அன்புள்ள அம்மா —
எங்கள் பெற்றோருக்கு, இரு குழந்தைகள். நான் மூத்தவன். வயது: 26. எம்.பார்ம் படித்து, தனியார் மருந்து கம்பெனியில் வேலை செய்கிறேன். எனக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் ஆனது. தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிகிறாள், மனைவி. எங்களுக்கு, இரண்டு மாத கை குழந்தை உள்ளது.
தங்கைக்கு, வயது: 22. எம்.பி.ஏ., படிக்கிறாள். அப்பாவுக்கு ஹார்டுவேர்ஸ் வியாபாரம். அப்பாவுடன் உடன் பிறந்தோர் இரு தம்பி, இரு தங்கைகள். அவர்களுக்கும், மகன் - மகள்கள் இருக்கின்றனர். அப்பா வழி பாட்டி, எங்களுடன் இருக்கிறார். வயது: 80. அவருக்கு, ஆறு பேத்திகள், நான்கு பேரன்கள் உள்ளனர்.
பாட்டிக்கு ரத்த அழுத்தமோ, நீரழிவு நோயோ கிடையாது. பவர்கிளாஸ் தேவைப்படாத கழுகு பார்வை. வாயில் ஒன்றிரண்டு பற்கள் தவிர, அனைத்தும் உறுதியாக உள்ளன. நன்றாக சாப்பிடுவார். சாப்பிடாத நேரங்களில் வாயில் கிராம்பை போட்டு மெல்லுவார். மடிப்பு கலையாத காட்டன் புடவைகள்தான் கட்டுவார். 'டிவி' தொடர்கள் பார்ப்பார். சில சமயங்களில், எப்.எம்., ரேடியோ கேட்பார்.
எப்போதுமே அபசகுனமாய் பேசுவது தான், பாட்டியின் கெட்ட குணம். எனக்கு பெண் பார்த்து திருமண தேதி உறுதியான பின், ஆசை ஆசையாய் பாட்டியிடம் கூறினேன்.
'என்னமோ போ. பொண்டாட்டிய கட்டி நாசமா போடா...' என்றார்.
என் தங்கை, பி.பி.ஏ.,வில், 'கோல்ட் மெடல்' வாங்கிய செய்தியை கூறியபோது, 'சர்டிபிகேட்டையும், கோல்ட் மெடலையும் கிழிச்சு, உடைச்சு, அடுப்பில போடு...' என்றார்.
எங்கப்பா சிரமப்பட்டு, 10 லட்சம் ரூபாய்க்கு கார் வாங்கினார். 'குடும்பத்தோடு கார்ல போய் புளிய மரத்துல இடிச்சு நில்லுங்கடா...' என்றார்.
சில நாட்களுக்கு முன், 'பாட்டி... நாங்க எல்லாரும், 'கொரோனா' தடுப்பூசி போடப் போறோம். நீங்களும் வாங்க...' என்றோம்.
'நான் வரல... நீங்க போய் ஊசி போட்டு கூண்டோடு பரலோகம் போங்க...' என்றார்.
நொந்து போனோம். கிழவியின் வாயில் விழுந்துவிடக் கூடாது என, ஒதுங்கி போவர், தெருக்காரர்கள். கெட்ட விஷயங்களை கேட்பதும், பேசுவதும், பாட்டிக்கு அல்வா சாப்பிடுற மாதிரி. தெருக்காரர்கள் பாட்டிக்கு வைத்த பட்டப் பெயர், 'டேஞ்சர் டயபாலிக் பாட்டி!'
'கிழவியை, சித்தப்பா, அத்தைகள் வீட்டுக்கு பார்சல் பண்ணுங்கள்...' என்றால், கேட்கவில்லை, அப்பா.
'கிழவிக்கு இப்போதைக்கு சாவு வராது போல. பேசாம விஷத்தை வச்சு கொன்று விடலாமா...' என, அம்மாவும், நானும், தங்கையும் யோசிக்கிறோம்.
உங்கள் ஆலோசனையை கேட்டு நடக்க தயாராக இருக்கிறோம், அம்மா. ஆக்கப்பூர்வமான யோசனைகள் இருந்தால் கூறுங்கள்.
— இப்படிக்கு
அன்பு மகன்.
அன்பு மகனுக்கு —
சில வயோதிகர்கள், தாழ்வு மனப்பான்மை,- மரண பயம்,- பிறரின் மீது அவநம்பிக்கை-, இளைய தலைமுறை மீது பொறாமை, -மனதில் தோன்றியதெல்லாம் பேசும் துணிச்சல்,- வெறுப்பு நகைச்சுவை முதலியவற்றை மொத்தமாக குத்தகை எடுத்து விடுகின்றனர்.
தனக்கு பின் இந்த உலகம் இருந்தால் என்ன, அழிந்தால் என்ன என்ற மனநிலையில் விட்டேத்தியாக பேசுகின்றனர். தன்னைத் தவிர உலகில் அனைவரும் மோசமானவர்கள் என நம்புகின்றனர். வாழ்வின் இருண்ட பக்கத்தில் அவர்கள் ஆந்தை போல் வசிக்கின்றனர்.
பாட்டியை, சித்தப்பா, அத்தை வீடுகளுக்கு, 'பார்சல்' பண்ண நினைப்பதும், விஷம் வைத்து கொல்ல நினைப்பதும், கொடூரமான சுயநலங்கள். உங்களின் பாச முகமூடி விலகி, உண்மை சொரூபம் அப்பட்டமாகிறது.
பாட்டியை, 24 மணி நேரமும் புறக்கணித்து, அலட்சியபடுத்தி விட்டு நீங்கள் விரும்பும் நேரங்களில் மட்டும், அவர் உங்களை ஆசிர்வதிக்க வேண்டும், வாழ்த்த வேண்டும் என, எதிர்பார்க்கிறீர்களோ என்னவோ? இதுவும் ஆராயப்பட வேண்டிய விஷயம் தான்.
பாட்டி விஷயத்தில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்து பாருங்கள்.
1. குடும்ப அங்கத்தினர்கள், தனித்தனியாக பாட்டியை அணுகி, அவருக்கு உங்களின் மீது எதாவது அதிருப்தி இருக்கிறதா என, இறைஞ்சி கேளுங்கள். அதிருப்தி இருந்தால், தாமதிக்காது நிவர்த்தி செய்யுங்கள். அதிருப்தி நீங்கி, பாட்டியிடமிருந்து நேர்மறை வார்த்தைகள் வெளியாகும்.
2. பாட்டிக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளுங்கள். மறதி நோய் இருக்க வாய்ப்பிருக்கிறது. உறவு முறை தெரியாமல், அமில வார்த்தைகளை பிரயோகிக்கிறாரோ என்னவோ!
3. பாட்டியை தனிமையில் விடாதீர்கள். தினம், ஒரு மணிநேரமாவது, குடும்ப அங்கத்தினர்கள் அவருடன் அளவளாவ வேண்டும். வாரத்தில் ஒருநாள், உன் அப்பா, தங்கையை, பாட்டியுடன் படுத்து துாங்க சொல்; அன்னியோன்யம் பெருகும்.
4. பாட்டியிடம் பதில் சொல்ல தேவைப்படாத தகவலாய் சொல்லுங்கள். உனக்கு திருமணம் நடந்தபோது, பாட்டியை உடன் நிற்க செய்து, 'குரூப்' போட்டோ எடுத்திருக்க வேண்டும். தங்கை, 'கோல்ட் மேடல்' வாங்கிய போது, அதை பாட்டியின் கழுத்தில் போட்டு மகிழ்வித்திருக்க வேண்டும்.
புதிதாக கார் வாங்கிய போது, பாட்டியை காரில் உட்கார வைத்து, நகர் வலம் வந்திருக்க வேண்டும். செவிலியர் நங்கையை வீட்டுக்கே அழைத்து, 'கொரோனா' ஊசியை பாட்டிக்கு போட்டிருக்க வேண்டும்.
5. 'பாட்டி, நீ, 100 வயசு வரைக்கும் இருப்ப...' என, மனசார நெஞ்சார வாழ்த்திக் கொண்டே இருக்கணும். இவ்வகை வாழ்த்துகள், மரண பயத்தை போக்கும்.
6. பாட்டிக்கு மிகவும் பிடித்த உணவு வகையை செய்து கொடுங்கள் அல்லது வாங்கி கொடுங்கள்.
7. வாரா வாரம், கோவிலுக்கு கூட்டி போங்கள்.
8. உயிருடன் இருக்கும் பால்ய கால தோழியரை அழைத்து வந்து, பாட்டியுடன் மனம் விட்டு பேச சொல்லுங்கள்.
9. உங்களுக்கு தெரியாமல், தெருக்காரர்கள், பாட்டியை கேலி செய்யக்கூடும். 'பாட்டியை யாரும் எரிச்சல் படுத்தாதீர்கள். நீங்கள் என்ன வீசினீர்களோ அதுவே உங்களின் மீது திரும்பி பாயும்...' என, அவர்களை எச்சரி.
10. பாட்டியை ஏதாவது ஒரு மனநல ஆலோசகரிடம் அழைத்துபோய் தேவைப்படும் ஆலோசனைகளால் அவரின் மனதை குளிர வையுங்கள்.
வாழ்த்துகள்!
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.