தையும் தானே வச்சுக்கிட்டு, 15 ஆயிரம் அனுப்புற மாதிரி சொல்ற?''
வாக்குவாதம் வளர்ந்தது. இதற்கு மேல் பேச்சு வளர்த்துவது பிரச்னையை உண்டாக்கும் என்று நினைத்தவன், ''சரி சரி, அப்புறம் பேசிக்கலாம். நான் இப்ப ஆபீசுக்கு கிளம்புறேன்,'' என்றான்.
''நீங்க ஆபீசுக்கு போங்க, வேற எங்கேயாவது போங்க... ஆனா, அம்மா காரியம் முடிந்த கையோடு சொத்தை முறையா பிரிக்க ஏற்பாடு பண்ணிடணும்... இப்பவே சொன்னா தான், அதற்கான ஏற்பாட்டை அண்ணன் செய்வார். நமக்கும் குழந்தை குட்டிகள் இருக்கு, ஞாபகம் வச்சுக்குங்க... நாம ஒண்ணும் இனாமா கேட்கல, இல்லாததையும் கேட்கலே... நமக்கு முறையா சேர வேண்டியதைத் தானே கேட்கிறோம்... இதிலே என்ன சங்கடம் உங்களுக்கு?''
பதில் எதுவும் பேசவில்லை, சேகர்.
சேகரின் அண்ணன் குமாரசாமி போன் செய்து, ''தம்பி... நாளைக்கு மறுநாள் அம்மாவுக்கு காரியம்... நீ எப்ப வர்ற?'' என்றார்.
''முதல் நாளே வந்திடறேண்ணே.''
''வந்துரு வந்துரு... நீ பாவம், உனக்கு அங்க வேலை ஜாஸ்தி... ஒண்ணும் கவலைப்படாத, ஒரு பிரச்னையும் இல்லை... உன் தோதுபடி வா,'' என்றார்.
''அண்ணே பணம் ஏதாவது தேவையா?''
''அதெல்லாம் ஒண்ணும் இல்ல தம்பி... இங்கு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். ஆனந்தி, குழந்தைகளை கூப்பிட்டுக்கிட்டு, நீ வந்துரு... எல்லாம் சவுகரியமா இருக்காங்க இல்லையா?''
''எல்லாம் சவுக்கியம் தான், நா வந்துடறேன்... எனக்குத்தான், கிட்ட இருந்து எல்லாத்துக்கும் உதவ முடியலையேன்னு வருத்தம்.''
''உத்தியோகத்தில் இருக்கறவங்க அப்படித்தான்... விட்டுட்டு சடார்ன்னு வரமுடியாதுல்ல... அதபத்தி ஒண்ணும் கவலை இல்லை... மனச போட்டு அலட்டிக்காம வா,'' என்றார்.
போனை வைத்த உடன், ''யார் போன்ல?'' கேட்டாள், ஆனந்தி.
''அண்ணன் தான்.''
''சொத்து பங்கு பிரிப்பதற்கு ஏதாவது சொன்னாரா?''
''ஏன், உனக்கு எப்போதுமே சொத்து, பங்கு தானா?''
''அதுல என்ன தப்பு, நமக்கு உரிய பங்கைத்தானே கேட்கிறோம்... அவரே இந்நேரம் அதையும் சொல்லியிருக்கணும்... காரியம் முடிஞ்ச கையோட, 'வா தம்பி... பேசி, பங்கு பிரித்து விடலாம்'ன்னு சொல்லி இருக்கணும்; அவர் சொல்ல மாட்டார். அவருக்கா வயித்து வலி, நமக்கு வேண்டியத நாம தான் கேட்கணும்...
''நீங்களே, 'அண்ணே... காரியம் முடிந்தவுடன் சொத்து பாகம் பற்றி ஒரு முடிவுக்கு வந்துடணும். பின்னாடி சிக்கல் வரும்'ன்னு சொல்லி இருக்கணும்... நீங்க சொல்லியிருக்க மாட்டீங்களே...
''இத பாருங்க, காரியம் முடிஞ்சதும், நீங்களே அண்ணனை கூப்பிட்டு இதைப் பத்திப் பேசணும்... யோசித்து தயங்குவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை; அப்புறம் சிக்கல் தான். தெரியாதவர்களுக்கு சொல்லித்தான் தெரிய வேண்டும். நீங்க பேசலேன்னு சொன்னா நானே அண்ணன்கிட்ட பேசுறேன்,'' என்றாள், ஆனந்தி.
''எப்படியாவது போ,'' என்று கத்திவிட்டு, கோபத்தோடு நகர்ந்தான், சேகர்.
அன்று முழுவதும் ஆனந்தியும், சேகரும் பேசிக் கொள்ளவில்லை.
ஊருக்குப் போவதற்காக துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள், ஆனந்தி.
சாயங்காலம், ஆனந்தியின் அப்பா வந்திருந்தார்.
சேகர் அலுவலகத்திலிருந்து இன்னும் வரவில்லை. ஆனந்தியின் அப்பாவும் இவர்களோடு சேர்ந்து ஊருக்கு செல்வதாக ஏற்பாடு.
தன் அப்பாவிடம் சொத்து பாகம் பிரிப்பது பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள், ஆனந்தி.
பொறுமையாக கேட்டவர், ''அது சரிம்மா... அதுக்கு என்ன அவசரம், மாப்பிள்ளை அண்ணா குமாரசாமி, தங்கமான பிள்ளைம்மா... அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படாமல், தனக்கு சேர வேண்டியதை கூட விட்டுத்தரும் தயாள குணம் படைத்தவர். ஒரு விஷயம் சொல்றேன் கேளு... குமாரசாமி மட்டும் இல்லேன்னா, உன் கல்யாணமே நடந்து இருக்காது, ஆனந்தி,'' என்றார்.
திடுக்கிட்டவள், ''என்னப்பா சொல்றீங்க?'' என்றாள்.
''ஆமாம்மா... உனக்கு நிச்சயம் ஆகும்போது, சபையிலே, 15 பவுன், 20 ஆயிரம் ரூபாய்ன்னு பேசியாச்சு... ஆனா, அதுக்குள்ள உங்க அக்காவுக்கு பிரசவம். தொடர்ந்து, உன் அம்மாவுக்கு கர்ப்பப்பை கட்டி ஆபரேஷன்... செலவுக்கு மேல் செலவு... உன் கல்யாணத்துக்கு வைத்திருந்த பணமெல்லாம் செலவழிஞ்சிடுச்சி, கடன்... காலணா கையில் இல்லாத சூழ்நிலை...
''உன் கல்யாண தேதியும் நெருங்கிடுச்சு... என்ன செய்றதுன்னு புரியாம தவிச்சிட்டு இருந்தபோதுதான், மூத்தவர் குமாரசாமி, முகூர்த்த புடவை காட்டுவதற்காகவும், மோதிர அளவுக்காகவும் வீட்டுக்கு வந்திருந்தார். என் முகத்தை பார்த்ததும், விசாரித்துவிட்டு ஒரு வார்த்தை சொன்னார் பாரும்மா... எனக்கு வயித்துல பால் வார்த்த மாதிரி இருந்தது.
''இத பாருங்க மாமா... எங்க வீட்டு மருமக ஆனந்தி. அதனால, நீங்க கவலைப்படாதீங்க. பணம் இன்னிக்கு இருக்கும், நாளைக்கு போகும். மனுஷா கிடைக்கிறது கஷ்டம். அதுவும் பேசி முடிஞ்ச கல்யாணம் நிக்கிறது சரியில்லே. ஆனந்தி பாவம், எத்தனையோ மனக்கோட்டை இருக்கும்...
''உங்களுக்கு நான் பணம் ஏற்பாடு பண்றேன். நீங்க, இது பத்தி எங்க அப்பா - அம்மாகிட்ட சொல்லாதீங்க; நமக்குள் இருக்கட்டும். அந்த காலத்து மனுஷங்க. அவங்க சும்மா இருந்தாலும் சொந்தபந்தம் குழப்பி விட்டுடும். நாளைக்கே உங்களுக்கு தேவையான பணத்துக்கு ஏற்பாடு செய்றேன்...
''நீங்க கவலைப்படாதீங்க, ஆனந்தி நல்ல பொண்ணு. எங்க குடும்பத்தை நல்லா பார்த்துப்பா... அண்ணன் - தம்பிகளை விட்டுத்தர மாட்டா... எங்க வீட்டுக்கு மகாலட்சுமி வர்றத்துக்கு, நாங்க தான் கொடுத்து வச்சிருக்கணும். சின்ன விஷயத்துக்காக ஒரு மங்களகரமான காரியத்துல குழப்பம் வர வேண்டாம்ன்னு சொன்னார், குமாரசாமி. இந்த கலி காலத்தில், இப்படி ஒரு புள்ளையான்னு கண் கலங்கிடுச்சும்மா...
''சொன்னபடியே அடுத்த நாள் பணத்தை எடுத்து வந்து கொடுத்தார். எனக்கு தயக்கம் தான். ஆனாலும், வற்புறுத்தி தைரியம் சொல்லிக் கொடுத்தாரும்மா. 'இதை யாருட்டயும் சொல்லாதீங்க... தேவையில்லாத பிரச்னை வரும்'ன்னு வேற சொன்னார்...
''கல்யாணம் நல்லபடியா நடந்தது. எனக்குத் தான், 'குறுகுறு'ன்னு இருந்தது. அதுக்கப்புறம் அந்த பணத்தைப் பற்றி ஒரு வார்த்தை பேசலேம்மா... நான்தான் ஏழு, எட்டு வருஷமா சிறுகச்சிறுக எடுத்து போய் கொடுத்தேன். ஒவ்வொருமுறை கொடுக்கும்போதும் சிரித்த முகத்தோடு, 'என்ன மாமா அவசரம்... எங்க வீட்டு மருமகளுக்கு நாங்க செஞ்சது தானே... இதை திருப்பித் தரணுமா?' என்றார்.
''இது நடந்தது, உனக்கும் தெரியாது, உன் புருஷனுக்கும் தெரியாது... நீ ஏதோ பாகம்ன்னு சொன்னதால சொல்றேன், இப்படிப்பட்ட பிள்ளைக்கிட்ட நீ சண்டை போட்டு பாகம் கேட்கணுமா... அந்த பிள்ளை உன் பாகத்தை எடுத்துக்கவா போகுது... ஏதோ தோணிச்சு, சொன்னேன்,'' என்றபடி நகர்ந்தார்.
அப்பா பேசி முடித்ததும், ஆனந்திக்கு கண்களில் நீர் தளும்பியது.
இரவு, சேகரை அழைத்தவள், ''பாருங்க டிரஸ் எடுத்து வச்சாச்சு... நாளைக்கு ஊருக்கு போறதுக்கு முன்ன ஒரு விஷயத்தை சொல்ல போறேன்,'' என்றாள்.
''நானும் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். உனக்கு என்ன, அந்த சொத்துல பங்குதானே வேணும்... வாய மூடிக்கிட்டு இரு... நான் போனவுடனே காரியம் நடக்குதோ இல்லையோ அதுக்கு முன்ன அண்ணன்கிட்ட இத பேசிடறேன்... போதும்ல்ல,'' என்றான்.
அடுத்த நிமிஷம் உடைந்து அழுதவள், ''இந்த பாருங்க... வார்த்தையால சித்திரவதை பண்ணாதீங்க... எக்காரணத்தை முன்னிட்டும் அண்ணன்கிட்ட சொத்து, பாகப்பிரிவினைன்னு ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது,'' என்றாள், ஆனந்தி.
இந்த திடீர் மனமாற்றத்திற்கு காரணமோ, ஆனந்தி ஏன் அழுகிறாள் என்றோ தெரியாமல், அவளை நம்பிக்கையின்றி பார்த்தான், சேகர்
எஸ். கோகுலாச்சாரி