வாகனங்களின் இரைச்சல், புழுதி, புகை என, அவசர கதியில் இயங்கிக் கொண்டிருந்த சாலையின் ஓரத்தில், அழுக்குத் துணிகளின் நடுவே, அந்த மூதாட்டி படுத்திருந்தாள்.
தலையருகில், முதல் நாள் யாரோ கொடுத்த சாம்பார் சாத பொட்டலம், நீச்ச நாற்றத்துடன் ஈ மொய்த்துக் கொண்டிருந்தது. அங்கிருந்த ஈக்கள் சில, அந்த மூதாட்டியின் கண் ஓரம், கால்களில் உட்கார துவங்கின. உணர்விருந்தும், விரட்ட சக்தியற்று இருந்தாள்.
வாகனங்களில் அவசரமாக கடந்து கொண்டிருந்த மனிதர்கள், அவளை கவனிக்காமல் இல்லை. இருப்பினும், நிற்பதற்கு நேரம் இல்லையே...
'ஈரமற்றவர்கள்...' என்று அழுத மூதாட்டி, சந்திரகலாவின் மனம், வாழ்வின் பின் நோக்கி சென்றது.
வாழ்வின் கடைசி விளிம்பில் நிற்கும் அவளுக்கு, முதன் முறையாக தனக்குள் அக்கேள்வி வந்தது. தன்னுள் அந்த ஈரம் இருந்ததா? கனவா, நினைவா, கால இயந்திரமா... ஏதோ ஒன்று, அவளின் கடந்த காலத்திற்கு அழைத்துச் சென்றது.
பருத்த உடல் வாகு, 'ரிங்க்' கொண்டை, அதைச் சுற்றி கனகாம்பரம், சதா வாயில் வெற்றிலைப் பாக்கு, வட்டமான முகத்திற்கு ஏற்றவாறு, நெற்றியின் நடுவே ஒரு ருபாய் அளவிற்கு பெரிய குங்குமப் பொட்டு. தன் வீட்டின் ஒரு அறையையே கடையாக மாற்றி, அரிசி வியாபாரம் செய்து கொண்டிருந்தாள்.
கல்லாவில் உட்கார்ந்தால், அவளையும், அரிசி மூட்டையையும் பிரித்துப் பார்ப்பது கடினம். இரண்டு பெண், மூன்று பிள்ளைகள் என, மக்களைப் பெற்ற மகராசி. அவளின் கணவன் வாசு, ஒரு வாயற்ற பூச்சி; அதனாலேயே மிக நல்லவன்.
அவனுக்கும், சந்திரகலாவிற்கும், 10 வயது வித்தியாசம். சிறிது வழுக்கையுடன் முன் நெற்றி, மெலிந்த உடல் வாகு கொண்டவன். தன் மனைவி சந்திரகலாவிடம் அன்பு காட்ட காட்ட, அதை ஏதோ ஓர் அடிமை தனக்கு செய்யும் தொண்டாகவே சந்திரக்கலாவால் பார்க்க முடிந்தது. முள் சாட்டையாய் நாக்கு சுழலும்.
மூத்த பெண் மாரியம்மாள், வாசுவின் சாயலையும், குணத்தையும் ஒட்டியிருந்ததாலோ என்னவோ, சந்திரகலாவிற்கு அவளிடம் ஒட்டுதலில்லை. ஒரு தாயால் அப்படி இருக்க முடியுமா, தெரியவில்லை... இளையவள் பார்வதி, தன் பிம்பமாய் இருந்ததால், அவளுக்கு சலுகைகள் அதிகம்.
ஆண் பிள்ளைகளுக்கு தனி அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. இதில் மிக பாவப்பட்டோர், வாசுவும், பெரிய பெண் மாரியம்மாளும் தான்.
சொர்ணாக்கா வடிவமாய், லாரி பிடித்து, நெல்லுார் போய் அரிசி கொள்முதல் செய்து, கடையில் இறக்கி, ஆட்களை அதட்டி வேலை வாங்கி, பணத்தை செட்டில் செய்து, வீடு வருவாள், சந்திரகலா. அதுவரை, அந்த வீட்டின் சகலமும், பெரியவள் மாரியம்மாளின் பொறுப்பு.
மாரியம்மாளின் உடன் பிறந்தவர்கள், அவளை விட ஓரிரு வயதே குறைந்தவர்கள் என்றாலும், அவர்கள் குளிப்பதற்கு தண்ணீர் விளாவி, சாப்பாடு செய்து போட்டு, வீட்டை சுத்தம் செய்து, அப்பப்பா போதும் போதும் என்றாகி விடும் அந்த பெண்ணிற்கு.
இடையிடையே, கடையில் இருக்கும் அம்மாவிற்கு தேநீர் போட்டு போய்
கொடுக்க வேண்டும். இல்லையெனில், கையில் கிடைக்கும் பொருளை எடுத்து மகளின் முகத்தில் விட்டெறிவாள்,
சந்திரகலா.
ஏனோ தெரிவில்லை, அமைதியாய் விட்டுக் கொடுத்துப் போகிறவர்கள், அதிகமாய் காயப்படுகின்றனர். சந்திரகலாவிற்குள்ளும் இரக்கம் இருந்தது. அரிசி கடன் கேட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு, இல்லை என்று சொல்லாமல், கடன் தருவாள். ஆனால், அவளுக்கு தற்காலிக அடிமைகள், அவர்கள்.
'இந்தா... அரிசி போட்டு வைக்கிறேன்; அந்த துடைப்பத்தை எடுத்து பெருக்கி, முறத்திலே குப்பையை அள்ளிப் போடு...' என்பாள்.
இதில் பால் பேதமெல்லாம் கிடையாது, அவளுக்கு. வேறு வழியின்றி, விதியே என்று குப்பை வாரும்போது, மென்ற வெற்றிலையை, 'புளிச்'சென்று அவர்கள் மேல் பட்டும் படாமல் துப்புவாள்.
திரும்பி பார்ப்பவர்களிடம், 'தே... மேலேயா பட்டிருச்சு... இல்லதானே, தண்ணி போட்டு கழுவிட்டு போ...' என்பாள்.
அவளின் இச்செயலை, வாசுவும், மாரியம்மாவும், துணிந்து கேட்டால், அவ்வளவு தான்... தெரு மொத்தமும் இவர்கள் வீட்டையே பார்க்கும் படி, ஊர் ரெண்டு படும்.
வீட்டில் கிடைக்காத அன்பும், பாசமும், பக்கத்து வீட்டு சத்தியனிடம் மாரியம்மாளுக்கு கிடைக்க, அது காதலாகி, ஊரை விட்டு ஓடி போக வைத்தது. தன்னிடமே அரிசி கடன் வாங்கும் சத்தியனின் நிலை, வேறு ஜாதி என்ற காரணங்களால், ஏற்கனவே வேப்பிலை இல்லாமல் ஆடும் சந்திரகலாவின் காலில், சலங்கை கட்டி ஆட வைத்தது.
அதன் பின், அந்த வீட்டில், கணவன் வாசுவின் நிலை, மிகப் பரிதாபமாகியது. சந்திரகலாவின் கோபம், தன் செல்லப்பெண் மாரியம்மாவின் செயல், தாயை வடித்து வார்த்த மகன்களின் தாந்தோன்றிதனம் என அனைத்தும், தற்கொலை என்ற மடத்தனத்திற்கு அவரை தள்ளியது.
கணவன் போனதை விட, தன் தனி அடையாளமான கனகாம்பரமும், நெற்றி நிறைந்த பொட்டும் போய் விட்டதே என்ற வெறுப்பு தான் அதிகமானது, சந்திரகலாவிற்கு. மாரியம்மாளை தேட, எந்த முயற்சியையும் எடுக்க விடாமல் தடுத்தது.
பிள்ளைகளின் திருமணம், பேரப் பிள்ளைகள் என, அமோகமாய் போய்க் கொண்டிருந்தது, வாழ்க்கை. பெண்ணின் கண்களிலேயே விரல் விட்டு ஆட்டக் கூடியவள், மருமகள்களை சும்மாவா விடுவாள்?
ஆனால், மருமகள்கள், அவளை விட புத்திசாலிகள். அதே வீட்டின் கீழ் பகுதியில், தனித்தனி குடும்பமாக பிரிந்தனர். மாடியில், தன்னந்தனியாக ராஜ்ஜியம் நடத்த ஆரம்பித்தாள், சந்திரகலா.
அரிசிக்கடை நடத்துவதை விட, அவளின் முக்கியமான வேலை, மகன் - மருமகள் நல்ல உடையில் வெளியே செல்லும்போது, பக்கெட்டில் உள்ள அழுக்கு தண்ணியை எடுத்து, அவர்கள் மேல் ஊற்றுவது. இதில், மகன் - மருமகள் என்ற பாரபட்சமெல்லாம் கிடையாது.
அம்மாவின் அடாவடித்தனம் சற்றும் குறையாததால், நைச்சியமாக பேசி, வீட்டை எழுதி வாங்கிக் கொண்டனர், மகன்கள்.
அதன்பின், 'நீ ஒரு மாதம், நான் ஒரு மாதம்...' என, அம்மாவை வைத்துக் கொள்ள, கையெழுத்தின்றி நிறைவேறியது, ஒப்பந்தங்கள்.
பிறவிக்குணம் மாறுமா... 'சீரியல்' மாமியார்களை விட, மிக மோசமாக நடந்துகொள்ள ஆரம்பித்தாள், சந்திரகலா. அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாத பிள்ளைகள், தாயிற்கு தெரியாமல் வீட்டை விற்று விட்டு, திசைக்கு ஒருவராய் குடும்பத்துடன் பிரிந்தனர்.
விதி விளையாட ஆரம்பித்தது. செய்வதறியாது நின்றவள், திருச்சியில் மணம் முடித்துக் கொடுத்திருந்த இளைய மகள் பார்வதியின் வீட்டிற்கு சென்றாள். அவள், தாயின் வார்ப்பல்லவா...
ஒரு நாள், அம்மாவின் உடைமைகளை பெட்டியில் எடுத்து வைத்து, 'சமயபுரம் போகலாம் வா...' என்று அழைத்துப் போனாள்.
கோவிலின் அருகில் நிற்க வைத்து, 'இதோ வருகிறேன்...' என்று போனவள் தான், ஐந்து ஆண்டுகள் ஓடி விட்டன. கால வெள்ளம் யாரை எப்படிப் புரட்டி போடும் என்பது யாருக்கு தெரியும்...
அக்கம் பக்கத்தில் சின்னச் சின்ன வேலைகளை செய்து, வயிற்றைக்
கழுவிக் கொண்டவளுக்கு, மாரியம்மன் கோவில் மண்டபமே, இருப்பிடம்
என்றானது.
சுளீரென்று தன் முகத்தில் பட்ட தண்ணீரால் நிகழ்காலத்திற்கு வந்தாள், சந்திரகலா.
பேசும் குரல், அவள் கவனத்தை
இழுத்தன.
''உசிறு இருக்குப்பா, இந்தா கை, கால் அசையுதில்ல... இருக்கலாம்; ஆனா, இப்ப கூட இவங்களையெல்லாம் நம்ப முடியல... பகலெல்லாம் கோவிலில் உட்கார்ந்து பிச்சை எடுக்கிறது, அதுக்கப்புறம், 'டாஸ்மாக்'கில் போய் குடிக்க வேண்டியது. காலம் ரொம்ப கெட்டு போயிடுத்து...''
''நான் வேணா அடிச்சு சொல்றேன், இன்னும் அரை மணி நேரம் கழிச்சு வந்து பாரு... அந்தம்மா, கோவில் வாசலில் உட்கார்ந்திருக்கும்.''
அவர்களுக்குள், தன் புத்திசாலித்தனத்தை காண்பிப்பதில் ஆர்வம் அதிகமாயிற்று.
வாழ்க்கையில் பூமராங்க், நாம் எங்கு அடிக்கிறோமோ அங்கிருந்து தானே திரும்பி வரும்.
''இருங்க, ஆளாளுக்கு பேசிக்கிட்டு இருந்தா எப்படி... பாவம்... யாரோ என்னவோ, முதல்ல ஆம்புலன்சுக்கு போன் பண்ணலாம். யாரு எங்க தேடிக்கிட்டு இருக்காங்களோ,'' என, பரிவான குரல் கேட்டது.
முதல் முறையாக, சந்திரகலாவின் கண், நீரால் நிரம்பியது.
ஜமுனா