என்ன சொல்லுவார் என, கவலையோடு மருத்துவரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள், வாசந்தி.
அம்மா சரசுக்கும், மருத்துவர் வேறு எதையாவது சொல்லி விடுவாரோ என்ற பயத்தில், 'லப் டப்'பின் வேகம் இன்னும் அதிகமாகியது. குளிரூட்டப்பட்ட அறையிலும், அவள் உடல் வியர்வையில் நனையத் துவங்கியிருந்தது.
மருத்துவர் வாயிலிருந்து, நல்ல வார்த்தைகள் வர வேண்டும். மனதுக்குள் எல்லா தெய்வங்களையும் வரவழைத்து, வேண்டிக் கொண்டாள், சரசு.
'உங்க பொண்ணை என் பையன் விரும்பிட்டான். அந்த ஒரே காரணத்துக்காக, அதைத் தரணும், இதை செய்யுங்கன்னு எல்லாம் சொல்லி உங்களை சங்கடப்படுத்த மாட்டேன்.
'மகன் சாரங்கன் வளர்ந்ததுக்கப்புறம், இந்த வீட்டில், குழந்தைகளின் ஆட்டமும், பாட்டமும், தண்டைக்காலில் கொலுசு போட்டுக்கிட்டு அங்க இங்க ஓடி ஆடுற சத்தமும் கேட்கல...
'பேரனோ, பேத்தியோ பிறந்து, அது வேணும், இது வேணும்ன்னு அழுது அடம்பிடிக்கணும்... அதைப் பார்த்து நான் ரசிச்சு, சந்தோஷப்படணும். அதுகள இடுப்பில சுமந்துக்கிட்டு பக்கத்திலிருக்கும் கோவிலுக்கும், கடைக் கண்ணிக்கும் அலையணும்ன்னு மனசு ஏங்கிட்டு இருக்கு... ஒரு பேரனையோ, பேத்தியையோ உங்க மக பெத்து தந்துட்டா போதும்...
'அதத்தான் உங்க மக, கொண்டு வர்ற சீரா நான் நெனைக்கிறேன். மத்தப்படி பொன், பொருள்ன்னு எதுவும் அவ கொண்டு வரவேண்டாம். எல்லாத்தையும் கை நிறைய கடவுள் எங்களுக்கு தந்திருக்கான். இருக்கிறத ஒழுங்கா காப்பாத்தினாலே போதும். இன்னும் இரண்டு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்...'
இது, சாரங்கன் - வாசந்தி திருமணப் பேச்சு நடந்தபோது, சாரங்கனின் அம்மா பொன்னரசி சொன்ன பெருந்தன்மையான வார்த்தைகள்.
பேரன் - பேத்தின்னு பிறந்து, அதுகள துாக்கி சுமக்கணும். கொஞ்சி மகிழணும்ங்கிறது தான், பொன்னரசியின் கொள்ளை ஆசை.
ஒத்தைக்கு ஒருவனாய் சாரங்கன் ஆகிப்போனதால், அவனுக்குப் பின் அந்த வீட்டில் தொட்டிலும் தொங்கவில்லை; தாலாட்டு சத்தமும் கேட்கவில்லை. பொன்னரசியின் ஆசை, நாளுக்கு நாள் வீரியப்பட்டுக் கொண்டிருந்தது.
சாரங்கன் - வாசந்தி திருமணம் நடந்து, நான்கு ஆண்டுகள் ஓடி விட்டது.
'என்ன... பொன்னாத்தா, இந்த வருஷமாவது பேரனோ, பேத்தியோ, உன் வீட்டுக்கு வந்துடுவாங்களா?' என்று, உறவுகளும், அக்கம்பக்கத்தினரும் அக்கறையோடு கேட்டு, வாசல் கடந்து போவர்.
முகத்தில் சிரிப்பை வரவழைத்து, 'சரியான நேரத்துல, கடவுள் தராமலா போவான். அந்தக் காலத்தில நாம அவசரப்பட்டோம். இப்பவுள்ள பிள்ளைகள் என்ன நெனைக்குதுன்னே தெரியலையே. நேரத்துல அதது ஒழுங்கா நடக்கும்...' என்பாள்.
கேட்டவர்களிடம் சிரிப்பு மாறாமல் பதில் சொல்லி வீட்டுக்குள் திரும்பும்போது, பொன்னரசியின் முகம் வாடி, வதங்கி சுருங்குவதை, பலமுறை கவனித்திருக்கிறாள், வாசந்தி.
மாமியார் சுமக்கும் ஆசைகளை, கணவன் சாரங்கனிடம் படுக்கையறையில் வாசந்தி பகிர்ந்து கொள்ளும்போதெல்லாம், 'எனக்கும் அந்த ஆசையிருக்காதா?' என்பான்.
வாசந்தியின் இடைவிடாத தொண தொணப்பால், அந்த ஊரிலிருக்கும் மகப்பேறு மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் மருத்துவமனையில், உடல் தகுதி பரிசோதனை செய்வதென்று இருவரும் முடிவு செய்தனர்.
'அம்மாவுக்கு இப்போதைக்கு தெரிய வேண்டாம். அவரின் மனசு இன்னும் அதிக வருத்தங்களை சுமக்க ஆரம்பித்துவிடும்...' என்று, கோவிலுக்குச் செல்வதாக சொல்லி, காலையில் வாசந்தியுடன் இங்கே வந்திருந்தான். எல்லாவிதமான பரிசோதனைகளும் முடித்தனர்.
'சோதனைகளின் முடிவு மாலையில் தான் முழுமையாக கிடைக்கும். அதை, எங்கள் தலைமை மருத்துவர் பார்த்துவிட்டு உங்களிடம் பேசுவார்...' என்றனர், மருத்துவமனை பணியாளர்கள்.
மாலையில், தனக்கு முக்கியமான வேலை இருப்பதால், வாசந்தியை, அவள் அம்மாவுடன் சென்று மருத்துவ பரிசோதனைகளின் முடிவையும், மருத்துவர் சொல்வதை சரியாக கேட்டு வரும்படியும், தேவைப்பட்டால், தான் மறுநாள் மருத்துவரை பார்ப்பதாகவும் சொல்லி அனுப்பி வைத்தான், சாரங்கன்.
மருத்துவரின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளுக்காகத்தான் காத்திருப்பு தவத்தோடு வரிசையில் அமர்ந்திருந்தனர், வாசந்தியும், சரசுவும்.
சோதனை முடிவுகளின் அறிக்கையை கவனத்துடன் படித்துக் கொண்டிருந்த மருத்துவரின் முகம், ஆங்காங்கே சுருங்கி விரிந்தது. அதே நேரம் அவர் வாசந்தியை ஏறெடுத்து பார்த்து, தன் முக மாற்றங்களை மறைத்து, மென்மையான புன்னகையொன்றை இழைய விட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த சரசுவுக்கு, ஏதோ ஒரு விபரீதமான முடிவு, மருத்துவ அறிக்கையில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள அதிக நேரம் தேவைப்படவில்லை.
அறிக்கைகளை முழுமையாக படித்துவிட்டு, மென்மையான குரலில், ''சார் வரலியா... வேணுமின்னா, மதுரையில் ஒரு மருத்துவர் இருக்கிறார். அவருக்கு எழுதித் தரேன். அனுபவமுள்ளவர் தான். அவருகிட்டேயும் ஒரு, 'ஒப்பினியன்' கேட்டுக்கலாம்...
''விதை எவ்வளவு நல்லதாயிருந்தாலும், நிலத்தை கொஞ்சம் பக்குவப்படுத்தணும். பயிர் விளைய நிலம் தகுதியா இருந்தாத்தானே பயிர் நின்னு செழிப்பா வளர முடியும்... இல்லீங்களா?'' சரசுவைப் பார்த்து சொன்னார், மருத்துவர்.
மருத்துவர் சொல்ல வருவதன் பொருள் புரிந்து விட்டது, சரசுவுக்கு.
மருமகனிடம் குறைபாடு இல்லை. மகளிடம் தான் குறை. நினைத்துப் பார்க்கவே பயமாகியது, சரசுவுக்கு.
'சீக்கிரமே பேரனோ, பேத்தியோ, குழந்தை பெற்றுத் தரவேண்டும், வாசந்தி. அதனுடன் கொஞ்சி விளையாட வேண்டும்...' என்று கனவுகளை சுமந்துகொண்டிருக்கிறாள், பொன்னரசி. மருமகளிடம் தான் குறை என்றால், என்ன நிலைப்பாட்டை எடுப்பாள் என, சொல்ல முடியாது.
அம்மா கிழித்த கோட்டை தாண்டாத, மருமகன். அம்மா என்ன சொன்னாலும் ஏன், எதற்கு என்ற கேள்வி கேட்காமல், உடனே சரியென்று தலையாட்டி விடுவான், சாரங்கன்.
எங்கே தன் மகள் வாசந்தியின் வாழ்வில் இருட்டு புகுந்துவிடுமோ என்ற அச்சம் பிடித்துக் கொண்டது, சரசுவுக்கு.
நல்லவேளை... மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போது, கோவிலுக்கு போயிருந்தாள், பொன்னரசி.
''எதையும் காலையில் பேசிக் கொள்ளலாம். நீ மட்டும் புலம்பி வைக்காமல் அமைதியாக இரு,'' என்று, அம்மா சரசுவிடம் சொல்லிவிட்டு, தன் அறைக்குள் புகுந்து கதவை தாளிட்டுக் கொண்டாள், வாசந்தி.
கோவிலிலிருந்து திரும்பி வந்த பொன்னரசியிடம், ''வாசந்தி, காலையிலிருந்து தலை வலிக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தாள்,'' என்றாள், சரசு.
''அப்படியா...'' என்று சாதாரணமாக கேட்டுவிட்டு, சமையலறை பக்கம் திரும்பிய பொன்னரசியின் கண்களில், சோபாவில் கிடந்த மருத்துவ அறிக்கைகள் தாங்கிய பை, கண்ணில் பட்டது.
'எப்படி சொல்வது... எப்படிப்பட்ட எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்குமோ...' என்ற பலத்த சிந்தனைகளோடு படுக்கையிலிருந்து எழுந்தாள், வாசந்தி.
சமையலறைக்குள் வாசந்தி நுழைந்தபோது, காபி கலந்து கொண்டிருந்தவள், ''வா... உனக்காகத்தான். சரி, தலைவலி எப்படி இருக்கு? சூடான காபியை குடி. தலைவலி சரியாகி விடும். இன்னிக்கி கிருத்திகை. சாயங்காலம் முருகன் கோவிலுக்கு போயிட்டு வருவோம். உடம்புக்கு முடியலேன்னா நீ போய், 'ரெஸ்ட்' எடு. சமையலை நான் பார்த்துக்கிறேன்,'' என்றாள், பொன்னரசி.
அன்பான சொற்கள். கலப்படமில்லாத உண்மையான பாசம்.
எதைச் சொல்ல, எப்படிச் சொல்ல... தடுமாறினாள், வாசந்தி.
சிரித்தபடியே, ''சொல்றேனில்ல, நீ போய், 'ரெஸ்ட்' எடு... சாயங்காலம் கோவிலுக்கு போயிட்டு வருவோம். எல்லாம் சரியாயிடும்,'' என்றாள், பொன்னரசி.
சன்னிதியில் நின்று முருகனை நெடுநேரம் வணங்கி, ''வா... தெப்பக்குளம் படியில் சிறிது நேரம் அமர்ந்திருந்து, வீடு திரும்பலாம்,'' என, வாசந்தியை, தெப்பக்குளம் நோக்கி அழைத்துச்
சென்றாள், பொன்னரசி.
தெப்பக்குள படிக்கட்டுகளில் ஆங்காங்கே மக்கள் அமர்ந்து சிலாகித்துக் கொண்டிருந்தனர்.
மனித இடைவெளியிருந்த ஒரு இடத்தில் அமர்ந்தாள், பொன்னரசி; பக்கத்தில் வாசந்தி.
தன் கைகளால் வாசந்தியின் தலையை இதமாக வருடியபடி, ''மருமகப் பொண்ணே... மனசுக்கு சரியில்லியா, உடம்புக்கு சரியில்லியா?'' என்று சிரித்தபடியே கேட்டவள், ''உன்
மருத்துவ அறிக்கைகளை எடுத்து
படித்தேன். நானும் அந்தக் காலத்து டிகிரி ஹோல்டர் தான். பாதி புரிஞ்சுது. புரிந்து கொள்ள முடியாதவைகளை, டாக்டரிடம் காலையில் போன் மூலம் கேட்டு தெரிந்து கொண்டேன். உன் மனசு படும் சங்கடம் தெரிகிறது.
''எந்த குழப்பமும் வேண்டாம். குறை உன்னிடத்தில் இருப்பதால், நீ நடுங்கி தவிக்கிறாய். இதுவே சாரங்கனிடம் இருந்தால், நான் என்ன சொல்ல முடியும்... குறைகளைக் கண்டு மனிதர்களை ஒதுக்க ஆரம்பித்தால், உறவு என்ற ஒரு சொல், உலகில் இருக்க முடியாது. உன்னை நான் ஒதுக்கி தள்ள மாட்டேன். இதே குறை என் பையனிடம் இருந்தால், அவனை வேண்டாமென்றா அடித்து துரத்துவேன்?
''உனக்கிருக்கும் சில குறைகளை, மேல் சிகிச்சையால் சரி செய்து விட முடியும் என்று, மருத்துவர் உறுதியாகச் சொல்கிறார். இந்த மாதிரி நேரங்களில் ஒரு பெண்ணின் மனம் எப்படியிருக்கும் என்பது, எனக்கும் தெரியும். கவலையை விடு. கலகலப்பாய் இரு,'' என்று சொல்லியபடியே, அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை, தன் விரல்களால் துடைத்து விட்டாள், பொன்னரசி.
பொதுவெளி என்பதையும் மறந்து, ''அம்மா...'' என்றபடியே, பொன்னரசியின் மடியில் தலை புதைத்து தேம்பத் துவங்கினாள், வாசந்தி.
வாசந்தியின் தலையை இதமாக, தன் விரல்களால் வருடிக் கொடுத்தாள், பொன்னரசி.
அவளின் மனக் கண் முன், 30 ஆண்டுகளுக்கு முந்திய நினைவுகள்...
திருமணமாகி, ஆறு ஆண்டுகளாக, குழந்தை பாக்கியம் இல்லையென்று, தன் மாமியார் பிச்சு தின்று கரித்துக் கொட்டிய, அந்த நாட்கள் மற்றும் தான் கொண்டிருந்த மனச் சங்கடங்கள், மருமகளுக்கும் தன்னால் வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள், பொன்னரசி.
தன் மனைவியை மற்றவர்கள் மலடி என்று சொல்லிவிடக் கூடாதென்பதற்காக, பல கி.மீ., தொலைவிற்கு அப்பாலுள்ள எல்லைப்புற மாநிலத்திற்கு பணிமாற்றம் பெற்று, கையோடு அவளையும் அழைத்துச் சென்றார், பொன்னரசியின் கணவர்.
பொன்னரசி கர்ப்பம் தரித்திருப்பதாக சொல்லி, நம்ப வைத்து, ஆறு மாத குழந்தையாக இருந்த சாரங்கனை தத்தெடுத்தார். அவன், பொன்னரசியின் வயிற்றில் பிறந்தவன் என்று, தன்
தாயையும், மற்ற உறவுகளையும் நம்ப வைத்தார்.
அவளது கணவனும், அதற்கு உதவிய பக்கத்து வீட்டு மனிதரும், ஏனோ இப்போது, பொன்னரசியின் நினைவில் வந்து போயினர்.
ந. ஜெயபாலன்